Sunday, December 25, 2011

ஒரு “ரீமிக்ஸ்” பைபிள் கதை

மூன்று வாரங்களாக ஒரு ஹெவிசப்ஜக்டைப் 
பற்றி எழுதிவந்தேன். 
இது விழாக் காலம். 
கொஞ்சம் ‘Light’ ஆக வாய்விட்டுச் சிரிக்க 
வைப்போமே என்ற உயர்ந்த சிந்தனையில் 
எழுதப்படுகிற கட்டுரை இது.

விட்டலாச்சார்யா, மன்மோகன் தேசாய் 
படங்களைப் பார்க்கச் சென்றபோது 
உள்ள மனநிலையைப் போல் 
இந்தக் கட்டுரையையும் படியுங்கள்.

இது வித்தியாசமான ரீமிக்ஸ்’ 
(தமிழ் சினிமாவில் அதிகமாக பேசப்படும் வார்த்தை) 
செய்யப்பட்ட பைபிள் கதை.

நோவா (Noah) என்பவரைப் பற்றியும் 
அவர் கடவுள் ஆணைப்படி ஒரு ‘ARK’ — படகை 
தயார்செய்து அதில் ஒவ்வொரு உயிருள்ள 
ஜந்துவையும் ஆண் / பெண் என்று 
இரண்டு இரண்டாகச் சேர்த்துவைத்துப் 
பிரளய காலத்தில் அந்த ஜீவ ராசிகளையும் 
சில நல்ல மனிதர்களையும் காப்பாற்றினார் 
என்ற கதை பெரும்பான்மையோருக்குத் 
தெரிந்திருக்கும்

இப்பொழுது நான் சொல்லப்போகும் 
கதையும் அதே நோவாவின் படகு’ 
கதைதான். 
ஆனால் இது சற்று வித்தியாசமான 
கற்பனைக் கதை.

நோவா இன்று கடவுள் ஆணைப்படி 
ஒரு படகை கட்ட நினைத்தால்...

உலகம், தன் அழிவை நோக்கி விரைவாக 
சென்றுகொண்டிருக்கிறது. 
கடவுள், தன் பக்தன், நோவாவின் முன் தோன்றி
நோவா, நான் இந்த உலகத்தை அழித்துவிடலாம் 
என்று நினைக்கிறேன். 
இன்னும் ஆறு மாதங்களில் ஒரு பிரளயத்தை 
உண்டாக்கப்போகிறேன். 
40 இரவு 40 பகல் விடாமல் மழையைப் 
பெய்ய வைக்கப்போகிறேன். 
உலகம் முழுவதும் வெள்ளத்தால் 
மூழ்கப்போகிறது. 
ஆனால் சில நல்ல மனிதர்களையும் 
உயிருள்ள ஜீவராசிகளையும் 
காப்பாற்றப்போகிறேன்.

அதனால் நீ உடனே, ஒரு பெரிய 
படகைக் கட்ட வேண்டும். 
450′ நீளம், 75′ அகலம், 45′ உயரம் 
உள்ளதாக இருக்க வேண்டும். 
உயிருள்ள ஒவ்வொரு ஜீவராசியிலிருந்தும் 
2 நபர்களை (அது ஆண் ஒன்று பெண் ஒன்று 
என்று இருக்க வேண்டும்) தேர்தெடுத்து 
உன் படகில் ஏற்றிக்கொள். 
என்மேல் யாருக்காவது நம்பிக்கை 
இருந்தால் அவர்களையும் 
உன் படகில் ஏற்றிக்கொள்.

நோவா, உனக்கு ஆறு மாதங்கள்தான் 
டைம். 
அதற்குள் படகைக் கட்டி முடி. 
இல்லையானால் கடலில் அதிக நேரம் 
நீந்துவதற்கானப் பயிற்சியை உடனே 
ஆரம்பித்துவிடு” 
என்று சொல்லி மறைந்துவிட்டார்.

6 மாதங்கள் முடிந்தன. 
ஆகாயத்தில் கருமேகங்கள் தோன்றின. 
மழை பெய்ய ஆரம்பித்தது. 
கடவுள் பூமியில் வந்து இறங்கினார். 
நோவா அழுதுகொண்டே தன் வீட்டு 
முன்வாயிலில் உட்கார்ந்து
கொண்டிருப்பதைப் பார்த்தார். 
எங்கே திரும்பினாலும் படகு 
இருப்பதாகத் தெரியவில்லை.

நோவா எங்கே என் படகு?” என்று 
கடவுள் கத்திக் கூப்பிட்டார்.

நோவா தன் சுயநினைவுக்கு வந்து
கடவுளை வணங்கி
ஐயா, என்னை மன்னியுங்கள். 
நான் என்னால் முடிந்த எல்லா 
முயற்சிகளையும் செய்தேன். 
படகைக் கட்ட முடியவில்லை. 
ஏகப்பட்ட பிரச்சினைகள்என்று சொல்லித் 
தன் கதையைச் சொல்ல ஆரம்பித்தான்.

ஐயா, ஆண்டவனே, படகு கட்ட 
ஆரம்பித்தபோதுதான் 
எனக்கு நிறைய விஷயங்கள் 
தெரிய ஆரம்பித்தன.

இந்தப் படகு திட்டத்தை ஆரம்பிப்பதற்கு 
முதலில் நான் ஒரு பெர்மிட் 
வாங்க வேண்டுமாம். 
அதற்கு விண்ணப்பம் செய்தேன். 
நீர் கொடுத்த Plan அவர்களுடைய 
தரநிர்ணயங்களுக்கு ஒத்துவரவில்லையாம். 
அதனால் ஒரு இன்ஜினியரைக் கொண்டு 
திருப்பி வரைந்து Planஐ சமர்ப்பித்தேன். 

ஏகப்பட்ட பிரச்சினைகள், கேள்விகள். 
தீ அணைப்புச் சாதனங்கள் ஏன் பொருத்தவில்லை
45′ உயரம் என்பது விதிகளுக்கு மீறிய உயரம். 
அதைக் குறைக்க முடியுமா
லிப்ட் சாதனம் வைத்திருக்கிறீர்களா
சுற்றுச்சூழலைப் பாதிக்குமா என்று 
ஆராய்ந்து பார்த்தீர்களா
பொது மக்களைக் கூட்டி திட்டத்தை 
விவாதித்தீர்களா
இப்படி இன்னும் பல பல கேள்விகள். 
"ஒரு மாதிரியாக" (எப்படி என்று நீர் கேட்காமல் 
இருந்தால் நல்லது) 
தற்காலிகமாக பெர்மிட் கிடைத்தது. 
வீட்டு முன்வாசல் வேலையை ஆரம்பித்தேன். 
என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர்கள் 
கொடிபிடித்து ஆர்ப்பாட்டம் 
செய்ய ஆரம்பித்தார்கள். 
"ஒரு மாதிரியாக" உத்தரவை வாங்கிவந்தேன்.

அடுத்த பிரச்சினை படகு கட்டுவதற்குத் 
தேவையான மரம். 
இங்கே புள்ளி ஆந்தையைக் காப்பாற்றுவோம்’ 
என்ற ஒரு அமைப்பு நடத்திய போராட்டத்தால் 
மரங்களை வெட்டுவதற்குத் தடையிருக்கிறது. 
ஒரு வழியாக, wildlife டிபார்ட்மெண்டை 
இது ஆந்தைகளைக் காப்பாற்றுவதற்கான 
முயற்சி அதனால் மரங்கள் தேவை’ 
என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தேன். 
மரங்கள் கிடைத்தன. 
ஆனால் ஆந்தைகளைப் பிடிக்க முடியவில்லை.

இதற்குள், நான் அமர்த்திய தச்சர்கள் 
ஒரு சங்கம் ஏற்படுத்திக்கொண்டு 
வேலைநிறுத்தம் 
செய்ய ஆரம்பித்தார்கள். 
தேசியத் தொழிலாளர் வாரியத்துடன் 
பேச்சுவார்த்தை நடத்தி ஒருவழியாக 
ஒரு உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டேன். 
இப்போழுது 16 தச்சர்கள் வேலைக்கு 
வரச் சம்மதித்திருக்கிறார்கள்.

உங்கள் கட்டளைப்படி, ஆண், பெண் என்று 
மிருகங்களைச் சேகரிக்க ஆரம்பித்தேன். 
மிருகங்களின் நலனுக்காக போராடும்’ 
ஒரு அமைப்பு என் மேலே கேஸ் போட்டார்கள். 
"ஒரு மாதிரியாக" கேஸ் டிஸ்மிஸ் 
செய்யப்பட்டது.

புது பிரச்சினை. 
ராணுவ இன்ஜினியர்கள் மூலம் வந்தது.

முதலில் இருந்தே யாருக்கும், யாரோ 
ஒரு ‘Supreme Being’ சொல்கிறாராம்
அதில் தங்களுக்குத் தலையிட 
உரிமையில்லையாம் என்ற நினைப்பு 
எரிச்சலை உண்டு
பண்ணிக்கொண்டிருக்கிறது. 

அவர்கள் கேட்ட சில கேள்விகளில் 
சிலவற்றைச் சொல்கிறேன்.

கடலே இல்லாத இந்த இடத்தில் எதற்கு 
ஒரு படகைக் கட்டுகிறீர்கள்?

வெள்ளம் வரும் என்கிறீரே
எதை வைத்துச் சொல்கிறீர். 
ஆறு மாத forecast பண்ணுவதற்கு 
உமக்கு என்ன qualification? 
உம்மிடம் என்னென்ன வசதிகள் 
இருக்கின்றன?

‘Flood Plan’க்கு Map 
ஏதாவது வைத்திருக்கிறீரா?”

என்னால் முடிந்த விளக்கங்களை 
அளித்திருக்கிறேன். 

இதற்கிடையில்
Equal Employment Opportunity Commission 
என்மேல் ஒரு வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். 
நான் உயர்குடி மக்களுக்கு மட்டும்
அதுவும் ஆண்களுக்கு மட்டும்தான் 
வேலை கொடுத்திருக்கிறேனாம். 
வேலை செய்கிறவர்களின் பட்டியலை 
உடனே அனுப்பி அதில் எத்தனை பேர் 
தாழ்ந்த குடிமக்கள், எத்தனை பேர் பெண்கள் 
என்று சொல்ல வேண்டுமாம்.

சொல்ல மறந்துவிட்டேன். 
என்னிடம் பணமே கிடையாது. 
நான் வரி கொடுக்காமல் வெளிநாட்டுக்கு 
சென்று விடுவேன் என்ற பயத்தில் 
Income Tax Department 
என் வங்கிக் கணக்குகளையெல்லாம் 
முடக்கிவிட்டது.

சுவாமி, எனக்கு என்னவோ தோன்றுகிறது. 
மேலும் ஒரு ஐந்து ஆண்டுகள் கொடுத்தாலும் 
இந்தப் படகுத் திட்டம் முடியாது” 
என்று சொல்லிகண்ணீரும் கம்பலையுமாக 
ஆண்டவரின்முன் கூனிக் குறுகி நின்றான்.

மேகங்கள் நீங்கத் தொடங்கின. 
சூரியன் பிரகாசமாக வானில் 
தோற்றமளிக்க ஆரம்பித்தான். 
ஒரு வானவில் தென்பட்டது.

நோவா பார்த்தான். மகிழ்ச்சி பொங்க
சுவாமி, உலகத்தை அழிக்கப்போகும் 
திட்டத்தைக் கைவிட்டுவிட்டீர்களா?” 
என்று நம்பிக்கையோடு கேட்டான்.

இல்லை, இல்லைஎன்று கடவுள் கர்ஜித்தார்.

நான் கடவுளாக இருப்பதால் உலகத்தைத் 
தண்டிக்க வெள்ளத்தை உபயோகிக்க 
நினைத்தேன். 
இப்பொழுது, அதைவிட மோசமான 
ஆயுதம்அது மனிதனாலேயே உருவாக்கப்பட்டது
எனக்குக் கிடைத்துவிட்டது. 
அதை வைத்தே இந்த உலகத்தை அழிக்கப்
போகிறேன்என்றார்.

அது என்ன சுவாமி?” என்று நோவா கேட்டான்.

கடவுள் ரொம்ப நேரம் ஒன்றும் பேசவில்லை.

கடைசியாக ஒரே வார்த்தைதான் சொன்னார்.

அரசாங்கம்!


கொசுறு

ஒரு புதிர்க் கதை

ஒரு அழகான பெண், தன் தகப்பனாருடன் 
வசித்துவந்தாள்.

தகப்பனார் ஒரு பெரிய சூதாடி.

ஒரு சமயம், அந்த ஊரிலிருக்கும் 
மிக மோசமான ஆளிடம் 
(வில்லன் என்று அழைக்கலாமே) 
சூதாட்டத்தில் பணத்தை எல்லாம் 
இழந்துவிட்டான். 
போதாக்குறைக்குத் தன்னுடைய 
பெண்ணையும் பணையமாக வைத்து 
அதிலும் தோற்றுப்போனான்.

வீட்டிற்கு வந்து, அழுது புலம்பித் 
தன் பெண்ணிடம் நடந்ததைச் சொன்னான். 
அந்த நல்ல பெண்ணும் தகப்பனாரின் 
பந்தய நிபந்தனைப்படி அவருடன் 
அந்த வில்லனிடம் செல்லத் தயாரானாள். 
இருவரும் வில்லன் இடத்துக்கு வந்தார்கள். 
பெண்ணின் தந்தை மறுபடியும் வில்லனிடம் 
தன் பெண்ணை விடுவிக்க வேண்டும் 
என்று கெஞ்சிக் கூத்தாடினான்.

ரொம்ப நேரத்திற்குப் பிறகு வில்லன் ஒரு 
சமரசத்திற்கு வந்தான். 
அவன் சொன்னான் சரி சரி
உம் பெண் உம்மிடம் இருக்கலாம். 
ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை. 
நான் இப்பொழுது இரண்டு சீட்டுகள் 
தயாரிக்கப்போகிறேன். 
ஒன்றில் சுதந்திரம்என்றும், 
மற்றதில் அடிமைத்தனம்” 
என்றும் எழுதப் போகிறேன். 
ஒரு குடுவையில் போட்டு நன்றாகக் 
குலுக்கியபின் உம்முடைய பெண்
ஒரு சீட்டை எடுக்க வேண்டும். 
சுதந்திரம்சீட்டை எடுத்தால், நீர் 
அவளைக் கூட்டிக்கொண்டு போகலாம்.
அடிமைத்தனம்சீட்டை எடுத்தால் 
என்னுடன் வர வேண்டும். 
இதற்குச் சம்மதமா? என்று கேட்டான்.

தந்தையும் மகளும் இந்தப் போட்டிக்குத் 
தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தார்கள். 
வில்லன் இரண்டு சீட்டுகளில் 
வார்த்தைகளை எழுத ஆரம்பித்தான். 

அந்தப் பெண் ரொம்ப சூட்டிகையான பெண். 
அந்த வில்லன் இரண்டு சீட்டுகளிலும் 
அடிமைத்தனம் என்ற வார்த்தையை 
'எழுதுவதை ஓரக் கண்ணால் பார்த்து விட்டாள்.

தர்மசங்கடமான நிலை. 
எந்தச் சீட்டை எடுத்தாலும் 
அவள் வில்லனுடன் தான் போக வேண்டும்.

ஆனால்,அந்த புத்திசாலிப் பெண் 
தன் அப்பாவுடன் தான் வீடு திரும்பினாள்.

எப்படி?........................... யோசியுங்கள்....எழுதுங்கள்



...கிளறல் தொடரும்.

1 comment:

Sowmiya said...

naan solren kulukkalil edutta seetai pirikkamal anda kudattil meedam ulla seetai pirikka solli anda ponnu solli irukkum. so adil "Adimaitanam" eludi irupadal ( anyway in both same) anda intelligent ponnu solli irukum edutta mudal seetil "sudaniram" irukkum endru... so she went with her father..

Sari taane...

Reply tata...

Regards,
Sowmiya