Sunday, October 16, 2011

கவி காளமேகம்



தமிழில் ப்ளாக்எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழைப் பற்றியோ, தமிழ்ப் புலவர்களைப் பற்றியோ எதுவுமே எழுதவில்லையேஎன்று ஒரு உறுத்தல் இருந்துகொண்டிருந்தது. அதன் விளைவு இந்தக் கிளறல்

[ஆங்கிலத்தில் சொல்வார்களேdisclaimer (முன்கூட்டியே மறுத்துவிடுவது) என்று. என்னுடைய disclaimerஉம் இதுதான்.]

நான் தமிழ் இலக்கியம், இலக்கணம் படித்ததில்லை. அது என் தப்பு இல்லை. 5ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலமும், சமஸ்கிருதமும்தான் ஆனால் தமிழ் (மீடியம்) படித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு சிரோமணி தேர்வுக்காக 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தமிழ் படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. படித்தேன், பாஸ் செய்தேன். (கோனார் நோட்ஸ் தயவில்) அதனால் என்னை பெரிய இலக்கியவாதி என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.

சின்ன வயதில் எனக்கு அறிமுகமான முதல் தமிழ்ப் பாட்டு இதோ

எட்டேகால் லட்சணமே
எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே -
முட்டமேல் கூரையில்லா வீடே 
குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது.

என்ன கவிநயம். அவலட்சணமே, எருமைக்கடாவே கழுதையே, குரங்கே, குட்டிச்சுவரே புகழ்வது மாதிரி திட்டல். ரிவர்ஸ்நிந்தாஸ்துதி – (திட்டுவது மாதிரி புகழ்வது). இது யார் இயற்றியது என்று எனக்கு இப்பொழுதுதான் தெரியவந்தது. (ஒளவையார் கம்பருடைய புதிருக்கு விடைகொடுக்கும்போது பாடியது) 
இந்தக் காவிய அறிமுகத்திற்குப் பிறகு தமிழ் சிலேடைகள் 
(ஒரே வார்த்தை, பலபொருள்கள்) வசைப் பாடல்கள்
இவற்றில் ஆர்வம் ஏற்பட்டது.

இந்த ஆர்வத்தை நிறைவுசெய்தவர் காளமேகப் புலவர். 
தனிப்பாடல் திரட்டு என்ற புத்தகத்தில் இவருடைய பாடல்களைப் படிக்க ஆரம்பித்தேன்.

இவர் யார்? இவருடைய கவித்திறன் என்ன?

இன்றைக்கு 450 ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவர் காளமேகப் புலவர். கும்பகோணத்திற்கு அருகே நந்தி கிராமத்தில் பிரமாணக் குலத்திலே பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் வரதன். படிப்பு ஏறவில்லை. ஸ்ரீரங்கம் மடப்பள்ளியில் சேர்ந்தார். நெய் தோசையாகச் சாப்பிட்டு வசதியாக இருந்தார்.

இவரைப் பற்றி கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு.

நவராத்திரி விழாவுக்கு திருவானைக்காவுக்கு வந்தார். தேவியை வணங்கிவிட்டு ஒரு திண்ணையில் படுத்துறங்கிவிட்டார். அங்கே நீண்ட காலமாக ஒரு அந்தணர் தேவியைக் குறித்து தவம்செய்துவந்தார். 
விடியற்காலை நான்கு மணிக்கு அம்பாள் வெண்பட்டு உடையை 
உடுத்திக்கொண்டு அந்த அந்தணனைப் பார்த்து வாயைத் திறஎன்றாள். 
அந்தணர், தேவி என்று உணராமல் போம்மாஎன்றார்.

முந்தின ஜன்மப் புண்ணியம் இருந்ததுபோலும் நம்முடைய வரதனுக்கு.

அவனிடம் போய் அம்பாள், “வாயைத் திறஎன்றாள். தூக்கக் கலக்கத்தில் ஏதோ உணவுப் பதார்த்தம் என்று நினைத்து வாயைத் திறந்து என்றான். அம்பாள் தாம்பூலச் சாரை அவன் வாயில் உமிழ்ந்தாள்.

வரதன் காளமேகமாக ஆனான். இருண்ட மேகம் மழைப் பொழிவது போல் தமிழ் மழை பெய்ய ஆரம்பித்தது அவர் (அவன் என்று சொல்வது தப்பல்லவா?) வாயிலிருந்து புலமையும் கவித்துவம் கலந்த இனிமைத் தமிழில் அவர் பாடியப் பல தனிப்பாடல்கள் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்ப்பன.
காளமேகம் ஒரு ஆசுகவி. நினைத்த மாத்திரத்தில் கவிப் பாடும் புலவருக்கு 
ஆசுகவி என்று பெயர்.
வெண்பாவுக்குப் புகழேந்தி, பரணிக்கோர் சயங்கொண்டான்
கண்பாய கலம்பத்திற்கு இரட்டையர்கள், வசைப் பாடக் காளமேகம் 
என்று ஒவ்வொரு புலவரின் தனி சிறப்பை 
ஒரு தனிப்பாடல் விளக்குகிறது.

சிலேடையிலும், வசை பாடுதல் (நிந்தாஸ்துதி) இரண்டிலும் 
காளமேகம் பெரிய மேதை. இவருடைய புலமையை 
ஓரிரு கவிதைகள் மூலமாக இங்கே சுட்டிக்காட்டிருக்கிறேன்.

இவருடைய முழு கவிதைத் தொகுப்பைப் படிக்க விருப்பமுள்ளவர்கள், இந்த வலைப்பக்கத்திற்குச் சென்று ரசிக்கலாம்.

pm.tamil.net/pub/pm0220/kalamega.pdf

பாடல் 1.

பரமசிவனைப் பார்த்து சுவாமி நீர் பரம ஏழை. நீர் ஒரு ஆட்டக்காரன். 
உமக்குப் பட்டு கிடையாது. தோல்தான் உம் ஆடை. 
தலை மண்டை ஓடு, மயானத்தில் இருக்கிற சாம்பல்தான் 
உமக்கு மல்லி. இப்படிப் பரம ஏழையாக இருந்தால் 
யார் உம்மை மதிப்பார்கள்?” என்று சொல்லி 
இந்தப் பாட்டை பாடுகிறார்.

தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ 
பூண்ட செருப்பாலொருவன் போடானோ
மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ 
தென் பாலியூர் ஐயா நீ ஏழையானால்.

கங்கை தலையில். கண்ணப்பர் (செருப்பால்). பித்தா பேயா 
என்று திட்டியவர் சுந்தரர். வில்லால் அடித்தது அர்ச்சுனன். 
தென்பாலியூர் - சிதம்பரம்.

பாடல் 2.

ஆறு தலை என்றால் ஆறு தலை, அதற்குக் கனிவான 
வார்த்தைச் சொல்லித் தேற்றுதல் என்றும் அர்த்தம். 

இதோ பாடல்.

சங்கரற்கும் ஆறுதலை  (சிவனுக்கு 5 + கங்கை)
சண்முகத்திற்கு ஆறுதலை (சுப்பரமணியர் - ஆறுமுகம்.)
ஐங்கரற்கும் மாறுதலை  (பிள்ளையார் தலை மாறியது)
சங்கை பிடித்தோர்க்கும் மாறுதலை (10 அவதாரத்திலும் விஷ்ணு மாறுதலை)
பித்தா, நின் பாதம் பிடித்தோர்க்கும்
ஆறுதலைப்பார்                              (ஆறுதலைச் செய்யுங்கள்)

பாடல் 3

ஒரு சமயம் திருமலைராயன் சபையில் இருக்கும்  64 புலவர்களில் ஒருவர் காளமேகத்திடம் செருப்பு’, ‘விளக்குமாறுஎன்ற சொற்கள் 
வரும்படி பாடலை இயற்றுமாறு சொன்னார். 
இந்த வார்த்தைகளைப் பொதுவாகப் பாடல்களில்
உபயோகிப்பது கிடையாது. இந்தச் சொற்கள் இடக்கர் 
என்று சொல்லப்படும். காளமேகம் அசரவில்லை. 
இதோ பாடல்

செருப்புக்கு வீரர்களைச் சென்று உழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல மருப்புக்கு தண்மதன்
பொழிந்திறந்த தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்கு மாறே.

செருப்புக்கு = செரு + புக்கு = யுத்தகளத்திற்கு செல்லும்
யுத்தகளத்திற்குச் செல்லும் வீரர்களை ஜெயித்த 
வேலவனைத் தழுவ ஆசை, ஒரு நாயகிக்கு. 
தாமரை மேல் உட்கார்ந்து இருக்கும் வண்டைத் 
தூதுவனாகச் சென்று தன்னுடைய 
தாபத்தை விளக்குமாறு கேட்கிறாள்.

இது எப்படியிருக்கு?

பாடல் 4

இதோ கடைசியாக ஒரே பாடல் இரு வேறு பொருள்கள்.

பிரிவுத் துயரால் வேதனைப்படும் பெண்ணொருத்திக்குச் 
சந்திரன் வேதனை தருவதைக் கூறும் நிலையில் 
அவள் பாடுவதுபோல் அமைந்திருக்கிறது இந்தப் பாடல். 
அதே சமயம் சிவபெருமானின் திருக்கோலத்தை 
மிக அழகாக வர்ணிக்கும் பாடலாகவும் 
அமைந்திருக்கிறது. 
இதோ பாடல்

இரும் தாரை கேள்வனை
ஓங்கும் அராவை, எழுபுனலைத்
திருந்தாரை, வன்னியை
முடி முடித்தோன் செய்ய
                      வேளைப் பண்டு
தரும் தாதை, நாயகன்
சுந்தரன் தூதன், சமரில் அன்று
பொருந்தார் புரத்திட்ட 
தீப்போன் மதியம்
புறப்பட்டதே.

சிவன் தன் தலையில் எவற்றையெல்லாம் முடிந்துகொண்டிருக்கிறார்
எழில் மிகுந்த தாரையின் ஆசைக்குரிய சந்திரனை
படமெடுத்துத் தலை உயர்த்தும் பாம்பை
பொங்கி எழும் கங்கையை
ஆத்திமாலையை, வன்னிமலரை — 
முருகனை நமக்குத் தந்த தந்தை
சுந்தரருக்காகத் தூதுச் சென்றவர். 
அத்தகையவன் திரிபுரத்தை எரித்தானே. 
அந்தத் தீ எவ்வளவு கொடுமையானது
இதோ புறப்பட்டிருக்கிறதே, சந்திரன் (நிலா)
அந்தத் தீயைப் போலவே என்னை வதைக்கிறது.

பின் ஒரு சமயம் காளமேகம் ஸ்ரீரங்கத்திற்கு சென்றார். 
அரங்கநாதனைப் பற்றி ஒரு பாடல் பாடினார். 
சிவனைப் பற்றி பாடிய  அதே பாடல். 
பாடலின் ஒரு சொல்லைக்கூட மாற்றவில்லை. 
பாடல் இதோகாளமேகத்தின் விளக்கத்துடன்

            இருந்தாரை கேள்வனை
            ஓங்கும் மராவை, எழுபுனலைத்
            திருந்தாரை, வன்னியை
            முடி முடித்தோன் செய்ய
                                    வேளைப் பண்டு
            தரும் தாதை, நாயகன்
            சுந்தரன் தூதன், சமரில் அன்று
            பொருந்தார் புரத்திட்ட
            தீப்போன் மதியம் புறப்பட்டதே.

பெருமையுடைய தாரையின் கணவரான வாலியையும்
உயர்ந்தோங்கி நின்ற மராமரங்களையும்
ஏழு கடல்களையும், திருந்தாத பகைவரையும்
வன்னியென்ற அரக்கனையும் முன்பு கொன்று முடித்தவன்
திருமால் அல்லவா? சிறப்பு மிகுந்த மன்மதனைப் பெற்று 
தந்த தந்தையும் அவன்தானே?

உலகுக்கெல்லாம் தலைவனான அவன்தான் 
அழகான ராமபிரான். அந்த ராமனின் தூதன் அனுமான்
பகைவனின் ஊரான இலங்கைக்குத் தீ வைத்தானே
அந்த தீ எவ்வளவு கொடியது? அதே கொடுமையுடன் 
இந்த நிலா என்னை வாட்டக் கிளம்பியிருக்கிறது” 
என்று பாடுகிறாள்.

