Sunday, October 09, 2011

நான் நிரந்தரமாக வாழ ஆசைப்படுகிறேன் -உங்கள் உதவியுடன்

விளம்பரத்துக்கு ஆசைப்பட்டுக் கோவில் படிகளிலும், கோவில் விளக்குகளிலும் தாங்கள் அளித்த நன்கொடையை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்தக் காலத்தில், நிறைய பெரிய மனிதர்கள், எந்த ஒரு விளம்பரத்தையும் எதிர்பாராமல் தங்கள் நற்பணிகளைத் தொடர்ந்து செய்து வந்திருக்கிறார்கள். செய்துகொண்டிருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தத்துவ ஞானி – ரேமாஜி (1913 – 1990) .
இவர் விட்டுச் சென்ற தத்துவ பாதை ‘மாஸ்க்விஸம்’ .(www.masquism.com).
இவர் யார் என்று பல பேருக்குத் தெரியாது என்பதில் ஒரு ஆச்சரியம் இல்லை. ஏனெனில் இவர் ஒரு விளம்பரப் பிரியர் அல்ல.
இவருடைய பூர்வாசிரமப் பெயர் – R. வைத்தியநாதன். இதுவும் ஒரு சலனத்தையும் ஏற்படுத்தாது.



‘சந்திரலேகா’ படம் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்டால் லட்சம் தலைகள் ஆடும். ஆனால், ஒரு சிலருக்குத்தான் அதன் இசை அமைப்பாளர் வைத்தியநாதன் என்று தெரியும்.
ஆனால்,படத்தின் டைட்டிலில் வேறு பெயர் போட்டிருக்கும்.
இன்னொரு கேள்வி.
காந்திஜிக்கு பிடித்து ,M.S. அம்மா பிரபலப்படுத்திய
 மீரா பஜன் எது?
நானே விடை சொல்லிவிடுகிறேன்.
‘ஹரி தும ஹரோ’ என்ற தர்பாரி கானடா ராக பஜன். இதற்கு ட்யூன் போட்டவர் – ஸ்ரீ. R. வைத்தியநாதன்.

மூன்றே நாளில் , ட்யூன் அமைத்து, ரிகார்ட் செய்து, காந்திஜீயின் 78 ஆவது பிறந்தநாள் ,அன்று அவருக்கு அனுப்பப்பட்டது.
ட்யூன் போட்டவரைப் பற்றி எந்த விளம்பரமும் இல்லை. வைத்தியநாதனும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை.
இவர் ஒரு சங்கீத மேதை, நிறைய பாடல்களுக்குஇசையமைத்திருக்கிறார்.
 ஆல் இந்திய ரேடியோவுக்கு வாத்ய விருந்த் நிகழ்ச்சிகள் நடத்திருக்கிறர்.  
இவர் சங்கீதத்துக்கும் தத்துவத்துக்கும் எவ்வளவோ சேவைகள் செய்திருந்தாலும் 

அதற்காக நீங்கள் இவரைப் போற்ற வேண்டும் என்று சொல்லவில்லை. இவரை, நாம் எல்லோரும், இவர் தன் வாழ்நாளில் கடைசியாக செய்த ஒரு காரியத்திற்காக நிச்சயம் நினைவுகூர வேண்டும். 


அது ஒரு மிக அரிய சேவை மாத்திரமில்லை. ஒரு வழிகாட்டுதலும்கூட.

இவர் தன் கடைசி நாட்களை பாத்தியாலாவில் கழித்தார். இவர் இறந்தபின் இவருடைய உடல், இவர் விருப்பப்படி பாத்தியலா மருத்துவமனைக்கு ,மருத்துவ ஆராய்ச்சிக்காக அளிக்கப்பட்டது.


சடங்கு, சம்பிரதாயங்களில் ஊறிப்போன இந்த சமுதாயத்தில் இந்தத் துணிச்சலான காரியத்தைச் செய்த ரேமாஜி — வைத்தியாதனைப் பாரட்ட வேண்டும்.
காலம் மாறிக்கொண்டுவருகிறது. 

எல்லோரும் ரேமாஜி மாதிரி உடலை கொடுக்க முடியாது.
ஆனால் உறுப்புத் தானங்கள் பண்ணலாமே?   
இரத்த தானம், கண் தானம் – இரண்டும் இப்பொழுது மக்களிடையே
ஒரு விழிப்பு உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இது தொடர வேண்டும்.

Robert N. Test என்பவர் எழுதிய ஒரு உருக்கமான கவிதையின் தமிழாக்கம் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.      ஆங்கில மூலத்தையும் கீழே படிக்கலாம்.

நான் நிரந்தரமாக வாழஆசைப்படுகிறேன்-உங்கள் உதவியுடன்.

