Monday, August 20, 2012

மனித நேயத்தோடு வாழ உதவும் மூன்று மந்திரங்கள் (தங்க விழா கிளறல்)


இந்தக் கட்டுரை "திருநெல்வேலிக் குப்பை"யின் 
"தங்க விழா"க் கிளறல்.
பொழுது போக்குக்காக இரண்டு பேர் 
தூண்டுதலின் பேரில் விளையாட்டாக 
எழுத ஆரம்பித்த என் "எழுத்துப் பணி" 
ஐம்பது வாரங்களாகத் தடை 
இல்லாமல் தொடர்ந்திருக்கிறது 
என்று என்னால் நம்பவே முடியவில்லை. 
ஆச்சரியமாக இருக்கிறது. 
ஆனால் உண்மையாகவே நடந்திருக்கிறது.
ஜனகராஜ்  காமெடியன் போல், 
"நாகராஜா, சும்மா சொல்லக் கூடாது, 
எப்படிடா இந்த ஐடியாவெல்லாம் 
உனக்குத் தோன்றுகிறது?" 
என்று பீத்திக்கொள்ள ஆசைதான். 
இருந்தாலும் உண்மை அது இல்லை. 
இதற்கு  முழுப் பொறுப்பு இரண்டே பேர். 
ஒன்று, என் மனைவி; 
இரண்டாவது என் நண்பன் 
க்ரியா ராமகிருஷ்ணன்.
எங்களுடைய  ஐம்பது வருட மணவாழ்க்கையில் 
என் மனைவி - பிரபா - பணம், புடவை, கார், நகை 
என்று கேட்டு என்னை நச்சரித்ததில்லை. 
அவள் ஓயாமல் என்னை அரித்து,
வாட்டி எடுத்ததெல்லாம் சில 
"மகா வாக்கியங்களி"னால்தான். 
('மகா வாக்கியம்' என்பது வேதங்களின் 
ஆரம்பத்தில் சொல்லப்படும் வாக்கியங்கள். 
உதாரணம்: 'அஹம் பிரம்மாஸ்மி'.) 
"நீங்கள் நிறையப் படித்திருக்கிறீர்கள்! 
(பெருமையாக இருக்கிறது, 
இதைக் கேட்க,மேலே பறக்கிற feeling). 
இந்தப் படிப்பை வைத்துக்கொண்டு நாலு காசு 
சம்பாதிக்கத் துப்பில்லை .( மேலே போனது கீழே
வந்து தானே ஆகணும்.புகழ்ச்சி என்று இருந்தால்
இகழ்ச்சி இருக்கத்தானே இருக்கும்)
நாலு பேருக்குப் பிரயோஜனப்படும்படி 
உருப்படியாக ஏதாவது எழுதுங்களேன், 
போகிற காலத்துக்குப் 
புண்ணியமாவது கிடைக்கும்" 
என்று கெஞ்சினாள், புலம்பினாள். 
ஒன்று இரண்டு இல்லை, ஐம்பது வருடங்கள். 
'அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்'. 
நானும் அசைந்துகொடுத்தேன். 
விளைவு,"திருநெல்வேலி குப்பை". 
ஆரம்பித்த முதல் கட்டுரையிலிருந்து 
அவள்தான் என் முதல் விசிறி. 
நான் தப்பாக எழுதினாலும் 
அபத்தமாக எழுதினாலும் 
'புகழ்வதைத் தவிர வேறு ஒன்றும் 
அறியேன் பராபரமே' 
என்ற கொள்கையுடன் இன்றுவரை 
என் எழுத்தை ரசித்துவருகிறாள். 
முதலில் அவளுக்கு என் நன்றி. 
அடுத்தது, என் நண்பன் 'ராம்' 
என்கிற ராமகிருஷ்ணன். 
ஐம்பது ஆண்டு நட்பு. 
என்னுள் 'தமிழ்' இருக்கிறது 
என்று என்னை ஊக்குவித்து, தொடர்ந்து 
எழுதச் சொன்னதே இந்த நண்பன்தான். 
இந்த நண்பன் என் கையெழுத்துப் 
பிரதிகளைக் கணினியில் பதிந்து, 
திருத்தி, கட்டுரைகளின் கருத்துகளில் 
தவறு இருந்தால் சுட்டிக்காட்டி 
என்னை ஒரு 'முழுமையான' தமிழ் 
எழுத்தாளனாக ஆக்க அவன் 
எடுத்துக்கொண்ட முயற்சிகளுக்கு 
என் நன்றி.
இவற்றைச் செய்த ராம், ஏதோ 
வேலைவெட்டி இல்லாதவனோ 
சுகவாசியோ இல்லை. 
கடந்த இரண்டு வருடங்களாக 
சொந்த வாழ்க்கையில் மிகப் 
பெரிய துக்கங்களைத் தாங்கிக்கொண்டு 
எனக்காக நேரம் ஒதுக்கினான் என்பது 
அவனுடைய ஆழ்ந்த நட்பின் பண்பைக் காட்டும். 
மறுபடியும் அவனுக்கு நன்றி.
இந்த வலைப்பூ (blog) எழுத 
ஆரம்பித்த நேரத்திலும் சரி, 
ஐம்பது வாரங்களுக்குப் பிறகும் சரி, 
என்னுடைய வலைப்பூ தமிழ் இலக்கியத்தில் 
ஒரு திருப்புமுனை என்று நான் நினைத்ததில்லை. 
என்னுடைய அறிமுகக் கட்டுரையில் சொன்னபடி 
நான் இந்த வலைப்பூவை 
ஆரம்பித்ததன் நோக்கம், 
என்னுடைய குப்பையிலிருந்து கிளறும் 
எந்த உருப்படியான விஷயத்தையும் 
மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது. 
அந்த நோக்கம் சரிவர நிறைவேறியிருக்கிறது 
என்று நம்புகிறேன். 

