Monday, September 24, 2012

மூத்த குடிமக்கள்(Senior Citizens) யார் குழந்தைகள்?


பகுதி 1:

வயதிலும்அறிவிலும்அனுபவத்திலும் 
பழுத்த வயதினரை யார் தினசரி 
வணங்கிச் சேவை செய்கின்றார்களோ
அவர்கள் நீண்ட ஆயுள்ஞானம்புகழ்பலம் 
என்ற நான்கு விதமான சித்திகளை 
அடைவார்கள்.
சமஸ்கிருதப் பழமொழி. 
                                                                              "ஒரு குழந்தையின் கஷ்டம்
தாயாருக்குப் புரியும்:  
ஒரு யுவனின் கஷ்டம்
ஒரு யுவதிக்குப் புரியும்:  
ஒரு வயோதிகனின் கஷ்டம்
யாருக்குமே புரியாது.
விக்டர் ஹ்யூகோ

1982ஆம் ஆண்டு - ஜூலை:
ஆஸ்த்ரியா நாட்டில்,ஒரு உலக மகாநாடு. 
வயோதிகத்தையும் (aging),
வயோதிகர்களையும் (aged) பற்றி 
விவாதிக்கும் மேடை.
இந்திய அரசு  சார்பில்வாசிக்கப்பட்ட 
அறிக்கையிலிருந்து ஒரு பகுதி:
இந்தியாவைப் பொறுத்தமட்டில்
வயோதிகம் என்ற பிரச்சினைக்கு 
இடமே இல்லை. 
அது ஒரு கவலை தரும் 
விஷயமே இல்லை. 
வயோதிகர்கள்” என்று ஒரு 
தனிப்பட்ட பிரிவினராக 
அவர்களைக் கருதி அவர்களுக்காக 
பிரத்தியேகமான வழிமுறைகளைக் 
கொண்டுவர வேண்டிய 
அவசியமே இல்லை.

மேலும் சொல்கிறது அந்த அறிக்கை: -
குடும்பமும் சமூகமும், 
வயோதிகர்களை எப்படி நடத்த 
வேண்டும் என்பதைக் காலம்காலமாக 
எங்கள் மதகலாச்சாரசமூகக் கோட்பாடுகள்
விரிவாகச் சொல்லிவந்திருக்கின்றன.
வயோதிகர்கள் பிரச்சினையில் 
அரசு  நேரடியாகக் குறுக்கிடாமல்
ஒரு ஆதரவான போக்கைத்தான் 
(supporting role)
கடைப்பிடித்துவருகிறது. 
இதுவரை குழப்பம் ஒன்றும்  இல்லாமல் 
எல்லாமே சுமுகமாகத்தான் 
போய்க் கொண்டிருக்கிறது.

ஆஹாஎன்ன அழகான வர்ணனை!

நாம் இப்பொழுது இருப்பது 2012.

“Non issue” - (பிரச்சினையே இல்லை) 
என்று கருதப்பட்ட ஒரு விஷயம்
கடந்த 30 ஆண்டுகளில் கவலையைத் 
தரும் விஷயமாக மாறிஇன்று  ஒரு பூதாகரப் 
பிரச்சினையாக உருவாகியிருக்கிறது.
அரசின் அலட்சியம் ஒருபுறம் இருக்க,
வருத்தப்பட வேண்டிய,வேதனைக்குரிய
விஷயம் பொது மக்களின் அலட்சிய 
மனோபாவம் தான்.    
வயோதிகர்களைப் பற்றிய 
இந்தப்  பிரச்சினையில் யாருக்கும் 
ஒரு தீவிரமான அக்கறை 
இருப்பதாகத் தெரியவில்லை.
அப்படி என்ன பெரிய பிரச்னை?

இதோ சில புள்ளி விவரங்கள்:
2011ஆம் ஆண்டு சென்ஸஸ்படி 
இந்தியாவின் ஜனத்தொகை 
1.21 பில்லியன் (1200 கோடி). 
இது உலக ஜனத்தொகையில் 
6இல் 1 பங்குக்கு மேலே. 
2050இல் இந்தியாவின் ஜனத்தொகை 
1600 கோடியாக உயர்ந்து 
உலகத்திலேயே முதல் இடத்தை அடையும் 
என்று நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். 