அரனும் அரியும் ஒண்ணு. 
அதை அறியாதவனின் வாயில் மண்ணு " என்பது வழக்கில் சொல்வது. 
இவர்கள் இருவருக்கும் பொருந்துமாறு ஒரே பாடலைப் பாடி 
வெவ்வேறு பொருளுரைத்தது 
கவி காளமேகத்தின் தனிச் சிறப்பு.

வாழ்க தமிழ்! வாழ்க தமிழ் புலவர்கள்.

கொசுறு 1

1940ஆம் ஆண்டு எல்லிஸ். ஆர். டங்கன் இயக்கத்தில்
நாதஸ்வரச் சக்ரவர்த்தி  T.N. ராஜரத்தினம் பிள்ளை நடித்த 
காளமேகம் படம் வெளியிடப்பட்டது. 
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்தான் இதற்குக் கதை, வசனம்.
N. S. கிருஷ்ணன், T.A. மதுரம், S.P.L. தனலட்சுமி மற்ற நடிகர்கள். 
ராஜரத்தினம் பிள்ளை நன்றாகப் பாடியிருக்கிறார்.

காளமேக புலவர் நாதஸ்வரம் வாசித்து இருக்கிறார் 
என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை. இருந்தாலும் ராஜரத்தினம் பிள்ளை ரசிகர்களுக்காக ஒரு சீனில் காளமேகம் நாதஸ்வரம் 
வாசிப்பதாக காட்டினார்கள். N.S. கிருஷ்ணன் ஒத்து.

ஆக 1940லியே கதாநாயகனுக்காக தான் கதையே ஒழிய 
கதைக்காகக் கதாநாயகன்என்ற டிரெண்டுஆரம்பித்துவிட்டது.
அது இன்னும் தொடர்கிறது.

நல்ல வேளை! இந்தக் காலத்தில் யாரும் காளமேகத்தை 
‘Remake’ பண்ண முன்வரவில்லை. 
கொஞ்சம் கற்பனைப் பண்ணிப்பாருங்கள். 
ஆக்ஷன் கிங், அர்ஜுன், கேப்டன் விஜயகாந்த்,
சூப்பர் ஸ்டார் ரஜினி ஆகிய இவர்கள் 
காளமேகமாக நடித்தால் எப்படியிருக்கும்
காளமேகத்திற்குக் கவிதை பாட வேண்டிய 
அவசியமே இருந்திருக்காது. 
உடல் வலிமையாலேயே எல்லாப் புலவர்களையும் 
ஜெயித்திருப்பார்.

வாழ்க!  தமிழ் சினிமா

கொசுறு 2

இந்தப் படத்தைப் பார்த்தவர்களில் நானும் ஒருவன். 
ஒரு மங்கலான நினைவு. அப்பொழுது எனக்கு வயது  10.

(நன்றி: நா. சீ. வரதராஜன், கிருபானந்த வாரியார் சுவாமிகள்
 Project Madurai.)

                                                                

 கிளறல் தொடரும்




6 comments:

  1. Anonymous7:02 PM

    Very interesting-To learn a language at 60 out of compulsion and improving the interest to learn the beauty of poetry is something remarkable--any better word...
    Annamaliar

    ReplyDelete
  2. காளமேகத்தை பற்றி தெரிந்து கொண்டேன் ....தொடரட்டும் தங்கள் பணி...

    ReplyDelete
  3. அற்புதம்! அந்த சிவன்-ராமர் பாடலும் விளக்கமும் அருமையாக இருந்தது.

    கசடறக் கற்பது எவ்வளவு அவசியம்? நானும் பள்ளியில் காளமேகக் கவியின் செய்யுள் படித்திருக்கிறேன் - ஏனோ ஆசுகவி என்றால் ஒரே சொல்லில் கவி பாடுபவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். "காக்கைக் காகா கூகை" என்று ஒரு செய்யுள் - அது (ஒரே சொல் கவிதை) பற்றி எதேனும் தகவல் உண்டா உங்களிடம்?

    ReplyDelete
  4. Anonymous11:20 PM

    superb...

    ReplyDelete
  5. நன்றி தொடரட்டும் உங்கள் தேடல்

    ReplyDelete
  6. Anonymous6:23 PM

    அருமையாக இருக்கிறது...........தொடருங்கள்

    ReplyDelete