Friday, October 11, 2013

சரணாகதி

இது என்னுடைய 
100ஆவது கிளறல்.

எங்கேயோ, ஒரு குரல் கேட்கிறது... 
"இது என்னையா, பெரிய சாதனை, அவனவன் 100 நாளில் 
100 கட்டுரைகள் எழுதுகிறான். 
2 வருஷத்தில் 100 என்பதற்காக
இவ்வளவு பெரிய "Build up."

நியாயமான கேள்வி.
என்னுடையது ஒன்றும் இமாலய 
சாதனை அல்ல என்பது எனக்கு 
நன்றாகவே தெரியும். 
இருந்தாலும், காக்கைக்குத் 
தன் குஞ்சு பொன் குஞ்சு 
அல்லவா
அது போல்தான்
நானும் இந்த நிகழ்ச்சியைச் 
சந்தோஷமாக நினைவுகூருகிறேன். 
100 என்பது ஒரு Magic Number. 
கில்லி, கிரிக்கெட் ஆனாலும்
டெஸ்ட் கிரிக்கெட் ஆனாலும்
சென்சுரி, சென்சுரி தானே
சான்றோர்கள் வாழ்த்தும்போது 
"சதமானம் பவதி, சதாயுஷ் புருஷ:" 
என்றுதானே சொல்கிறார்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு 
முன் ஏதோ தமாஷுக்காக
நானும் வலைப்பூ-blog எழுத 
ஆரம்பித்தேன். 
அது இவ்வளவு தூரம் 
என்னைக் கொண்டுவந்து 
சேர்க்கும் என்று நினைக்கவே 
இல்லை.

நிறைய பேருக்கு நன்றி.
கடவுளுக்கு, மனைவிக்கு
என் குடும்பத்தாருக்கு 
(நான் தமிழில் என்ன 
எழுதியிருக்கிறேன் என்று 
தெரியாமலேயே என்னைப் 
பற்றி தம்பட்டம் அடித்ததற்காக)
என் நண்பன் ராம்
"க்ரியா" ஆஷா
மற்றும் என் நல விரும்பிகள்.

நான் 50 ஆண்டுகள்
"மார்கெட்டிங்"கில் இருந்தாலும் 
அதன் முதல் பாடமான 
"Know your customer" - 
உங்கள் கஸ்டமர் யார்
யாருக்காக எழுதுகிறீர்கள்
என்பதை முழுவதுமாக 
மறந்துவிட்டு 
இந்தக் கிளறலைத் தொடர்ந்து
வந்திருக்கிறேன்.

எனக்குப் பிடித்தது
உங்களுக்குப் பிடிக்கலாம்
பிடிக்கும் என்ற நப்பாசையில்தான் எழுதிவந்திருக்கிறேன்.

கிளறலின் முக்கிய நோக்கம் 
அநேக பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயங்களைச் 
சேகரித்து எனக்குத் 
தெரிந்த நடையில் சொல்வது. 
அது நிறைவேறியதா 
என்பதை நீங்கள்தான் 
சொல்ல வேண்டும்.
என்வரை, இந்தக் கிளறல் 
பணியை ரசித்து எழுதி
வந்திருக்கிறேன்.

மறுபடியும்
உங்கள் எல்லோருக்கும் 
நன்றி.

இப்போது, கட்டுரைக்குப் 
போகலாமா?

இரண்டு வாராங்களாக
நரகத்தைப் பற்றி நிறையவே எழுதியாயிற்று. 
நரகத்திற்குப் பிறகு 
சுவர்க்கம்தானே
இருட்டுக்குப் பிறகு 
வெளிச்சத்தைத்
தானே எல்லோரும் 
விரும்புவார்கள்.

டான்டே சுவர்க்கத்திற்குச் 
சென்றது போல நாமும் 
எப்படி மோட்சத்தை 
அடைய முயற்சி செய்ய 
வேண்டும் என்பதுதான் 
இந்தக் கட்டுரையின் நோக்கம்.

எச்சரிக்கை: நான் பெரிய ஆன்மீகவாதியில்லை. 
சமய சொற்பொழிவாளர்களில் 
ஒருவனும் இல்லை. 
என்னுடையது எல்லாம் 
கேள்வி ஞானம். ஏற்கனவே 
படித்திருந்தால் 
time passஆக எடுத்துக்
கொள்ளுங்கள்.

"மோட்சம்" - 
இதுதான் மனிதர்கள் 
பெற விரும்பும் உயர்ந்த பலன்.
தர்ம, அர்த்த, காம, மோட்சம் 
என்று 4 வகைகளைப் 
புருஷார்த்தம் என்பர். 
தமிழில் இதை, அறம்,பொருள்
இன்பம், வீடு என்பர்.
இந்த மோட்சத்தை அடைய வேண்டுமானால் முதலில் 
நாம் மறுபிறப்பு எடுப்பதைத் 
தவிர்க்க வேண்டும். 
பிறப்பு - இறப்பு - பிறப்பு 
என்று மாறிமாறி வரும் 
என்பது 
இந்துக்களின் நம்பிக்கை. 
இந்தத் தொடரை முடித்துக்கொண்டால்தான்
இறைவனடியை அடைய முடியும். அதற்கான வழிமுறைகள் 
மகான்களினால் விரிவாகத் 
தொகுக்கப்பட்டு காலம்காலமாக 
வெவ்வேறு முறைகளினால் 
மக்களிடம் எடுத்துச் 
செல்லப் பட்டிருக்கிறது. 

இந்து மதம் ஒரு 
goal specific மதம். 
"Path specific" மதம் அல்ல. 
அதாவது,லட்சியத்தை மட்டும் 
சொல்லி அதை அடையும் 
மார்க்கத்தைத் தத்துவ 
மேதைகளிடமும்
பெரிய ஞானிகளிடமும்
ஏன் தனிப்பட்ட மனிதர்களிடமும் விட்டுவிடுகிறது.

ஒவ்வொரு மனிதனின் 
வாழ்க்கைக் குறிக்கோள் 
"Self-realisation" - 
தன்னைத் தானே யார் 
என்று தெரிந்துகொள்வது. 
கடவுள் என்பவர் பரம்பொருள். 
எங்கும் நிறைந்து இருப்பவர். 
அநேக வடிவங்களில் 
வழிபடப்படுகிறவர். 
அதனால், அவரை அடைவதற்கும் 
அநேக வழிகள் இருக்கின்றன. 
எத்தனையோ வழிகள் இருந்தாலும் 
சேரும் இடம் ஒன்றேதான் 
என்பது சான்றோர் வாக்கு.

இந்து மதத்தின் ஆதார 
நூல்களான வேதங்கள்
புராணங்கள்உபநிடங்கள் 
மூன்று விதமான வழிகளை 
வகுத்துக்கொடுத்திருக்கின்றன.
அவை, ஞான மார்க்கம்
கர்ம-சன்யாச மார்க்கம்
பக்தி மார்க்கம்.

மூன்றில் எது உசத்தி கண்ணா
என்று கேட்டால்
பதில்: 
எதுவானாலும் சரி. 
முறைப்படி கடைப்பிடித்தால் இறைவனடிக்குக் கூட்டிக்கொண்டு 
போகும்.

ஞான மார்க்கம்

இதில் முதல் வழியான 
ஞான மார்க்கம் கஷ்டமானது. அறிவுஜீவிகள் மாத்திரம்தான் 
இதைக் கடைப்பிடிக்க முடியும். 
வேத, சாஸ்திரப் புத்தகங்களைப் 
படிப்பது, யோகம், தியானம் 
போன்ற பயிற்சிகளினால் 
உடலையும் உள்ளத்தையும் 
சீராக வைத்துக்கொள்வது 
என்பது போன்ற 
ஒரு strict disciplined 
வாழ்க்கையைத்தான் 
தேர்ந்தெடுக்க வேண்டும். 
இவர்களை வழிநடத்திச்செல்ல 
ஒரு குரு கட்டாயம் தேவை.

கர்ம-சன்யாச மார்க்கம்

இரண்டாவது மார்க்கம் - 
கர்ம-சன்யாச மார்க்கம். 
செய்யும் காரியங்களின் 
பலனை தியாகம் 
பண்ணுவது. 
வாழ்க்கைகுடும்பப் 
பிரச்சினைகளில் இருந்துகொண்டே இறைவனை நோக்கிக் கவனம்செலுத்துவது. 
எதையும் சம நோக்கோடு 
பார்த்து, பலாபலனை 
எதிர்பார்க்காமல் 
எல்லாம் இறைவனுக்கே 
என்ற மனநிலையோடு 
வாழ்பவர்கள் 
இறைவனின் அன்புக்குப் பாத்திரமாவார்கள்.

பக்தி மார்க்கம்
மூன்றாவது, பக்தி மார்க்கம். 
கலியுக மக்களுக்காகவே 
சொல்லப்பட்ட சுலப வழி. 
ஏற்கனவே,முந்திய 
ஒரு கிளறலில் 
ஒன்பது விதமான பக்தி 
வழிகளைப் பற்றி 
எழுதியிருக்கிறேன். 
அதில் சொல்லப்பட்ட -
ஸ்ரவணம், கீர்த்தனம்
ஸ்மரணம், பாதஸேவனம்
அர்ச்சனம், வந்தனம்
தாஸ்யம்சக்கியம்
ஆத்மா நிவேதனம்
ஒன்பது விதமான வழிகளில் 
கடவுளை வழிபட்டு மோட்சத்தை அடையலாம்.

இந்த மூன்று வழிகளையும் 
பின்பற்ற இயலாத மனிதர்கள் 
எப்படிக் கடைத்தேறுவது?

வைணவ ஆச்சாரியர்
ராமானுஜர் மிகமிகச் 
சுலபமான 
ஒரு வழியைச் சொல்கிறார்.

அதுதான் சரணாகதி 
அல்லது பிரபத்தி. 

வைணவத்திற்கே தனிப் 
பெருமை தரும் 
இந்தத் தத்துவம் 
கடவுளிடம் 
complete surrender 
அடைவதைப் பற்றி பேசுகிறது. 

அதுவும் எந்தக் கடவுள்
சாக்ஷாத் நாராயணனிடம்,
"உன்னையே சரணடைகிறேன். 
உன்னை விட்டால் எனக்கு 
வேறு கதி கிடையாது. 
காத்து ரட்சிப்பாயாக" 
என்று எந்நேரமும் நினைத்து 
உருகுவது.

இது ஸ்ரீ பரம்பரை வழி 
என்று சொல்வார்கள்.
சைதன்ய மகாபிரபுவின் 
கெளடயா பரம்பரையில் 
பகவான் கிருஷ்ணனிடம் 
சரணாகதி அடைய வேண்டும் 
என்று சொல்லப்படுகிறது. 

சரணாகதி என்பது 
ஒரு சம்பிரதாயச் 
சடங்கு இல்லை. 
புத்தியோ, மனதோ 
ஊக்குவிக்கும் 
செயல் இல்லை. 
இதயபூர்வமான,நிறைந்த 
உள்ளத்தோடு இறைவனிடம் 
தன்னை முழுவதுமாக ஒப்புவித்துக்கொள்ளும் 
செயல்.
இந்தத் தத்துவத்திற்கு 
வைணவர்கள் கூறும் ஆதாரம் 
பகவத் கீதை.
கீதையின் 18-66 ஸ்லோகத்தை 
சர்ம  ஸ்லோகமாக அடிக்கடி 
மேற்கோள் காட்டுவார்கள்.

சர்வதர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ! 
அஹம் த்வா
ஸர்வ பாபேப்பய: 
மோக்ஷயிஷ்யாமி
மா சுச:

எல்லா தருமங்களையும் 
பற்றற்று விட்டொழித்து
என்னை ஒருவனையே 
சரண் புகுவாய்.
நான் உன்னை எல்லாப் 
பாவங்களினின்றும்
விடுவிப்பேன்
வருந்தாதே.

படிப்பதற்கும் கேட்பதற்கும் 
இது எளிதாகத் தோன்றினாலும் 
சரணாகதி தத்துவத்தைப் 
பின்பற்றுவது அவ்வளவு 
சுலபமான 
காரியம் இல்லை. 
வைணவப் பெரியோர்கள்
சரணாகதி தத்துவம் 
6 அங்கங்களின் சேர்க்கை 
என்கிறார்கள்.
அந்த 6 பிரிவுகள்

1.அனுகூல்யாச் ச சங்கல்ப: 

சரணாகதி தத்துவத்தில் நம்பிக்கையுள்ளவர்களிடம் 
சேர்க்கை வைக்க வேண்டும் 
என்ற ஒரு திடமான நம்பிக்கை.

2.பிரை கூல்யாச்யச் வர்ஜனம்

சரணாகதியை 
எதிர்ப்பவர்களிடமிருந்து 
விலகிச் செல்லுதல்.

3.ரக்ஷயதி இதி விசுவாச:

கடவுள் கட்டாயம் 
காப்பாற்றுவார் 
என்ற திடமான நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது.

4.கோ புத்ருவ வாரணம்

அவர் ஒருவர்தான் வழி. 
வேறு பாதை கிடையாது.

5.ஆத்ம நிக்ஷேப.

நிபந்தனையின்றி நம்மை 
அவனிடம் ஒப்படைத்தல்.

6. காருண்ய

எப்போதும் பவ்யத்தைக் 
காட்ட வேண்டும்.

இதில் கஷ்டமான காரியம்
இறைவனிடம் அசைக்க 
முடியாத நம்பிக்கை வைத்து 
இறைவன்தான் 
நம்மைக் காப்பாற்றச் 
சக்தி உள்ளவன், நம்மால் 
ஒன்றும் செய்ய முடியாது 
என்ற மனப்பக்குவத்தைப் 
பெறுவது. 
நூற்றுக்கு நூறு 
அந்த நம்பிக்கை 
வந்தால் ஒழிய
சரணாகதி வெற்றி 
பெறாது. 
ராமகிருஷ்ணர்
ஒரு குட்டிக் கதை சொல்வார்.

ஒரு நாள் வைகுண்டத்தில் 
விஷ்ணுவும் லட்சுமியும் ஓய்வெடுத்துகொண்டிருந்தார்கள். 
விஷ்ணு, திடீரென்று எழுந்து
பூலோகம் போகத் தயாரானார். 
பிராட்டியார் "என்ன?" என்று 
வினவ
விஷ்ணு சொன்னார் 
"என் பக்தன் ஆபத்தில் 
இருக்கிறான்.கூப்பிடுகிறான்
அவனைக் 
காப்பாற்றப் போகிறேன்" 
என்றார். 
வாசல்வரை சென்றவர் 
உடனே திரும்பி வந்து 
பிராட்டியார் பக்கம் உட்கார்ந்துகொண்டாராம். 
லட்சுமி 
"ஏன், சீக்கிரம் திரும்பிவிட்டீர்கள்" 
என்று கேட்டாள். 
விஷ்ணு சொல்கிறார் 
"என் பக்தன்,ஆற்றுப் பக்கம் நடந்துகொண்டிருந்தான். 
அங்கே ஒரு சலவைத் 
தொழிலாளி 
தன் துணிகளைக் காயப் 
போட்டிருந்தான். 
என் பக்தன் அதைப் பார்க்காமல் துணிகளின் 
மேல் காலை வைத்து 
அவற்றை அசுத்தப்படுத்திவிட்டான். 
சலவைத் தொழிலாளிக்குக் 
கோபம் வந்து என் பக்தனைத் 
திட்டி, அடிக்கக் கை 
ஓங்கியிருக்கிறான். 
அப்போதுதான் என் பக்தன் 
என்னைக் கூப்பிட்டிருக்கிறான். 
நானும் அவனுக்கு உதவத் 
தயாரானேன். 
திடீரென்று என் பக்தன் 
ஒரு கல்லை எடுத்துச் சலவைத் 
தொழிலாளி மேலே எறிய 
முயற்சி எடுத்தான். 
எப்போது அவன் என் உதவி இல்லாமலேயே தன்னைக் காப்பாற்றிகொள்ளலாம் 
என்று நினைத்தானோ 
நான் அவனுக்குத் தேவையில்லை. 
அதனால் தான் திரும்பி 
வந்துவிட்டேன்."

"முழுநம்பிக்கையோடு 
கூப்பிட்டால் இறைவன் 
நிச்சயம் வருவான்" 
என்கிறார் ராமகிருஷ்ணர்.

புராண இதிகாசங்களில் 
எத்தனையோ சரணாகதிகளைப் 
பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். 

பிரகலாதனின் தவம்
கஜேந்திரனின் அறைகூவல்
திரெளபதியின் வேண்டுகோள், ஹனுமானின் அன்பு ,இத்யாதி.

ஆனால் சரணாகதி என்ற 
பெயர் சொன்னவுடன் 
ஞாபகத்திற்கு வருவது
விபீஷண சரணாகதிதான். 
மேலே சொன்ன ஆறு 
அங்கங்களும் விபீஷண 
சரணாகதியில் இருக்கின்றன.

விபீஷணன், ராவணனிடம் 
புத்தி சொல்வது
அவனை விட்டு விலகிவந்தது,
ராமனே தன்னை காப்பாற்றுபவன் 
என்ற திட நம்பிக்கை வைத்தது
ராமனைக் தொழுது தன்னை
காப்பற்ற வேண்டுவது
என்று பல வகையிலும் 
விபீஷணன் தன்னை ராமனிடம் 
ஒப்புவித்துக் கொண்டது 
ஒரு விசேஷமான செயல். 
அரக்கன் என்று ஒதுக்காமல் 
ராமன் விபீஷணனுக்கு அபயம் 
அளித்தது கடவுளுக்குப் 
பாரபட்சம் கிடையாது 
என்பதை நிரூபிக்கிறது.

ராமாயணம் சரணாகதி 
சாஸ்திரமாகக் கருதப்படுகிறது. 
ஒவ்வொரு காண்டத்திலும் 
ஒவ்வொரு சரணாகதியைப் 
பற்றிக் காவியம் பேசுகிறது.

பால காண்டம்-
மகாவிஷ்ணுவிடம் 
தேவர்கள் சரணம் அடைதல்.
தசரதர் பரசுராமரிடம் 
சரணம் அடைதல்.

அயோத்யா காண்டம் -             
பரதனின் சரணாகதி.

ஆரண்ய காண்டம்-             
ரிஷிகளின் சரணாகதி.

கிஷ்கிந்தா காண்டம்-            
சுக்ரீவ சரணாகதி.
ராம சரணாகதி 
(சமுத்திர ராஜனிடம்)

சுந்தர காண்டம்-            
ஹனுமான் சரணாகதி.

யுத்த காண்டம்-              
விபீஷண சரணாகதி.

மேலும் படிக்க
Youtubeக்குச் செல்லுங்கள். 
நிறைய உபன்யாசங்கள் 
கேட்கலாம்.

முடிவாக,

கடவுளிடம் சரணாகதி 
அடைந்தவர்கள் 
கடவுளுக்குப் 
பிரியமான காரியங்களை 
மாத்திரம் செய்ய வேண்டும்.
அதே மாதிரி, கடவுளுக்குப் 
பிரியமில்லாத காரியங்களைச் 
செய்வதைத் தவிர்க்க வேண்டும். 

கடவுளின் கருணையில் 
முழு நம்பிக்கை வைத்து
நம் கவலைகளை மறந்து 
"எல்லாம் அவன் செயல் 
அவன் காப்பாற்றுவான்" 
என்ற நினைப்போடு 
வாழ வேண்டும்.

சுவாமி விவேகானந்தர் 
சொல்கிறார் 

"பற்றுகளை அறவே ஒழித்து 
அன்பினால் பணி செய்து 
அவனிடம் அடைக்கலம் 
புகுவதொன்றே நமது கடமை. 
நமக்கென்று தனியாக 
வேறு ஒரு காரியமும் கிடையாது. 
எல்லாம் அவனுடையது."

கொசுறு:

சப்த ரிஷிகள் இயற்றிய ஒரு சரணாகதி
விடியோ:

வெங்கடேஸ்வரர் சரணாகதி


....கிளறல் தொடருமா?

2 comments:

கடற்கரை said...

ஏன் சார், இப்போல்லாம் எழுதறதில்லயா?

Mahesh Varan said...

தொடர்ந்து எழுதுங்கள்