Sunday, November 13, 2011

ஒரு தாத்தா தன் அமெரிக்கப் பேராண்டிக்கு எழுதும் கடிதம்



அன்புள்ள பேராண்டிக்குத் தாத்தா எழுதுவது. 
நலம். நலமறிய அவா.

நானும் பாட்டியும் இந்தியாவில் செளக்கியமாக இருக்கிறோம்.

உன்னுடைய சமீபத்திய போட்டோவைப் பார்த்தோம். 
நீ கிடுகிடுவென்று வளர்ந்து விட்டிருக்கிறாய். மகிழ்ச்சி. 
நீ இப்பொழுது ஒரு டீன் ஏஜர்”, 
அதாவது, பாட்டி சொல்வதுபோல், ஒரு இரண்டுங்கெட்டான்.” 
உன் வயதுப் பையன்கள் போல் உனக்கும் பிடிவாதம், எரிச்சல், கோபம் 
இத்யாதி, நிறைய இருப்பதாக உன் அப்பாவும் அம்மாவும் 
வருத்தப்படுகிறார்கள். எப்படி உனக்குப் புத்திமதி சொல்வது என்று 
அவர்களுக்குத் தெரியவில்லையாம். என் மேலே 
அந்தச் சுமையை இறக்கி வைத்திருக்கிறார்கள்.


நான் உனக்கு அட்வைஸ்பண்ணப்போகிறதில்லை. 
இந்த உலக யதார்த்தத்தைச் சில வார்த்தைகளில்
உனக்குச் சுட்டிக்காட்டப்போகிறேன்.

நான் இங்கு சொல்லப்போகும் விஷயங்களை 
உன் பள்ளிக்கூட ஆசிரியர்கள் 
சொல்லித்தந்திருக்க மாட்டார்கள்.

இது ஒரு வாழ்க்கைப் பாடம்.


இவற்றை வாழ்க்கையின் விதிகளாக நினைத்துச் செயல்படு.

இதோ அந்த விதிகள்:

அடிக்கடி நீ சொல்கிறாயாம் “Life is not fair”. 
அதாவது, “இந்த வாழ்க்கை சுத்த மோசம்.” 
உன் மாதிரி டீன் ஏஜர்ஒரு நாளைக்கு 6 இலிருந்து 8 தடவை 
இந்த வார்த்தையை உபயோகிக்கிறார்களாம். 
இது உண்மையான, சத்தியமான வார்த்தை. 
நிஜ வாழ்க்கை ஒரு bed of rosesமலர்ப் படுக்கையாக 
இருக்காது. கரடுமுரடானது, கஷ்டமானது. 
பள்ளிக்கூட வாழ்க்கை, கஷ்டம், bore, ‘not fair’ 
என்று நீ நினைத்தால் அதைச் சமாளிக்கக் கற்றுக்கொள். 
இந்த அனுபவம், பாடம்,நிஜ வாழ்க்கையில் 
உனக்கு மிக உபயோகமாக இருக்கும்.

உன்னுடைய பள்ளிக்கூடம் உன்னுடைய சுயமரியாதைக்கு
(self-esteem) கொடுக்கிற முக்கியத்துவத்தை உன்னுடைய 
நிஜ வாழ்க்கை உனக்குத் தராது. 
அது உன் சுயமரியாதையைப் பற்றிக் கவலைப்படாது. 
அதிர்ச்சியாக இருக்கிறதா
அதுதான் உண்மை.

பள்ளிக்கூடத்தை விட்டவுடன், ரூ.40,000 சம்பளம், கார், போன்
கிளப் எல்லாம் கிடைக்கும் என்று கற்பனைசெய்யாதே. 
ஒரு தொழிற்சாலையின் சீருடையை நீ அணிய 
நேர்ந்தாலும் ஆச்சரியப்பட வேண்டாம்.

உன்னுடைய ஆசிரியர் கடுமையாக நடந்துகொள்கிறார் என்று 
நீ நினைத்தால், உனக்கு ஒரு “boss” வரும் காலம் வரும். 
அப்பொழுது தெரியும், உன் ஆசிரியரின் மகிமை.

சிறுசிறு வேலைகளைப் பார்த்துச் சம்பாதிப்பது  உனக்குக் 
கேவலமாக இருக்கலாம்.  உன் பெற்றோர்கள் 
அவற்றை நல்ல வாய்ப்புகள்என்று நினைத்தார்கள்.

உன்னுடைய தோல்விகளுக்கு உன் பெற்றோர்கள் 
காரணமில்லை.  நீயேதான். 
அடிக்கடி சொல்வாயே எனக்கு நான்தான் boss. 
இது என் வாழ்க்கைஎன்று. அதன் பிரதிபலிப்புதான் 
உன்னுடைய தோல்விகள்.

