Monday, August 19, 2013

என் சகோதரியின் மறைவு - சில நினைவுகள்


        மீனாட்சி தியாகராஜன்-(1926-2013)

என் அக்காவின் உடல்நிலைபற்றி 
போன வாரம் குறிப்பிட்டிருந்தேன். 
கடந்த திங்கட்கிழமை (12.08.2013) 
அன்று இரவு மருத்துவமனையில் இறைவனடி சேர்ந்துவிட்டார்கள். 
ஒரு வாரம் வென்டிலேட்டரில் 
இருந்த அவருக்கு நினைவு திரும்பவேயில்லை. 
2 வாரத்திற்கு முன் விடைபெற்று 
வந்த எனக்கு இந்த முடிவு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 
எதிர்பார்த்த நிகழ்ச்சிதான் 
என்றாலும் (தத்துவரீதியாக அல்ல) கூடப்பிறந்த சகோதரியின் மரணம் 
எந்த வேதாந்த கருத்துகளினாலும் 
ஆறுதல் அடையாது. 
அடையும் - காலப்போக்கில். 
அதுவரை 80 ஆண்டு நினைவுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.










என் சகோதரியினால் ஏற்பட்ட 
மரண சோகம் என்னுடைய  
தனிப்பட்ட சோகம்  . 
அதை மிகைப்படுத்தி உங்கள் மனநிலையைச் சோகப்படுத்துவது 
என் நோக்கமில்லை.

இந்தச் சோக நிகழ்ச்சியின் 
தொடர்பாக என் மனதில் தோன்றிய 
சில எண்ணங்கள் என்னைச் சங்கடப்படுத்திகொண்டிருக்கின்றன. அவற்றை  உங்களுடன் 
பகிர்ந்துகொள்ள ஆவல்.

அதற்குமுன் என் அக்காவைப் 
பற்றி ஒரு சில வார்த்தைகள் - 
என் அஞ்சலியாகக்கூட எடுத்துக்கொள்ளலாம்.

என் அக்காவின் பெயர்-மீனாட்சி.
பிறந்த ஊர்-திருநெல்வேலி டவுன் . 
பிறந்த தேதி-22.07.1926. 
மாதம் - ஆடி.
நட்சத்திரம்-மூலம்.


வழக்கமாக நெல்லையில் பிறந்த 
பெண் குழந்தைகளுக்கு காந்திமதி 
என்ற அம்மன் பெயரை வைப்பார்கள். எங்களுக்கும் மதுரைக்கும் சம்பந்தமேயில்லை. 
அப்படியும் ஏன் மதுரை அம்மன் 
பெயரை வைத்தார்கள் என்று தெரியவில்லை. 
உண்மையிலேயே என் அக்காவின் 
கண்கள் அழகாக இருக்கும். 
அது ஒரு காரணமாக இருக்கலாம். 












மூத்த வாரிசு அதுவும் பெண். 
பெண் பிறந்த வேளை என் அப்பாவிற்குச் செழிப்பு வரத் 
தொடங்கியது. 
கேட்கவா வேண்டும்-
செல்லத்திற்கு.

10 ஆண்டுகள் - 

இளவரசி வாழ்க்கைதான். 
எது கேட்டாலும் கிடைக்கும் நிலை. 
வீணை வாத்தியார் வீட்டுக்கு வந்து சொல்லிக்கொடுப்பார். 
அது ஒரு பெரிய luxury. 
எனக்கும் என் அண்ணாவிற்கும் 
பாட்டு கற்றுக்கொள்ள ஆசை. 
ஆனால் அது காலத்திற்கு 
ஒவ்வாத செயலாயிற்றே! 
பெண்ணுக்குத்தான் 
பாட்டும் நடனமும். 
வேறு வீட்டுக்குப் போகிறவளாம். 
என் தகப்பனார் அகால மரணம் (காலராவினால்- 
இப்போது  அந்த வியாதி  ஜுசுபி) குடும்பத்தை ஒரு கலக்கு 
கலக்கிவிட்டது. 
ஆனால் என் அக்காவின் 
வருங்கால மாமியார் - 
காந்திமதி அம்மாள். 
(அப்பாவின் உறவினர்) 
அப்பாவுக்குக் கொடுத்த 
வாக்குக்காகத்  தன் 
6 மகன்களில் 
கடைசி மகனுக்கு 
என் அக்காவைத்  திருமணம் செய்துவைத்தார். 
அது பாராட்டப்பட வேண்டிய 
விஷயம். 
முதலில் என் அப்பா 
இறந்தபின் நாங்கள் இருந்த 
ஏழ்மை நிலை. 
இரண்டாவது என் அக்காவின் 
நட்சத்திரம் மூலம். 
“மூலத்து பெண் மாமியார் 
மரணத்திற்குக் காரணமாகிவிடுவாளாம். (பழமொழியைச் 
சொல்லியே வாழ்க்கைகளைப் 
பாழடித்திருக்கிறார்கள். 
ஜோசியப்படி இதற்கு எந்த 
ஆதாரமும் கிடையாது. 
கொஞ்சம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 
“பரணி பிள்ளை,தரணி ஆள்வான்” பழமொழி. 
எத்தனை பரணிகாரர்கள் 
பிச்சை எடுத்துக்
கொண்டிருக்கிறார்கள்!)
1941இல் 15 வயதில் திருமணம். அத்திம்பேர் பெயர் தியாகராஜன். என்ஜினியரிங் படிப்பு.













மாப்பிள்ளை குடும்பம் 
சென்னையில் வசதியான குடும்பம். 
அப்பா ஏ.ஜி ஆபிஸ் தலைவர். 
ஒவ்வொரு பிள்ளைக்கும் தனி ரூம். 
Pocket money Rs.100/-  
ஒரு மிதப்பில்தான் இருந்தார்கள். 
அதற்கு ஒரு உதாரணம் 
1942இல் சென்னையில் 
வைத்து என் அக்காவிற்கு 
முதல் இரவு சடங்கு. 
எனக்கு 11 வயது. 
என் அண்ணாவிற்கு 
14 வயது.

சென்னைக்கு வந்து 

எங்கள் உறவினர் வீட்டில்  
தங்கியிருந்தோம். 
அத்திம்பேரைப் பார்க்க வேண்டும் 
என்ற ஆசையில் பக்கத்து தெருவில் இருக்கும் அவரைப் பார்க்கச் 
சென்றோம். 
அத்திம்பேரைப் பார்த்து 
“அத்திம்பேரே, சௌக்கியமா?” 
என்றோம். அதற்கு
அவர் எரிச்சலுடன்
 “பார்த்தா தெரியவில்லை” என்றார். அவ்வளவுதான் அழுதுகொண்டே 
வீட்டுக்கு வந்து நடந்த 
விஷயத்தைச் சொன்னோம். 
மறுபடி அத்திம்பேர் வீட்டுக்குப் போகவில்லை. 
முதல் இரவில் என்ன நடந்தது 
என்று தெரியாது. 
அத்திம்பேர் அன்று கோபப்பட்டதுதான் - முதலும் கடைசியும். 
சாகும்வரை நாங்கள்தான் 
அவருக்கு எல்லாம். 
எப்படி இந்த மாற்றம் வந்தது 
என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். 

என் பேரில் என் அக்காவிற்கு 
ஒரு தனிப்  பிரியம். 
கொஞ்சம் ஓவரான 
possessivenessகூட. 
என் கல்யாணம் ஆன புதிதில் 
என்னுடைய புதிய உறவைப்  புரிந்துகொள்ள அவர்களுக்குக் 
கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. 
மற்ற குடும்பங்களில் நடப்பதுபோல் 
உறவு முறியாமல் பார்த்துக்கொண்ட 
பெருமை முழுக்கமுழுக்க 
என் மனைவிக்குத்தான். 
அவளுடைய அனுசரித்துப்போகும் குணம்தான் என் சகோதரிகூட 
கடைசிவரை எங்கள் உறவைச் 
சுமுகமாக வைத்துக்கொள்ள 
உதவியது . 
என்னுடைய பிள்ளைகளுக்கும் 
நாங்கள் சொன்ன அறிவுரை 
இதுதான். 
(முடிந்தால் நீங்களும் 
பின்பற்றலாம்.)

“பிள்ளைகளே, எங்களுக்கும் 
எங்கள் சகோதர,சகோதரிகளுக்கும் பிரச்சினைகள் இருக்கலாம். 
அது சகஜமாக எல்லோர் வீட்டிலும் 
நடக்கக் கூடியதுதான். 
ஆனால் உங்களைப் பொறுத்தவரை 
என் அண்ணா - உன் பெரியப்பா. 
என் அக்கா - உன் அத்தை. 
எஙகள் சண்டைகளை எங்கள்
 ‘கண்கள் மூலமாக’  பார்க்காதீர்கள். இன்றுவரை எங்கள் சொல்லைத் 
தட்டாமல் அவர்கள்  
கடைப்பிடித்துவருகிறார்கள்.
பெற்றோர்களே, தயவுசெய்து 
உங்கள் பிள்ளைகளை 
sibling சண்டையில் ஈடுபடுத்தி 
அவர்கள் மனதில் விஷத்தைத் 
தூவாதீர்கள். 

தமக்கையின் வாழ்க்கை 
தொடர்கிறது.

அக்கா - அத்திம்பேருக்கு 
3 பெண்கள். மூத்த பெண் - 
காந்திமதி - M.Sc. பட்டதாரி. 










கல்யாணம் தடைப்பட்டுக்  
கல்யாணம் பண்ணிக்
கொள்ளாமலேயே வாழ்கிறாள். 
மற்ற 2 பெண்களும் 
கல்யாணம் பண்ணிக்கொண்டு 
பேரன், பேத்திகளோடு 
வாழ்கிறார்கள். 
அக்கா - அத்திம்பேர் வாழ்க்கை 
ஒரு typical middle class வாழ்க்கை. 
என் அக்காவிற்கு ஏற்பட்டதுபோல் 
எங்கள் அத்திம்பேர் குடும்பமும் 
கஷ்ட தசையைச்  சந்திக்க நேர்ந்தது.

அடிக்கடி கஷ்டங்கள் - 
அக்கா பொறுப்புள்ள 
குடும்பத் தலைவி. 
எப்படியோ சமாளித்து 
வாழ்க்கையை நடத்திவந்தார்கள்.

அத்திம்பேர் மரணத்திற்குப் பிறகு 
அக்காவை வியாதிகள் துரத்த 
ஆரம்பித்தன. 
விஜயம் செய்யாத சென்னை மருத்துவமனைகளே கிடையாது. 
பெரிய எதிரி - ஆஸ்துமா. 
கீழே விழுந்து இடுப்பு எலும்பு 
உடைந்தது. கல்யாணம் பண்ணிக்கொள்ளாமலேயே 
மூத்த மகள், பிள்ளை 
ஸ்தானத்திலிருந்து கடைசிவரை பார்த்துக்கொண்டது 
பாராட்டப்பட வேண்டிய 
சமாச்சாரம்.
 ‘அம்மாவைக் கழற்றிவிட்டு 
வந்தால்தான் வாழ்வேன்’ என்று 
சொல்கிற மருமகள்கள் இருக்கும் 
காலத்தில், 
மனைவிக்காக அம்மாவை 
old age homeக்கோ தெருவுக்கோ 
துரத்தும் ‘நல்ல’ மகன்கள் இருக்கும் காலத்தில் என் அக்கா மகள் செய்தது 
ஒரு அதிசயமான செயல்தான். 

ஔவையார் முருகனிடம் 

சொல்வதாக 
ஒரு பாடல் உண்டு. 
முருகன் கேட்கிறார் 
முருகன்: ஔவையே கொடிது எது?
ஔவையார்: கொடிது கொடிது. 
வறுமை கொடிது. 
அதனினும் கொடிது இளமையில் கொடிது

இந்தக் காலத்தில் இது பொருந்துமா? 
என்று தெரியவில்லை. 
இன்றைக்குக் கொடிது வயதான 
காலத்தில் பணக் கஷ்டம் 
ஏற்படுவதுதான். 
அதுவும் வியாதிகள் வந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். 
மறைவு ஒன்றுதான் relief . 
அது என் அக்காவிற்கு ரொம்ப 
கஷ்டப்பட்ட பிறகு கிடைத்திருக்கிறது. அவர்கள் சிவலோகப்  பிராப்தி 
அடைந்ததில் ஒரு வருத்தம் 
கலந்த மகிழ்ச்சிதான். 
அது என்ன சிவலோக பிராப்தி? 

சம்பிரதாயத்தில் நாங்கள் 
ஸ்மார்த்தர்கள். 
ஸ்மார்த்தர்கள் சிவலோகத்திற்கும் 
வைணவர்கள் வைகுண்டத்திற்கும் போவார்களாம். 
என் அக்கா வைகுண்டத்திற்கா, சிவலோகத்திற்கா போவார்கள் 
என்பது தெரியவில்லை. 
நிச்சயமாக நரகத்திற்குப் 
போக மாட்டார்கள். 
ஏனெனில் நரக வேதனையை 
இங்கேயே அனுபவித்துவிட்டார்கள். 
வாழ்க அவர்கள் ஆத்மா!
மறுபடி வருவார்களா?

பெரிய கேள்வி:
விடை அனேகம்:
சிவ வாக்கியர் என்ற 
சித்தர் வாக்குபடி
என் அக்காவிற்கு மறு பிறவி
கிடையாது:
கறந்தபால் முலைப்புகா, 
கடைந்தவெண்ணெய் 
மோர் புகா,
உடைந்து போன சங்கின் ஓசை 
உயிர்களும் உட்புகா,
விரிந்தபூ உதிர்ந்தகாயும் 
மீண்டும் போய் மரம்புகா,
இறந்தவர் பின் பிறப்பதில்லை, 
இல்லை இல்லை இல்லையே! 













என் அக்கா நோய்வாய்ப்பட்டு 
இருந்தபோது நான் பார்த்த 
சில நிகழ்ச்சிகள் என்னை 
சங்கடத்திற்கு உள்ளாக்கின. 
என் அக்காவிற்குக் கணவன் 
வழியில் நிறைய உறவினர்கள் இருக்கிறார்கள். 
அவர்கள் ஆஸ்பத்திரியில் 
இருக்கும்போது ஒருவராவது 
வந்து பார்க்கவில்லை. 
ஒரு விசேஷத்தில் அவர்களில் 
பல பேரைப்  பார்த்தபோது 
“பசங்களா, இங்கே உங்கள் 
உறவினர் விசேஷத்திற்கு வந்திருக்கிறீர்கள். 
அங்கே ஒரு உறவினர் 
உயிருக்குப் போராடி
கொண்டிருக்கிறார்கள். 
அவர்களைப் பார்த்து நான்கு 
வார்த்தை ஆறுதலாக சொல்லலாமே? அவர்கள் இறந்த பிறகு 
சம்பிரதாயத்திற்காக 
மலர் வளையம் வைப்பது அபத்தமில்லையா?” 
என்று கேட்டேன். 
எல்லோரும் “மாமா, தப்புத்தான். 
கட்டாயம் போய்ப் பார்க்கிறோம்” என்றார்கள். 
நான் இருக்கும்வரை 
ஒருவரும் வரவில்லை.

நவம்பர் 6, 2011இல் நான் 
“ஒரு வயதானவரின் பிரார்த்தனை- வேண்டுகோள்” என்ற 
ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறேன்.

மற்றவர்களுக்கு விடுத்த 
வேண்டுகோளை மறுபடியும் 
இங்கே பிரசுரிக்கிறேன்.


சரியான நேரம் — இதுதான், 
இப்பொழுதுதான்.

என்னை நீங்கள் நேசிப்பதாக 
இருந்தால் அதைச் சொல்வதற்கு 
இதுதான் சரியான நேரம்.

உங்களுடைய இனிமையான 
உணர்ச்சிகளின் மூலம் 
உங்களுடைய உண்மையான 
அன்பை நான் உயிரோடு 
இருக்கும்போதே 
வெளிப்படுத்திவிடுங்கள்.

என் உயிர் பிரியும்வரை 
காத்திருக்காதீர்கள்.

உங்களுடைய இனிமையான 
வார்த்தைகளை ஜடமான 
சலவைக்கற்களில் உளியினால் 
செதுக்கி உங்கள் அன்பை 
வெளிப்படுத்தாதீர்கள்.

என்னைப் பற்றி ஏதாவது 
அன்பாகச் 
சொல்ல வேண்டுமானால் 
இப்பொழுதே, நான் உயிருடன் 
இருக்கும்போதே, 
சொல்லிவிடுங்கள்.

நான் இறந்த பிறகு உங்கள் 
வார்த்தைகள் 
என் காதில் விழாது.

ஆகவே, 
என்னிடம் துளி அளவாவது 
அன்பு, பாசம், நேசம் இருந்தால், 
நான் உயிருள்ளபோதே 
எனக்குத் தெரியவையுங்கள்.

இப்பவே சொல்லிவிடுங்கள், 
‘I love you’ 
'I care for you"

என்று.


இரண்டாவது உறுத்தலான விஷயம்.

‘நன்றி’ என்ற வார்த்தைக்கு 
உள்ள மதிப்பு. 
ஒவ்வொரு வயதானவரும், 
தங்கள் வாழ்க்கையில் 
பெரும் பகுதியைத் 
தங்கள் பேரன், பேத்திகளுக்காகச் செலவிட்டிருக்கிறார்கள். 
அப்படிப்பட்ட தாத்தா, பாட்டி 
உடல்நலம் குறைந்திருக்கும்போது 
வசதியுள்ள பேரக் குழந்தைகள் 
பண உதவி செய்யலாமே? 

எப்படித்தான் நன்றிக்கடனைத்  
தீர்க்கப்போகிறீர்கள்?

கடைசியாக என் மனதில் பல 
ஆண்டுகளாகத் தோன்றிவரும் 
ஒரே ஆசை - அநாயச மரணம். 
ஒவ்வொரு வயதானவருக்கும் 
தோன்றும் ஒரு natural desireதான். 
‘கஷ்டமில்லாமல் டக் என்று 
போய்விட வேண்டும்.’ - 
பல பேர் சொல்ல கேட்டுவருகிறோம்.

விசாலம் ராமன் என்ற பெண்மணி 
Internetஇல் ஒரு அருமையானக் கவிதை எழுதியிருக்கிறார்.

மரணமே  நான் உன்னை 
வரவேற்கிறேன்,
யமராஜனே  என் கைகளை 
நீட்டி வரவேற்கிறேன்

கூடவே பிடி ஒரு விண்ணப்பம் ,
வேண்டும் ஒரு கையொப்பம் ,

பல நாடகள் என்னைப் படுக்கையில் தள்ளாதே ,
கோமா நிலையும் கொண்டு செல்லாதே ,
முதல் நாள் ஆஸ்பத்திரி  பரிவுடன்  விசாரிப்பு ,
பல நாடகள் ஆனால் அதுவே மன சலிப்பு ,
முதல் நாள் பழங்கள் ஹார்லிக்ஸ் வருகை ,
போகப் போக உறவினர்  வருவதும் நிற்கை ,
மகனுக்கு வேலை பளு,,முகத்தில் டென்சன் ,
தண்ணீர் போல் சிலவு  ,நடப்பது மௌனத்தில் ,
குழந்தைகள் வருத்தத்தில் ,கவனக் குறைவுபடிப்பில் 
உள்ளே வெளியே என்று அலையும்  மருமகள்
என்று கஷ்டம் விடியும் என்று ஏங்கும்  மகள்,
தேவைதானா  இவைகள் எனக்கு ?
இப்போது புரிந்ததா உனக்கு ?
மரண்மே  உன்னை வரவேற்கிறேன்
கூடவே ஒரு விண்ணப்பம் தருகிறேன் ,

பேசியபடியே என் உயிர் போகவேண்டும்.
கடவுள் நாமத்தில் நான் மரிக்க வேண்டும்
பிரார்த்தனையின் போது என்னை அழைத்து கொள்,
காலை நேரம் என்னை எடுத்துக் கொள்,
பள்ளி விடுமுறையாக இருக்கட்டும்
மழையும் கொட்டாமல் இருக்கட்டும் ,
செத்தப் பின்னும் என் தலை உருள
சனிகிழமை என்னை அழைக்காதே 
"சனிப் பிணம் தனிபோகாது"என்று
இறந்த பின்னும் பெயர் கெடுக்காதே! 
அஷ்டமி நவமியைத் த்விர்த்துவிடு ,
விபத்தின் மரணைத்தை நிறுத்தி விடு ,
போலீஸ் வரும் என்ற கவலை !
போஸ்ட்மார்ட்டம் என்ற தொல்லை
என் வாயில் ராம் ராம் சொல்ல விடு
புனித கங்கையை முழுங்க விடு

மரணமே உன்னை வரவேற்கிறேன்,
கூடவே ஒரு விண்ணப்பம் கொடுக்கிறேன் ,,
அன்புடன் விசாலம்

அருமையான வேண்டுகோள். 
எத்தனை பேருக்கு இந்தப் பேறு 
கிடைக்கும்? 
அதனால் கடவுளுக்கு 
என் சார்பில் விண்ணப்பம். 

கடவுளே!

மேலே சொன்ன விண்ணப்பத்தை 
என்வரை நிறைவேற்ற மாட்டாய் 
என்று தெரியும். அதனால் நான் 
ஒரு விண்ணப்பத்தை உன் முன் 
வைக்கப்போகிறேன்.

நான் உன்னிடம் ஒரு பெரிய 
லிஸ்ட் போட்டு, அதில் உள்ள 
வியாதிகளினால் நான் சாகக் கூடாது 
என்று கேட்கப் போவதில்லை. 
நான் நிறைய புராணக் கதைகள் 
படித்திருக்கிறேன். எப்படி எல்லாம் நீ "manipulate" பண்ணி 
ராவணன், இரண்யன் போன்ற 
அரக்கர்களை அழித்தாய் என்பது தெரியும். 
நான் 200 வியாதிகளிலிருந்து 
விடுதலை கேட்டால் நீ 201ஆவது 
வியாதியை உண்டுபண்ணுவாய். 
அதனால் நான் கேட்கப் போவது:

பணம் - பணம் - நிறைய. 
எதற்கு? நீ கொடுக்கப் போகிற 
வியாதிகளை நான் குணப்படுத்திக்கொள்ள 
மருத்துவமனைகளை நாட வேண்டும். 
அதற்காகத்தான். 
என் வாரிசுகள் தங்கள் மணிப்பர்ஸைக்  
கடிக்காமல் செலவுசெய்ய பணம் தேவை. 


கொடுப்பாயா?

 கிளறல் தொடரும்...












2 comments:

saravanan said...

DEAR SIR,

YOUR POSTING IS VERY TOUCHING.

REGARDS

S.SARAVANAN

Unknown said...

i am in tears