வயதுப்படி இந்திய ஜனத்தொகை 
பின்வருமாறு.
0-14   வயது - 29.7%
15-64 வயது - 64.9%
65 +             - 5.5%

மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் 
இந்தியா ஒரு இளைஞர்கள் நாடு 
என்று தெரியவரும். 
வரவேற்கத் தகுந்த ஒரு விஷயம். 
ஆனால், 5.5% ,அதாவது 76 மில்லியன் 
மக்கள் 65 வயதிற்கு மேலே உள்ளவர்கள். 
இந்தத் தொகை முந்தைய 
10ஆண்டுகளைவிட அதிகமாகிக்கொண்டிருக்கிறது. 
இது மேலே போக 
சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

சமூக ரீதியாக,இந்தப் போக்கு 
எப்படி இந்தியாவைப் பாதிக்கும்?

இளைஞர் சமுதாயம் கூடினால் 
பள்ளிக்கூடங்கள் அதிகமாகத் தேவை. 
வேலை வாய்ப்புகள் பெருக வேண்டும். 
அதில் சுணக்கம் ஏற்பட்டால் பதட்டமான 
நிலை உருவாகும்.
வயதானவர்கள் எண்ணிக்கை கூடினால் 
அவர்கள் உடல்நலத்திற்கு நிறையச் 
செலவிட வேண்டியிருக்கும்- 
அவர்களைப் பற்றி அக்கறை காட்டினால்?..

எப்படி இவ்வளவு வயதானவர்கள் 
இருக்கிறார்கள்
1947இல் சராசரி இந்தியன் 
30 ஆண்டுகள் வாழ்ந்தான். 
10ஆண்டுகளுக்கு முன் 
அது 54ஆக உயர்ந்தது. 
இன்றைய life expectancy 
62க்கு மேலே.
காரணங்கள் பல: - 
மேம்பட்ட உடல்நலப் பராமரிப்பு முறைகள்
குறைந்த சிசுமரண விகிதம்
குறைந்த பிறப்பு விகிதம்,
வியக்கத்தக்க மருத்துவக் கண்டுபிடிப்புகள் - 
இவை வருகிற வருடங்களில் 
கட்டாயம் உயரக்கூடிய 
சாத்தியங்கள் இருக்கின்றன.

வயோதிகம்” என்பது 
ஒரு சமுதாயப் பிரச்சினை 
என்று பலர் கருதுவதாகத் தெரியவில்லை. 
அதற்கான முக்கியத்துவத்தையும் 
யாரும் புரிந்துகொண்டதாகத் தெரியவில்லை.
மேலை நாடுகளில்
அரசின் கொள்கைகளை வகுப்பவர்கள்
பொது விஷயங்களை விவாதிக்க 
ஏற்ற தளங்கள்,(Public forums) 
பலவித சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் 
(Human Service agencies)
என்று பலதரப்பட்ட ஸ்தாபனங்கள்
வயோதிகத்திற்கும் வயோதிகர்களுக்கும் 
என்ன செய்யலாம் என்று 
திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள்.

இந்தியாவில்இன்னும் 
பழைய பஞ்சாங்கத்தையே புரட்டிப் 
பேசிவருகிறோம்.

இதைப் பற்றி பேசினாலோஎழுதினாலோ 
standard பதில் இதுதான். 
எங்கள் நாட்டில் வயதானவர்களுக்கு 
என்று ஒரு தனி இடம்தனி மரியாதை உண்டு. 
பிள்ளைகளின் கடமை, 
பெற்றோர்களைக் காப்பது. 
இது புண்ணியத்தைச்' சம்பாதிக்கூடிய 
செயலாக’ கருதப்படுகிறது. 
யார் பெற்றோர்களை 
நிர்க்கதியாக விடுகிறார்களோ
அவர்கள் நரகத்திற்குப்  
போவது நிச்சயம். 
அதனால்பாப-புண்ணியத்திற்குப் 
பயந்து நாங்கள் எப்போதும் நல்ல 
பிள்ளைகளாக நடந்துகொள்வோம்.
கேட்பதற்கும் படிப்பதற்கும் 
நன்றாகவே இருக்கிறது. 
ஆனால் உண்மை அதுவல்ல. 
எத்தனையோ விஷயங்கள் மாதிரி,
இதுவும் பல இந்தியர்களின் 
இரட்டை நாக்கு பேச்சு.
(Doublespeak).
பேச்சுக்கும் நினைவுக்கும் 
சம்பந்தமில்லாத விஷயம்.

