Sunday, February 12, 2012

குறட்டை ஜோஸியம்

குறட்டை: இதைப் பற்றி எல்லோருக்கும் 
தெரியும். எல்லோருக்கும் நிறைய 
கேள்வி ஞானம்உண்டு.
ஜோஸியம் என்பது வாழ்க்கையோடு 
ஊறிப்போன சமாசாரம். 
ஆனால், இது என்ன 
குறட்டை ஜோஸியம்?”

விளக்கம் ...    பின்னால்.

இதோ ஒரு காட்சி.
ஒரு விருந்தாளி தன் நண்பர் வீட்டில் 
உணவு அருந்தி நண்பர் அறையிலேயே 
இரவு படுத்து உறங்குகிறார்.  
மறுநாள் காலையில் விருந்தாளி - நண்பர் 
உரையாடல் பின்வருமாறு:
நண்பர் - Good Morning நன்றாகத் 
தூங்கினீர்களா?
விருந்தாளி  - சார், ஒரு கேள்வி.
நண்பர் - கேள்விக்குக் கேள்வியா
பேஷ், பேஷ், சொல்லுங்கள்.
விருந்தாளி  - சார், நீங்கள் 
என்ன ஒரு குறட்டைவாதியா?
நண்பர் - என்ன! புதுசா இருக்கே! 
ஏதோ நான் ஒரு தீவிரவாதி 
என்பது மாதிரி                              
கேள்வி கேட்கிறீர்களே?
விருந்தாளி -கோபித்துக்கொள்ளாதீர்கள்! 
நேற்று நீங்கள் போட்ட குறட்டைச்                                             
சத்தத்தில் தூக்கமே வரவில்லை 
அதைத்தான் சொன்னேன்.
நண்பர்- நானா! குறட்டையா
சான்ஸே கிடையாது. நீங்கள் 
தூங்காததற்கு                                
வேறு காரணம் இருக்கும். 
உடனே டாக்டரிடம் போய்                                         
விசாரியுங்கள்.
இந்த உரையாடலில், நண்பர்-விருந்தாளிக்குப் 
பதிலாக,கணவன்-மனைவி;தகப்பன் -மகன் 
என்று வைத்துக்கொள்ளலாம். 
இது அநேகமாக தினசரி எங்கேயாவது 
நடக்கும் சர்வ சாதாரணமான நிகழ்ச்சி.

குறட்டை விடுபவர்கள், யாராக இருந்தாலும்
தாங்கள் குறட்டை விட்டோம் என்று 
ஒத்துக்கொண்டதாகச் சரித்திரமே கிடையாது. 
குறட்டை விட்டோம் என்ற நினைப்பே 
அவர்களுக்குக் கிடையாது. 
தப்பு என்று தெரிந்த ஒரு தப்பைத் தெரியாமல் 
செய்து   மற்றவர்களைத் தப்பானவர்களாக 
மட்டுமே காணும் இந்தக் குறட்டைவாதிகளுக்கு 
என்ன தண்டனை கொடுக்க முடியும்?


(விசு சாரை காப்பி அடிக்கும் முயற்சி:ரொட்டி, ரொட்டி தான்;
சப்பாத்தி சப்பாத்தி தான்)

எப்படி லஞ்சம் கொடுத்தவனோ
லஞ்சம் வாங்கினவனோ தன்னுடைய 
குற்றத்தைத் தானாகவே ஒத்துக்கொள்ள 
மாட்டானோ அதே மாதிரிதான் 
குறட்டை விடுபவன் எவனும் தன் 
குற்றத்தை ஒத்துக்கொள்ள மாட்டான்.

லஞ்சத்தை நிரூபிக்க
எப்படி போலீஸார் சாட்சிகளைத் 
தயார்செய்கிறார்களோ அதே மாதிரி
குறட்டையை நிரூபிக்க ஒரே வழி - 
நவீனத் தொழில்நுட்பத்தை உபயோகித்து 
ரிகார்ட் பண்ணுவதுதான். 
கஷ்டமான காரியம்தான்.

குறட்டைவாதி, தீவிரவாதியைவிட பயங்கரமானவன். 
தீவிரவாதிகள், தாங்கள் ஒரு லட்சியத்திற்காகப் 
போராடுகிறோம் என்று நினைத்து 
மற்றவர்களுக்குக் கஷ்டம் கொடுக்கிறார்கள். 
லட்சியமே இல்லாமல், குறட்டைவாதிகள் 
மற்றவர்களைத் துன்புறுத்தி 
இம்சைப்படுத்துவதில் என்ன நியாயம்?

குறட்டைவாதிகள் உபயோகிக்கும் 
ஆயுதங்கள் எத்தனை?

ஆச்சரியப்படுவீர்கள்... ஒரே ஆயுதம்தான். 
ஒலி - குறட்டை ஒலி.

ஆனால் இந்த ஒலியில் ரகங்கள் பல. 
புராணப் படங்களில் வரும் சண்டைக் காட்சிகளில் 
ஒரே அம்பிலிருந்து பல அம்புகள் வருகிற 
மாதிரி ஒரே ஒலி, பல பரிமாணங்களுடன் 
வெளிவந்து எதிரிகளைத் தாக்கும்போது
தற்காப்பிற்கு வழியே இல்லை. 
புறமுதுகைக் காட்டி ஓடிவிட்டான்என்ற 
பழிச் சொல் வந்தாலும் பரவாயில்லை என்று 
அந்த இடத்திலிருந்து ஜகாவாங்குவதுதான் 
ஒரே வழி. 
ஒலிக்கு இவ்வளவு பரிமாணங்களா 
என்பது அனுபவித்தவர்களுக்கு 
மட்டும்தான் புரியும்.

எதையும் பாஸிட்டிவாகப் பார்ப்பவர்களுக்கு 
இந்தக் குறட்டை ஒலி வித்தியாசமான 
அனுபவத்தைக் கொடுக்கும். 
என்னுடைய நண்பர் ஒரு சங்கீத ரசிகர். 
சில குறட்டை ஒலிகளில் ராக ஆலாபனை
மேல்ஸ்தாயி, கீழ்ஸ்தாயி, சஞ்சாரங்கள்
தனி ஆவர்த்தனம், விசில் சங்கீதம்  என்று 
பல ரூபங்களை ரசிக்கிறார்.

இன்னொரு நண்பர் இந்தக் குறட்டை ஒலியை 
ரிகார்ட்செய்து, அந்த ஒலியை 
மிருகங்களின் ஒலி, ராக்கட் ஒலி,  
யந்திரங்களின் ஒலிஎன்று பிரித்துக் 
குழந்தைகளுக்குப் பாடமாகச் சொல்லித்தருகிறார். 
ஆராய்ச்சிக்கு என்ன சப்ஜக்ட்என்று தவிக்கும் 
மாணவ மாணவிகளுக்கு இந்தக் குறட்டை 
ஒலி ஒரு வரப்பிரசாதம்.

குறட்டை ஒரு வியாதியா? இது ஒரு பழக்கமா
எப்படி வருகிறது? எப்படித் தவிர்ப்பது
என்ற கேள்விகளுக்கு இங்கே விடை கிடையாது. 
ஒருவர் வாழ்க்கையில் குறட்டை விடுபவரா
அப்படியே விட்டாலும் எந்த மாதிரி 
குறட்டை விடுவார் என்று முன்கூட்டியே 
தெரிந்தால் நமக்கு அவரை எப்படிச் சமாளிக்கிறது 
என்ற வழி கிடைக்கும் அல்லவா
அதைத்தான் ஜோசியம் நமக்குச் சொல்லித்தருகிறது.

நாம் எல்லோரும் ஏதாவது ஒரு சமயத்தில் 
குறட்டை விடுகிறோம். 
குறட்டை விடுவோம் என்ற நிலையை 
ஒத்துக்கொண்டால் அது நம்முடைய 
குணங்களில் ஒன்றாக ஆகிவிடுகிறது. 
குணங்களை அலசி நம்முடைய“profile”ஐக் 
காட்டுவது ஜோசிய சாஸ்திரம்.

ஒருவருடைய பிறந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு 
எப்படி அவருடைய எதிர்காலத்தை 
அறிகிறோமோ, அதே மாதிரி ஒருவருடைய 
குறட்டையின் நடை, உடை, பாவனைகளையும் 
அறியலாம்.

கீழே உள்ள ஜோசியத்திற்கு உங்கள் நாள்
நட்சத்திரம் எதுவுமே தேவையில்லை. 
உங்களுடைய ஆங்கில வருடத்தின் 
பிறந்த தேதி தெரிந்தால் போதும். 
அதை வைத்து உங்கள் “sun sign” ஐத் 
தீர்மானித்து (அதாவது, உங்கள் ஜாதகத்தில் 
சூரியகிரகம் எந்த ராசியில் இருக்கிறதோ
அது உங்கள் “sun sign”). 
மேல்நாட்டு ஜோசியர்கள் இந்த 
அடிப்படையில் ஒருவருடைய 
குறட்டையின் குணங்களை விளக்கி 
எழுதியிருக்கிறார்கள்.

இந்தக் கட்டுரையும் உங்கள் “sun sign”ஐ 
வைத்து நீங்கள் எவ்விதமான 
குறட்டைவாதிஎன்று சொல்கிறது.

இப்பொழுது ராசி பலனைப் படியுங்கள்.

மேஷம்- ( Aries:March 21 - April 20)
குறட்டை ரொம்பச் சத்தமாகவும் 
விரைவாகவும் இருக்கும்.                              
உங்களை ஒரு வெறித்தனமான 
வேகத்தோடு தாக்கும்.

ரிஷபம்-( Taurus-April 21 - May 21)     -        
சாந்தமான, ஆனால் ஒரு விடாப்பிடியான 
குறட்டை;
எழுப்ப முயற்சி செய்யாதீர்கள்.

மிதுனம்- (Gemini-May 22 - June 21)    
நீங்கள்  தட்டி எழுப்பும்வரை விடாமல் 
குறட்டை விடுவார்கள்.                                 
நிறுத்தச் சொன்னவுடன் தங்கள் 
நினைவுத் தூண்டல் இல்லாமலேயே                                 நிறுத்திவிடுவார்கள். 
நீங்கள் மறுபக்கம் திரும்பியவுடன் 
மறுபடியும் ஆரம்பித்துவிடுவார்கள்.

கடகம்-(Cancer-June 22 - July 22)                        
இவர்களுக்கு நன்றாகக் குறட்டை 
விட்டுத் தூங்கினால்தான்                                    
நிம்மதியாகத் தூங்குவதாக அர்த்தம். 
அதைப் பற்றிப் பின்னால்                                  
கேட்டால் மழுப்பலாகப் பதில் வரும்.

சிம்மம்-( Leo-July 23 - Aug 21)                        
ராசியின் பெயருக்கேற்ப, குறட்டையில் 
ஒரு சிங்க கர்ஜனை   இருக்கும். 
அதை tape பண்ணிக் காட்டினால் 
அதை ஒரு பெருமை  மிக்க சாதனையாக 
எண்ணுவர்.

கன்னி-( Virgo-Aug 22 - Sep 23)                        
சிம்மத்திடமிருந்து எடுத்த tape ஐப் 
போட்டுக் காட்டுங்கள். 
அதை அக்கு வேறாக அலசித் தங்கள் 
இரவுப் பழக்கங்களுக்கு 
ஒருபுதுப் பரிமாணத்தை 
உண்டாக்கிக்கொள்வார்கள்.

துலாம்-( Libra-Sep 24 - Oct 23 )                       
பெரிய சத்தம், ஆனால் அதில் 
ஒரு அழகு இருக்கும்.                                        
கலையம்சம் நிறைந்த குறட்டை. 
ராசியின் அதிபதி வீனஸ் மாதிரி.

விருச்சிகம்-(Scorpio- Oct 24 - Nov 22)       
உங்கள் ஆத்மாவைத் தாக்கும் குறட்டை. 
எப்பொழுது இது நிற்கும்                          
எப்பொழுது கண் மூடலாம் என்ற 
ஒரு ஆச்சரியமான நிலைக்கு                                
நீங்கள் ஆளாவீர்கள்.

தனுசு-(Sagittarius Nov 23 - Dec 22)                          
படிப்படியாகக் குறட்டைச் சத்தம் 
பெரிதாக ஆகிகொண்டிருக்கும்.                                     
எழுப்பிக் கேட்டால் உங்களுக்கு 
எவ்வளவு சந்தோஷத்தைக்                                 
கொடுத்திருக்கிறோம் என்று கேட்பார்கள்.

மகரம்-( Capricorn   Dec 23 - Jan 20)                          
குழப்பமில்லாத, கச்சிதமான
காத்திரமான குறட்டை.

கும்பம்-( Aquarius    Jan 21 - Feb 19)                         
ஜொள்ளு விட்டுக் குறட்டை விடுபவர்கள். 
கும்பம் ஒரு நீர் ராசி                               
என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். 
இவர்களுடன் தூங்குவது ஒரு 
கஷ்டமான காரியம்தான்.

மீனம்-(  Pisces       Feb 20 - Mar 20)                          
ஒரு உதாரணம்: மீன ராசிக்காரர் 
ஒரு காம்பில்(camp) பயங்கரமாகக் 
குறட்டை விட்டுக்கொண்டிருந்தார். 
மற்ற நண்பர்கள் அவரை குண்டுக்கட்டாகத் 
தூக்கி 150 கஜம் தள்ளி ஒரு மைதானத்தில் 
கொண்டு போட்டார்கள். 
விடியலில் எழுந்தவர்                                 
நான் எங்கே இருக்கிறேன்என்றார். 
மீன ராசிக்காரர்களின்                                 
வாழ்க்கை மர்மம் நிறைந்தது.


Disclaimer: இது மேல் நாட்டு ஜோதிட சாஸ்திர 
அடிப்படையில் எழுதப்பட்டது இல்லை. 
தமாஷாக எழுதப்பட்ட விஷயம். 
இதை வைத்துக்கொண்டு தமிழ் டி.வி. 
சீரியலில் வரும் பிள்ளை வீட்டார் போல் 
பெண்களைத் தட்டிக் கழிக்காதீர்கள். 
அப்படி செய்தால், நான் அதற்கு பொறுப்பல்ல.









ஒரு கொசுறு:

ஒரு இளைஞர் தன்னுடைய டாக்டரிடம் 
செல்கிறார்.

டாக்டர்:     உடம்புக்கு என்ன?

இளைஞர்:  டாக்டர், நான் உட்கார்ந்தவுடன் 
தூங்கிவிடுகிறேன். குறட்டை பலமாக                    
விடுவதாகச் சொல்கிறார்கள். 
நான் என்ன செய்வது?

டாக்டர்: உங்கள் மனைவி என்ன சொல்கிறாள்?

இளைஞர்:  எனக்கு கல்யாணமே ஆகலை, டாக்டர்.

டாக்டர்:     பின்ன என்ன பிரச்சனை?

இளைஞர்:  டாக்டர், கடந்த 1 மாதத்தில் 
நான் 5 வேலைகள் மாறிவிட்டேன்.

நன்றி:இண்டெர் நெட்


                                                 கிளறல் தொடரும்.....                              
         

No comments: