Tuesday, November 01, 2011

தானம்
பிரும்மோபதேசக் கட்டுரை முடிவில் மனிதர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய தலையாயக் கடமை
தானம்தான் என்று சொல்லியிருந்தேன். 
அதன் விளக்கம் இதோ

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில்
தானம் என்றால் (பிறருக்கு நன்மை செய்யும்
நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது
தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் 
எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் 
என்று கூறுகிறது.

தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக்
கொடுக்கும் முதல் செய்யுள் – 
ஒளவையாரின் ஆத்திசூடி’. 
சுலபமானது. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது.
அருமையான நீதி போதனைகள் அடங்கியது.
அறம் செய விரும்பு. (அறம் எனப்படும் நல்ல
உதவிகளைச் செய்ய விரும்பு)
இயல்வது கரவேல் (உன்னால் கொடுக்க 
இயன்றதை மற்றவர்களுக்குக்                           
கொடுக்கக் கற்றுக்கொள்)
ஈவது விலக்கேல் (தானம் செய்வதை நிறுத்தாதே)
ஐயம் இட்டு உண். (ஏழை எளியவர்களுக்கு 
தானம் செய்து உண் (சாப்பிடு)
தானமது விரும்பு (தன்னார்வமாக 
நன்கொடை கொடுப்பதை விரும்பு)

ஆக, குழந்தைகளுக்குச் சொல்லும் 
முதல் நீதிப் பாடமே 
தானத்தைப் பற்றித்தான். 
அப்படியிருந்தும் குழந்தைகள்
பெரியவர்களாக வளரும்போது 
ஏன் இதை மறந்துவிடுகிறார்கள்! 
சிந்தியுங்கள். விடை கிடைத்தால்
சொல்லுங்கள்.

            தானத்தைப் பற்றியும் தானத்தினால் ஏற்படும்
            நன்மைகளைப் பற்றியும் பேசாத, எழுதாத
            மதங்களோ மதகுருமார்களோ இல்லை. 
            எத்தனையோ கருத்துக்கள், கதைகள் சொல்லப்பட்டு
            வந்திருக்கின்றன.

           தைத்ரேய உபநிஷத் சொல்கிறது:

          “நம்பிக்கையோடு கொடு;
           நம்பிக்கையில்லாமல் கொடுக்காதே;
           நிறையக் கொடு; அடக்கத்தோடும், கருணையோடும்,
           உணர்ச்சியோடும் கொடு.

           வள்ளுவர் கூற்று:

           வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை; மற் றெல்லாம்
           குறியெதிர்ப்பை நீரது உடைத்து. (23:1)

          ஏழை எளியவர்களுக்குக் கொடுப்பதுதான் 
          உண்மையான தானம். மற்றவை எல்லாம்
          செய்த வேலைக்கு நன்றிக் கடனாகக் கொடுப்பது.

         கீதையில் 20க்கும் மேலான இடங்களில் 
         தானத்தின்  சிறப்பைக் காண முடிகிறது.

       ‘ஆறில் ஒரு பங்குஎன்ற சொற்றொடர்
        கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஒருவனுடைய
        வருமானத்தில் ஆறில் ஒரு பங்கைத்தான்
        தனக்கென்று வைத்துக்கொள்ள வேண்டும். 
        மீதியில் ஒரு பங்கு பெற்றோர்களுக்கு
        இரண்டாவது பங்கு பித்ருக்களுக்கு
        (இறந்து போனவர்கள் நினைவாக)
       மூன்றாவது பங்கு சமூகத்திற்கு (community), 
        நான்காவது பங்கு அரசருக்கு அதாவது 
       அரசாங்கத்திற்கு வரியாக (16% வரி எவ்வளவு
       நியாயமானது. கறுப்புப் பணத்திற்கு அவசியம் 
       இருந்திருக்காதே). 
       கடைசிப் பங்கு தான  தர்மங்களுக்கு என்று 
        பழைய நூல்கள் சொல்கின்றன.

       தானம் என்னென்ன? எது உயர்ந்த தானம்?
      யாருக்குக் கொடுக்க வேண்டும்
      எப்படிக் கொடுக்க வேண்டும்?