நான்  எழுதிய எல்லா விஷயங்களும் 
எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 
சில பேருக்கு எல்லாம் தெரிந்திருக்கும்; 
சிலருக்கு சிலது மட்டும் தெரிந்திருக்கும்; 
சிலருக்கு எல்லாமே புதிதாக இருக்கும். 
யாராவது ஒருவர் "ஐயா, இந்த விஷயம் 
எனக்கு இதற்கு முன் தெரியாதே. நன்றி" 
என்று பாராட்டினால் 
இந்த வலைப்பூ, என் நோக்கத்தை 
பூர்த்தி செய்து விட்டது.
இதுவரை 13,000 hits கிடைத்திருக்கிறது. 
(பூ! இவ்வளவுதானா? ரஜினிகாந்த் காலை 
உணவு என்ன சாப்பிடுகிறார் என்ற வலைப்பூவுக்கு 
1,00,000 hits!). 
யாரோ, எங்கோ, 200 பேர், ஒவ்வொரு 
கட்டுரையையும் வாசிப்பதாகத் தெரிகிறது. 
அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றி!
'நன்றி' புராணம் இத்துடன் நிறைவுபெறுகிறது. 

இன்றைய வலைப்பூவுக்குப் போவோமா?

மனிதநேயத்தோடு வாழ உதவும் 
மூன்று மந்திரங்கள் என்ன? 
ஏற்கனவே பிரம்மோபதேசக் கட்டுரையில்,  
தயா   (கருணை), தமன (புலனடக்கம்), 
தானம் என்று மனிதனுக்கு அத்தியாவசியமான 
மூன்று கோட்பாடுகளைப் பற்றி எழுதியாயிற்றே 
என்று கேட்கலாம். 
அது வேறு. இது வேறு.
முன்னால்  சொல்லப்பட்ட கோட்பாடுகளைப் 
பின்பற்ற எல்லோராலும் முடியாது. 
அதற்கு மன உறுதியும் பயிற்சியும் தேவை.
இப்போது  நான் சொல்லப்போகும் 
மூன்று மந்திரங்கள் எளிதானவை;
எல்லோருக்கும் தெரிந்தவை; பழக்கமானவை. 
சிறுவர் சிறுமியரிலிருந்து பெரியவர்கள்வரை 
தினமும் யாராவது ஏதோ ஒரு சமயத்தில் 
பயன்படுத்தும் மந்திரங்கள் இவை.

சஸ்பென்ஸ் போதும் என்று நினைக்கிறேன்.


நான் சொல்லப்போகும் மூன்று மந்திரங்கள்: 

Please-   Thank you-    Sorry


தயவுசெய்து-    நன்றி-     மன்னிக்கவும் 


"பூ! இவ்வளவுதானா! 

எங்கள் குழந்தைகளுக்குச் சின்ன வயதில் 

அடிக்கடி நினைவுபடுத்தும் வார்த்தைகள் 

இவைதானே. அப்படியிருக்க, 

இவற்றை மறுபடியும் வறுபுறுத்த அவசியம் 

என்ன என்று கேட்கலாம்.

நான் விளக்கப்போகும் மூன்று மந்திரங்களின் 

ஆங்கிலச் சொற்களையே பயன்படுத்தலாம் 

என்று நினைக்கிறேன். 

ஏனென்றால், 

இன்றைய வாழ்க்கையில் இந்தச் சொற்கள் 

தமிழ்ச் சொற்களாகவே பயன்படுத்தப்படுகின்றன. 

கேட்கப்பட வேண்டிய கேள்வி: 

இப்படி எல்லோரும், Please, Thank you, Sorry 

என்று சொல்லப் பழக்கப்பட்டிருக்கிறார்களே!

அப்படியானால்,எல்லோரும் மனிதநேயம் 

உள்ளவர்களாக ஆகிவிட்டார்களா? 

இல்லயே, ஏன்?

இந்தச்  சொற்கள் உதட்டளவில் சொல்லப்படும் 

சம்பிரதாயச் சொற்களாகவே ஆகிவிட்டன. 

அவற்றின் உள்ளர்த்தம் தெரிந்து யாரும் 

பயன்படுத்துவதில்லை. 

இந்தச் சொற்களின் அர்த்தத்தைச் 

சற்று கவனிப்போம்.

Please என்ற சொல் கற்றுத்தருவது பணிவு, 

தன்னடக்கம். இந்த உலகம் என்பது 

நம்மை மட்டும் சுற்றி வருவது அல்ல. 

மற்றவர்களும் இதில் இருக்கிறார்கள். 

அவர்களைச் சார்ந்து நாம் இருக்க 

வேண்டிய நிலை நம்முடையது. 

அதனால்தான் நமக்குத் தேவையானவற்றை 

மற்றவர்களிடமிருந்து பெற நினைக்கும்போது 

நாம் பணிவுடன், பவ்யத்துடன் 

Please என்கிறோம்.


Thank you. நன்றி.

இதைப் பற்றிப் பக்கம்பக்கமாக 

எல்லா மதங்களும் சொல்லியிருக்கின்றன. 

இந்த உலகத்தில் நமக்குத் தேவையான 

எல்லாவற்றையும் நாமே அ டைந்துவிட முடியாது

மற்றவர்களின் உதவி நமக்குக் கட்டாயம் தேவை. 

அதை நமக்கு மற்றவர்கள் தரும்போது 

நமக்குள் நன்றி உணர்ச்சி தோன்ற வேண்டும். 

அந்த நன்றியை, (தென்னை மரம் போல்)

காலத்துக்கும்  நினவில் வைத்து 

கொள்ள வேண்டும்.

அதை  வெளிப்படுத்தும் சொல்தான் 'நன்றி'.


கடைசியாக  - Sorry - மன்னிக்கவும். 

மிகவும் கஷ்டமான வார்த்தை - சொல்வதற்கு. 

யாருமே தாங்கள் செய்த தவறை உணர்ந்து 

அதை வெளிப்படையாகச் சொல்வதற்குத் 

தயங்குவார்கள். சந்தர்ப்பம் கிடைத்தால், 

மற்றவர்கள் பக்கம் அந்தப் பழியைத் 

திசைதிருப்பிவிடுவார்கள். இது மனித இயல்பு. 

தினசரி வாழ்க்கையில் நாம் கேட்கும் "Sorry" 

எல்லாம் சம்பிரதாயமாகச் சொல்லப்படுவது. 

தவறு செய்தால் அதை ஒப்புக்கொள்ளத் 

தைரியமும் மனோதிடமும் வேண்டும்.

(மற்ற மொழிகளில் இந்த மூன்று சொற்களின் 

மொழிபெயர்ப்பைத் தெரிந்துகொள்ள 

இங்கே கிளிக் செய்யவும்.) 



இப்போது நாம் நம் குழந்தைகளிடம் இந்த மூன்று 
சொற்களின் முக்கியத்துவத்தைப் பற்றிச் 
சொல்லாமல் வளர்க்கிறோம். 

எல்லா மந்திரங்களையும் போல இவற்றையும் 
அர்த்தம் தெரியாமல் சொல்லப் பழகுவது 
தப்பில்லை.ஆனால் கொஞ்சம்கொஞ்சமாக 
இந்தச் சொற்களின் முழுப் பரிமாணத்தையும் 
புரியவைக்க வேண்டும்.
எப்படி இந்த மூன்று மந்திரங்களையும் 
சொல்ல வேண்டும்? 
தியாகராஜ சுவாமிகள், தன்னுடைய 
'சோபில்லு' என்ற ஜகன்மோகினி ராகப் பாட்டில் 
சொல்கிறார்: 
சங்கீதத்தை,நாக்கிலிருந்தும்,
தொண்டையிலிருந்தும், 
இருதயத்திலிருந்தும்,  
அடிவயிற்றிலிருந்தும் (நாபி) பாடலாம். 
ஆனால் உயர்ந்த சங்கீதம் 
அடிவயிற்றிலிருந்து வர  வேண்டும். 
அதுதான் உண்மையான சங்கீதம். 
மற்றவர்களின் உணர்வுகளைத் தொடும். 
நம்முடைய  Please, Thank you, Sorry 
நுனி நாக்கிலிருந்து  வராமல் 
அடிவயிற்றிலிருந்து (அதாவது, முழு மனத்துடன்) 
வர வேண்டும். 
அப்படிச் சொல்லிப் பழகினால் 
நம்முள் பகை உணர்ச்சியே வராது.
வாழ்க மனிதநேயம்.
கிளறல் தொடரும்...


3 comments:

nellai அண்ணாச்சி said...

அருமை

tsnagarajan said...

நெல்லை அண்ணாச்சிக்கு

நன்றி

நாகராஜன்

Anonymous said...

வாழ்த்துக. -- பி.எஸ்.ஆர்