உன் பெற்றோர்கள் உனக்கு அட்வைஸ்பண்ணினால் 
அது உனக்கு “bore” ஆக இருக்கும். அதை “bore” என்று கருதாமல் 
அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முயற்சிசெய்.

பல பள்ளிக்கூடங்கள் “promotion” தேர்வுகளை 
ரத்துசெய்திருக்கின்றன. நீ பாஸாக வேண்டுமே என்று
 நிறைய சந்தர்ப்பங்களை அளிக்கிறார்கள். 
எல்லோரும் தேறுவதற்காக தரங்களைக் குறைத்திருக்கிறார்கள். 
நிஜ வாழ்க்கையில் இந்த மாதிரி நடக்காது என்பது 
கூடிய சீக்கிரம் உனக்குப் புரியும்.

டிவி.யில் காட்டப்படுவதுதான் வாழ்க்கை என்று நினைத்துவிடாதே.
உன்னுடைய பிரச்சினைகள் டிவி சீரியலில் வருவது மாதிரி 
17 நிமிடத்தில் (13 நிமிடம் விளம்பரம்) தீராது. 
காப்பி சாப்பிடக்கூட நேரமில்லாமல் 
அலுவலகத்துக்கு ஓட வேண்டியிருக்கும்.

முட்டாள்கள் என்று நீ நினைப்பவர்களை 
அலட்சியப்படுத்தாதே. 
நிஜ வாழ்க்கையில் உனக்கு அவர்கள் 
“boss”ஆக வர வாய்ப்புகள் உண்டு.

ஆமை மாதிரி இரு-  
ஆமைக்குப் பின்னோக்கிப் போகத் தெரியாது. 
மான் மாதிரி இரு-                      
பிறர் என்ன சொல்கிறார்கள் என்ற
உன்னிப்பாகக் கவனி. பேச்சைக் குறை.
கரடி மாதிரி இரு-                      
எது தேவையோ அதைப்பிடித்துக்கொள்.
மற்றதை விட்டுவிடு.
ஓநாய் மாதிரி இரு-                              
உன்னைப் பாதுகாத்துக்கொள்ள
சண்டைபோடு. தக்க சமயத்தில் வெளியேற 
ஒரு “plan” வைத்துக்கொள்.

கடைசியாக, ஒருபோதும் கீழ்க்கண்ட வாக்கியங்களைச் 
சொல்லத் தயங்காதே.

I love you — I am sorry — I can do it —
May  I help you? — Can you, Please help me?  

Good luck

இது உனக்கு நிறையத் தேவையாயிருக்கும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நீ கடுமையாக 
உழைக்கிறாயோ அவ்வளவுக்கு அவ்வளவு 
அதிர்ஷ்டங்கள் உன்னைத் தேடி வரும்.

உன் நலத்தையே விரும்பும்
அன்புத் தாத்தா.

கொசுறு

எனக்கு தெரியாதது உங்களுக்கு?

எப்படி ஒரு தந்தை தன் மகனை நடத்த வேண்டும் 
என்று சொல்கிறது ஒரு சமஸ்கிருதக் கவிதை. 

5 வயதுவரை தன் மகனை ராஜகுமாரன் போல
நடத்த வேண்டும். 
அடுத்த 10 ஆண்டுகள் அவனை தாஸனாக 
(வேலைக்காரனாக) நடத்தலாம். 
16 வயதுக்குப் பிறகு அவனை 
நண்பனாகக் கருத வேண்டும்.

ஹிட்லரைக் கருவில் சுமந்திருந்தபோது அவன் தாயார் 
அந்தக் கருவைக் கலைக்க நினைத்தாராம். 
அந்த அம்மாளுடைய டாக்டர்  அப்படிச் செய்வது பாவம்” 
என்று சொல்லி அவருடைய மனதை மாற்றி விட்டாராம். 
அந்த டாக்டர் எங்கே என்று இன்னும் 
தேடிக்கொண்டிருக்கிறார்களாம்.

மிக்கி மவுஸ்தயாரிப்பாளர் வால்ட் டிஸ்னிக்கு 
எலிகள் என்றால் பயமாம்.


 கிளறல் தொடரும்........

16 comments:

ப.கந்தசாமி said...

நல்ல புத்திமதிகள். பாராட்டுகிறேன்.

snkm said...

இந்த மாதிரி தாத்தாக்கள் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். நல்ல நண்பனாகவும், அளவில்லாமல் செல்லம் கொஞ்சுபவர்களாகவும், அவ்வப்போது கண்டிக்கவும் செய்பவர்களாக தாத்தாக்கள் இன்று மிகவும் துர்லபம். நன்றி.

Anonymous said...

இப்படிப்பட்ட பாட்டி தாத்தாக்கள் இன்றைய தலைமுறைக்கு இல்லை. :(

அற்புதராஜ்

Pandian R said...

----
முட்டாள்கள் என்று நீ நினைப்பவர்களை
அலட்சியப்படுத்தாதே.
நிஜ வாழ்க்கையில் உனக்கு அவர்கள்
“boss”ஆக வர வாய்ப்புகள் உண்டு.
-------

ரசித்தேன். நன்றி.

Krishna said...

Very Nice Article...
Love you Grand Pa...

tsnagarajan said...

ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
வண்க்கம்.
காளமேக புலவர் "காக்கைக்கா காகூகை" பற்றி ஒரு நண்பர்
கேட்டிருக்கிறார். முழு பாடல் மதுரை Project 85ம் பாடல்.
காக்கை-காகம்.கூகை-ஆந்தை.2க்கும் ஆகா.கோ-அரசன்.
கொக்கு-கொக்கு
கஷ்டமான பாடல்.சுருக்கமான அர்த்தம் இதோ:
ஆந்தைக்கு இரவில் கண் தெரியாது.ஆனாலும் அது காக்கையை
விட பலசாலி.அதே மாதிரி நாட்டை காக்கும் அரசனும் கொக்கு
மாதிரி பொறுமையாக காத்திருக்கும் போது பலமில்லாதவனாக
தோன்றினாலும் உண்மையில் பலசாலி தான்.

.

Vassan said...

நீங்கள் யாரென தெரியாது. நானொரு அமேரிக்கத் தமிழ் தகப்பன் - 16 1/2 வயது மகனுக்கு. மகனுக்கு தமிழகத்திலிருக்கும் அவனுடைய தாத்தா (அம்மா வழி) கடிதம் எழுதுவது வழக்கம். அக்கடிதங்கள் சிலவற்றைப் படித்து நீங்கள் படி எடுத்து எழுதிவிட்டீர்களோ என நினைக்கத் தோன்றுகிறது! நேரம் கிடைக்கும் போது மகனிடம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லலாம் என உள்ளேன்.

நிற்க.

எல்லாம் சரி ஆனால் "ரூ.40,000" ஐ வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? $ என மாற்றுங்கள்.

நன்றிகள்.

Sowmiya said...

ரொம்ப நல்ல அறிவுரை தாத்தா...
இது போல் இன்னும் நிறைய அறிவுரையை எதிர் பார்க்கும் அன்பு பேத்தி... :)

Sowmiya

Sowmiya said...

அது என்ன தாத்தா "திருநெல்வேலி"யின்"குப்பை" ?
கொஞ்சம் விளக்கம் குடுங்களேன் ...

நன்றி.

tsnagarajan said...

சொளம்யாவுக்கு ஆசீர்வாதங்கள்;

என்னுடைய "நீண்ட அறிமுகம்" கட்டுரையில் விளக்கமாக
வேடிக்கையாக சொல்லியிருக்கிறேன்.

Old Posts ஐ கிளிக் செய்யவும்.

நாகராஜன்,

Anonymous said...

நல்ல அறிவுரை, நன்றி

தங்கவேல்,
கோவை

Anonymous said...

I wish to faithfully translate this week's ''kuppai'' and make available the translationto my grandson but I am not sure if his self-worth will allow him reading!

Annamaliar

Venkat said...

படித்து மகிழ்ந்தேன். உங்களின் தமிழின் தரம், ஹாஸ்யம், மனதில் எளிவாக பதியும் கருத்துக்கள் மெச்சவேண்டியவை.
நான் இப்பொழுத்தான் ஆனந்தவிகடனின் தீபாவளி மலரை படித்து கொண்டிருக்கிறேன். என்ன ஒரு வித்தியாசம்!

என்னுடைய பாராட்டுக்கள். இன்னமும் வரும் உங்களுடைய எண்ணங்களை ஆவலோடு எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

அன்புடன்
வெங்கி (விவேகானந்த வித்யாபீடம்)

கடுகு said...

ஆறிவுரை என்றால் பேரன்கள் “ தாத்த்த உங்க லெக்சரைக் ஆரம்பித்து விடாதீர்கள்” எனறு சொல்லி விட்டு இடத்ததைக் காலி பண்ணுகிறார்கள்!

- பி ஏஸ் ஆர்

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

குப்பையை கிளறினால் முத்து கிடைக்கலாம்