Sunday, December 11, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள – பகுதி 2

விளக்கம்1:
ஸ்ரீ தத்தாத்ரேயர் தன்னுடைய 24 குருக்களைப் பற்றி 
கூறியிருக்கிறாரே? அதுவும் இதுவும் ஒன்று தானா 
என்று சில பேர்கள் கேட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணர்,உத்தவருக்கு சொன்ன கதையில்,
அவதூதர் என்று மட்டும் தான் சொல்லிருக்கிறார்.
அவதூதரின் பெயர் குறிப்பிடவில்லை.
ஆனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் கதைகளில் மட்டும் தான், 
இங்த 24 குருமார்களைப்பற்றி சொல்லப்பட்டிருக்கிறது.
மேலும்,.பரசுராமருக்கு,இவர் உபதேசம் செய்திருக்கிறார்.
அதனால்,ஸ்ரீ தத்தாத்ரேயர் காலம்,பரசுராம 
அவதாரத்துக்கு முற்ப்பட்டதாக இருக்க வேண்டும் 
என்று தெரிகிறது.
ஸ்ரீ கிருஷ்ணரும்,யது ராஜாவை தன்னுடைய மூதாதயர்
என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஸ்ரீ ரமண மஹரிஷியும் இந்த அவதூதர் ,ஸ்ரீ தத்தாத்ரேயர் தான் 
என்று சொல்லியிருக்கிறார்.
ஸ்ரீ தத்தாத்ரேயர் ஒரு அவதார புருஷர்.
விளக்கம்:2
தன்னுடை 24 ஆசிரியர்களைப் பற்றிச் சொல்லும்  
இந்த கீதையின் சில பகுதிகள் இன்றைய சமூகத்துக்கும்
அறிவியலுக்கும்சூழ்நிலைகளுக்கும் பொருந்தாமல் 
இருப்பதைப் பார்க்க முடியும். 
இதைச் சிலர் எனக்கு மின்னஞ்சலில் 
சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். இங்கே தரப்பட்டிருப்பவை 
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டன என்பதைக் 
கவனத்தில்கொண்டு, நமக்குத் தேவையான அவற்றின் 
சாராம்சத்தை மட்டும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதை மனதில் கொண்டு மேற்கொண்டு வாசிக்கவும்.

என்னுடைய நான்காவது ஆசிரியர் - நீர்

நீர் பரிசுத்தமானது. எல்லா ஜீவராசிகளுக்கும் 
தேவையான சமய சஞ்சீவி. உயிர்காக்கும் மருந்து. 
பரிசுத்தமான நீர், எல்லாவற்றையும் எல்லோரையும் 
சுத்தம் செய்யக்கூடியது. ஈரப் பசையில்லாத 
எந்தப் பொருளும்  நீண்ட நாள் வாழ முடியாது.

பரிசுத்தமான நீரைப் போல் ஒரு யோகியும் 
அப்பழுக்கு இல்லாதவனாகவும் இயற்கையாகவே 
ஈரமுள்ள நெஞ்சுடையவனாகவும் இனிமை 
பொருந்தியவனாகவும் இருக்க வேண்டும். 
தன்னைச் சார்ந்தவரைப் பார்த்தாலும்
தொட்டாலும், அவர்களுடன் பேசினாலும் 
அவர்களைப்  பரிசுத்தமானவர்களாக மாற்றும் 
முயற்சியில் ஈடுபட வேண்டும்.

தன்னைச் சார்ந்தவர்களைப் பரிசுத்தம் செய்யும் 
தன்மையை நீரிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய ஐந்தாவது ஆசிரியர் - நெருப்பு

நெருப்பு ஒளி பொருந்தியது. எந்த வடிவத்திலும் 
அதன் ஜுவாலை எரியலாம். சிகப்பாக, நீலமாக
வெள்ளையாக எரியலாம். மெதுவாகவோ
பயங்கரமாகவோ எரியலாம். 
உடலுக்கு வெப்பத்தைத் தரலாம்
பொருள்களை நிர்மூலமாக எரிக்கவும் செய்யலாம். 
ஆனால், நெருப்பு ஒன்றுதான். 
நெருப்புக் கோளங்கள் மாறுபட்ட குணங்களைக் காட்டலாம். 
ஆனால் நெருப்பு மாறாதது. எதனாலும் பாதிக்கப்படாதது.

இந்த ஆன்மாவும் நெருப்பைப் போன்றது. 
எதனாலும் அதை அழிக்க முடியாது. 
எதனாலும் பாதிப்பு எதையும் ஏற்படுத்த முடியாது. 
ஒரு யோகி ஒளி பொருந்தியவனாகவும்
தவத்தால் பிரகாசிப்பவனாகவும் கலக்கமடையாத 
நெஞ்சுள்ளவனாகவும், உலகத்தின் அழுக்கால் 
பற்றப்படாதவனாகவும் இருக்க வேண்டும்.

எதனாலும் மாறுபடாத நிலையை 
நெருப்பிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

என்னுடைய ஆறாவது ஆசிரியர் -  சந்திரன்.

வளர்பிறைச் சந்திரன்,தேய்பிறைச் சந்திரன் 
என்று பேசுகிறோம். சந்திரனுடைய கலைகளுக்கு 
மாறுதலே அன்றி சந்திரனுக்கு இல்லை. 
சூரிய ஒளிக்கதிர்களின் மாற்றக் கோணங்களினால் 
ஏற்படும் மாறுதலால்தான் வளர்பிறை, தேய்பிறை ஏற்படுகின்றன. 
இதே மாதிரிதான்,பிறப்பு முதல் இறப்பு ஏற்படும் மாறுதல்கள் 
தேகத்திற்குத்தானே ஒழிய ஆத்மாவுக்கு இல்லை.

மாறுதல் இல்லாத ஆத்மா என்ற உண்மையைச் 
சந்திரனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

என்னுடைய ஏழாவது ஆசிரியர் - சூரியன்

சூரியன் தன் கதிர்களால் தண்ணீரை ஆவியாக மாற்றி 
அதையே தக்க சமயத்தில் மழையாக 
திருப்பிக்கொடுக்கிறது. 
ஒரு உண்மையான யோகியும் தன்னிடமுள்ள 
பொருள்களையும்தன்னால் பெறப்பட்ட பொருள்களையும் 
மற்றவர்களுக்குக் கொடுப்பதற்காகத்தான் 
என்று நினைக்க வேண்டும்.

இந்த பற்றற்ற தியாக மனப்பான்மையைச் 
சூரியனிடமிருந்து நான் கற்றுக்கொண்டேன்.

என்னுடைய எட்டாவது ஆசிரியர் - மாடப்புறா

ஒரு மாடப்புறா தன் பேடையுடன் ஒரு மரத்தில் 
கூடு கட்டிக்கொண்டு வசித்துவந்தது. 
அவை அன்பினால் கட்டுண்டு இணைபிரியாமல் 
சந்தோஷமாக இருந்துவந்தன. 
பல குஞ்சுகள் பிறந்து  குடும்பம் வளர்ந்தது. 
ஒரு சமயம் ஒரு வேடன் வலை வீசிக் குஞ்சுகளைப் 
பிடிக்கவே, தாய்ப் பறவையும் நினைவிழந்து 
வலையில் வீழ்ந்தது. ஆண் புறா மிகுந்த துக்கத்துடன் 
கதறி அழுது, தனியே வாழ விருப்பமில்லாமல் 
தானும் வலையில் வீழ்ந்தது. 
வேடன் அவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு சென்றான்.

குடும்பியான மனிதனுடைய வாழ்க்கையும் 
இந்த மாடப்புறாவின் வாழ்க்கையைப் போலத்தான் 
இருக்கிறது. பறவையைப் போல் அமைதியற்ற 
மனதுடன் சுகதுக்கம் முதலிய இருமையில் 
ஈடுபட்டுத் தன் உண்மை நிலையை உணராமல் 
அழிவுறுகிறான். எவரிடமும் மிதமிஞ்சிய அன்பையும் 
பற்றுதலையும் ஒருவன் கொள்ளக் கூடாது. 
அப்படிச் செய்தால் மாடப்புறாவைப் போல் 
மிகுந்த தாபத்தை அடைவான்.

அதிக பாசம் அழிவை உண்டாக்கும் 
என்பதை மாடப்புறாவிடமிருந்து கற்றுக்கொண்டேன்.


என்னுடைய ஒன்பதாவது ஆசிரியர் மலைப்பாம்பு

மலைப்பாம்பு உணவு தேடி எங்கும் செல்வதில்லை. 
இருந்த இடத்திலிருந்து கொண்டு எந்த விதமான 
உணவு கிடைத்தாலும் சாப்பிட்டுத் திருப்தியடைகிறது. 
உணவு கிடைக்கவில்லை என்றாலும் பல நாள் 
பட்டினிகிடக்கத் தயாராக இருக்கிறது.

உணவானது நல்ல சுவையுள்ளதாயினும், சுவையற்றதாயினும்
குறைவாயினும், நிறைவாயினும், தற்செயலாகக் 
கிடைத்ததைச் செயலற்றவனாக இருந்துகொண்டு 
புசிக்க வேண்டும் மலைப்பாம்பு போல். 

கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் 
மனநிலையை மலைப்பாம்பிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

என்னுடைய பத்தாவது ஆசிரியர் கடல்

கடல் ஆழமானது. கம்பீரமானது. நதிகள் கலப்பதால் 
கடல் மட்டம் உயருகிறது, தாழ்கிறது. 
எவரும் கடலைக் கலக்கிவிட முடியாது. 
விஷ்ணுவை முக்கியக் கதியாகக் கொண்ட 
யோகியும் சந்தோஷத்தால் பொங்கவும் கூடாது. 
சந்தோஷக் குறைவால் வாடவும் கூடாது. 

தெளிந்தவனாகவும், கம்பீரமானவனாகவும்
ஆழம் காண முடியாதவனாகவும், கலக்கமற்ற 
மனதுடையவனாகவும், சுகதுக்கங்களைச் 
சமச்சீராகப் பார்ப்பவனாகவும் இருக்க வேண்டும் 
என்ற பாடத்தை கடலிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பதினோறாவது ஆசிரியர் விட்டில்பூச்சி

விட்டில்பூச்சி தன் அறியாமையால் விளக்கு வெளிச்சத்தை 
தேடிச் சென்று உயிரை விடுகிறது. இந்திரியங்களை 
ஜெயிக்காதவன் பெண் மாயையால் மிகுந்த இருளில் விழுகிறான்.

தெரிந்தே ஒரு குழியில் விழுந்து அழிவைத் 
தேடிக் கொள்ளக் கூடாது என்ற பாடத்தை 
விட்டில்பூச்சியிடமிருந்து கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பன்னிரண்டாவது ஆசிரியர் தேனீ

தேனீக்கள் பூக்களைச் சிரமப்படுத்தாமல் தேனைச் 
சேகரிக்கின்றன. சிறிது பெரிது என்று பார்க்காமல் 
எல்லா பூக்களிடமும் சென்று தேனைச் சேகரிக்கின்றன. 
சிறுகச்சிறுகத் தேனைச் சேர்த்துக் கடைசியில் 
அவை தேனோடேயே அழிந்து போகும்.

ஒரு யோகியும் கிருகஸ்தர்களை இம்சிக்காமல் 
தனக்குத் தேவையான உணவைப் பெற வேண்டும். 
சாஸ்திரங்களை அவை முக்கியமானவை, முக்கியமற்றவை என்று 
பிரித்துப்பார்க்காமல் அவற்றின் சாரத்தை மட்டும் 
கிரகித்துக் கொள்ள வேண்டும்.

பிட்சை எடுத்த உணவை நாளைக்கு என்று 
சேமித்துவைத்துக் கொள்ளக் கூடாது. 
அப்படிச் செய்பவன் தேனீ தேனோடு 
அழிவதுபோல் அழிந்து போவான்.

தேவைக்கு மேல் உணவை நாடாதே. 
உணவைச் சேமித்துவைக்காதே என்ற 
உண்மையை தேனீயிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பதின்மூன்றாவது ஆசிரியர் ஆண் யானை.

ஆண் யானையை அடக்கிப்பிடிக்கப் பெண் யானையை 
உபயோகப்படுத்துவார்கள். ஆண் யானையும் பெண் யானையை 
அடைய வேண்டும் என்ற ஆர்வத்தில் பெண் யானையைத் 
தொடர்ந்து போய் அகப்பட்டுக் கொள்ளும்.

பெண்ணோடு உறவு கொள்ளும் யோகி 
பந்தத்தினால் கட்டுப்படுவான் என்ற பாடத்தை 
நான் ஆண் யானையிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

என்னுடைய பதினான்காவது ஆசிரியர் கஞ்சன்.

தேனீக்கள் சிரமப்பட்டுத் தேனைச் சேகரித்து அதைப் பத்திரமாக 
ஒரு இடத்தில் வைத்துப் பாதுகாக்கின்றன.

தேனைச் சேகரிப்பவன் அந்தத் தேனை அபகரித்து 
அதை அனுபவிக்கிறான். இதே மாதிரிதான், கஞ்சர்களால் 
சிரமப்பட்டுச் சேமிக்கப்பட்ட பொருள்கள் 
தானத்திற்கோ, அனுபவிப்பதற்கோ பயன்படுவதில்லை. 
வேறு யாரோ ஒருவன் அதை அனுபவிக்கிறான். 


கஞ்சனைப் போல், தானும் அனுபவிக்காமல் 
மற்றவர்களுக்கும் கொடுக்காமல் சொத்தைச் 
சேமிக்கக் கூடாது என்ற வாழ்க்கைப் பாடத்தை
 நான் கஞ்சனிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

என்னுடைய பதினைந்தாவது ஆசிரியர் மான்.

மானைப் பிடிக்க வேடர்கள் சில சமயம்
சங்கீதத்தைப் பயன்படுத்துவது உண்டு. 
மான் இசையில் மதி மயங்கி நிற்கும் சமயம்
வேடன் தன் அம்புகளால் அதைத் தாக்கிக் கொல்வான்.

யோகியும், புத்தியைச் சலனப்படுத்தும்
கெடுக்கும் இசையை ஒரு போதும் கேட்கக் கூடாது. 

மதியை மயங்கச் செய்யும் இசையைக் கேட்பதைத் 
தவிர்க்க வேண்டும் என்ற பாடத்தை 
மானிடமிருந்து கற்றுக்கொண்டேன்.




 ஆசிரியர்களின் பாடம் தொடர்கிறது...

No comments: