Monday, October 15, 2012

நவராத்திரி, லலிதாம்பாள் சோபனம் - சில நினைவுகள்



இது நவராத்திரி வாரம்.
நவராத்திரியைப் பற்றி 
ஏதாவது கிளறுங்களேன்” - 
இது அன்பு மனைவியின் வேண்டுகோள்.
அதைக் கட்டளையாக மதித்து
இந்தப் பகுதி எழுதப்படுகிறது.
நவராத்திரியைப் பற்றி என் சிறு வயது 
அனுபவங்களைச் சொல்ல வேண்டுமென்றால் 
உங்களை 65 ஆண்டுகளுக்குப் பின்னால் 
கூட்டிச்செல்ல வேண்டும்.

flashback தானே? உண்மைதான். 
ஆனால் அது பழகிப்போன வார்த்தை. 
புதிதாக இப்போது பேசப்படும் வார்த்தை 
time travel - காலத்தின் வழியே பயணம். 
நாமும் time travel பண்ணப்போகிறோம். — 
பின்னோக்கி.
காலம் 1936 - 1947 (எனக்கு 5-16 வயது)
இறங்கிய இடம்: திருநெல்வேலி டவுன்
தெப்பக் குளத் தெரு. 147 வீடுகள் கொண்ட 
ஒரு அக்ரஹாரம். 
ஒட்டினாற்போல் வீடுகள். 
privacy என்ற வார்த்தைக்கு என்ன விலை?’ 
என்று கேட்கும் நல்ல மனிதர்கள்’. 
யார் வீட்டில் என்ன விசேஷம் 
என்றாலும் பசங்களுக்குப் பிரத்யேக 
அழைப்பு கிடையாது. 
free for all தான். 
என் வயதுப் பசங்கள்ஆவலுடன் 
எதிர்பார்க்கும் வருடாந்திரப் பண்டிகைகள் 
நான்கு. அவை: 
ராமநவமி,அரசப் பிரதக்ஷிணம்,
மார்கழி மாத பஜனை, நவராத்திரி.
அப்படி என்ன விசேஷம்?
ராமநவமி
ராமர் பிறந்த தினத்தைப் பூஜை
பஜனைப் பண்ணி எதிர் வீட்டு 
ஜட்ஜ் குடும்பம் கொண்டாடுவார்கள். 
எங்களுக்குப் பிடித்தமானது
கடைசியில் பண்ணும் விரதானம். 
அதாவது எல்லோருக்கும் கொஞ்சம் நெல்லும் 
ஒரு அணாவும் (1அணா=1/16ரூபாய்) 
கொசுறுக்கு நீர் மோரும் பானகமும் 
கிடைக்கும். 
நெல்லை வீட்டில் கொடுத்துவிட்டு 
1 அணாவை அமுக்கிவிடுவோம். 
வெட்கத்தைப் பார்க்காத சில பசங்கள் 
இரண்டாவது தடவையும் போய் 
விரதானம் வாங்கிக்கொள்ளுவார்கள். 
2 அணா கிடைக்கும். அது போதாது
எப்படியோ கடன் வாங்கி 
(பெரிய தொகை காலணாதான்) - 
2 ¼ அணாவுக்கு சினிமா பார்க்கப் 
போய்விடுவோம் ராமர் பெயரைச் சொல்லி.