      தானத்தில் எத்தனையோ வகை உண்டு.
      பொருள் தானம், வஸ்த்ர தானம் (உடை) 
      அன்ன தானம் (சாப்பாடு), பூதானம் (நிலம்)
      கன்னிகா தானம் (கல்யாணம்), வித்யா தானம் (படிப்பு),
      கோ தானம் (பசு). 
      இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

      இதில் எது உயர்ந்தது?

      எல்லா தானங்களிலும் மிகச் சிறந்த தானம் 
      அன்ன தானம்தான். ஏன்?

      மற்ற எல்லா வித தானங்களிலும் தானம் 
      பெறுபவருக்கு ‘போதும்என்ற திருப்தி
      ஏற்படுவதில்லை. 10 ரூபாய் கொடுத்தால், 20 ரூபாய்
      கொடுத்திருக்கக் கூடாதா என்ற நினைப்பு வரும். 
     ஆடைகள் கொடுத்தால், இதைவிட நல்ல ஆடைகள்
      தரக் கூடாதா என்று நினைப்பார்கள். 
      இதே மாதிரி மற்ற தானங்களிலும் ஏற்படும். 
      ஆனால் ஒருவருக்குச் சாப்பாடு போட்டால்
      அவர் வயிறு நிறைந்துவிட்ட பிறகு மேலே
      ஒரு கரண்டி அன்னம் அளித்தாலும் கையை
      வைத்துத் தடுத்து “போதும், போதும்என்று
      கூறுவார்கள். மேலும் வாயார 
      வாழ்த்தவும் செய்வார்கள்.

     எது மேலான தானம்
     எதனால் அதிக நன்மை கிடைக்கும்?

     தானம் பெறத் தக்கவனை அணுகி 
     தானம் செய்தல் மேலானது. உத்தமம்.
    ஒருவரை அழைத்து தானம்செய்வது மத்திமம்.
    யாசிப்பவனுக்கு தானம்செய்வது, மட்டமானது. 
    சேவைசெய்தவனுக்கு கொடுத்த தானமோ
    பயனற்றது.

    தானம் பெறத் தக்கவரின் இருப்பிடம் 
   சென்று யாதொரு தானம் கொடுக்கப்படுகிறதோ 
   அது அளவற்ற பயனைத் தரும்.

   
  மைமோனிடீஸ் (Maimonidies – வைத்தியர்,
  தத்துவ ஞானி (1135 – 1204) யூத மதத்தைச் சேர்ந்தவர்)
  ஒரு கட்டுரையில் தானத்தின் எட்டு படிகளைப்
  பற்றி விளக்குகிறார்.

 தானத்தின் எட்டு படிகள் கீழேயிருந்து

  முதல் படி -மனத்திற்குப் பிடிக்காமலோ,
  மன வருத்தத்தோடோ கொடுப்பது.
 இந்த தானம் கையால் கொடுக்கும் தானம்.
 இருதயத்திலிருந்து வரும் தானம் அல்ல.

 2ஆவது படி -சந்தோஷத்தோடு, ஆனால்
 கேட்பவர் தேவைக்குக்குறைவாகக் 
 கொடுக்கும் தானம்.

3ஆவது படி -சந்தோஷமாகவும், தேவையைப்
பூர்த்திசெய்யும் வண்ணம ஆனால் கேட்ட பிறகு 
கொடுக்கும் தானம்.

4ஆவது படி -சந்தோஷமாகவும், கேட்காமலேயே
 தேவைக்கேற்ற தானத்தை தானம் பெறுபவர்
 கையில் கொடுத்து அவரை வெட்கப்படும்படி
 செய்யும் தானம்.

5ஆவது படி- யாருக்காக தானம் கொடுக்கப்பட்டது
 என்ற தெரியாமலேயே தானம் செய்வது.
 முன்னோர்களில் சிலர் தங்கள் வீட்டு முற்றங்களில்
 பண மூட்டைகளை தொங்கவிடுவார்களாம்.
 பணம் தேவையுள்ளவர்கள் கொடுத்தவருக்குத் 
 தெரியாமலேயே எடுத்துச் செல்வார்களாம்.

6ஆவது படி -தானம் கொடுத்தவரின் பெயர் 
விளம்பரப்படுத்தாமலேயே கொடுக்கப்படும் 
தானம். முந்தைய காலத்தில் சில நல்லவர்கள் 
யாருக்கு உதவி தேவையோ அவர்கள் வீட்டுக்கு 
தானப் பொருள்களை அனுப்புவது உண்டு. 
யார் அனுப்பினர் என்பது பெறுபவருக்குத் தெரியாது.

7ஆவது படி -கொடுப்பவருக்கும் யாருக்கு 
கொடுக்கிறோம் என்று தெரியாது. வாங்கியவருக்கும்
 யாரிடமிருந்து வந்தது என்றுதெரியாது. 
இந்த தானம் சிறந்தது.
ஒரு பொது இடத்தில்  (உதாரணம் கோவிலில் ஒரு அறை)
தானப் பொருள் கொடுக்கப்படும்.
வேண்டியவர்களுக்குத் தகுதிக்கு ஏற்றபட
விநியோகிக்கப்படும்.

8ஆவது படி -எல்லாவற்றிற்க்கும் 
மேலான உயர்ந்த தானம்ஏழ்மையை ஒழிக்கும் முயற்சிகள்.
“Do not give a person a fish a day. But teach him how to fish.”  
ஒரு மனிதனுக்கு தினந்தோறும் ஒரு மீனை
தானமாகக் கொடுக்காதே. அவனுக்கு மீன் பிடிக்கக்
கற்றுக்கொடுத்துச் சொந்தக் காலில் நிற்க வை” 
என்ற பழமொழிக்கு ஏற்றவாறு தேவை என்று
வருகிறவர்களுக்கு ஒரு தொழிலையோ
வியாபாரத்தையோ கற்றுக்கொள்ள வசதிகள் செய்வது
மிகப் பெரிய தானம். 
இந்த தானம்தான் அவர்களை மற்றவர்களிடம்
கை ஏந்தி நிற்காத நல்ல தன்மானமுள்ள
மனிதர்களாக மாற்றும். 

இப்படி வெவ்வேறு விதமான தானங்கள்
செய்து வழிகாட்டிகளாக இருந்த எத்தனையோ
மகான்கள், பெரியோர்கள் இருந்திருக்கிறார்கள். 
அவர்களுடைய கதைகள் அடிக்கடி சொல்லப்படுகின்றன. 

முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி, நள்ளி, சிபி சக்ரவர்த்தி,
 திலீபன், கர்ணன்… 
இப்படி எத்தனையோ பெரியவர்களின்
 கதைகள் கேட்டிருப்பீர்கள். 

எனக்குப் பிடித்தக் கதைகள் இரண்டு. 

ஒன்று மகாபாரதத்தில் வருகிறது.
தரும புத்திரர்களும் அணிலும்என்ற கதை.
 மகாபாரதத்தில் கடைசிப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது. 
எல்லோருக்கும் தெரிந்த கதை. 
கதையைப் படிக்க விரும்புகிறவர்கள் ராஜாஜி எழுதிய 
வியாசர் விருந்துபுத்தகத்தையோ அல்லது 
அவர் ஆங்கிலத்தில் எழுதிய ‘Mahabharata’ 
புத்தகத்தையோ (A Pound of Flour) படிக்கவும்

நான் சொல்லப்போகும் கதை அவ்வளவாகப் (popular)
பிரபலமாகாத கதை.
ரந்திதேவன் என்ற ஒரு அரசனின் கதை. 
பாகவத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. 
மகாத்மா காந்திக்கு வழிகாட்டியாக இருந்த ஒரு கதை.

ஒரு சமயம் ரந்திதேவனின் நாடு கடும்
பஞ்சத்தால் தாக்கப்பட்டது. அரசன் தன்னுடைய
சொத்தையெல்லாம் மக்களுடைய பசியையும்
கஷ்டங்களையும் தீர்க்கச் செலவிட்டான். 
மக்களுடைய கஷ்டங்களை நினைத்து வருந்தி
48 நாள் உண்ணாவிரதம் இருந்தான்.
தண்ணீர்கூடக் குடிக்கவில்லை. 

பஞ்சம் தீர்ந்து மக்களுக்கு உணவு கிடைக்கிறது
என்ற நிலை ஏற்பட்டவுடன், 49ஆம் நாள் 
உண்ணாவிரதத்தை  முடித்துவிடத் தீர்மானித்தான்.
ஒரு கவளம் உணவும் ஒரு கோப்பை தண்ணீரும் 
அவன் முன் வைக்கப்பட்டன.
ந்திதேவன் சாப்பிட ஆரம்பிக்க, அந்த சமயம் 
ஒரு பிராமணன் வந்து ஐயா, பசிக்கிறது. 
ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்என்றான். 
அரசனும் ஒரு பகுதி அன்னத்தை அவனுக்குக்
கொடுத்தான். 
மறுபடி சாப்பிட ஆரம்பிக்கும் சமயம்
ஒரு ஏழை விவசாயி வந்து பசிஎன்று முறையிட்டான்
அவனுக்கும் அரசன் ஒரு பகுதியைக் கொடுத்தான்.
மீதியைச் சாப்பிட முயற்சி செய்தபோது 
ஒரு தாழ்ந்த குடிமகன் தன்னுடைய நாய்களோடு 
வந்து உணவு வேண்டும்என்று கேட்டான். 
மீதியுள்ள உணவை அவனுக்கும் அவன்
நாய்களுக்கும் கொடுத்துவிட்டுத் 
தண்ணீரையாவது குடிக்கலாம் 
என்று நினைத்த போது
ஒரு புலையன் ஐயா, தாகமாக இருக்கிறது.
குடிக்கத் தண்ணீர் தாருங்கள்என்று கேட்டான். 
அரசன் தயங்காமல் அந்தத் தண்ணீரை 
அந்தப் புலையனுக்குக் கொடுத்தான். 

அப்போது ரந்திதேவன் சொன்ன இரண்டு பாட்டுகள்
மிகவும் உயர்ந்த கருத்துகள் கொண்டவை.

முதலாவது
நான் கடவுளிடமிருந்து மோட்சத்தயோ அஷ்டமா 
சித்திகளையோ பெற ஆசைப்படவில்லை.
மறுபடி பிறவாத நிலையையும் ஆசைப்படவில்லை.
என்னுடைய ஒரே ஆசை மக்களின் மனத்தில் 
இடம்பெற்று அவர்கள் சுக துக்கங்களில்
பங்குகொண்டு அவர்களுக்குச் சேவை 
செய்யவே விரும்புகிறேன்.

இரண்டாவது.
தாகம்என்று கேட்டு வந்தவனுக்குத் தண்ணீர்
கொடுத்த மாத்திரத்தில், என்னுடைய பசி, தாகம்,
களைப்பு, சோர்வு, வருத்தம், ஏமாற்றம்
எல்லாம் நொடிப்பொழுதில் மறைந்துவிட்டன.
எப்பேர்ப்பட்ட தியாகம்
கதை முடிவு சுபம். 
மும்மூர்த்திகளும் அவனுக்குக்
காட்சி அளித்து அவனை வாழ்த்தினார்கள்.

நிறையவே தானத்தைப் பற்றி எழுதியாயிற்று.

நாம் எல்லோரும் நம்மால் முடிந்த 
தானத்தை செய்ய முயற்சிப்போம்.

கடைசியாக, கபீர்தாஸின் ஒரு வாக்கியம்: 

நீங்கள் இந்த உலகத்தில் தோன்றும்போது
கைகளை இறுக்கி மூடிக்கொண்டு வந்தீர்கள். 
நீங்கள் உலகத்தை விட்டுப் போகும் போது 
திறந்த கைகளோடு போகப்போகிறீர்கள். 
நீங்கள் உயிரோடு இருக்கும் போது 
கைகளை நன்றாகத் திறந்து
மற்றவர்களுக்குத் தாராளமாகக் கொடுங்கள்.


கிளறல் தொடரும்.

      3 comments:

Siva Ramanathan said...

எப்போதோ படித்த ஆத்திசூடியை மறுபடியும் ஞாபக படுத்தியதற்கு நன்றி

Nirmalkumar Muthukumaran said...

Sir,

Romba nalla irruku. Nanum mathavankalu nannal muditha help panni irrukien. Ippo eppadi thanam pannanum-nu theliva therinjukiten.

Thanks a lot.

Nirmal

Mani Kalidai said...

Randhidevan story is good not heard before, will definitely want more of those in next time, easy to translate this as a bedtime story. Children are getting bored telling Disney stories.