Sunday, November 27, 2011

வைட்டமின் ‘ப’ – பற்றி விஷயம் தெரிந்த ‘நாலு பேர்’ என்ன சொல்கிறார்கள்?

‘Friend ராமசாமிஎன்பவர், 1950, 1960களில் 
ஒரு புகழ்பெற்ற நாடக, சினிமா நகைச்சுவை நடிகர். 
T.K.S. சகோதரர்கள் நாடகக் குழுவில் 
ஒரு முக்கியமான நடிகர். ஒல்லிக்குச்சியான
நெட்டையான உடல் வாகு உள்ளவர். 
மனிதன்என்ற நாடகத்தில் ஒரு காட்சி. 
ராமசாமி தன்னுடைய குடும்ப 
டாக்டரைப் பார்க்கச் செல்கிறார். 
அவர்களின் உரையாடல்:
டாக்டர், ராமசாமியை பரிசோதித்துவிட்டுச் 
சொல்வார்.
டாக்டர்: ராமசாமி, உங்களுக்கு ஒரு வியாதியும் 
இல்லை. வீக்காக இருக்கிறீர்கள். 
அதனால் நிறைய வைட்டமின்கள் 
சாப்பிட வேண்டும். இதோ  அதற்கான 
பிரஸ்கிரிப்ஷன்.
ராமசாமி: (அந்தச் சீட்டைப் பார்த்துவிட்டு) 
டாக்டர், ஒரு முக்கியமான வைட்டமின் 
மாத்திரையை எழுத மறந்துவிட்டீரே?
டாக்டர்: அது என்ன?
ராமசாமி:அது தான் வைட்டமின் ’.
டாக்டர்: இது என்ன புதுமையான வைட்டமின். 
நான் கேள்விப்பட்டதே இல்லையே?
ராமசாமி: ஐயா, வைட்டமின் என்பது பணம். 
அதுதான் எனக்குப் பற்றாக்குறை.
இந்த தமாஷான வார்த்தை நாளடைவில் 
மாணவர்களிடையே பிரபலமானது.  
இந்தக் கட்டுரை, வைட்டமின் வைப் பற்றியது. 
ஆனால், நிச்சயமாக, கண்டிப்பாக 
இந்தக் கட்டுரை மூலம், 10 நாளில் 
யாரும் பணக்காரர் ஆகிவிட முடியாது.

பணம் —  ஆண் - பெண், சிறியவர் - பெரியவர்
ஏழை-பணக்காரன்,இருக்கிறவன்இல்லாதவன்
கிருஹஸ்தன் சன்னியாசி, தொண்டன்- தலைவன் 
என்று வித்தியாசம் பாராமல் பேசப்படுகிற
எழுதப்படுகிற, நினைக்கப்படுகிற 
ஒரே விஷயம் பணம்தான்.

ஏராளமான பழமொழிகள், வழக்குத் தொடர்கள்
கதைகள் எல்லா மொழிகளிலும் இருக்கின்றன. 
தமிழும் விலக்கல்ல. பணம் பத்தும் செய்யும்’, 
‘பொருள் இல்லாருக்கு இவ்வுலகம் இல்லை’, 
ஈட்டி எட்டுறமுட்டும் பாயும்
பணம் பாதாள மட்டும் பாயும்.’ 
இப்படிப் பலபல வழக்குத் தொடர்கள்.

எல்லோருடைய முதல் தேடல்’ 
ஆன்மாவைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ 
இருக்காது. பணத்தைப் பற்றித்தான்.

1952இல் பணம்என்று ஒரு திரைப்படம் 
வெளிவந்தது. அதில் N.S. கிருஷ்ணன் 
ஒரு பாட்டுப் பாடியிருக்கிறார். 
பாட்டு இயற்றியவர் கண்ணதாசன்
இசை: விஸ்வநாதன்-ராமமூர்த்தி. 
பாட்டின் பெயர்: எங்கே தேடுவேன்
அதிலிருந்து சிலவரிகள் இங்கே

எங்கே தேடுவேன்? எங்கே தேடுவேன்?
பணத்தை எங்கே தேடுவேன்?
உலகம் செழிக்க உதவும் பணத்தை
எங்கே தேடுவேன்?

அரசர் முதல் ஆண்டியும் ஆசைப்படும்
பணத்தை எங்கே தேடுவேன்?
கறுப்பு மார்க்கெட்டில் கலங்குகின்றாயோ?
கஞ்சன் கையிலே சிக்கிக்கொண்டாயோ?
பூமிக்குள் புகுந்து புதையாலானயோ?
முழுப் பாடலையும் ரசிக்க விரும்புவர்கள் 
இங்கே கிளிக் செய்யவும்
இப்படி எல்லோராலும் விரும்பப்படுவதும்
எல்லோரையும் ஆட்டிப் படைக்கிறதுமான 
சர்வ வியாபி, ஸ்ரீமான் பணத்தை 
எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை
விஷயம் தெரிந்த அனுபவசாலிகள்
நமக்காக வேண்டிச் சொல்லியிருக்கிறார்கள்.

பழைய மாவைத்தான் ஆண்டாண்டு 
காலமாக அரைத்து வந்திருக்கிறார்கள். 
ஆனால் புதுக் கோணத்தோடு பார்த்துத் 
தங்கள் பண்ணிய தவறை மற்றவர்களும் 
பண்ணக் கூடாது என்று எழுதி
வைத்திருக்கிறார்கள்.

பின்பற்றுவதும், தூக்கி எறிவதும் நம் இஷ்டம். 
இதோ அந்த நல்வழிகளில் சில:


முதலாவது:

வருஷ வருமானம் 20 பவுண்ட்; வருஷ செலவு 19 பவுண்ட். 
விளைவு: சந்தோஷம்.
வருஷ வருமானம் 20 பவுண்ட்; வருஷ செலவு 21 பவுண்ட். 
விளைவு: துக்கம்-சார்லஸ் டிக்கென்ஸ்.

ஆசிரியர் சார்லஸ் டிக்கென்ஸுக்கு 
அவர் அப்பா அருளிய அட்வைஸ். 
அதை அப்படியே.David Copperfield 
என்ற நாவலில் மிக்காபர் என்கிற கதாபாத்திரம் 
மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார். 
இதன் அர்த்தம் சுலபமானது
கடைப்பிடிப்பது கஷ்டமானது. 
நம்முடைய ஒளவையார் ரொம்ப  
நாளைக்கு முன்னாலேயே 
சொல்லிவிட்டு  சென்றுவிட்டார்.

ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் போனதிசை
எல்லோருக்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும்
தீயனாய், நல்லார்க்கும் பொல்லாமை நாடு

இரண்டாவது

“சின்னச்சின்ன செலவுகள் தானே 
என்று அலட்சியப்படுத்தாதீர்கள். 
ஒரு சிறு ஓட்டை ஒரு பெரிய கப்பலையே 
மூழ்கடித்துவிடும்.” -பென்ஜமின் பிராங்க்லின்

சேமிக்கும் ஒவ்வொரு ரூபாயும் சம்பாதிக்கிற 
ஒரு ரூபாய்க்குச் சமம். அறையை விட்டுச் 
செல்லுமுன்,டிவி,விளக்குகளை
அணைத்துவிட்டுச் செல்லுங்கள். 
இந்த மாதிரி நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி 
சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

மூன்றாவது

“கோள்களின் செயல்பாட்டை என்னால்
துல்லியமாகக் கணிக்கமுடியும்.
மனிதர்களுடையப் பைத்தியக்காரத்தனமானச் 
செயல்களை என்னால் கணிக்க முடியவில்லை”
-ஐசக்  நியுட்டன்

South Sea Bubble என்ற கம்பெனியில் 
முதலீடு செய்த நியுட்டன். 
20,000 பவுண்டுகள் நஷ்டமடைந்தார். 
அது அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. 
கும்பலோடு கும்பலாக அவரும் 
முதலீடுசெய்தார். இப்பொழுதும் 
அதே தான் நடக்கிறது. 
மனித சுபாவம் சீக்கிரம் மாறக்கூடியதில்லை. 
கும்பலோடு கோவிந்தா போடாதீர்கள். 
உங்கள் தனித் தன்மையை நிலைநாட்டிக் 
கொள்ளுங்கள்.

நான்காவது:


“கொஞ்சம் இருந்தாலும் அதில் திருப்தி
அடைபவன் உண்மையிலேயே ஒரு
பணக்காரன்”-சாக்ரடிஸ்

நம்முடைய  முன்னோர்கள் அழகாக 
சொல்லியிருக்கிறார்கள்.
”சிறுக கட்டி வாழ்”என்று.
குறைவாக ஆசைப்படுங்கள்.
மற்றவர்கள் வாழ்வதை 
நினைத்து பொறுமாதீர்கள்.
மற்றவர்களை காப்பி அடிக்காதீர்கள்.

ஐந்தாவது:


“பணக்காரர்கள் 4 தலைமுறைக்குத் 
திட்டம் தீட்டுகிறார்கள். ஏழைகள் 
மறு நாளைக்கு மட்டுமே திட்டம் தீட்டுகிறார்கள்.”   
-குளோரியா ஸ்டைனன்.

வேலையிலிருந்து ஓய்வு பெறுபவர்களில் 
பெரும்பான்மையோர் போதிய 
பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். 
முறையாக திட்டமிடத் தவறிய 
காரணத்தினால் தங்கள் எதிர்காலத்தைக் 
கேள்விகுறியாக ஆக்கிக் கொள்கிறார்கள். 
சிறுவயதில் சேமிக்கத் தொடங்குகள். 
வெட்டுக்கிளிமாதிரி இல்லாமல் 
“எறும்பு” மாதிரி இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

பணம் என்பது ஒரு பிடிபடாத விஷயம். 
ஆங்கிலத்தில் ‘elusive’ என்று சொல்வார்கள். 
நம் கைக்குள் லேசில் பிடிபடாது.

பணம் நமக்கு எஜமானனாக இருக்கும். 
நமக்கு சேவகனாகவும் இருக்கும். 
நம்முடைய அணுகுமுறையினால் 
அதை நம் சேவகனாக இருக்கச் 
செய்ய முடியும்.

முடிவாக:

நாம் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டியது.
வரவு எட்டணா, செலவு பத்தணா. 
அதிகம் இரண்டணா,கடைசியில் துந்தனா. 
வரவுக்கு மேல் செலவு செய்யாதீர்கள்.
(பாமா விஜயம் பாடலை கேட்க)
இங்கே கிளிக் செய்யவும்
உங்கள் சந்தோஷத்தை நினைத்து 
மகிழ்ச்சியாய் இருங்கள். 
மற்றவர்களைப் பார்த்து காப்பி அடித்து 
வாழ்க்கையை நடத்த முயற்சிக்காதீர்கள்.

எதிர்காலத்தை நினைத்துச் 
சேமிப்புத் திட்டங்களை தீட்டுங்கள்.

செல்வம் கொழிக்கட்டும்


........ கிளறல் தொடரும்











                                                                       















4 comments:

nellai அண்ணாச்சி said...

ரொம்ப நல்லா இருக்கு அண்ணாச்சி

திவாண்ணா said...

வாழ்க!

Sowmiya said...

ஹாய் தாத்தா ,

ரொம்ப நாளா வெப்சைட் பார்க்க நேரம் கிடைக்கலை . இது உண்மைலேயே ரொம்ப நல்ல கட்டுரை ..:-)
எங்களுக்கு அவசியமானது :-)

அன்புடன்
சௌமியா

Anonymous said...

நான் படித்து ஆனந்தித்தேன் என்பதற்கு
அத்தாட்சியாய், ராபர்ட் கால்டுவெல் கூறியதிலிருந்து இத்தையும் சேர்க்கவா?
1.செலவழிக்கும் முன்னால் சம்பாதிக்கப்பார்.2. ஓய்வு பெறும் முன்னால் சேமித்து வை.
3.மரிக்கும் முன்னால் கொடுத்துவிடு.
அல்லது சுவாமி சின்மயானந்தா சொல்லியுள்ளதை நினைந்து இணைக்கவா --
“வாழ்க்கையில் கொஞ்சமாகச் செல்வம் உள்ளவனை ஏழை எனவொணாது; ‘இன்னும்வேண்டும்,இன்னும் வேண்டும்’ என்று ஏங்குகிறவந்தான் என்றைக்குமே பிச்சைக்காரன்.ஒரு முழு சாம்ராஜ்யத்துக்கே அவன் அதிபதியாகவே ஆகிவிட்டிருந்தாலும் சரி, அவன் பிச்சைக்காரனே.”