Tuesday, March 26, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 2



1953ல் சென்னை வந்தேன்.
நேஷனல் ஸ்கூலில் வாத்யார்.
கல்சரல் ஷாக்,கல்சரல் வித்யாசம்
என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
சொந்த அநுபவம்-சென்னையில்.
ஒரு தேசத்திற்க்கும்,ஏன்,ஒரு 
மாகணத்துக்கும் பேச்சிலே,
சாப்பாட்டிலே வித்யாசம்
இருக்கலாம்-நிறையவே இருக்கு.
ஆனால்,தமிழ் நாட்டு மொழியான 
தமிழ்,மாவட்டத்துக்கு மாவட்டம் 
எப்படி வித்யாசமாக 
அறியப்படுகிறது என்பதை 
தெரிந்து கொண்டேன்.
சென்னை வந்த சில நாள்களில்,
என் அக்காவுடன் ஜியார்ஜ் டவுனுக்கு
சென்றேன்.பஸ்ஸிலிருந்து இறங்கி
ஒரு ரிக்‌ஷாக்காரரிடம்,
( கார்..கவனியுங்கள்-நெல்லை பண்பு),
"என்ன வே..மின்ர்வா சினிமா
எங்கே இருக்கு?."என்று கேட்டேன்.
ரிக்‌ஷாக்காரருக்கு வந்ததே கோபம்..
"என்னையா,உன் பெண்டாட்டி 
என்று நினத்தாயா?
"ஏ" போட்டுக் கூப்பிடறே?"
(..சீவிடுவேன்..அப்போ அப்படி
சொல்லலை..இப்போ சொல்லி இருப்பார்..சினிமாவின் தாக்கம்)
என்று கத்தினார்.கூட்டம் சேர
ஆரம்பித்தது.(இது சென்னையின் இன்னோரு நல்ல பழக்கம் என்று 
பிறகு தெரிந்துகொண்டேன்)
முதலில் புரியவில்லை.
அவர் கோபத்தின் காரணம்.
அப்புறம் தான் புரிந்தது..
நெல்லையின் மரியாத சொல் ஆன
"வே",தப்பாக,"ஏ" ஆக புரிந்து
கொண்டது.
என் விளக்கத்தை கேட்க 
விரும்பாதவரிடம்
மன்னிப்பு கேட்பதை தவிர 
வேறு வழியில்லை.
மறு நாள்,பஸ் பயணம்..
பஸ் கண்டக்டர்
" டிக்கட் எடய்யா?" 
என்று ஏக வசனத்தில்,
சுந்தர தமிழில்,கூவினார்.
முதலில் ஷாக்காக இருந்தது.
இப்போ தப்பித்தவறி,கண்டக்டர்,
"சார்,டிக்கட் எடுத்து விட்டீர்களா" 
என்று கேட்டால் எனக்கு 
ஒரு கூச்சம் உண்டாகிறது.
என்.எஸ்.கிருஷ்ணன் சொல்வார்.
"சென்னையா,அவாளுக்கு என்று
ஒரு தனி பாஷை."
இப்படியாக அடுத்த 50 ஆண்டுகள்
சென்னையோடு ஒன்றி விட்டேன்.

இப்போ கதை தொடர்கிறது...



நெல்லையில் கிடைக்காத 

இரண்டு விஷயங்களை 
வெறித்தனமாக அனுபவிக்க 
ஆரம்பித்தேன்.
முதலாவது, ஆங்கில சினிமா. 
நெல்லையில் அப்பொழுது 3 தியேட்டர்கள்தான் உண்டு. 
படங்கள் குறைந்து 6 மாதங்கள் 
ஓடும். ஆங்கிலப் படங்கள் 
வருவது ரொம்ப துர்லபம். 
எஸ்தர் வில்லியம்ஸ்
ரீடா ஹேஒர்த் படங்களைப் 
பத்திரிகைகளில் பார்த்து ஏக்கம்.
வந்த முதல் வருஷம்
365 நாளில் 360 சினிமா பார்த்தேன்.

இரண்டாவது, கர்நாடக சங்கீதக் கச்சேரிகள். கோவில் கச்சேரி
கல்யாணக் கச்சேரி, சபா கச்சேரி 
என்று எங்கே பெரிய வித்வான்கள் பாடினாலும் கேட்டேன். 
துட்டு கொடுத்துப் போகும் 
கச்சேரிக்கு பட்ஜட் ரூ.
(வாத்தியார் சம்பளம் ரூ. 99ல் - 1%)
அதைச் செலவழிக்கும்போது, பார்த்து, வயலின்,மிருதங்கம் வாசிப்பவர்களும் பிரபலமானவர்களாக  இருக்கும் கச்சேரிகளுக்குப் போவேன்.
சங்கீத வெறித்தனத்தைப் பற்றி 
முதலில் எழுதியிருந்தேன் அல்லவா
அதற்கு இதோ, ஒரு உதாரணம். 
என் நண்பன், பாலக்காட்டு மணி 
அய்யரின் பரம பக்தன்.











ஒரு கச்சேரிக்குப் போயிருந்தோம். 
மணி அய்யர் மிருதங்கத்திற்குச் 
சுருதி சேர்த்து, 2,3 தட்டு தட்டினார். 
என் நண்பன் சொன்னான்
"பார்த்தாயா, அந்த சவுண்டில் 
என்ன சொல்கிறார் தெரியுமா
பாலக்காட்டு மணி என்று தட்டி சொல்கிறார்." 
இது எப்படி இருக்கு?

இந்த பீரியடில் கேட்டக் கச்சேரிகளில் மறக்க முடியாதது இரண்டு. 


ஒன்று, பார்த்தசாரதி சபாவில் 

ஜி. என். பி. அவர்கள் கச்சேரி. 












ராஜமாணிக்கம் பிள்ளை வயலின்,
பழனி சுப்ரமணிய பிள்ளை மிருதங்கம். 









நான் கேட்ட கச்சேரி இது அல்ல.
இது வேறு.இதில், 
வயலின் ராஜமாணிக்கம் பிள்ளை,
பாலகாடு மணி அய்யர்-மிருதங்கம்,
பழநி சுப்புடு-கடம்
அபூர்வ படம்.

கச்சேரி, முடிவதுபோல் இருந்த 
நிலைமை மணி 9.45. 
நான் முன் வரிசையிலிருந்து 
"வந்தே மாதரம்" என்று கத்தினேன். 
பக்கத்தில் உள்ளவர் முறைத்துப் 
பார்த்தார். ஜி.என்.பி. என்னைப் 
பார்த்து புன்முறுவல் செய்து
 "பாடறேன்" என்று சொல்லி
வந்தே மாதரம் என்ற ராகமாலிகை ஸ்லோகத்தைப் பல ராகங்களில் 
பாடினார். 
ராஜமாணிக்கம் பிள்ளையும் 
சளைக்காமல் ஈடுகொடுத்து 
வாசித்தார். கச்சேரி முடியும் போது 
மணி 11.30. 
யாரும் மணியைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை
குறிப்பாக வித்வான்கள். 
முடியப்போகிற கச்சேரியை 
2 மணி நேரம் இழுத்த 
பெருமையோடு வீடு திரும்பினேன். 
இரண்டாவது நிகழ்ச்சி
ஸ்ரீ.மாலி அவர்களின் புல்லாங்குழல் கச்சேரி. 




கோகலே ஹாலில். 
டி.என்.கிருஷ்ணன் - வயலின். 
சி.முருகபூபதி - மிருதங்கம்.
கச்சேரி 6.30 மணிக்குத் 
தொடங்குவதாக இருந்தது. 
ஆல் இந்திய ரேடியோ 
ரிலே பண்ண ஏற்பாடு 
பண்ணியிருந்தார்கள். 
(T.V. இல்லாத காலம்) 
மாலி சார், வழக்கம்போல் லேட். 
7 1/2 மணிக்குத்தான் வந்தார். 
AIR, மூட்டை கட்டிக்கொண்டு 
வேறு இடத்திற்குச் சென்றுவிட்டார்கள். 
பல ரசிகர்களும் சென்றுவிட்டார்கள். 
மாலி சார், முதல் பாட்டை ஆரம்பித்தார். சவுண்ட் சரியாக வரவில்லை. 
நாங்கள் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கொண்டோம். 
கொடுத்த ரூ. 1 தண்டமோ என்று 
என் நண்பன் முறைத்தான். 
எனக்கு, நம்பிக்கை. 
அடுத்த பாட்டு எடுத்தவுடன் டி.என்.கிருஷ்ணன் வயலின் 
தந்தி அறுந்துவிட்டது. 
மாலி சார், மிருதங்கத் தனிக்கு 
உத்தரவு போட்டார். 
முதல் முறையும், கடைசி 
முறையாகவும் முதல் பாட்டு 
முடிந்தவுடனே மிருதங்க தனி 
கேட்டது அப்போதுதான்.
வயலின் சரி செய்யப்பட்டுக் 
கச்சேரி மறுபடி துவங்கியது. 
மணி 8.45க்கு சூடு பிடித்தது. 
கேட்க  வேண்டுமேகச்சேரி - 
மாலியின் வேணு கானம் 
விடாப்பிடியாக உட்கார்ந்திருந்த ரசிகர்களை எங்கேயோ 
கொண்டு சென்றது.
கச்சேரி முடிந்தது. 12.30 மணி 
பஸ் கிடையாது. 
கோகலே ஹாலிலிருந்து திருவல்லிக்கேணிக்குப் 
பொடி நடை. 
இந்த மாதிரி நிறைய அனுபவங்கள். 

1962 வந்தது. கைபிடித்த வரன் 

ஒரு சங்கீதக் குடும்பத்திலிருந்து. 
மாமனார் HMV என்ற கிராமபோன் கம்பெனியின் மானேஜர். 
சங்கீதக் கச்சேரிகளுக்கும்
சங்கீத ரிகார்டுகளுக்கும் பஞ்சமில்லை. தொடர்ந்து கேள்வி-ஞானம் 
நன்றாகவே வளர்ந்தது. 
தரம் உயர்ந்ததால் மியூஸிக் அகாடமி, மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் என்ற சபைகளில் மெம்பரானேன்.
50 / 50 என்று ஒரு கிளப். 
இது ஒரு chamber music. 
ஆரம்பித்தவர் - Sri SYK, Patterson Vaidyanathan, Hindu G. Narasimham, பிறகு எம்பார் (ஹோ & Co) தலைவர் ஆனார். நான் வைஸ் பிரஸிடென்ட். 
26 வருஷங்கள். கச்சேரிகள், ஏராளம். அனுபவங்கள் இன்னும் ஏராளம். 
ஒரு சில இங்கே தருகிறேன்.

மதுரை சோமு:










50 / 50 கிளப் கச்சேரிகள் 9 மணிக்கு 
முடிய வேண்டும். கச்சேரிக்குப் பிறகு 
இலை போட்டுச் சாப்பாடு. 
9.15 மணிக்குக் கச்சேரியை 
முடிக்கலாம் என்று சைகை செய்தேன். 
சோமு சொல்கிறார் 
"என்னையா கொடுமை. 
சின்ன குட்டையில் நீந்த 
சொல்கிறீங்களே" 
இப்பத்தான் சாரீரம் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது."
மாண்டெலின் ஸ்ரீனிவாஸ்










ஸ்ரீனிவாஸை சென்னைக்கு அறிமுகப்படுத்தியப் பெருமை 
எம்பாருக்கு. 50 / 50 Club கச்சேரி இரண்டாவது கச்சேரி அவருக்கு. 
இந்த child prodigyயின் கச்சேரியைக் 
கேட்க வந்தவர்கள் - 
Sri Balanchander, T.N. Seshagopalan. 
TNS ஒரு மாலையைக் கொடுத்தார் 
அந்த இடத்திலேயே.

செம்மங்குடி சீனிவாசய்யர்










3 நாள் விழா - 
இடம் University Auditorium 
முதல் நாள் - ரவிசங்கர் கச்சேரி. 
கச்சேரி ஆரம்பித்தது. மக்கள், வழக்கம்போல், இங்குஅங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள். 
ரவிசங்கருக்கு எரிச்சல். விளக்குகளை அணைக்க வேண்டும் என்று கத்தினார். மேடைக்கு மட்டும் விளக்குகளை 
focus பண்ணிவிட்டு ஹாலில் உள்ள விளக்குகளை அணைத்துவிட்டார்கள். கச்சேரி தொடர்ந்தது.
மறுநாள், செம்மங்குடி சார்
கச்சேரி. 
முந்திய நாள் அனுபவத்தை 
மனதில் கொண்டு நிர்வாகிகள் 
மேடை விளக்கைத் தவிர மற்ற விளக்குகளை அணைத்துவிட்டார்கள். 
முதல் பாட்டு முடிந்தது. 
செம்மங்குடிக்குக் கோபம்
எரிச்சல். மைக்கில் அவர் குரல் கேட்டது. 
"என்னையா அநியாயம். 
விளக்கை உடனே போடுங்கள். 
முன்னால் உட்கார்ந்துகொண்டிருக்கும் ஆளைப் பார்த்தால்தான் பாட்டு வரும்" என்றார். 
இது எப்படி இருக்கு?

இன்னொரு அருமையான 
செம்மங்குடி அனுபவம். 











ஒரு கச்சேரி அருமையாக இருந்தது. இன்னும் பாடுவார் என்று 
நினைத்தபோது மங்களம் 
பாடிவிட்டார். 
கச்சேரிக்குப் பிறகு மேடைக்குச் சென்று
 "மாமா, ஏன் நிறுத்திவிட்டீர்கள். 
இன்னும் பாடக் கூடாதா?" 
என்று கேட்டேன். 
அதற்கு அவர் பதில் "இதுதான் கரெக்ட். எப்போ கச்சேரியை முடிக்கபோகிறான் என்று கேட்கும் முன்  கச்சேரியை நிறுத்திவிட வேண்டும்", என்றர். 

Bradman, retire ஆனபோது 

"peak career"  ஒரு நிருபர் கேட்டார் 
"why?" Bradman சொன்னார் 
"Why not?" 

செம்மங்குடி சார்,கடைசிவரை 
அந்த பாலிசியை பின்பற்றினார்.

செம்மங்குடி சார்

அவரை அறியாமலேயே 
எனக்கு ஒரு "தண்டனை" 
வாங்கிக் கொடுத்திருக்கிறார். 
என்னுடைய boss, அவருடைய 
வீட்டில் அடிக்கடி சீனியர் 
ஆபிஸர்களுக்கு விருந்து 
வைப்பார். நோட்டீஸ் எல்லாம் 
கொடுக்க மாட்டார். 
ஒரு நாள் திடீரென்று போனில்
 "இன்று சாயந்திரம் வீட்டுக்குச் 
சாப்பிட வா" என்றார். 
அன்றைக்குச் செம்மங்குடி சாரின் 
60ஆவது பிறந்த நாள் கச்சேரி. 
மாமனாருடன் போக ஏற்பாடு செய்திருந்தேன். 
என் பாஸிடம், இதைப் பற்றிச் 
சொல்லி மன்னிப்பு கூறினேன். 
"சரி சரி, பார்க்கலாம்" என்று 
போனை வைத்துவிட்டார். 
வெறும் temporary upset 
என்று நினைத்தேன். 
அடுத்த ஒரு வருஷம் அவர் 
வீட்டில் எந்த பார்ட்டிக்கும் 
கூப்பிடவில்லை. 
என் சகாவிடம் சொன்னாராம்
 "இவனுக்கு என்னைவிடக் கச்சேரிதான் முக்கியமா? செம்மங்குடி கச்சேரி 
எங்கே போகப் போகிறது" என்று கோபப்பட்டராம்.
 "இவர் வீட்டுச் சாப்பாடு எங்கே போய்விடப் போகிறது?" 
என்று எனக்குக் கேட்க ஆசை. 
சேவகன் ஆச்சே! 
அன்றைய கச்சேரி படு ஜோர்.

திருச்சூர் ராமச்சந்திரன்













நல்ல நண்பர். ஏதோ ஒரு 
கச்சேரியின்போது தர்பார் கானடாவில் உள்ள கோவர்த்தனகிரிதாரி’ 
என்ற பாடலைப் பாடச் சொல்லிக் கேட்டேன். உடனே பாடினார். 
அது நடந்து பல வருஷங்கள் ஆகிறது. அதற்குப் பிறகு எந்தச் கச்சேரியிலும் 
என் முகத்தைப் பார்த்தாலும் 
கட்டாயம் அந்தப் பாட்டைப் பாடுவார். பாடிய பிறகு "எப்படி Happy தானே?" என்பார். வணக்கம், அவருடைய அன்புக்கு.

இதோ மாதிரி நிறைய அனுபவங்கள்

பல வித்வான்கள் கச்சேரிகளில். சொல்லிக்கொண்டே போகலாம்.

சொல்லப் போவது....


கே.வி.நாராயண சுவாமி-MGR ,

மஹாராஜபுரம் சந்தானம்,எம்.எல்,வி,
பாலமுரளி.(பாட்டு விளக்கம்)......

அலைகள் ஓயவில்லை..... 

1 comment:

பாலாஜி said...

Good, interesting post. Awaiting your next part!.
Regards
Balaji