எல்லோரையும் போல் ஒரு நாள், நான் மருத்துவமனைப் படுக்கையில் வெள்ளைத் துணி போர்த்தப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கலாம். எந்நேரமும் ஒரு டாக்டர் வந்து என்னுடைய மூளை வேலை செய்வதை நிறுத்திவிட்டது என்றும் நான் ஒரு ‘ஜடம்’ என்றும் பிரகடனம் பண்ணலாம்.
அந்த மாதிரி ஒரு சூழ்நிலை வருமானால் தயவுசெய்து இயந்திரங்கள், குழாய்கள் மூலம் என் வாழ்வை நீட்டிக்காதீர்கள். என்னை “மரணப் படுக்கையில் கிடக்கிறான்” என்று சொல்லாதீர்கள்.
இது என்னுடைய வாழ்க்கைப் படுக்கை.
என் உடலை எடுத்து மற்றவர்கள் முழு வாழ்க்கை வாழ்வதற்கு உதவ முடியுமா என்று பாருங்கள்.
இதுவரை சூரிய உதயத்தையோ, ஒரு பாலகன் முகத்தையோ, ஒரு அழகான பெண்ணின் கண்களில் தெரியும் அன்பையோ பார்த்திராத யாருக்காவது என் கண்ணைப் பொருத்திப் பார்வை கொடுங்கள்.        

 இருதய நோயால் கஷ்டப்படும் ஏதாவது நோயாளிக்கு என் இருதயத்தை எடுத்துக் கொடுங்கள்.        கார் விபத்திற்குள்ளான ஒரு வாலிபனுக்கு என்னுடைய ரத்தத்தைக் கொடுத்து அவன் நீண்ட நாள் வாழ்ந்து பேரன் பேத்திகளைக் கொஞ்சுவதற்கு வழி      செய்யுங்கள்.          .
வாரா வாரம் இயந்திரத்தின் மூலம் தன் வாழ்க்கையை நீட்டித்துக்கொண்டிருக்கும் ஒரு நபருக்கு என்னுடைய சிறுநீரகத்தைத் தானமாகக் கொடுங்கள்.•        
என்னுடைய உடலில் இருக்கும் எலும்பு, தசை, நரம்பு ஆகிய ஒவ்வொன்றையும் எடுத்து, 

நடக்க முடியாத, ஊனமுற்ற குழந்தையை நடக்க வைக்க முடியுமா என்று முயற்சி பண்ணுங்கள்.          என் மூளையின் ஒவ்வொரு பகுதியையும் அலசுங்கள்.          .
என்னுடைய செல்களை எடுத்து மறுபடி அதற்கு உயிர் கொடுத்து, 
பேசாத குழந்தையையோ காது கேட்காத குழந்தையையோ வாழச்செய்யுங்கள்.        

மேலே சொன்னவற்றைச் செய்து முடித்த பிறகு மிஞ்சிய என் உடலை எரித்து அந்தச் சாம்பலை காற்றில் தூவுங்கள். அது மலர்கள் வளர உதவியாயிருக்கும்.        
என்னை புதைத்துத்தான் ஆக வேண்டுமென்றால் என்னுடைய குற்றங்குறைகளையும், மற்றவர்கள் பேரில் நான் கொண்டிருந்த தப்பான எண்ணங்களையும்        புதையுங்கள்.          

என்னுடைய பாவங்களைச் சாத்தானிடமும் 
என்னுடைய ஆத்மாவை இறைவனிடமும் கொடுங்கள்.          


ஏதாவது ஒரு காரணத்துக்காக என்னை நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டால், தேவை என்று உங்களை அணுகுபவருக்கு 
ஒரு நல்ல   காரியத்தைச் செய்யுங்கள். முடியவில்லை என்றால் ஒரு கனிவான வார்த்தையையாவது சொல்லுங்கள்.
   
நான் இப்பொழுது உங்களிடம் கேட்டதை எல்லாம் செய்தீர்களானால்,



நான் எப்பொழுதும் வாழ்ந்து கொண்டிருப்பேன்.


To Remember Me


The day will come when my body will lie upon a white sheet neatly tucked under four corners of a mattress located in a hospital busily occupied with the living and the dying. At a certain moment, a doctor will determine that my brain has ceased to function and that, for all intents and purposes, my life has stopped.
When that happens, do not attempt to instill artificial life into my body by the use of a machine. And don’t call this my deathbed. Let it be called the Bed of Life, and let my body be taken from it to help others lead fuller lives.
Give my sight to the man who has never seen a sunrise, a baby’s face or love in the eyes of a woman. Give my heart to a person whose own heart has caused nothing but endless days of pain.            Give my blood to the teenager who was pulled from the wreckage of his car, so that he might live to see his grandchildren play. Give my kidneys to one who depends on a machine to exist. Take my bones, every muscle, every fiber and nerve in my body and find a way to make a crippled child walk.Explore every corner of my brain. Take my cells, if necessary, and let them grow so that, some day, a speechless boy will shout at the crack of a bat and a deaf girl will hear the sound of rain against her window.
Burn what is left of me, and scatter the ashes to the winds to help the flowers grow.If you must bury something, let it be my faults, my weaknesses and all prejudice against my fellow man.                       If by chance, you wish to remember me, do it with a kind deed or word to someone who needs you. If you do all I have asked. I will live forever.

இந்தக் கவிதை உங்களைச் சிந்திக்கவைக்கும் என்று நம்புகிறேன்.

… கிளறல் தொடரும்.

1 comment:

Anonymous said...

பிரமாதம். வைத்தியனாதனைப் பற்றி இன்னும் அதிக விவரங்கள் ,படம் போட்லாமே. ’ FULL MANY A GEM OF PUREST RAY ..’ பாடல் என் நினைவுக்கு வந்தது... நல்ல பதிவு.-- ஸ்ரீராம்