Monday, January 23, 2012

சங்க இலக்கியம் - புறநானூறு - ஒரு சிறிய அறிமுகம்


சங்க இலக்கியம் எனப்படுவது கி.மு.300-கி.பி.700 காலப் பகுதியில் 
எழுதப்பட்ட தமிழ் இலக்கியங்கள் ஆகும். 
473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டது. 
பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபட்டவர்களும்
பெண்களும், மன்னர்களும் இவற்றை எழுதியுள்ளனர்.

தமிழ் நூல்கள் பெரும் பிரிவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
பதினெண் மேல்கணக்கு நூல்கள் ஆகும்.

ஐந்தோ அல்ல அதற்குக் குறைந்தோ அடிகளைக் கொண்டு 
அமையப்பெற்றவை கீழ்கணக்கு நூல்கள். 
அதற்கு மேற்பட்ட அடிகளைக் கொண்ட நூல்கள்
மேல்கணக்கு நூல்கள்.

கீழ்க்கணக்கு நூல்கள் வாழ்விற்குத் தேவையான அறத்தையும்
நீதிபோதனைகளையும் கூறுபவை. 
உதாரணங்கள்: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது
இனியவை நாற்பது, ஐந்திணை, ஆசாரகோவை, பழமொழி... 
மொத்தம் 18.

பதினெண் மேல்கணக்கு நூல்கள்: 
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்கள் ஆகும்.

தொகை என்றால் பல்வேறு காலகட்டங்களில் 
பல புலவர்களால் எழுதப்பட்ட பாடல்களைத் 
தொகுத்து  ஒரு நூலாக்குவது.

இப்படிமேற்சொன்ன நூல் முறையில் 
பதினெண் மேல்கணக்கு நூல்களுள் தொகுக்கப்பட்ட 
தொகை நூல்கள் எட்டு.

இந்த எட்டுத்தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.


புறம் + நானூறு = புறநானூறு

400 பாடல்களைக் கொண்ட பல்வேறு புலவர்களால் 
பல்வேறு காலகட்டங்களில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு. 
இதன் மூலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் 
சிறப்பையும், தமிழ்நாட்டின் சிறப்பையும், வள்ளல்களின் 
வாழ்க்கையைப் பற்றிய குறிப்புகளையும்
மக்களின் சமூக வாழ்க்கை நிலையைப் பற்றிய 
தகவல்களையும் அறியலாம்.

            “யாதும் ஊரே, யாவரும் கேளிர்;
             தீதும் நன்றும் பிறர்தர வாரா;       

(எங்களுக்கு எல்லா நாடும் ஒன்றுதான். எல்லோரும் எங்கள் சுற்றத்தார். 
வாழ்க்கையின் நன்மை தீமைகள் பிறர் தந்து வருவதில்லை) 
என்ற பாடலை அடிக்கடி கேட்டிருப்பீர்கள். 
எத்தனை பேருக்கு இது புறநானூறுப் பாடல் என்று தெரியும்
அருமையான கவிதைப் பொக்கிஷம். 
அதிலிருந்து ஒரு எடுத்துக்காட்டு இதோ.

புறநானூறில் 150ஆவது பாடல் இக்கட்டுரையின் கடைசியில் 
கொடுக்கப்பட்டிருக்கிறது. 
இது நளி மலை நாடன் என்ற வேடுவ வள்ளலைப் பற்றிய பாடல். 
இந்த புறநானூற்றுப் பாடலைப் பாடியவர் 
வண் பரணர் என்னும் புலவர். 
தமிழருடைய பெருமையைக் கூறும் உண்மை நிகழ்ச்சியினை 
நாம் கண்டு இன்புறலாமே.

நளி மலை நாடன்

இசைப் பாணன் ஒருவன் தன் சுற்றத்தாரோடு பசியின் 
கொடுமையோடும் வருத்தத்தோடும் பலாமர
நிழலில் அவர்கள் கொண்டுவந்திருந்த 
வாத்தியங்களோடு அமர்ந்திருந்தான்.

அந்த வேளையில் அழகும் வலிமையும் ஒருங்கே பொருந்திய 
வீரன் ஒருவன் அங்கு வந்தான். அவனுடைய கழல் 
(ஆண்கள் காலில் அணியும் அணிகலன்) அமைந்த கால்களிலே 
இரத்தம் படிந்திருந்தது. 
வில்லை ஏந்திய அவன் கைகளில் கடகம் (கங்கணம்) மின்னியது. 
வேட்டையில் கொன்ற காட்டு மான்களின் 
கொழுவிய தசையையும் அவன் சுமந்துகொண்டிருந்தான். 
அவனுடைய மார்பிலே தண்ணிலவுபோல் மின்னி விளங்கும் 
முத்தாரம் நிழல் செய்தது. 
முடியிலே நீல மணியின் கதிர் ஒளி விட்டு விளங்கியது.

ஆகா, அழகுக்கு அழகு சேர்த்தது அக்காட்சி.

பாணன் வேடனைப் பார்த்ததும் தன்னுடைய ஆட்களை 
வேடன் பார்க்கிறானோ என்று எண்ணினான். 
பாணனை வேடன் பார்க்கிறான். 
பார்த்தவுடன் பாணனின் வறுமையை உணர்ந்தான். 
பசியையும் உணர்ந்தான். பாணனுடைய ஆடையே 
அவனுடைய வறுமையை பறைசாற்றியது.

வேடன் தன் வில்லையும் சுமையையும் இறக்கி வைத்தான். 
தீக்கடைக் கோலால் தீயை மூட்டினான். 
தன்னிடம் இருந்த மாமிசத்தை அந்நெருப்பிலே 
வாட்டிப் பக்குவம் செய்தான். 
வேடன், பாணனிடம் சென்று தான் அனலில் 
வாட்டிய மாமிசத்தை எடுத்துக் கொடுத்து 
பாணனையும் அவனுடைய சுற்றத்தாரையும் 
உண்ணச் செய்து  மகிழ்ந்தான்.

அமுதம் கிடைத்ததைப் போல் அவ்வுணவைப் 
பாணனும் அவனுடைய சுற்றத்தாரும் உண்டு மகிழ்ந்தனர். 
அப்பால் சென்று மலை உச்சியினின்று வீழ்ந்த அருவி 
நீரைத் தம் வயிறும் உள்ளமும் குளிரும் வண்ணம் பருகி
பாணரும் அவனுடைய சுற்றத்தாரும் வேடனுக்கு 
நன்றி கூறிப் புறப்படத் தயாராயினர்.

வேடன் தன்னுடைய கழுத்திலே அணிந்திருந்த 
அணிதிகழும் முத்து மாலையையும் தடக்கையிலே 
செறிந்து விளங்கிய கடகத்தையும் கழற்றிப் பாணன் கையில் 
கொடுத்துக் காட்டிலே தன்னால் இவ்வளவுதான் 
கொடுக்க முடிந்தது என்று அன்புடனும் ஆர்வமுடனும் 
பரிவுடனும் கூறினான்.

பாணன் வேடனின் ஊரையும் பெயரையும் கேட்டான். 
வேடன் பதில் சொல்லாமலே நகர்ந்தான்.

அவ்வழியே சென்றவர்களிடம் பாணன் 
வேடனைப் பற்றிக் கேட்டான். 
அவர்கள் அவன் பெயர் நள்ளி என்றும் 
அவன் தோட்டி என்ற மலைக்கும் அதைச் சார்ந்த நாட்டுக்கும் 
காவலன் என்றும் கூறினார்கள்.

பாணன் அதைக் கேட்டு மகிழ்ந்தான்.

பாணன் நள்ளியை வாயாரப் புகழ்ந்தான். 
தம்முடைய நாட்டையும் மலையையும் தம்மையும் 
பாடிப் புகழ்ந்த புலவர்களுக்கே பரிசு வழங்குவது 
வள்ளல்களின் இயல்பு. 
ஆனால், இந்த நள்ளி மலை நாடன் நள்ளியோ 
இசையையோ அதன்மூலம் கூடிவரும் புகழையோ 
கருதாமல் தானே வலிய வந்து
தன் பெயரைக்கூடச் சொல்லாமல்
குறிப்பறிந்து உதவி செய்திருக்கிறான். 
இதுவல்லோ உதவி, தர்மம், அறம்.! 
என்னே இவன் அறம்!

(பி.கு) கபிலரும் பரணரும்,  தாம் பாடியுள்ள 
அகப்பொருள் பாடல்களிலும் 
இந்த நள்ளியைப் போற்றிப் பாடியுள்ளனர்.

150. நளி மலை நாடன்!

பாடியவர் : வன் பரணர்.

பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி.

திணை: பாடாண் துறை: இயன்மொழி.

சிறப்பு: தோட்டி மலைக்கு உரியவன் இவன் என்பதும்
இவன் வேட்டுவக் குடியினன் என்பதும்,

கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவுமுதல் பொருந்தித்,
தன்னும் உள்ளேன், பிறிதுபுலம் படர்ந்த என்
உயங்குபடர் வருத்தமும் உலைவும் நோக்கி,
மான்கணம் தொலைச்சிய குருதியங் கழற்கால்,
வான்கதிர்த் திருமணி விளங்கும் சென்னிச்,
செல்வத் தோன்றல், ஓர் வல்வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கைகவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால்நிணக் கொழுங்குறை,
கான்அதர் மயங்கிய இளையர் வல்லே,
தாம்வந்து எய்தா அளவை, ஒய்யெனத்
தான்ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, ‘நின்
இரும்பேர் ஒக்கலொடு தின்ம்எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
நல்மரன் நளிய நறுந்தண் சாரல்,
கல்மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேன் ஆக, வல்லே,
பெறுதற் கரிய வீறுசால் நன்கலம்
பிறிதொன்று இல்லை; காட்டு நாட்டேம்என,
மார்பிற் பூண்ட வயங்குகாழ் ஆரம்
மடைசெறி முன்கை கடகமொடு ஈத்தனன்;
எந்நா டோ?’ என, நாடும் சொல்லான்!
யாரீ ரோ!எனப், பேரும் சொல்லான்;
பிறர்பிறர் கூற வழிக்கேட் டிசினே;
இரும்பு புனைந்து இயற்றாப் பெரும்பெயர்த் தோட்டி
அம்மலை காக்கும் அணிநெடுங் குன்றின்
பளிங்கு வகுத் தன்ன தீநீர்,
நளிமலை நாடன் நள்ளிஅவன்எனவே.

                                                                                                
தகவல்: நன்றி:திரு  பாஸ்கர் கைலாசம்                                                                     
                                                                        ...கிளறல் தொடரும்.

1 comment:

Pattu & Kuttu said...

Sir

Great work.. Simple and easy to understand to a lay man. kindly more article in future..
you can write some for children and any easy way to learn tamil

Let god give good health and 200 years of life!

Regards
VS Balajee