Tuesday, March 13, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - பகுதி 1


அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது! 
என்று ஔவையார் பாடியுள்ளார்.
இந்த அரிய பிறவியின் பயன் 
இறைவன் அடியைச் சேருவது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் 
நீந்தார் இறைவன் அடி சேராதார்”           
வள்ளுவர் கூற்று.

இறைவன் அடியைச் சேராதவர்கள் 
பெருங்கடலில் நீந்திக்கொண்டிருப்பார்கள். 
இறைவனின் திருவடியைத் தொழுவதே 
கல்வியினால் உண்டாகும் பயன்.

இறைவனடி தொழுதல் பக்தி எனப்படும். 
பக்தி என்பது இறைவனிடம் நாம் வைக்கும் 
நம்பிக்கை. நமக்கு அவரிடம் ஒரு உறவை 
ஏற்படுத்துவது பக்தி.

இறைவனிடம் பக்தி கொள்ள 
எத்தனையோ வழிகளை 
நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். 
அவற்றில் முக்கியமான ஒன்பது வழிகள் 
ராமாயணத்திலும் பாகவத புராணத்திலும் 
விவரமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

இந்த வழிகளில் ஏதேனும் ஒன்றையோ
அல்லது இரண்டு, மூன்று வழிகளைச் சேர்த்தோ 
கடைப்பிடித்துவந்தால் நிச்சயமாக 
இறைவனடி அடையலாம் என்பதைத் 
தங்கள் வாழ்க்கையின் மூலம் 
பல மகான்கள் நமக்குக் காட்டியுள்ளார்கள்.

இந்த பக்தி மார்க்கம் சுலபமானது. 
வீட்டை விட்டுக் காடு செல்ல 
வேண்டியதில்லை. 
கடுமையான விரதங்களை 
அனுஷ்டிக்க வேண்டியதில்லை.

இதோ அந்த 9 வழிகள்:

ச்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ:
ஸ்மரணம் பாத ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம்
ஸக்யம் ஆத்ம நிவேதனம்.
இந்த சமஸ்கிருத ஸ்லோகத்தின் 
விளக்கம் பின்வருமாறு:


1. ச்ரவணம் - கேட்டல்

இறைவனது அருட்பெரும் புகழைப் 
பிறர் சொல்லக் காதில் வாங்குதல். 
பின்னர் அதன் மயமாதல். 
அதற்கு ச்ரவணம்அல்லது 
கேட்டல் என்று பெயர்.

கேட்பது என்பது சாமான்யமானதல்ல. 
அதற்கும் தனிப் பெருந்தவம் 
பண்ணியிருக்க வேண்டும்.

ஔவை பிராட்டியார்
கேள்வி முயல்என்றாள். 
இறைவன் புகழைக் கேட்க 
முயற்சி செய்ய வேண்டும். 
அம்முயற்சியில் சிறிதும் 
அயர்ச்சியிருக்கக் கூடாது. 
மேலும் சொல்கிறார்:

நல்லாரைக் காண்பதுவும் நன்றே!
நலமிக்க, நல்லார் சொல் 
கேட்பதுவும் நன்றே

அப்பரடிகள், ஒரு படி மேலே போய்

செவிகாள்; கேண்மின் கேளு
என்று பாடி, இந்தக் காது 
படைக்கப்பட்டிருப்பதன் காரணமே 
கடவுளின் பெருமையைக் கேட்பதற்கே 
என்கிறார்.

செவி - செவியினால் கேட்பது மூலம் 
பெறும் அறிவு சிறந்த செல்வம்.

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம் 
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை - 
என்று வள்ளுவர் பாடியிருக்கிறார்.

ஆகவே, கேட்க வேண்டும், நிறையவே கேட்டு 
அறிந்துகொள்ள வேண்டும் 
ஆண்டவனின் திருப்புகழை.

எனவே காதால் கேட்பது முக்கியம். 
சில பேருக்கு நாம் என்ன சொன்னாலும் 
கேட்காது. அது தகாது. 
இன்னும் சில பேருக்கு நல்லது சொன்னால் 
காதில் புகாது. கேட்கத் தகுந்த காதைக் கொடுத்த 
கடவுளுக்கு நாம் செய்யும் கைமாறு 
அவர் புகழைக் கேட்டுப் பயன் அடைவது.

கேள்வியினால் பயனை அடைந்த 
அநேக மகான்களில் முதலிடம் பாலகன் 
பிரஹலாதனுக்குக் கொடுக்கலாம். 
தன் தாய் வயிற்றில் இருந்தபடியே 
நாரதர் உபதேசித்த நாராயண மந்திரத்தை 
உள்வாங்கிப் புராணப் புருஷனாக 
ஆகிய பெருமை அவனுக்குண்டு.

ஏழு நாளில் தன் சாவு நிச்சயம் 
என்று தெரிந்து, பாகவத புராணத்தை 
சுக மஹரிஷி சொல்லக் கேட்டு 
முக்தி அடைந்த பரிட்சித் மஹாராஜா கதை 
எல்லோருக்கும் தெரிந்த கதை.

எனவே, ஒன்பது நிலைகளில் 
கேட்பது மூலம் இறைவன் புகழை 
அறிந்துகொள்வதுஎன்பது 
ஒரு உயர்வான நிலை.

2. கீர்த்தனம் - பாடுதல்

பாடிப் பரவுதல்என்பதுதான் கீர்த்தனம். 
அதாவது பாடுவதன் மூலம் 
இறைவனைப் போற்றதல்!

இறைவனை அடைவதற்குச் 
சுலபமான வழி இசையினால் ஒன்றாகப் 
பாடிப் பரவுதலேயாகும்.

பாடும் பணியில் 
(பாடுவதன் மூலம் போற்றும் பணியில்) 
பணித்தருள்வாய்என்கிறார் 
குமரகுருபர சுவாமிகள்.

பாடும் பணியே பணியாய் அருள்வாய்” 
அநுபூதி வாக்கு.

அன்புடனே பாடுதலும் அறியேன்என்று 
புலம்புகிறார் ராமலிங்க சுவாமிகள்.

பாடிப் பதம் பெற்றோர் பலர். 

உடனே நினைவுக்கு வருவது 2 மகான்கள். 
முதலில் தியாகராஜ சுவாமிகள். 
இன்றும் இவருடையப் பாடலைப் 
பாடாத வித்வான்களும் இல்லை
பாடப்படாத கச்சேரிகளும் இல்லை. 
ஆனால் தியாகராஜ சுவாமிகள் 
தன் பாடல்களை இசைத்துப் பாடியபோது 
கச்சேரியை நினைத்து இசை 
அமைக்கவில்லை. 
ஒவ்வொரு கீர்த்தனையும் அவருடைய 
உள்மனத்திலிருந்து எழுந்து 
ராம நாம மகிமையை 
வெளிக்கொண்டு வந்தவை. 
நாதோபாசனையினால் ராமனைத் 
தொழுது அவன் அருளை அடைந்த 
மிகப் பெரிய இசை மேதை.

அடுத்த பெரிய இசை மேதை
ஒடிஷா மாகாணத்தைச் சேர்ந்த 
மகாபக்தர் ஜயதேவர். 
கிருஷ்ணனை இஷ்ட தெய்வமாகக் 
கொண்டு அஷ்டபதிஎன்ற 
கிரந்தத்தைப் பாடியவர். 
கீத கோவிந்தம் எனப்படும் 
இவருடைய இசையைக் கண்டு 
கண்ணனே மயங்கினான் என்று சொல்வர். 
எனவே, பாடிப் பரவுதல் ஒரு பெரும் 
பயனுடைய செயலாகும்.

3. ஸ்மரணம் - நினைத்தல்

மூன்றாவது நிலை, “நினைத்தல்”. 
இதனை ஸ்மரணம்என்று சொல்வார்கள். 
இறைவனை இனிக்கஇனிக்க 
நினைக்கத் தெரிந்து நல்ல கதியை 
அடைந்த பெரியோர்களில் 
தலையானவன் துருவன். 
தன்னுடைய அசையாத நம்பிக்கையாலும்
இடைவிடாத தியானத்தாலும் உயர்ந்த 
நிலையை அடைந்து இன்று 
நட்சத்திர வடிவமாக நமக்குக் காட்சி 
அளித்துக்கொண்டிருக்கிறான்.

நின்றும் இருந்தும் கிடந்தும் 
நடந்தும் நினை என்றும் சிவன் தாளினை” 
என்றார்கள்.

நினைந்து நினைந்து, உணர்ந்து உணர்ந்து
நெகிழ்ந்து நெகிழ்ந்து என்று அடுக்கிக்கொண்டே 
போகிறார் ஒரு சிவனடியார்.

ஆகவே ஆண்டவனை நினைந்து வழிபடல் 
ஒரு நல்ல நிலையை அருளும் என்பது உண்மை.

நன்றி: கலைமாமணி திரு சரவணபவானந்தர்.

தொடரும்.

No comments: