Wednesday, September 14, 2011

நீண்ட அறிமுகம்

‘திருநெல்வேலி’ யின் ‘குப்பை’
 அறிமுகம் – 2 பகுதிகள்.


முதலில் – திருநெல்வேலி – நீண்ட உரை.


திருநெல்வேலி – சிலபல தமிழர்களைத் தவிர மற்ற எவருக்கும் பாதிப்பு ஏற்படுத்தாத பெயர். அந்த சிலபல தமிழர்களுக்கும் இந்தப் பெயர் கவனத்துக்குக் கொண்டு வருவது - திருநெல்வேலி அல்வா. சில அறிவு ஜீவிகளுக்கு, நெல்லையப்பர் – காந்திமதி, தாமிரபரணி, குற்றாலம், கட்டபொம்மன் என்ற பெயர்கள் ஞாபகத்திற்கு வரலாம்.


ஆனால் நிச்சயமாக, கண்டிப்பாக, சத்தியமாக திருநெல்வேலி என்பது ஒருவருடைய பெயர் என்று யாரும் நினைத்துப் பார்க்க மாட்டார்கள்.


ஆனால் அதுதான் உண்மை.


அந்தக் கோடியில் (ஏன் 1,76,000 கோடியில் என்றுகூட சொல்லலாம்) ஒரு பெயருக்குச் சொந்தமானவர்தான் இந்த வலைப்பூ ஆசிரியர். அதாவது அடியேன்….


திருநெல்வேலி என்பது என் பெற்றோர்கள் எனக்குச் சூட்டிய பெயர் இல்லை. இது உலக வல்லரசான அமெரிக்க சர்க்கார் எனக்கு வைத்த பெயர்.


அது எப்படி? ….. கேள்விக்குப் பதில் இந்த “Flashback”ல்……










சென்ற நூற்றாண்டில் நெல்லைச் சீமை என்று அழைக்கப்படும் திருநெல்வேலியில் சுப்ரமணிய அய்யர் என்ற ஒரு சீமான் தன் இளம் மனைவியான சுந்தரியுடன் வசித்துவந்தார். நல்ல எடுப்பான முகம். தாராள மனதுடைய கொடையாளி. பக்திமான். உத்தியோகம் – ரயில்வே கான்டிராக்டர். ஏற்கனவே ஒரு மகளும், மகனும் இருந்தும் இன்னொரு மகன் வேண்டும் என்று (நாம் இருவர் – நமக்கு இருவர் என்ற காலம் இல்லை) மிக “பெரிய” யாகமான “நாகப் பிரதிஷ்டை” என்ற பரிகாரத்தைப் பண்ணினார் (யாரோ இது “ஜுஜுபி” விரதம் என்று சொல்வது காதில் விழகிறது).


இந்த விரதத்தின் மூலம் ஒரு “all in one” – அதாவது “மார்கண்டேயர் (நீண்ட வயது) நாரதர் (கலை), ஆதிசங்கரர் (படிப்பு), அனுமார் (பலம்) என்று எல்லா மகான்களுடைய கலவையான புத்திரன் வேண்டும் என்று நினைத்தார். சுருக்கமாக அந்த புத்திரன் “கோ------------------------டியில்” ஒருவனாக இருக்க வேண்டும் என்று விரும்பினார். வரம் கொடுக்கும் நேரம், நாகராஜனுக்கு (பாம்புத் தலைவன்) (இந்த விரதத்தின் நாயகன்) என்ன செய்வது என்று தெரியவில்லை. அவருக்கு இவ்வளவு பெரிய வரம் கொடுக்க “பவர்” கிடையாது. தன்னுடைய “immediate” boss பரமசிவனிடம் கேட்டிருக்கிறார். பரமசிவனும் முதலில் “சரி” என்று சொல்லிவிட்டார். திடீர் என்று வரம் கொடுத்துக் கஷ்டப்பட்ட கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. “நமக்கு ஏன் வம்பு” – நாராயணனைக் கேட்போம் என்று விஷ்ணுவிடம் பேசினார். விஷ்ணுவுக்கு ஒரே அதிர்ச்சி. “சுவாமி, நல்லவேளை என்னைக் கேட்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றியதற்கு நன்றி. லட்சுமி என்னை அரித்துக்கொண்டிருக்கிறாள். நான் எப்பொழுது எங்கே, என்ன அவதாரம் எடுத்து உலகத்தை அழிக்கப்போகிறேன்” என்று - நான் சொன்னேன் “லட்சுமி, நான் இந்தத் தடவை அவதாரம் ஒன்றும் எடுக்கப்போகிறதில்லை. அதற்கு அவசியம் இருக்காது. மக்களே தங்களை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனால் சீக்கிரமே இந்த உலகம் அழியப்போகிறது. அந்த மாதிரி இருக்கிற மகிழ்ச்சிகரமான சூழ்நிலையில் நீர் இந்தக் குண்டைத் தூக்கிப் போடுகிறீர். இந்த மாதிரியான குழந்தை பிறந்தால் என்ன ஆகும் என்று நினைத்துப் பார்த்தீரா மக்கள் நல்லவர்களாக ஆகி கலியுகம் 10000 ஆண்டுகள் பின்தள்ளிப் போய்விடும். நம்முடைய கணக்கு தப்பாகிவிடும். அதனால் இதை தடுத்து நிறுத்த வேண்டும்” என்று சொன்னார்.


“எப்படித் தடுப்பது?” – விஷ்ணு கண் சிமிட்டி “சுப்ரமணியன் கேட்டது “கோ---------டியில் ஒருவன்” – அவன் நாக்கைப் புரட்டி “கோடியில் ஒருவன்” என்று கேட்கச் சொல்லுங்கள்” 
 “இது “cheating” இல்லையா” என்று பரமசிவன் கேட்டார். “உலக க்ஷேமத்திற்காகச் செய்கிற எந்தக் காரியமும் தப்பே இல்லை. எல்லாம் என் செயல் என்று நினைத்துச் செயல்படுங்கள்” என்றார்.


நாகராஜன் வரம் கொடுக்க முன்வந்தார். சுப்ரமணியன் “நா தழுதழுக்க” – உணர்ச்சிவசம் என்று நினைக்கலாம் – ஆனால் உண்மையில் தேவர்கள் செய்த கூட்டுச் சதி – “கோடியில் ஒரு புத்திரன் வேண்டும்” என்று கேட்டுவிட்டார். “ததாஸ்து - அப்படியே” என்று நாகராஜன் திருப்தியோடு மறைந்துவிட்டார்.


கலியுகம் தன் அழிவை நோக்கி விரைவாகத் தங்குதடையின்றிச் செல்ல ஆரம்பித்தது.


ஆக, 1931 ஆண்டு செம்டம்பர் 16ம் தேதி மாலை 3.40க்கு சுந்தரி ஒரு புருஷ பிரஜையை தஞ்சாவூரில் (அது என்ன புதுக் கதை – சுப்ரமணியன் குடும்பத்தோடு தற்காலிகமாக வசித்த ஊர்) பெற்றுத் தந்தாள்.


லட்சக் கணக்கான குழந்தைகளைப்போல் இந்தப் புருஷ பிரஜையின் பிறப்பும் எங்கேயும் பதிவாகவில்லை. ஆனால் சுப்ரமணியன் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காரியத்தைத் தெரிந்தோ தெரியாமலோ செய்தார். திருநெல்வேலியில் இருக்கும் அவருடைய மருமகனுக்கு இந்த குழந்தை பிறந்த விஷயத்தைக் கடிதம் மூலமாகத் தெரிவித்து இருந்தார். இந்தக் கடிதம் – இந்த குழந்தையின் வாழ்வில் எப்படிப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியது என்பதை விரைவில் பார்க்கலாம்.


நாகராஜனுக்கு நன்றிக்கடனாக இந்தப் புருஷ பிரஜைக்கு சுப்ரமணியன் “நாகராஜன்” என்று பெயர் சூட்டினார். அந்தக் கால வழக்கத்தை ஒட்டி T.S. என்ற 2 இனிஷியல்களை (T. Tirunelvely S. Subramanian (சுப்ரமணியன்)) இணைத்து T. S. நாகராஜன் என்று அழைக்கப்பட்டான்.




காலச்சக்கரம் சுழன்றது.


நாகராஜனுக்கு 5 வயது.


2 காரியங்கள் நடந்தன. ஒன்று ராமா சார் பள்ளிக்கூடத்தில் அட்சராப்பியாசம் (அதைப் பற்றி இன்னொரு சமயம்) 2 ஆவது சுப்ரமணிய அய்யர் அகால மரணம். அவர் காலராவில் 46 வயதில் சிவலோகம் அடைந்தது உண்மை. ஆனால் பழி, 5 ஆவது பாலகன் நாகராஜனின் மேல். அவன்தான் அப்பாவை “முழுங்கி” விட்டான் என்று பரவலாகப் பேசினார்கள்.


காலச்சக்கரம் இப்பொழுது இன்னும் வேகமாக சுற்றியது.


நாகராஜன் இப்பொழுது Shaffter High School என்ற வயல்காட்டுப் பள்ளிக்கூடத்தில் IV form – அதாவது 9 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அந்தக் காலத்தில் 9 ஆம் வகுப்பில்தான் S.S.L.C Certificate Book கொடுப்பார்கள். இது Passport, Pan Card, Ration Cardக்கு எல்லாம் முன்னோடி. இதனுடைய முதல் பக்கம் – அரசியல் சாஸனத்தைவிட, ஏன் வேதப் புத்தகத்தை விட முக்கியமான ஆவணம். ஒருவருடைய பிறந்த ஊர், வயது, பெற்றோர், அங்கஅடையாளங்கள் எல்லாம் இந்த முதல் பக்கத்தில் சொல்லப்பட்டிருக்கும். இந்தப் புத்தகத்தின் முதல் பக்கத்தை நிரப்புவதற்குமுன் பள்ளி நிர்வாகிகள் பையன்களிடம் ஒரு ‘Draft’ ஐக் கொடுத்துத் தகவல்கள் சரியாக இருக்கிறதா என்று பார்த்து வரச் சொல்வார்கள். சரி என்று சம்மதம் கொடுத்தால் அதுதான் முடிவு. நாகராஜனுக்கும் தகவல் பிரதி கொடுக்கப்பட்டது. அதை பார்த்தவுடன் அவனுக்கு ஒரே ‘ஷாக்’ பிறந்த வருஷம் 1926 ஆம் வருஷம். யார் இந்தத் தகவலைக் கொடுத்தார்களோ தெரியவில்லை. நாகராஜனின் சகோதரன் – 1928 இல் பிறந்தான் - அதே பள்ளிக்கூடத்தில் 11 ஆவது வகுப்பில் இருக்கிறான். தலைமை ஆசிரியரிடம் நாகராஜன் “சார் நான் தம்பி. எப்படி என் அண்ணாவைவிட நான் மூத்தவனாக இருக்க முடியும்” என்று முறையிட்டான். அறிவுக்கொழுந்தான அந்தத் தலைமை ஆசிரியர் “எங்கே Proof ” என்று கேட்டார். ஜாதகத்தைக் காட்டினான். இயேசுவானவரின் அபிமான சீடரான அந்தத் தலைமை ஆசிரியர் அதை நம்ப மறுத்துவிட்டார். அப்பொழுதுதான், சுப்ரமணிய அய்யர் எழுதிய கடிதம் ஞாபகத்திற்கு வந்தது. அதைக் கொண்டுவந்து காட்டியவுடன் இது உன் அப்பாவின் கையெழுத்து என்று எப்படி நம்புவது என்று கேட்டார். நல்லவேளை நாகராஜனின் அப்பாவுக்கு உறவினரான ஒரு ஜட்ஜ் ஒரு சத்தியப் பிரமாணம் கொடுத்தார்.


மாற்றம் செய்யப்பட்டது. இந்தக் களேபரத்தில் பிறந்த ஊர் தஞ்சாவூர் என்பதை மாற்ற மறந்துவிட்டார்கள். பிறக்காத திருநெல்வேலி பிறந்த ஊராகிவிட்டது. அதற்கு ஏதாவது காரணம் இருக்க வேண்டும். அது என்ன என்று 60 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியவந்தது.


சுப்ரமணிய அய்யர் எழுதிய கடிதம் நாகராஜனின் சரியான வயதைக் காட்டியதோடு - “அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான்” என்ற தத்துவத்தை நிலைநாட்டியது.


காலம் ரொம்ப வேகமாகச் சுழல ஆரம்பித்தது. நாகராஜனுக்கு இப்பொழுது வயது 70. அமெரிக்காவுக்குக் குடிபோக முயற்சிகள் எடுத்தான். முதல் கட்டம் “Green Card, application, first name, last name, middle name” என்று வக்கணையாகக் கேட்டார்கள். எல்லாவற்றிற்கும் நாகராஜன் என்று சொல்ல, அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள் T. S. ஐ விரிவாக்கச் சொன்னார்கள். திருநெல்வேலி, சுப்ரமணிய நாகராஜன் என்று விளக்கவே இன்று முதல் உன்னுடைய “First Name” – திருநெல்வேலி என்று நாமகரணம் சூட்டினார்கள். இதுதான் நாகராஜன் திருநெல்வேலி ஆன கதை.


நாகராஜனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. முதலில் “கோ…………….டியில் ஒரு பெயர் கிடைத்துவிட்டது. இரண்டாவது அவனுக்கு என்று ஒரு தனி “identity” அடையாளம் கிடைத்துவிட்டது. இத்தனை ஆண்டுகள் அவனுக்கு என்று ஒரு தனித்துவம் இல்லாமல் இருந்தான். 5 ஆவது வயதுவரை – “சுப்ராயன் (சுப்ரமணிய அய்யரின் செல்லப் பெயர்) பிள்ளை” – பள்ளியில் “மலையப்பன் தம்பி” – கல்யாணம் ஆன பிறகு “பிரபாவின் கணவன்”, பிறகு “ஸ்ரீவத்ஸனின் அப்பா”, இப்பொழுது “ஆதித்யாவின் தாத்தா” என்று. ஆனால் இன்று திருநெல்வேலி என்ற தனிப்பெயருக்குச் சொந்தக்காரன். வாழ்க அமெரிக்கா….


இப்பொழுது…….“குப்பை”ஐப் பற்றி


பாம்புத் தலைவர் நாகராஜனுக்கு சுப்ரமணிய அய்யரை ஏமாற்றிவிட்டோமோ என்று ஒரு உறுத்தல் இருந்திருக்கும்போல் தோன்றுகிறது. தன்னால் முடிந்தவரை சுப்ரமணிய அய்யர் புருஷ பிரஜைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார். கேட்டபடி பெயரிலாவது “கோ------------டியில் ஒருவன்” என்பதைக் காலம் கடத்தினாலும் செய்து முடித்தார். எல்லா மகான்களுடைய குணங்களிலும் இருந்து ஏதாவது சிலவற்றைக் கொடுக்க முயற்சி செய்தபோது விதி மறுபடியும் விளையாட ஆரம்பித்தது. அந்த மகான்களுடைய “negative” குணங்களை நாகராஜனுக்கு அளித்துவிட்டார். நாகராஜனும் அனுமார் மாதிரி – ஓரிடத்தில் இல்லாமல் விஷயத்துக்கு விஷயம் தாவி ஒன்றிலும் ஒரு நிரந்தரப் பிடிப்பு இல்லாமல் ஆனான். நாரதர் மாதிரி ஊர் சுற்றுதல், மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுதல், எல்லா விதமான வம்புகளையும் சேர்த்தல் இத்யாதி விஷயங்களில் சிறந்த நிபுணன் ஆனான்.


சுருக்கமாகச் சொன்னால் “Jack of all trades — master of none” என்று சொல்வார்களே அதே மாதிரி ஒரு “நுனிப்புல் மேய்பவனாக ஆனான்”. ஆக அவன் ஒரு “கலக்டர்” ஆனான். மாவட்ட கலெக்டராக, மாவு ஆட்டற கலெக்டராக இல்லை. “A person who collects – Collector” ஆனான். கிசுகிசு, புராணக்கதைகள், கட்டுரைகள், ஒன்றையும் விடவில்லை. எல்லாவற்றையும் சேகரிக்க ஆரம்பித்தான். இதை “Scrap Book” என்று அவன் அழைத்தான். ஆனால் அவனுடைய தாயார் இதை “குப்பை” என்றுதான் சொல்லிவந்தார்கள். அவர்கள் ஞாபகமாக இதை “குப்பை” என்றே அழைக்க முடிவு செய்திருக்கிறேன்.


இந்த “குப்பை” திருநெல்வேலி, சென்னை, பம்பாய் என்று சுற்றிக் கடைசியாக அமெரிக்காவிற்கு என்கூட வந்திருக்கிறது.


பாதியைக் கரையான் அழித்துவிட்டது. மீதியை “டிஜிட்டலாக” மாற்றியிருக்கிறேன். இதுவரை நான் படித்த, கேட்ட விஷயங்களை உடனுக்குடன் என்னுடைய சில நண்பர்களிடம் சொல்லி “போர்” அடித்து இருக்கிறேன். இப்பொது பெரிய அளவில் அந்த “போர்” சேவையைத் தொடர உத்தேசம்.


இந்த “குப்பை” யில் இருக்கிற விஷயம் எதற்கும் நான் சொந்தக்காரன் இல்லை.


இதைக் கிளறும்போது என்ன கிடைக்கும் என்பது அவரவருடைய மன நிலையைப் பொறுத்து இருக்கும். மாணிக்கமாக இருந்தால் சிந்தியுங்கள். நிஜமாகக் குப்பையாக இருந்தால் குப்பையில் போடுங்கள். நல்லது என்று நினைத்தால் மற்றவர்களிடம் சொல்லுங்கள். குப்பை என்று நினைத்தால் என்னிடம் சொல்லுங்கள். 


இப்பொழுது “குப்பை” யைக் கிளறலாமா?

8 comments:

Balam said...

We read the whole thing. Interesting with lot of humour. hope to see more of your "kuppai"

Balam said...

We read the whole thing. Interesting with lot of humour. hope to see more of your "kuppai"
Balam & Rajamani

t.s.malayappan said...

realy interesting.
your achivement inthe computer field is amazing especialy for one who does not know abcd of computer untillthe age of 70
good keepit up
malayappan

ஆசை said...

மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய திரு நாகராஜன் அவர்களுக்கு, வலைப்பூ இந்த என்ற உலகம் உங்களுடைய இத்தனை வருட அனுபவங்களையும் பிறருடன் பகிர்ந்துகொள்வதற்கான கதவை நன்றாகவே திறந்துவிட்டிருக்கிறது. இசை, கலாச்சாரம் போன்றவற்றைக் குறித்த கட்டுரைகளையும் உங்களிடமிருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். உங்களின் ஊக்கமும் ஆர்வமும் என் போன்ற இந்தத் தலைமுறையினருக்கும் மிகவும் தேவை. வணக்கத்துடனும் வாழ்த்துகளுடனும்
ஆசைத்தம்பி

ஆசை said...

மதிப்புக்கும் வணக்கத்துக்கும் உரிய திரு நாகராஜன் அவர்களுக்கு, வலைப்பூ
என்ற உலகம் உங்களுடைய இத்தனை வருட அனுபவங்களையும் பிறருடன்
பகிர்ந்துகொள்வதற்கான கதவை நன்றாகவே திறந்துவிட்டிருக்கிறது. இசை, கலாச்சாரம்
போன்றவற்றைக் குறித்த கட்டுரைகளையும் உங்களிடமிருந்து ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன். உங்களின் ஊக்கமும் ஆர்வமும் என் போன்ற இந்தத்
தலைமுறையினருக்கும் மிகவும் தேவை. வணக்கத்துடனும் வாழ்த்துகளுடனும்

ஆசைத்தம்பி

Siva Ramanathan said...

அசத்தலான Intro.....

குப்பையே இவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது ....

Sh... said...

அருமை. வயது ஒரு தடை இல்லை என்று நிரூபித்திருக்கிறீர்கள். நிறைய குப்பை கொட்ட வாழ்த்துக்கள்.

பின்குறிப்பு:- குப்பை என்றால் குவியல் என்றும் பொருள் இருப்பதாக படித்த நியாபகம்.

Anonymous said...

பார்த்தேன் ரசித்தேன் பக்கம் வரத் துடித்தேன்
உனைத் தேன் என நான் நினைத்தேன் !
நானும் நெல்லை தான் என்று சொன்னேன்