அடுத்தது அரசப் பிரதக்ஷிணம்
அரசப் பிரதக்ஷிணம் என்பது 
அரச மரத்தைச் சுற்றிவருவது. 
இது பெரும்பாலும் பிராமணக் குடும்ப 
ஸ்திரீகள் பின்பற்றும் பழக்கம். 
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமானப் 
பிரார்த்தனை. 
வருடம் ஒரு முறை தாமிரபரணி 
ஆற்றின் குறுக்குத் துறையிலிருக்கும் 
அரச மரத்தை 108 தடவைச் 
சுற்றி வருவார்கள். 
சுற்றிவரும் கணக்கு விட்டுப்போகாமல் 
இருக்க ஒவ்வொரு பெண்மணியும் 
தங்கள் சக்திக்கு ஏற்றவாறு 
வெவ்வேறு விதமானபொருள்களை(108)  
வாங்கி வருவார்கள். 
ஒவ்வொரு சுற்றுக்கும் தாங்கள் கொண்டுவந்த 
பொருளில் ஒன்றை ஒரு தட்டில் போடுவார்கள். 
108 சுற்றுக்குப் பிறகு அவற்றைக் 
குழந்தைகளுக்கு விநியோகம் செய்வார்கள். 
ஆஹா, எல்லா ஏழைக் குழந்தைகளும் 
பயன் அடைவார்களேஎன்று 
சந்தோஷப்படாதீர்கள். கொஞ்சம்தான்
அதுவும் செலக்ட் fewக்குத்தான் விநியோகம். 
மற்றவை வீட்டுக் குழந்தைகளுக்குத்தான்.
இதில் நிறைய வெரைட்டி இருக்கும். 
வசதியுள்ளவர்கள் சிலேட், நோட்டுகள் 
கொடுப்பார்கள்.  
வசதியில்லாதவர்கள் சிறு கோலி 
உருண்டைகள்சாக்பீஸ், பலப்பம் 
என்று கொடுப்பார்கள். 
back to schoolக்குத் தேவையான 
எல்லாம் கிடைக்கும்
சிறு தின்பண்டங்களும் கிடைக்கும். 
ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் இது.

மூன்றாவது, மார்கழி மாத பஜனை
கஷ்டப்பட்டால் பலன் கிடைக்கும் 
என்ற வாக்குக்கு எடுத்துக்காட்டு.
மார்கழி மாதத்தில்,ஒவ்வொரு நாளும் 
காலை 5 மணிக்கு எழுந்து, வெடவெடக்கும் 
குளிரில் பஜனை கோஷ்டியுடன் சேர்ந்து 
நடந்தாலோ, பாடினாலோ புண்ணியம் 
கிடைக்கிறதோ என்னவோ நிச்சயமாகக் 
கிடைப்பது சுடச்சுடப் பொங்கலும்சுண்டலும். 
ஜீரணிக்க முடியாத கண்டிஷன் - 
பஜனையில் கலந்துகொண்டவர்களுக்கு 
மட்டும்தான் பிரசாதம். 
முதல் 2, 3 நாட்கள் நிறைய பேர் 
வருவார்கள். கொஞ்ம்கொஞ்சமாகக் 
கூட்டம் குறைந்து, மாதக் கடைசியில் 
பஜனை பண்ணும் பாகவதரும் அவருடைய 
பின்பாட்டுக்காரர்கள் மாத்திரம்தான் 
இருப்பார்கள்.

கடைசியாக, நவராத்திரி.
இது எல்லோராலும் வரவேற்கப்பட்ட 
பண்டிகை. 
முதல் 2 பண்டிகைகளும்,ஒரு நாள் கூத்து. 
3ஆவது, ரொம்ப கஷ்டமானது. 
ஆனால் நவராத்திரி என்பது அவ்வளவு 
கடுமையானது இல்லை. 
கிடைக்கும் பலன்களும் 
(புராண புண்ணியத்தைப்பற்றி இல்லை) 
மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
அநேகமாக ஒவ்வொரு வீட்டிலும் 
ஒரு பெண் குழந்தை இருக்கும். 
அப்படியானால்நவராத்திரிக் கொலுவும் 
வைப்பார்கள். 
கொலு என்று இருந்தால் கூடவே 
சுண்டல் பிரசாதமும் உண்டு. 
யார் வீட்டில் கொலு வைத்திருந்தாலும் 
அழைப்பு இல்லாமல் 
தினந்தோறும் போகலாம். 
பெண் குழந்தைகளுக்குத்தான் 
கொஞ்சம் problem. 
கட்டாயம் ஒரு பாட்டாவது பாடினால்தான் 
மஞ்சள், குங்குமம் கிடைக்கும்’. 
சுண்டலில் எத்தனை விதமுண்டோ 
அத்தனை விதங்கள் இவர்கள் பாடிய 
பாடல்களிலும் சுருதிகளிலும். 
Talent showக்கு ஆரம்பமே இந்தக் 
கொலுக்களில் பாடிய அனுபவமே. 
எல்லா விஷயத்துக்கும் ஒரு விதிவிலக்கு 
இருப்பதுபோல், இந்தச் சுண்டல் 
வகைகளுக்கும் ஒரு திருஷ்டி. 
அது சரஸ்வதி பூஜை அன்று 
கொடுக்கும் பிரசாதம். 
சொல்லிவைத்தாற்போல் 
எல்லார் வீட்டிலும் கொடுப்பது. 
முழுக் கடலைச் சுண்டல்தான். 
அது ஏனோ தெரியவில்லை. 
சரஸ்வதி தேவிக்கு முழுக் கடலைச் 
சுண்டல்தான் பிடிக்கும் என்று 
யாரோ எழுதிவைத்துவிட்டார்கள்.
இந்தச் சுண்டல் சமாசாரத்தைத் தவிர 
சரஸ்வதி பூஜை வரவேற்கத் தகுந்த நாள். 
அன்று முழுவதும் படிக்க வேண்டாமே! 
பூஜைக்காகப் புத்தகங்களை அடுக்கி 
வைக்கும்போது ஞாபகமாக நமக்குக் 
கஷ்டமாக இருக்கும் பாட புத்தகங்களைப் 
பூஜையில் வைப்பது வழக்கம். 
மறுநாள், விஜயதசமியில் இந்தக் 
கஷ்டமானப் பாடங்களைப் படித்தால் 
வருடம் முழுவதும் நமக்கு நன்மை 
உண்டாகும் என்ற அசைக்க 
முடியாத நம்பிக்கை. 
(நினைத்துப்பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது)
இந்தச் சுண்டல் படலம் 
12 வயது வரைக்கும்தான். 
பெரியவனானபிறகு இன்னொருவர் 
வீட்டில் போய் சுண்டலுக்காக நிற்பது 
வெட்கமானது என்று நினைப்பு. 
சிறு பசங்கள் சுண்டலை வாங்கிக்கொண்டு 
வரும் வேளையில், sharingஐப் 
பற்றி லெக்சர் பண்ணினால் 
சில சமயம் பிரசாதம் கிடைக்கும். 
சில விடாகண்டப் பசங்களுக்கு 
மற்றவர்களுக்குக் கொடுக்காமல் சாப்பிட்டால் 
வயிற்று வலி வரும் என்று சாபம் கொடுத்தால் 
சில சமயம் பலன் கிடைக்கும். 
இதற்கும் மசியவில்லை என்றால் 
வெட்கத்தை விட்டுக் கேட்க வேண்டியதுதான்.

பசுமையான நினைவுகள்... 
இந்தப் பண்டிகைகள் எல்லாம் கடவுள், 
மத சம்பந்தப்பட்டவைகள் ஆயிற்றே
சுண்டல் மட்டும்தானா
இவற்றுக்குள் இருக்கும் கனெக்ஷன்?

நியாயமான கேள்வி. 
அந்த வயதில் இதைத் 
தவிர வேறு என்ன நினைப்பு
யாருமே இவற்றின் 
முக்கியத்துவத்தை விளக்கவில்லையே
வெறும் சடங்குகளாகத்தானே 
கொண்டாடினார்கள்.

நான் கொஞ்சம் அதிர்ஷ்டசாலி. 
என் அம்மாவும், அத்தையும், பாட்டியும் 
நவராத்திரி 9 நாள்களிலும் 
ஒரு தமிழ்ப் புத்தகத்தை வைத்துக்கொண்டு 
பாராயணம் செய்வார்கள். 
அடிக்கடி கேட்ட வார்த்தைகள் - 
சோபனம், சோபனம்.
தூண்டித்துருவிக் கேட்டபோது, 
இது அம்பாளைப் பற்றிய கதை. 
அம்பாள் எப்படிப் பண்டாசுரன்
மஹிஷாசுரன், சண்டன்முண்டன் என்ற 
அசுரர்களை வதம் பண்ணினாள் என்று 
இந்தப் புத்தகத்தில் சொல்லியிருக்கிறது’ 
என்று என் அம்மா சொன்னார்கள். 
நானும் அதை அப்படியே விட்டுவிட்டேன்.

இப்பொழுது திருநெல்வேலியை விட்டுச் 
சென்னைக்கு வருவோமோ
1953இலிருந்து 1992வரை.
இப்பொழுது நான் கிரஹஸ்தன். 
2 குழந்தைகள். 
பெண் குழந்தை இல்லாவிட்டாலும் 
மனைவி கொலுவைக்கத் தவறியதில்லை. 
தினசரி லலிதா சஹஸ்ர நாமம்
செளந்தர்யலஹரி பாராயணம். 
நெல்லைக் கலாச்சாரம் இங்கு இல்லை. 
குறிப்பிட்ட நாளில்தான் மற்றவர்கள் 
வீட்டுக் கொலுவுக்குப் போக முடியும். 
அதே மாதிரி, நீங்களும் ஒரு குறிப்பிட்ட 
நாளை மற்றவர்கள் வருவதற்காக 
ஒதுக்க வேண்டும். 
வீடுவீடாகச் சென்று சுண்டல் 
பிரசாதம் வாங்கும் பழக்கம் 
சிறுவர்களுக்குக் கிடையாது. 
ஆனால், ‘மஞ்சள்-குங்குமம்வாங்க 
வரும் பெண்கள் பாட்டுப் பாடுவதைத் 
தவிர்கக முடியாது. 
இந்த நவராத்திரி சமயங்களில் 
பாடுவதற்காகவே என் மனைவி
சின்னச் சின்னப் பாட்டுக்களின் 
லிஸ்ட் வைத்திருப்பாள். 
இதில் ஒன்றை அவிழ்த்து விட்டால்
double செளகரியம். 
மற்றவர்களைக் கஷ்டத்திற்கு 
உள்ளாக்க வேண்டாம்.
(பெரிய பெரிய மீட்டிங்குகளில் 
எல்லோரையும் எழுந்திருக்கச் சொல்லி
5 நிமிடங்கள் ராகம், சுவரம் பாடும் 
நபர்களை ஞாபகம் இருக்கா?) 
இரண்டாவது, டிரைவர் உத்யோகம் 
பார்க்கும் கணவனைச் சீக்கிரம் 
வீடு திரும்பச் செய்யலாம்.

இந்தக் காலகட்டத்தில்தான் இந்தப் 
பண்டிகைகளின் தத்துவங்களைப் 
புரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது. 
நிறையப் படிக்க ஆரம்பித்தேன். 
அம்மா உயிருடன் இருக்கும்வரை
பாராயணம் பண்ணிவந்த 
லலிதாம்பாள் சோபனத்தைப் 
பற்றித் தெரிந்துகொண்டேன்.

இப்பொழுது நிகழ்காலத்திற்கு வருவோமா?

காலம் மாறிவிட்டது. என்றாலும் 
நவராத்திரிப் பண்டிகை இன்னும் 
மஞ்சள்-குங்குமம்-சுண்டல்’ 
வழங்கும் social eventஆகத்தான் 
இருக்கிறது. 
நவராத்திரி என்பது சக்தி வழிபாட்டின் 
ஒரு முக்கியப் பண்டிகை. 
தேவியைப் பல வடிவங்களில் பூஜிக்கிற 
ஒரு 9 நாள் விழா. 
ஏதாவது ஒரு மொழியில் தேவியைப் பற்றிப் 
பாராயணம் பண்ண வேண்டிய நாட்கள்.
இன்னும் சில பேர்அதைப் 
பின்பற்றிவந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய இளைய தலைமுறைக்கு 
நம்முடைய வேர்கள் மறப்பதற்கு முன் 
இந்த மாதிரி பண்டிகைகளின் 
நோக்கங்களை விளக்க முயற்சிக்க வேண்டும்.

இப்பொழுது லலிதாம்பாள் சோபனத்தைப் 
பற்றிப் பார்ப்போம்.
லலிததோப்பிக்யானம், லலிதா சகஸ்ர நாமம்
என்றால் அநேகமாகத் தென் இந்திய 
பெண்களுக்குத் தெரியும். 
இவை சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டவை. 
இருந்தாலும் ஒலி நாடா மூலம் 
இந்த ஸ்லோகங்களை நித்ய 
பாராயணம் பண்ணிவருகிறார்கள்.

தமிழில் இருந்தால் நன்றாக இருக்குமே 
என்ற நினைப்புக்கு உருவகம் கொடுத்தது 
ஒரு பெண்மணி.

லலிதாம்பாள் சோபனத்திற்கு 
ஆசிரியர்சுப்புலட்சுமி அம்மாள். 
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 
சுசீந்தரம் ஊரின் பக்கத்துக் கிராமமான 
ஆசிரம அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர். 
இவரைப் பற்றி வேறு ஒரு தகவலும் 
கிடைக்கவில்லை.
ஆனால் இவர் தமிழில் எழுதிய 
லலிதாம்பாள் சோபனம் அநேகமாகக் 
கேரளாவிலும் தமிழ் நாட்டிலும் உள்ள 
எல்லா ஐயர் குடும்பங்களிலும் 
ஒரு தினசரிப் பாராயண நூலாக 
இருந்து வந்திருக்கிறது. 
தேவி பாகவத்திலும்லலிதோபாக்யானத்திலும் 
சொல்லப்பட்ட 
தேவி, பண்டாசுரனை வதைத்து 
நல்லவர்களைக் காப்பாற்றினாள் 
என்ற கதையைத் தழுவி எளிய 
தமிழில் இவர் எழுதியுள்ளார்.
சமஸ்கிருதத்தில் உள்ள லலிதோபாக்யானம் 
18 புராணங்களில் ஒன்றான 
பிரும்மாண்ட புராணத்தின் 
36ஆம் அத்யாயத்தில் வருகிறது. 
இதைச் சொன்னவர் - 
ஹயகீரிவர் - குதிரை முகத்துடன் 
இருக்கும் மகாவிஷ்ணுவின் அவதாரம். 
அகஸ்திய ரிஷி வேண்டுகோளுக்கிணங்கி 
தேவியின் கதையை ஹயகீரிவர் 
சொல்லியிருக்கிறார். 
அகஸ்தியரும் தன் மனைவி லோபமுத்ராவின் 
உதவியுடன் இந்தக் காவியத்தை 
மக்களிடம் பரப்பியிருக்கிறார்.

தமிழ் லலிதாம்பாள் சோபனத்தில் 
ஒவ்வொரு கட்டமும் சோபனம், சோபனம் 
என்று 2 தடவைச் சொல்லி முடிவடையும். 
எல்லாம் நன்மையில் முடிய வேண்டும் 
என்பது பிரார்த்தனை. 
ஐயர் பெண்மணிகளுக்கு ஒரு நம்பிக்கை. 
அதாவது ஆகாயத்தில் இரண்டு 
தேவர்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்கள். 
அவர்கள் சிறு சிறு இடைவேளைகளில் 
அப்படியே ஆகட்டும்என்று 
சொல்லிக்கொண்டு இருப்பார்களாம். 
நாம் கெட்ட எண்ணங்களை நினைக்கும்போது 
அவை தேவர்கள் சொல்லோடு இணைந்தால் 
நிச்சயமாக நடக்கும். 
அதனால் அதைத் தவிர்க்க 
நிறைய தடவை சோபனம் 
என்று சொல்லிவந்தால் கட்டாயம் 
நல்லதே நடக்கும். 
இதுதான் இரண்டு தடவை சொல்வதற்குக் 
காரணம்.

கதை சுருக்கமாக:-
மன்மதனை சிவன் எரித்த கதை 
எல்லோருக்கும் தெரியும். 
விஸ்வகர்மா, மன்மதனின் சாம்பலிருந்து 
ஒரு பொம்மையைத் தயாரித்தார். 
சிவபெருமான் அந்தப் பொம்மைக்கு 
உயிர் கொடுத்து நிறைய வரன்களைக் 
கொடுத்தார். பிரும்மா அவனுக்குப் 
பண்டன் என்று பெயர் சூட்டினார். 
பண்டன் முதலில் நல்லவனாகத்தான் 
இருந்தான். 
பிறகு தேவர்களைக் கொடுமைப்படுத்த 
ஆரம்பித்து பண்டாசுரனாக ஆனான்.
இவனைக் கொல்ல சிவனை மணம்புரியும் 
தேவிதான் வர வேண்டும் என்ற 
உண்மையை அறிந்துகொண்ட தேவர்கள்
பிரும்மாவின் யோசனைப்படி 
பிரார்த்தனை செய்தார்கள்.

லலிதா தேவி அவதரித்தாள். 
(லலிதா என்றால் எளிதில் திருப்தி 
அடைபவள், விளையாட்டுக்காரி.) 
லலிதா, சிவனுடைய அழகான உருவம் 
படைத்த காமேஸ்வரறை 
மணம்செய்து கொண்டாள். 
ஒரு பெரிய படையுடன் சென்று 
போர்செய்து பண்டாசுரனையும் 
அவனுடன் சேர்ந்த அநேக அசுரர்களையும் 
வதம் செய்தாள். 
மன்மதனுக்கும் மறு உருவம் கொடுத்தாள். 
தேவி வாழும் ஸ்ரீபுரத்தைப் பற்றி 
வர்ணனையும் இதில் உண்டு.

இது புத்தக வடிவில் வந்திருக்கிறது. 
ஒலிநாடாவிலும் (CD) வந்திருக்கிறது. 
நீங்கள் ரசித்து படிக்க லலிதாம்பாள் 
சோபனத்திலிருந்து சில பகுதிகளைக் 
கொடுத்திருக்கிறேன். 
இது sampleதான். 
இந்த நவராத்திரி பண்டிகையில் 
எல்லோரும் நோயின்றி சுகமாக 
இருக்க வேண்டும் என்று 
லலிதா - காமேஸ்வரி தம்பதிகளைப் 
பிரார்த்தித்துக்கொள்வோம்.

லலிதாம்பாள் சோபனம்-சில வரிகள்

மங்களமுண்டாகப் பாடுகிறோம்
ஆதிப் பிரம்மரிஷி அகஸ்தியரும்
அகிலலோகம் சஞ்சரிப்பவரும்

ஜோதி காமாக்ஷியைக் காஞ்சி நகரத்தில்
ஸ்துதித்து பூஜை செய்து தபஸிருந்தார்.
சங்கு சக்கரம் வலக்கை புஸ்தகமும்
தரித்தே ஹயக்ரீவர் மஹாவிஷ்ணுவாய்
தங்கவர்ணி லோபாமுத்திரை மணவாளன்
தபஸிற்கு முன் வந்தார்- சோபனம் சோபனம்!


ஆதியந்தம் பராசக்திக்கில்லை
ஆதாரமுஞ் ஜகத்துக்கிவள் தான்
ஜோதி ரூபியுடைய ரூபங்களை யெல்லாம்
சொல்ல முடியாதொருவராலே
ஆனாலும் தெரிந்த மட்டுக்குமிப்போ
அவளுடைய சில அவதாரஞ் சொல்வோம்
முன்னே பிரம்மாவின் தியானத்தில் 
ரக்ஷிக்கமுதல் வந்தாள் ஒரு ரூபம்
சோபனம் சோபனம்!

கண்டகன் பண்டாஸுரனை வதைக்கவென்றே
காமேசர் அஸ்திரங்கொடுத்தார்
வாங்கிக்கொண்டு அம்மன் காமேசர் 
அஸ்திரத்தைமண்டலாகாரமாய் 
வில் வளைத்துக்கோடி சூரியன் போன்ற 
காமேசர் பாணத்தைக்
கோதண்டத்தில் வைத்து மந்திரித்து
வேடிக்கையாகவே காது பரியந்தம்
விசையாய் இழுத்துவிட்டாள்-
சோபனம், சோபனம்.

தேவி பிரயோகித்த அஸ்திரந்தானப்போ
தேவேந்திரன் வஜ்ஜிராயுதம் தடிபோல
தாவிப் பண்டாஸுரன் மார்பிலே பாய்ந்தது
தரணியிலே விழுந்து உயிரைவிட்டான்
அஸ்திரமுடையாளின் அக்கினி ஜ்வாலையாலே
அவனுடபுரங்களும் வெண்ணீராச்சு
அஸ்தமனத்தில் பண்டாஸுரனை வதைத்து
அம்மன் ஜயங்கொண்டாள்-
சோபனம் சோபனம்

புஷ்பம் பன்னீர்களைச் சொரியவே தேவர்கள்
புகழ்ந்துஸகிகள் வெண்சாமரம் வீச
அப்பொழுது தேவி சக்திசேனையுடன்
ஆலயத்தை அம்மன் வந்தடைந்தாள்
ஆயுதங்களால் அடிபட்ட சக்திகள்
காயத்தை அம்ருதக் கண்ணால் போக்கினாள்
நோய்கள் போனதுபோல ஸுகம் பெற்றார் 
பூமியும் புனிதமாய் செழித்தது
சோபனம் சோபனம்



இந்தச் சோபனம் பாடும் வாழ்வரசிகள் 
எல்லாம் தேவிகளென்று மனதிலெண்ணி
சந்தனத் தாம்பூலம் குங்குமம் பழம் புஷ்பம்
ஸந்தோஷமாய் எல்லார்க்குங் கொடுத்து
எந்தெந்தக் கிருஹங்களில் சொல்ல வைத்துக் 
கேட்பாரோஅந்தந்தக் கிருஹங்களில் 
அரிஷ்டம் நீங்கும்
ஸுந்தரி கிருபையாலே ஸந்ததி விருத்திக்கும்
தீர்க்காயுஸுமுண்டு
சோபனம் சோபனம்


மங்கள வாழ்த்து

ஜயமங்களம் லலிதா தேவிக்கும்

ஜயமங்களம் காமேச்வரருக்கும்
ஜயமங்களம் மந்திரிணி தண்ட நாதைக்கும்
ஜயமங்களம் ஸர்வ சக்திகட்கும்
ஜயமங்களம் ஹயக்ரீவருக்கும்
ஜயமங்களம் அகஸ்தியமா முனிக்கும்
ஜயமங்களம் ஸர்வ ஜனங்கட்கும் நமக்கும்
ஜயமங்களம் நித்ய சுப மங்களம்

லலிதாம்பாள் சோபனம் முற்றுப் பெற்றது.

ஓம் தத் ஸத் ப்ரஹ்மார்ப்பணமஸ்து.


...கிளறல் தொடரும்



2 comments:

Unknown said...

REALLY GREAT.
SHARING OF THOUGHT WITH LIGHT BUT WITH WEIGHT IN THE CONTENT
VERY GLAD TO SEE SUCH A MEMORABLE TIME SHARE WITH THIS ARTICLE

GIYAPPAN said...

லலிதாம்பாள் சோபனம் ஸ்லோகம் இன்டர்நெட்டில் கிடைக்குமா என்று பார்க்க சுற்றி வந்தபோது உங்கள் "குப்பை " என்று பெயரிடப்பட்ட பொக்கிஷத்தை கண்ணுற்றேன். மிகவும் இனிமையான நினைவுகளையும் , நான் அறிந்த , அறிந்திராத செய்திகளையும் சேர்த்துக் கதம்பமாக்கி கொடுத்திருக்கிறீர்கள். இதற்கு முன்னாள் ஒரு ஆங்கில உரையும் சமஸ்க்ருத ச்லோகமஆம்தான் கிடைத்தது. என் தாயார் சொல்லக் கேட்டதை என் மகளுக்கும் பாடம் சொல்லி வைக்க இது உதவும் என்று தேடுகிறேன். முழு ஸ்லோகமும் கிடைக்கும் என்று நம்பிக்கை.
இனி உங்கள் "குப்பையை" கிளறிப் பார்க்க வேண்டும். நன்றி.