ஒவ்வொரு இந்தியத் தகப்பனும் 
பிள்ளைகளை ஒரு காப்பீடாகத்தான்
(insurance) நினைத்து வளர்க்கிறான் . 
வயதான காலத்தில் பிள்ளைகள் 
காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையில் 
தங்கள் சுகங்களை விட்டுக்கொடுத்துப் 
பெற்றோர்கள் பிள்ளைகளுக்காகவே
வாழ்கிறார்கள். 
இந்த ஓய்வுக்கால,மூத்தவயதினரின்
பாதுகாப்புக்கு ஆபத்து வந்துவிட்டது.

சில காரணங்களைக் கொஞ்சம் 
அலசுவோமா?...

கூட்டுக் குடும்பம் (Joint Family System)
அநேக நூற்றாண்டுகளாக இந்திய 
சமுகத்தின் ஆணி வேர் இது. 
வயதானவர்களுக்குஅவர்களுக்குத் 
தேவையான பாதுகாப்புமரியாதை
அன்புபாசம்மனத்திருப்தி- 
எல்லாவற்றையும் கொடுத்து வந்தது.
சமீப காலமாகஇந்த ஆணி வேர் 
ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது.

பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய 
விஷயங்களில்மக்களுடைய பார்வையில் 
ஒரு கணிசமான மாற்றம் உண்டாகிவருகிறது. 
சமூக,பொருளாதாரகலாச்சார 
விஷயங்களில் மக்களின் அணுகுமுறை 
நிறையவே மாற்றங்களுக்கு 
உள்ளாகியிருக்கிறது.

பல காரணங்கள் - முக்கியமாக,
அதீத நவீனப் போக்குகள்(modernization).
தொழில்நுட்ப வளர்ச்சி.
போக்குவரத்து வசதியினாலும் 
கல்வியாலும் இடம்பெயர வசதிகள்.
(migration)
பொதுமக்களுக்கான 
தொடர்புசாதனங்களின் பெருக்கம். 
(Growth of Mass Media)
ஒவ்வொரு இந்தியனும் ஒவ்வொரு 
விதத்தில் பாதிக்கப்பட்டுவருகிறான். 
தற்கால இளைஞர்களும் இதற்கு 
விதிவிலக்கல்ல. 
ஆனால்துரதிர்ஷடவசமாக
வயதானவர்கள்தான் 
அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 
அவர்களைப் பற்றியும் அவர்களின்
பங்கைப்பற்றியும், இதுவரை 
சொல்லிவந்த விஷயங்களைத் 
தர்க்க ரீதியாக அனைவரும் 
விமர்சனம்பண்ண 
ஆரம்பித்துவிட்டார்கள். 
ஆராய்ச்சிக் கண்ணோடு பார்க்கும் 
எந்த நபருக்கும் எளிதில் புரியக்கூடிய 
விஷயம்-
"வயதானவர்கள் சமூகத்திலிருந்து 
கொஞ்சம் கொஞ்சமாக 
ஒதுக்கப்படுகிறார்கள்" என்பதுதான். 
குறிப்பிட்ட வகுப்பினர் என்ற பாகுபாடு 
இல்லாமல் வயோதிகர்கள் 
விளிம்புநிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
வயோதிகர்களின் 
இந்த "ஒதுக்கும் நிலைக்கு" 
(marginalisation)
இதுதான்  காரணம் என்று 
திட்டவட்டமாகச் சொல்ல முடியாத நிலை. 
பல காரணங்களின் ஒரு கூட்டுச் சதி 
(complex factors). 

ஒரு லிஸ்ட் போடுவோமா?

அதீத நகர்ப்புற வளர்ச்சி
குடியிருக்க இடம் பற்றாக்குறை - 
இவை எல்லாம் சேர்ந்து 
வயோதிகப் பெற்றோர்கள் 
தனியாக வாழ வேண்டிய சூழ்நிலை.

குழந்தைகள் குடிபெயர்தல் - 
பெரிய நகரங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் - 
விளைவு, தனிமை.

வீட்டுப் பெண்கள் வேலைக்குப்  
போவதால் அவர்கள் சுதந்திரமாகச் 
செயல்பட விருப்பம். 
இதை ஏற்றுக்கொள்ளாத,
பக்குவம் அடையாத பெற்றோர்களுக்கு 
மன உளைச்சல்.

குழந்தைகளின் வாழ்க்கை முறை - 
பத்தாம்பசலிப் பெற்றோர்களுக்குப் 
பிடிக்காமல் இருக்கலாம். 
விவாதம்சண்டை என்று வந்தால் 
மகன்மனைவி பக்கம்தான்.

இன்றைய இளைஞர்களுக்குப் 
பிடிக்காத ஒரு விஷயம்
அவர்களுடைய முடிவுகளைப் 
பெரியவர்கள் விமர்சிப்பது. 
முடிவு எடுக்கும் அதிகாரம்,
வயதானவர்களிடமிருந்து 
பறிக்கப்படுவதுஅவர்களுக்கு 
ஜீரணிக்க முடியாத ஒரு விஷயம்.

கலப்புத் திருமணங்கள் - 
கலப்புத் திருமணங்கள்,  
ஜாதிகளையும்நாடுகளையும் 
தாண்டி நிகழ்வது 
சர்வசாதாரணமாகிவிட்டது. 
மொழிகலாச்சாரம் போன்றவை  
தலைமுறை இடைவெளியை
(generation gap) 
விரிவாக்குகின்றன.

பொருளாதாரப் பாதிப்பு
இன்னொரு முக்கியமான காரணம். 

தனியாக வாழும் பெற்றோர்கள் 
பெரும்பாலும் தங்கள் 
சேமிப்பில்தான் வாழ்கிறார்கள். 
அதிர்ஷ்டசாலிகளில் சிலருக்குப் 
பிள்ளைகளின் உதவித்தொகை 
கிடைக்கலாம். 
சேமிப்பு வட்டியிலிருந்து 
வரும் வருமானத்தில் வாழும் 
வயதானவர்களுக்கு 
இரண்டு பக்கமும் இடி. 
வட்டி விகிதம் குறைந்து
கொண்டேவருகிறது. 
விலைவாசியோ குதிரைக்கொம்பாக 
ஆகிக்கொண்டிருக்கிறது.

வயதானவர்களின் தனிமை நிலை


பெரும்பான்மையான வயோதிகர்கள் 
தங்கள் வாழ்க்கையில் 
ஒரு பொழுதுபோக்கையோ
பொழுதுபோக்கு சாதனங்களையோ 
பழகிகொள்வதில்லை. 
ஆகவே தனிமையில் கஷ்டப்படுகிறார்கள்.

கடைசியாகஆரோக்கியக் குறைவு.

இந்தியாவில் உடல் நலப் பராமரிப்பு 
(Health care) 
பெரும்பான்மையோருக்குக் 
கிடையாது. 
மருத்துவமனைமருந்துச் செலவுகள் 
இமாலய அளவுக்குச் சென்றுவிட்டன.

எப்படிச் சமாளிப்பார்கள்?

மேலே சொன்ன காரணங்கள் 
தனித்தனியாகப் பிரிந்து செயல்படவில்லை. 
எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

கூட்டுக்குடும்பம் உடைந்து
மக்கள் குடிபெயர்ந்து வெளி இடம் 
சென்றுவிடதனிமையில் வாழும் 
இந்த வயோதிகர்களை 
யார் கவனிப்பார்கள்

இவர்களுடைய பிரச்னைகளை யார் 
ஆராய்ந்து அந்தப் பிரச்சினைகளுக்கு 
ஒரு தீர்வு காட்டுவார்கள்?

பிள்ளைகளாசமூகமா? அரசா? 
சமூகநல ஸ்தாபனங்களா?

யாருடைய குழந்தைகள் 
இந்த மூத்த குடிமக்கள்?

அடுத்த வாரம் கண்டுபிடிப்போம்
அந்தப் பெற்றோர்களை.

பின்குறிப்பு:
எனக்கு நானே கொஞ்சம் 
"அட்சதை" போட்டுக்கலாம் 
என்று நினைக்கிறேன்.
இந்தக் கட்டுரை,  இன்றைய 
நிலையைப் படம்போட்டுக் 
காட்டுவதுபோல் இருக்கிறதா
இது நான் 1993ல் எழுதி
1994 டிசம்பர் 4ஆம் தேதி ஹிந்து 
பத்திரிகையில் பிரசுரமான 
கட்டுரையின் மொழியாக்கம்,  
சில சிறு மாற்றங்களோடு.

20 ஆண்டுகளில் நிலைமை ஒன்றும் 
மாறவில்லை. மோசமாகித்தான் 
ஆகியிருக்கிறது.

இதைத்தான்
"காலத்திற்கும் சாகா வரம்" 
பெற்ற இலக்கியப் படைப்பு 
என்கிறார்களா?
இது எப்படி இருக்கு?



... கிளறல் தொடரும்

No comments: