Tuesday, September 04, 2012

தர்மத்திற்கும் தர்மத்திற்கும் யுத்தம் நடந்தால்! வெற்றி யார் பக்கம்?


தலைப்பில் எழுத்துப்  பிழை இருக்கிறதோ 
என்று நினைக்கத் தோன்றும்
ஏனெனில் காலகாலமாக எல்லா 
கலாச்சாரங்களிலும்  எல்லா மொழிகளிலும் 
சொல்லப்பட்ட, எழுதப்பட்ட நீதிக் கதைகள் 
எல்லாமே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 
நடந்த மோதல்களைப் பற்றித்தான் 
விளக்கிஇருக்கின்றன. 
எல்லாக் கதைகளின் மையக் கருத்தும் 
ஒரே மாதிரிதான். 
ஒரு கதாநாயகன் (ஹீரோ) - 
தர்மத்தின் மொத்த உருவம். 
ஒரு வில்லன் - 
அதர்மத்தின் மறு அவதாரம். 
இரண்டு பேருக்கும் மோதல். 
முடிவு, தர்மம்தான் வெற்றி அடையும். 
அதர்மம் தோல்வி அடையும்.

குறும்புதனத்திற்காக, முடிவை மாற்றி 
அமைக்க யோசித்தால் - 
வில்லன் வெற்றி பெறுவதாக - 
வாசகர்கள், "முடிவு நன்றாக இல்லை" 
என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.

"நமக்கேன் வம்பு" என்று 
கதை எழுதுபவர்களும் 
"Beaten Track " ஐப்   பின்பற்றித்  
தங்கள் தொழிலைத்  
தொடர்ந்து நடத்துகிறார்கள்.

ஆனால், எல்லாக் கதாசிரியர்களும், 
"அரைத்த மாவையே அரைப்பார்கள்" 
என்று சொல்ல முடியாது. 
இந்தக் கதாசிரியர் தலைப்பில் சொன்ன 
வித்தியாசமான கேள்வியைக் கேட்டு, 
விடை என்ன என்று ஒரு கதை மூலம் 
விளக்குகிறார்.
யார் இந்த ஆசிரியர்?
மகாபாரத இதிகாசத்தையும் பத்ம, விஷ்ணு, 
கருட முதலிய 18 புராணங்களையும் எழுதிய 
வேத வியாசர்தான். 
இந்தக் கதையின் சொந்தக்காரர். 
வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் 
மார்க்கண்டேயப் புராணம் ஒரு அருமையான 
காவியம். 
அதில்தான் இந்தக் கதை வருகிறது. 
இப்பொழுது கதையைப் பற்றித் 
தெரிந்துகொள்ளலாமா?


அவிக்ஷித் என்ற ஒரு அரசன். 
நல்ல குணவான். ரொம்ப காலம் நல்லாட்சி 
செய்துவிட்டு, தன் வயதான காலத்தில் 
தன் மகன் மாருத்தாவிடம் அரசுப் 
பொறுப்பை ஒப்படைத்துவிட்டு 
மனைவியுடன் வானபிரஸ்த வாழ்க்கையை 
மேற்கொள்ளக் காட்டுக்கு சென்றான்.
மாருத்தாவும் ஒரு நல்ல பிள்ளை - 
தகப்பனார் மாதிரி - தர்ம, நியாயத்திலிருந்து 
சிறிதும் தவறாதவன். மக்கள் நலமே, 
தன் கடமை என்று சதா காலம் சிந்திப்பவன். 
தைரியசாலி. எல்லா விதமான போர்க் 
கலைகளிலும் சிறந்தவன். 
மக்களும் அவன் ஆட்சியில் சுகமாக 
வாழ்ந்துவந்தார்கள்.
ஒரு நாள், மாருத்தாவுக்கு, 
அவனுடைய பாட்டி (தகப்பனுடைய தாயார்) 
இடமிருந்து ஒரு செய்தி வந்தது. 
பாட்டி எழுதுகிறாள்:
"மாருத்தா, உன் தாத்தாவுடன் 
நான் காட்டுக்கு வந்தது உனக்குத் தெரியும். 
உன் தந்தையும் தாயும் இங்கு வந்ததும் 
உனக்குத் தெரியும். 
உன் தாத்தா இப்பொழுது இல்லை. 
உன் தாத்தாவும் உன் தந்தையும் எப்படி 
அரசாட்சி செய்தார்கள் என்பது உனக்கு 
தெரியாததில்லை. 
நீஅவர்களுக்குக் களங்கம்
ஏற்படுத்திவிட்டாய் 
என்று நினைக்கும்போது 
எனக்கு வேதனையாக இருக்கிறது. 
உனக்கு நாட்டில் என்ன நடக்கிறது 
என்று தெரியாத அளவுக்கு நீ சுகபோக 
வாழ்கையில் ஈடுபட்டிருக்கிறாய். 
வெட்கம். 
பாதாள உலகிலிருந்து வெளியே வந்து 
7 ரிஷிகளின் புத்திரர்களைப் 
பாம்புகள் கொன்ற விஷயத்தை 
உனக்கு யாருமே சொல்லவில்லையா?
மேலும், இந்தப் பாம்புகள் ரிஷிகளின் 
யாக சாலைகளையும் மற்றும் 
அவர்கள் வசிக்கும் இடங்களையும் 
அசுத்தப்படுத்தி அவர்களைக் 
கஷ்டபடுத்துகின்றன. 
அவமானப்பட்ட ரிஷிகளே தங்கள் தவ 
வலிமையினால் இந்தப் பாம்புகளை 
அழிக்க முடியும். 
ஆனால், அவர்கள் நினைக்கிறார்கள், 
துஷ்டர்களைத் தண்டிப்பது அரசனின் 
கடமை என்று.  
நீ உன் கடமையிலிருந்து 
தவறிவிட்டாய், 
நான் சொல்ல வேண்டியதை
சொல்லிவிட்டேன், 
உனக்கு எது நியாயம் 
என்று தோன்றுகிறதோ 
அதன்படி நட" என்று.
இந்தச் செய்தியை படித்த 
மாருத்தாவுக்கு தன் மேலேயே 
ஒரு வெறுப்பு. 
உடனே காட்டுக்குச் சென்றான். 
இறந்து கிடந்த 7 ரிஷி குமாரர்களைப் 
பார்த்தவுடன் தாங்க முடியாத சோகம். 
சோகம் கோபமாக மாறியது. 
"நான் இந்தப் பாம்புகளைப் பழி 
வாங்காமல் ஓய மாட்டேன்" 
என்று சபதம் செய்தான். 
தன்னுடைய வில்லை எய்து, 
உலகத்தில் உள்ள எல்லாப் பாம்புகளையும் 
கொல்ல ஆரம்பித்தான்.
நாலா திசைகளிலும், பாம்புகள் ஓட 
ஆரம்பித்தன. மாருத்தாவிடமிருந்து தப்ப வழி 
தெரியாமல் மாருத்தாவின் தாயாரிடம் 
சென்று சரணம் அடைந்து புலம்பினார்கள். 
"தாயே, எங்களைக் காப்பாற்றுவதாக 
முன்னம் ஒருதரம் வாக்களித்திருகிறீர்கள். 
அதற்கு இதுதான் சமயம். 
உங்கள் மகனின் கோபத்திலிருந்து 
காப்பற்றுங்கள்" என்று கதறின. 
அவளும் தன் கணவன், 
அவிக்ஷ்தை நோக்கிச் சொன்னாள், 
"தேவரீர், இவர்களுக்கு 
அடைக்கலம் கொடுங்கள். 
நம்மை வந்து சரணம் அடைந்தவர்களுக்குப் 
பாதுகாப்பு அளிப்பது நம்முடைய 
தர்மம் இல்லையா? என்றார்.
அவிக்ஷத் சொன்னார், 
"இந்தப் பாம்புகள் பாவச் செயல்களைச் 
செய்திருக்கின்றன. தண்டனை நிச்சயம். 
எப்படி நம்முடைய மகனைத் தடுப்பது?" 
என்றார். 
கடைசியாக, அவர் ஒரு முடிவுக்கு வந்தார். 
"சரி, இந்தப் பாம்புகளை மரணத்திலிருந்து 
காப்பதற்காக, நான் நம்முடைய மகனிடம் 
சென்று வேண்டுகிறேன். மறுத்தால், 
அவனுடன் போராட வேண்டியிருக்கும்" 
என்று தன் மகன் இருக்குமிடம் சென்றார்.
தந்தை வில், அம்புடன் வருவதை 
மாருத்தா பார்த்தான். 
தந்தையின் நோக்கம் புரிந்துவிட்டது. 
அவிக்ஷத், மாருதாவிடம் சொன்னார், 
"மகனே, உன் கோபத்தைக் 
கட்டுப்படுத்திக்கொள். 
உன்னுடைய அம்புகளைத் 
திரும்பப் பெற்றுக்கொள்" என்றார்.
மாருத்தா தந்தையை நோக்கிப் பணிவுடன்,
"தந்தையே, எனக்கு தர்மத்தை 
போதித்தவரே நீங்கள்தான். 
நான் அரசன். என் கடமை 
என் மக்களை துஷ்டர்களிடமிருந்து 
காப்பது. இந்தப் பாம்புகள் அநியாயமாக
7 குழந்தைகளைக் கொன்றிருக்கின்றன. 
இவர்களை நான் தண்டிக்காவிட்டால், 
நான் என் கடமையிலிருந்து தவறுபவனாக 
ஆகிவிடுவேன். 
அதனால் என்னைத் தடுக்காதீர்கள்" 
என்று சொன்னான்.
தந்தை சொல்கிறார், 
"மகனே, இந்தப் பாம்புகள் 
என்னை சரணடைந்து பாதுகாப்புத் 
தேடி வந்திருக்கின்றன. 
என் கடமை, இவர்களைக் காப்பது. 
என் மேல் மதிப்பு வைத்து 
உன் ஆயுதங்களைக் கீழே 
போட்டுவிடு" என்றார். 
இந்த வாக்குவாதம் தொடர்ந்தது. 
மாருத்தா, தந்தையின் சொல்லைக் 
கேட்பதாக இல்லை. 
தந்தைக்குக் கோபம் வந்துவிட்டது. 
"மாருத்தா, என்னை சரணடைந்த 
இந்தப் பாம்புகளைக் கொல்ல நினைக்கும் 
உன் எண்ணம் நிறைவேறாது. 
உனக்கு மாத்திரம்தான் வில் 
வித்தை தெரியும் என்று
நினைக்காதே. என்னிடமும் 
சக்தி வாய்ந்த அம்புகள் இருக்கின்றன. 
தைரியம் இருந்தால் வில்லை எடு. 
போராடத் தயாராக இரு" 
என்று சொல்லி, 
சக்தி வாய்ந்த "காலாஸ்திரம்" என்ற 
அம்பை வில்லில் பூட்டினார்.
தந்தையும் மகனும் எதிரும் புதிருமாக 
உலகத்தையே அழிக்கும் 2 ஆயுதங்களைப் 
பிரயோகிக்கத் தயாரானார்கள். 
யார் ஜெயிப்பார்கள்? 
இருவரும் அவரவர்
தர்மத்திற்காகத்தானே 
போராடுகிறார்கள். 
இதில் எந்த தர்மம் உயர்ந்தது?  
இதில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் 
ஜெயிப்பதும் தோற்பதும் தர்மம்தானே?
இதற்கு என்ன முடிவு? 
பாதிக்கப்பட்ட பாம்புகளே அதற்கான 
விடையை சொல்கின்றன.
"எங்கள் பொருட்டு நீங்கள் சண்டை 
போடவேண்டாம். நாங்கள் 
இந்த ரிஷி குமாரர்களைப் 
பிழைக்க வைத்துவிடுகிறோம். 
நாங்கள் இனி உங்கள் வழியில் 
வர  மாட்டோம்" என்று சொல்லி 
ரிஷி குமாரர்களின் உடலிலிருந்து 
விஷத்தைத் திரும்பி உறிஞ்சி எடுத்து 
அவர்களைப் பிழைக்க வைத்தன.
பிரச்னை சுமுகமாகத் தீர்ந்தது. 
மாருத்தா  தந்தையை வணங்கி 
ஆசி கோரினான்.  
தந்தையும் மகனைத் தழுவி 
நல்லாசிகள் வழங்கினார்.
இப்பொழுது சொல்லுங்கள் - 
தர்மமும் தர்மமும் மோதினால் - 
மோதக் கூடாது - 
அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், 
டிராதான் முடிவாக இருக்கும். 
இருக்க வேண்டும்.
போனஸ் கதை.
இதே மாதிரி ஒரு கதை. 
ராமாயணத்தில் வருகிறது. 
கதைப் பெயர் - ராம, அஞ்சநேய யுத்தம் - 
ராமருக்கும் அனுமாருக்கும் ஒரு யுத்தம். 
அதில் அனுமார், ராமருக்கு எதிராக 
ஆயுதம் எடுக்கவில்லை. நிஷ்டை நிலையில் 
உட்கார்ந்து ராம நாமத்தை 
ஜெபித்துகொண்டிருக்க, 
ராமருடைய அம்புகள் 
அவரை ஒன்றும் செய்யவில்லையாம். 

கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் - 
ராமர் பெரியவரா? ராம நாமம் பெரிதா? 
இந்தக் கதையிலும் 2 தர்மங்கள் 
போட்டி போடுகின்றன. 
முடிவு - Draw தான்.

(கிளறல் தொடரும்)


No comments: