Monday, December 05, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள – பகுதி 1கீதை என்ற வார்த்தையைச் சொன்னவுடன் 
எல்லோருக்கும் ஞாபகம் வருவது 
பகவத் கீதைதான். 
விளக்கம் கேட்டால், தப்பாமல் இது 
கிருஷ்ணர் அர்சுனனுக்குச் சொன்ன 
உபதேசம் என்று சொல்வீர்கள்.

ஆனால் உங்களில் எத்தனை பேருக்கு, இன்னெரு 
கீதை இருக்கிறது  என்ற விஷயம் தெரியும்

அவர்களுக்காக இந்தச் சிறிய அறிமுகம்.

இந்த கீதைக்குப் பெயர் உத்தவ கீதை. 
ஹம்ஸ கீதை என்றும் சொல்வார்கள். 
இதை எழுதியவரும் வேத வியாஸர்தான். 
இதுவும் கிருஷ்ணரால்ஒரே நபருக்கு 
உபதேசம் செய்யப்பட்டது (one to one). 

பகவத் கீதை, மஹாபாரதத்தில் அர்சுனனுக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

உத்தவ கீதை, பாகவத புராணத்தில், உத்தவருக்கும் 
கிருஷ்ணருக்கும் நடந்த உரையாடல்.

பாகவத புராணத்தில், 11ஆவது ஸ்காந்தத்தில் 
அத்யாயம் 6 : 11 இலிருந்து 29 அத்யாயம்வரை 
வருகிறது. கிட்டத்தட்ட 1000 பாடல்கள்.

இந்த உத்தவர் யார்?


இவர் ஒரு யாதவர். கிருஷ்ணரின் பால்ய நண்பர். 
கிருஷ்ணரின் first cousin. மஹா பக்தர். 
கிருஷ்ணரைத் தவிர வேறு ஒரு சிந்தனையும் இல்லாதவர். 
இவரைத்தான் கம்ஸ வதத்திற்குப் பிறகு கிருஷ்ணர் 
கோகுலத்திற்குத் தன் வளர்ப்புப் பெற்றோர்களின்
நலம் விசாரிக்க அனுப்பிவைத்தார்.

மஹாபாரத யுத்தம் முடிந்துவிட்டது. 
யாதவ குலம் அழிந்துவிட்டது. 
கிருஷ்ணர் தன் அவதார முடிவை நெருங்கும் சமயம். 
உத்தவர் கிருஷ்ணரை அணுகி உபதேசம் கோருகிறார். 

அதுதான் உத்தவ கீதை.

பகவத் கீதையில் கிருஷ்ணர் அர்சுனனுக்கு அவனுடைய 
கடமைகளை  நினைவுகூர்ந்து போர் செய்ய வேண்டிய 
அவசியத்தை  உபதேசிக்கிறார். 
உத்தவ கீதையில், கிருஷ்ணர் உத்தவருக்கு 
நிறைய உலக விஷயங்களைப் பற்றிச் சொல்கிறார். 
இது கிருஷ்ணருடைய ‘farewell message’
அதிலிருந்து ஒரு பகுதியை உங்களிடம் 
பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

உத்தவர், தனக்கு வழிகாட்ட வேண்டும் என்று 
ஸ்ரீ கிருஷ்ணரைப் பிராத்திக்கிறார். 
கிருஷ்ணர், உத்தவருக்கு ஒரு புராதான வரலாற்றின் 
மூலம் குருவின் போதனைகளின் முக்கியத்தை விளக்குகிறார்.

யது மகாராஜா, ஒரு புகழ் வாய்ந்த அரசன். 
தர்ம கோட்பாடுகளை அறிந்து கொள்வதில் 
மிக்க நாட்டமுடையவன்.

ஒரு சமயம் அவன், ஒரு அவதூதரை அணுகினான். 
இந்த அவதூதர், ஆடையின்றி, உலகச் சிந்தனையில்லாமல் 
இறைவன் சிந்தனையிலேயே உலகம் சுற்றும் 
ஒரு இளம் வயதினர்.

அரசன் அவதூதரைப் பார்த்து,

பிரம்ம ரிஷியே!, செயலற்றுது போல் தோன்றும் 
உம்முடைய புத்தி இவ்வளவு திறமையாக 
இருப்பது எப்படி
இவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் 
ஒன்றும்மறியாத சிறுவன் போல் எப்படி 
நடந்து கொள்ள முடியும்
நீர் எப்பொழுதும் ஆனந்தத்தினால் நிறைந்திருக்கிறீரே
அது எப்படி
தயவுசெய்து எனக்கு விளக்கிச் சொல்லுங்கள்
என்றான்.

அவதூதர் சொன்னார்.

அரசே, எனக்கு தெரிந்த எல்லாமே என்னுடைய 
ஆசிரியர்கள்  எனக்குச் சொல்லிக் கொடுத்தவை. 
அவர்கள்தான் என் புத்தியில் புகுந்து எனக்குக் 
கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். 
அவர்களுடைய போதனைகளை ஏற்றுக் கொண்டு 
அதன்படி நடந்துகொண்டு 
முக்தனாக உலாவிவருகிறேன்” 
என்றார்.

அரசன், “அவர்கள் யார்?” என்று கேட்க
அவதூதர் அவர்களைப் பற்றி விளக்கிச் 
சொல்கிறார்.

அரசே, எனக்கு 24 ஆசிரியர்கள். 
அவர்கள் முறையே:

பூமி, காற்று, ஆகாயம், நீர், அக்கினி (நெருப்பு)
சந்திரன், சூரியன்மாடப் புறா, மலைப்பாம்பு, சமுத்திரம்
விட்டில் பூச்சி, தேனீ, யானைதேனெடுப்பவன், மான்
மீன், பிங்களையெனும் வேசி, புறா, குழந்தை
குமரி, அம்பு தொடுப்பவன், பாம்பு, சிலந்திப்பூச்சி, குளவி.

இந்த ஆசிரியர்களின் இயல்புகளைக் கண்டு 
எனக்கு நான் பாடம் கற்றுக்கொண்டேன். 
விளக்கமாகச் சொல்கிறேன். கேளும்என்றார்.

என்னுடைய முதல் ஆசிரியர் - பூமி

பூமி எனக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் அநேகம்.

பூமாதேவி என்றாலே பொறுமையின் மறுஅவதாரம் 
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

தெய்வ வசத்தால் இயங்கும் இயற்கைச் சீற்றங்களாலும் 
(புயல், சூறாவளி, வெள்ளம்..) மனிதர்களின் அட்டகாசச் 
செயல்களாலும் எவ்வளவு பீடிக்கப்பட்டாலும் 
பூமி தன் இயல்பிலிருந்து விலகுவதில்லை. 
பிறருக்குப் பயன்படுவதையே தன் குறிகோளாகக் 
கொண்டிருக்கிறது. 
மனிதன் காடுகளை அழித்தாலும், மரங்களை வெட்டினாலும்
மீண்டும் மீண்டும் மனித இனத்துக்குத் தன்னால் 
முடிந்த போஷாக்கைத் தந்து கொண்டிருக்கிறது.

தன்னுடைய பொக்கிஷங்களைத் தன்னலம் கருதாமல்
மற்றவர்களுக்குக் கொடுத்து கொண்டிருக்கும் 
தாராள குணத்தை நானும் கடைப்பிடிப்பேன். 
காலால் மிதித்துத் தூசியைவிட மோசமாக 
என்னை நடத்தினாலும் யாரையும் நோகடிக்காமல் 
அவர்களுடைய நலன்களில் கவனம் செலுத்துவேன்.

இந்தத் தன்னலமற்ற பொறுமைதான் 
பூமியிடமிருந்து நான் கற்றுக் கொண்ட பாடம்.

என்னுடைய இரண்டாவது ஆசிரியர் -  காற்று

காற்று பலவிதமான மணங்களைக் கொண்டுசென்றாலும் 
அந்த மணங்களோடு ஒன்றாகக் கலந்துவிடுவதில்லை. 
ஒரு யோகியும் காற்றைப் போல், பலவகைப்பட்ட விஷயங்களுடன் 
தொடர்பு கொண்டாலும் அவற்றின் குண தோஷங்களால் 
கறைபடாத மனத்தினனாய் எல்லா நிலைமைகளிலும் 
பற்றற்றிருக்க வேண்டும்.

இந்தப் பற்றற்ற தன்மையைக் 
காற்றிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய மூன்றாவது ஆசிரியர் - ஆகாயம்.

ஆகாயம் எங்கும் பரந்து விரிந்துள்ளது. 
எல்லாம் அதனுள் இருந்தாலும் எதிலுமே 
தன்னைச் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கிறது. 
கருமேகங்களோ, சூறாவளிக் காற்றோ 
அதை ஒன்றும் செய்ய முடியாது. 
யோகியின் ஆன்மாவும் ஆகாயத்தைப் போல்தான் 
இருக்க வேண்டும். 
தன்னுடைய ஆத்மா ஒரு சரீரத்தில் வசித்தாலும் 
முக்குணங்களாலும், மற்ற எந்தச் சக்திகளாலும் 
அது பாதிக்கப்படாது என்ற உண்மையை ஒருவன் 
உணரும் போது அவன் உண்மையான யோகியாக ஆகிறான்.

எங்கும் நிறைந்த ஆத்மாவுக்கும் ஆகாயத்துக்கும் இருக்கும் 
ஒற்றுமையை ஆகாயத்திடமிருந்து கற்றுக் கொண்டேன்.


 ஆசிரியர்களின் பாடம் தொடர்கிறது.........

2 comments:

snkm said...

ஸ்ரீ தத்தாத்ரேயரும் தனக்கு 24 குருக்கள் என்று குறிப்பிடுகிறாரே, அதைத்தான் இங்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறாரோ?

Rathnavel said...

நல்ல பதிவு.
நன்றி ஐயா.