Monday, December 19, 2011

உலக அறிவைக் கற்பிக்கும் 24 ஆசிரியர்கள் – பகுதி3 (இறுதி)

என்னுடைய பதினாறாவது ஆசிரியர் மீன்


தூண்டிலில் வைக்கப்பட்டிருக்கும் 
உணவின் சுவையை நாடிச் சென்று
மீன் அந்தத் தூண்டிலில் சிக்கி இறக்கும்.

புத்தியில்லாத மனிதன், மீனைப் போல்
தன்னுடைய நாக்கைக் கட்டுப்படுத்தாமல்
கண்டகண்ட உணவுப் பொருள்களைச் 
சாப்பிட்டுத் தன் அழிவைத் தேடிக் கொள்கிறான். 
மற்ற இந்திரியங்களை வென்ற மனிதன் நாக்கை 
ஜெயிக்காத வரையில் யோகியாக மாட்டான். 
சுவையை வென்றால் எல்லாவற்றையும் 
வெல்லலாம்.
நாக்கையும் சுவையையும் கட்டுப்படுத்த வேண்டும் 
என்ற பாடத்தை மீனிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.


என்னுடைய பதினேழாவது ஆசிரியர் வேசி பிங்களை

விதேக நகரத்தில் பிங்களை என்ற ஒரு வேசி இருந்தாள்.
ஒரு நாள் அவள் தன்னை அழகாக 
அலங்கரித்துக் கொண்டு 
தன்னை விரும்பி யாராவது வருவார்களா 
என்று வாசலில் நின்று காத்திருந்தாள். 
நடு இரவு வரை யாரும் அவளை விரும்பி வரவில்லை. 
மனம் கலங்கிய அவளுக்கு ஒரு வைராக்கியம் 
உண்டாயிற்று. 
தன்னைத் தானே நொந்து கொண்டு 
புலம்ப ஆரம்பித்தாள்:

இந்த நகரத்தில் நான் ஒருத்திதான் 
மூட புத்தியுள்ளவள். 
தன்னையே கொடுக்கும் அச்சுதனை (இறைவனை) 
விட்டுவிட்டு வேறு கணவனை விரும்பினேனே!  
சமீபத்தில் இருப்பவரும், இன்பம், செல்வம்
அனைத்தையும் அளிப்பவருமான இறைவனை விட்டு
விரும்பியதைக் கொடுக்க முடியாதவனும்
துன்பம், கவலை, பயம்மயக்கம் ஆகியவற்றைக் 
கொடுப்பவனுமான அற்பமான புருஷனையல்லவா 
நான் நாடுகிறேன். 
நான் பண்ணிய ஏதோ நற்செயலால் பகவான் 
என்னிடம் இந்த நல்ல எண்ணத்தைத் 
தூண்டியிருக்கிறார். 
என்னைக் காப்பதற்கு இறைவனைவிட
யார் திறமைசாலி
மதிமயக்கம் நீங்கி எப்போது ஒருவன் 
இந்த உலகம் காலசாபத்தால் 
விழுங்கப்படுகிறதென்று உணர்கிறானோ 
அப்போதே அவன் தனக்குத் 
தானே பாதுகாப்பாளனாக ஆகிறான்.” 
என்று நினைத்தாள். 
சை என்பது அளவற்ற துன்பம்
ஆசையின்மை என்பது அளவற்ற இன்பம். 
ஆசைத் தளையிலிருந்து விடுபட்டால் 
நிம்மதியாகத் தூங்கலாம்.

ஆசைத் தளையிலிருந்து ஒருவன் விடுபட்டு 
இன்ப நிலையை அடைய முயற்சி 
செய்ய வேண்டும் 
என்று பாடத்தை வேசி பிங்களையிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பதினெட்டாவது ஆசிரியர் - காகம்

மாமிசத் துண்டைக் கொத்திச் சென்ற 
ஒரு காகத்தைமாமிசம் கிடைக்கப் பெறாத 
மற்ற வலிமை மிக்க பறவைகள் 
துரத்தித் துன்புறுத்தின. 
காகம் நமக்கு ஏன் வம்பு என்று நினைத்து 
அந்த மாமிசத்தைக் கீழே போட்டுவிட்டது. 
மற்ற பறவைகள் அந்தக் காகத்தைப் 
பிறகு பின் தொடரவில்லை. 
அந்தப் பறவையும் நிம்மதி பெற்று 
ஆனந்தமாகப் பறந்து சென்றது.

மானிடர்களும் தங்களுக்குப் பிரியமானதைத் 
தங்களிடம் தக்க வைத்துக் கொள்ளும் 
முயற்சியில் துன்பம் அடைகிறார்கள். 
துன்பத்தைத் தரும் எந்தப் பொருளும் எனக்கு வேண்டாம்” 
என்ற நினைப்பு யாருக்கு வருகிறதோ
அவன் இன்ப நிலையை அடைகிறான்.

தனக்கென்று எதுவுமே வேண்டாம் என்ற 
எண்ணம்தான் இன்பத்திற்கு வழி” 
என்ற பாடத்தைக்  காகத்திடமிருந்து 
கற்றுக் கொண்டேன்.

என்னுடைய பத்தொன்பதாவது ஆசிரியர் - குழந்தை

குழந்தை, தெய்வத்திற்குச் சமமாகப் பேசப்படுகிறது. 
அதற்குச் சூதுவாது தெரியாது. 
சுத்தமான மனதோடு பழகுகிறது. 
எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. 
தனக்குத் தானே விளையாடிக் கொண்டு 
தானே ரசித்து வாழ்கிறது.

ஒரு யோகியும் ஒரு குழந்தையைப் போல் 
நிர்மலமான மனதுடன் இந்த உலகில் வாழ வேண்டும்.

குழந்தைத்தனம் நிறைந்த வாழ்க்கையைக் 
டைப்பிடிக்க வேண்டும் என்ற பாடத்தைக் 
குழந்தையிடம் கற்றுக் கொண்டேன்.


என்னுடைய இருபதாவது ஆசிரியர் - குமரிப் பெண்

ஒரு ஊரில் ஒரு ஏழைக் குமரிப் பெண் தன்னைக் 
கல்யாணத்திற்குப் பெண்பார்க்க வீடு தேடி 
வந்தவர்களை வீட்டில் உறவினர் யாருமில்லாத 
போது தானே உபசரித்தாள். 
வந்தவர்களுக்கு உணவளிப்பதற்காக
ரகசியமாக நெல்லைக் குத்துகையில் 
கையிலிருந்த சங்கு வளையல்கள் குலுங்கி 
மிகுதியாகச் சத்தம் எழுப்பின. 
அந்தப் பெண் தன் ஏழ்மை நிலையைக் 
காட்டிக் கொடுக்கும் வளையல் சத்தத்தை 
நினைத்து வெட்கப்பட்டாள். 
புத்திசாலியான அந்தப் பெண் வளையல்களை 
ஒவ்வொன்றாகக் கழற்றினாள். சத்தம் குறைந்தது. 
கைகளில் இரண்டிரண்டு வளையல்களோடு 
நிறுத்திக் கொண்டாள். 
மறுபடியும் நெல் குத்தும் போது 
மறுபடியும் சத்தம் உண்டாயிற்று. 
அவற்றிலும் ஒன்றைக் கழற்றினாள். 
பின் வளையலிலிருந்து சத்தம் உண்டாகவில்லை. 
நிறையப் பேர்களுடன் வசித்தால் 
கலகமுண்டாகும்விவகாரம் ஏற்படும்.

யோகியானவன் பெண்ணின் ஒரு கைக் கங்கணம் போல் 
தனியனாகச் சஞ்சரிக்க வேண்டும் 
என்ற பாடத்தை அந்தக் குமரிப் பெண்ணிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய இருபத்தொன்றாம் ஆசிரியர் அம்பு தொடுப்பவன்

அம்பு தொடுப்பவன் தன்னுடைய குறியிலேயே 
நிலைத்த மனமுடையவனாக இருக்கிறான். 
அந்த நிலையில் அருகாமையில் 
செல்லும் அரசனைக்கூடக் கவனிக்காமல் 
ரே சிந்தனையுடன் தன் லட்சியத்தை அடைகிறான்.

யோகியானவன் ஆசனத்தையும், சுவாசத்தையும் 
ஜெயித்து வைராக்கியத்தையும் அப்பியாஸத்தையும் 
கைக் கொண்டு திடமான மனதை ஒரே இடத்தில் 
சேர்க்க வேண்டும். அக உலகையும் புற உலகையும் 
வேறுபடுத்தாமல் ஸ்திரமான மனதுடன் இருக்க வேண்டும் 
என்ற பாடத்தை அம்பு தொடுப்பவனிடமிருந்து 
நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய இருபத்திரெண்டாம் ஆசிரியர் பாம்பு

பாம்பு, தான் எங்கு வாசம் செய்கிறோம் 
என்பதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. 
பிறரால் அமைக்கப்பட்ட வீட்டில்
(கரையான் கட்டின புற்றில்) 
புகுந்து சுகமாக வசிக்கிறது.

நிலையற்ற உடல் படைத்த மனிதனும் 
நிரந்தரமான வீட்டைக் கட்டிக் காப்பதில் 
கவனம் செலுத்தாமல் எந்த இடமானாலும்
எப்படிப்பட்ட இடமானாலும் 
அதில் சுகத்தை அனுபவிக்கிற மனநிலையை 
வளர்த்துக் கொள்ள வேண்டும். 


யோகிக்கு நிரந்தர வீடு வாசல் இருக்கக் கூடாது 
என்ற பாடத்தைப் பாம்பிடமிருந்து 
கற்றுக் கொண்டேன்.

என்னுடைய இருபத்திமூன்றாம் ஆசிரியர் சிலந்திப் பூச்சி

சிலந்திப் பூச்சி தன் மார்பிலிருந்து உண்டாகும் 
நூலை வாயினால் இழுத்து அத்துடன் விளையாடி 
மறுபடி அதை விழுங்குகிறது. அவ்வாறேதான் 
மகேஸ்வரனும் லீலை புரிகிறார். 
தன்னுடைய மாயையினால் இந்த உலகத்தை 
சிருஷ்டித்துஅதனுடன் விளையாடிவிட்டுப் 
பிறகு தன் வசமே அதை இழுத்துக் கொள்கிறார்.

ஈஸ்வரனுடைய படைப்பு, காத்தல், அழிப்பு 
என்ற நிலைகளைச் சிலந்திப் பூச்சி மூலம் 
நான் கற்றுக் கொண்டேன்.

என்னுடைய இருபத்திநான்காம் ஆசிரியர் - குளவி

புழுவானது குளவிக் கூட்டினுள் புகுந்து 
முன்னுடலை விடாமலேயே குளவியின் 
வடிவை அடைந்துவிடுகிறது.

உடல் படைத்தவன் சிநேகத்தாலோ, பயத்தாலோ
விரோதத்தாலோ மனதை எந்தெந்தப் பொருளில் 
நிறுத்தி தியானிக்கிறானோ அந்தந்தப் 
பொருளின் வடிவை அடைகிறான். 


நல்லதை நினைத்தால்தான் நல்லதாக ஆக முடியும் 
என்ற பாடத்தைக் குளவி மூலம் கற்றுக் கொண்டேன்.

அரசே, மேலே சொன்ன இருபத்திநான்கு 
ஆசிரியர்களிடமிருந்து 
நான் கற்றுக் கொண்ட பாடங்களினால் 
இப்பொழுது நான் கவலையில்லாத
சந்தோஷமான, சுதந்திர புருஷனாக 
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

கடைசியாக, எனக்கு இன்னும் ஒரு ஆசிரியர் இருக்கிறார். 
அதுதான் என்னுடைய சரீரம் உடல்
வைராக்கியத்திற்கும் விவேகத்திற்கும் 
காரணமாயிருக்கும் 
இந்த உடலும் எனக்கு ஒரு ஆசிரியன்தான்.

இந்த உடல், பிறத்தலையும் இறத்தலையும் தாங்குவது. 
எப்போதும் மிகுந்த துன்பத்துடன் கூடியது. 
தை அறிவதால், வைராக்கியம் ஏற்படுகிறது.

இதனால் தத்துவங்களை விசாரிக்கிறேன். 
இதனால் விவேகம் ஏற்படுகிறது. 
இந்த உடல் பிறரைச் சார்ந்ததன்று. 
நிச்சய புத்தி உடையவனாய் அதில் 
பற்றில்லாதவனாக நான் சஞ்சரிக்கிறேன்.

இவ்விதம் வைராக்கியமடைந்து அறிவாகிய 
விளக்கையுடையவனாகப் பற்றற்று அகங்காரம் நீங்கி 
ஆத்மா ஸ்வரூபத்தில் நிலைபெற்று 
இந்த பூமியில் உலாவி வருகிறேன்.

யது மகாராஜா அவதூதருடைய 
சொல்லைக் கேட்டு 
எல்லாப் பற்றுகளின்றும் விடுபட்டுச் 
சமசித்தமுடையவரானார்.

ஓம் தத் ஸத்.                                                                           

24 ஆசிரியர்களின் பாடம் நினைவு பெறுகிறது..


கிளறல் தொடரும்..........

1 comment:

Sowmiya said...

enakku 24vadu aasiriyaril udanpaadu illai taata.
enenral manidanukku edaavadu oru latchiyam irukka vendum.
not like snake that where ever and however we can live..

am i right?

Regards,
Sowmiya