Monday, June 04, 2012

உபயோகமற்ற பொருள் என்று ஒன்றுமே இல்லை (Nothing is useless)

ஒரு திருஷ்டாந்தக் கதை

இது ஒரு ஆசிரியரையும் அவருடைய 
மாணவனையும் பற்றிய கதை.

ஒரு ஊரில் ஒரு ஆசிரியர் இருந்தார். 
அவர் மிகவும் நல்லவர். 
ஒரு நாள் அவருடைய பிரியமான 
மாணவன் அவரைப் பணிவுடன் அணுகி
ஐயா, என் படிப்பு முடிந்துவிட்டது. 
நான் வீடு திரும்பும்முன் உங்களுக்கு 
ஏதாவது பொருளைக் காணிக்கையாகக் 
கொடுக்க விரும்புகிறேன். 
ஆனால் உங்களுக்கு என்ன கொடுப்பது 
என்று தெரியவில்லை. அதனால் தயவுசெய்து 
நீங்களே நான் என்ன செய்ய வேண்டும் 
என்று கட்டளையிடுங்கள்என்றான்.

அந்த நல்ல ஆசிரியர் சிஷ்யனை 
வாஞ்சையுடன் பார்த்து “குழந்தாய், நான் 
உன்னிடமிருந்து எதையுமே 
எதிர்பார்க்கவில்லையே
இருந்தாலும் நீ ஆசைப்பட்டுக் 
கேட்பதனால் சொல்கிறேன்.
 
நம்முடைய வீட்டின் பின் பக்கம் 
ஒரு காடு இருக்கிறதல்லவா
நீ அங்கே சென்று யாருக்குமே உதவாத
காய்ந்த இலைகள் சிலவற்றை எனக்காக 
எடுத்துக்கொண்டு வா. அதுபோதும்என்றார்.
மாணவனுக்கு ஆச்சரியம், மகிழ்ச்சி. 
நம்முடைய குரு, ஏன் இப்படி ஒரு புதுமையான 
கட்டளை இடுகிறார் என்று. அதே சமயம் 
இவ்வளவு சுலபமான வேலையைக் 
கொடுத்திருக்கிறாரே என்று மகிழ்ச்சி.

மாணவன் காட்டை நோக்கிப் புறப்பட்டான். 
காட்டில் கொஞ்சம் தூரம் சென்ற மாணவனுக்கு 
மகிழ்ச்சியான காட்சி தென்பட்டது. 
ஒரு மரத்தின் கீழ் காய்ந்த இலைக் 
குவியல் ஒன்று இருந்தது. 
கொஞ்சம் இலைகளைப் 
பொறுக்க நெருங்கியபோது
எங்கேயோ இருந்து ஒரு விவசாயி ஓடிவந்து 
தம்பி, இந்த இலைகளைத் தொடாதீர்கள்” 
என்றான். 
மாணவன் கேட்டான் ஏன் ஐயா
எனக்குத் தேவை கொஞ்சம்தானே! 
கொடுக்கக் கூடாதா?.” 
விவசாயி சொன்னான் தம்பி
இந்த இலைகளை நான் என் 
வயலுக்கு எடுத்துக்கொண்டுபோய் 
எரித்து அந்தச் சாம்பலை என் வயலுக்கு 
உரமாகப் பயன்படுத்தப் போகிறேன். 
அதனால் இது எனக்குத் தேவை. 
வேறு எங்கேயாவது சென்று தேடுங்கள்.” 
மாணவன் சரிஎன்று சொல்லிவிட்டு 
மேலும் நடந்தான்.

கொஞ்சம் தூரத்தில் மூன்று பெண்மணிகள் 
மூன்று காய்ந்த இலைக் குவியல்களின் 
முன் உட்கார்ந்துகொண்டிருந்தார்கள். 
மாணவன் அவர்களை அணுகி,
அம்மாமார்களேஎனக்குக் கொஞ்சம் 
இலைகள் தருகிறீர்களா?” 
என்று கேட்டான்.

முதல் பெண்மணி சொன்னாள், 
தம்பி இந்த இலைகள்தான் 
எங்கள் வீட்டு விறகுகரி எல்லாம். 
இவைகள் இல்லையென்றால் 
எங்கள் வீட்டில் சமையல் செய்ய முடியாது. 
தயவுசெய்து, கேட்காதே!என்றாள்.

இரண்டாவது பெண்மணி சொன்னாள், 
தம்பி, என்னுடைய வீட்டுக்காரர் 
ஒரு வைத்தியர். 
மருந்து தயார்பண்ணுவதற்காக 
இந்த இலைகளைப் பயன்படுத்துகிறார். 
அதனால் இலைகளை உனக்குத் தரமாட்டேன்” 
என்றாள்.

மூன்றாவது பெண்மணி சொன்னாள், 
தம்பி, இந்த இலைகளை வைத்து 
நான் தட்டுக்கள் செய்வேன். 
வைகளைச் சாப்பாட்டு விடுதிகளுக்கு 
விற்று அந்தப் பணத்தை என் வீட்டுச் 
செலவுகளுக்காக உபயோகிக்கிறேன். 
தயவுசெய்து, என் பிழைப்பில் கை வைக்காதே” 
என்றாள்.

மாணவன் வேறு வழியில்லாமல் 
மேலே நடந்தான். 
கொஞ்ச தூரத்தில் ஒரு மரத்தின் கீழ் 
காய்ந்த இலைகள் நிறைய இருப்பதைப் 
பார்த்தான். 
சில இலைகளைப் பொறுக்கலாம் என்று 
நினைத்தபோது ஒரு பறவை அங்கே வந்து 
ஓரிரு இலைகளைத் தன் அலகால் கொத்தி 
அவைகளை அந்த மரத்தின் உச்சிக் கிளையில் 
தான் கட்டிக்கொண்டிருக்கும் கூட்டில் கொண்டு 
வைத்தது. 
மாணவனும் இந்த இலைகள் 
இந்தப் பறவைக்கு மிக அவசியம் என்று 
நினைத்து மேலும் நடந்தான். 
பொழுது சாய்ந்துகொண்டிருந்தது. 
மாணவனுக்குக் களைப்பு. ஏமாற்றம்.

ஒரு ஓடை தென்பட்டது. 
அதில் பெரிய காய்ந்த இலை ஒன்று 
மிதந்துகொண்டு வந்தது. 
மாணவனுக்கு ஒரே சந்தோஷம். 
இந்த ஒரு இலையையாவது நம்முடைய 
குருவிடம் எடுத்துச் செல்வோம்’ 
என்று நினைத்தான்.

இலை இவன் சமீபமாக வந்தபோது 
அவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. 
அந்தப் பெரிய இலையில்
ஒரு எறும்பு உட்கார்ந்துகொண்டிருந்தது. 
அது இந்த மாணவனைப் பார்த்த 
பார்வைதம்பி, இந்த இலை இல்லாமல் 
இருந்தால் நான் இந்நேரம் இந்த 
ஆற்றோடு போயிருப்பேன். 
இந்த இலை எனக்கு ஒரு வாழ்க்கைப் படகு 
மாதிரி வந்து என் உயிரைக் காப்பாற்றியது’ 
என்று சொல்லாமல் சொல்லிற்று.

மாணவன் மிக வருதத்துடன்
குருவின் வீட்டுக்குத் திரும்பினான். 
குருவை பார்த்து
ஐயா, நான் தோற்றுவிட்டேன். 
நீங்கள் கேட்ட காணிக்கையைக் 
கொடுக்க இயலாமல் வெறுங் கையுடன் 
வந்திருக்கிறேன். 
யாராவது எதற்காகவாவது இந்தக் காய்ந்த 
இலைகளை உபயோகிக்கிறார்கள்
யாருக்குமே உதவாத இலைகளை 
என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. 
மன்னிக்கவும்என்று கலங்கி நின்றான்.

ஆசிரியர் சிரித்தார். குழந்தாய், உன்னால் 
இந்தப் பரிசைக் கொண்டுவர முடியாது 
என்று எனக்குத் தெரியும். உனக்கு ஒரு புதிய 
பாடத்தைக் கற்றுத் தர ஆசைப்பட்டதால் 
இதைச் சொன்னேன். 
இப்பொழுது புரிகிறதா?ஒரு உயிரற்ற காய்ந்த இலை
எத்தனை பேருக்கு எத்தனை விதமாக 
உபயோகமாக இருக்கிறது. 
அப்படியானால், உயிருள்ள, அறிவுள்ள 
மனிதர்களாகிய நாம் மற்றவர்களுக்கு எப்படி 
எல்லாம் உதவி செய்ய வேண்டும்
கடவுள் நமக்கு இந்த உடம்பைக் கொடுத்தது 
மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காக 
மட்டும்தான்.

சமஸ்கிருதத்தில் ஒரு சொல் 
பரோபகாரம் இதம் சரீரம்” 
(இந்த உடம்பு மற்றவர்களுக்கு உபகாரம் 
செய்வதற்காகப் படைக்கப்பட்டிருக்கிறது). 
அதனால் இந்த உடம்பை ஆரோக்கியமாக 
வைத்துக்கொள். 


இந்த உடம்பை 
வைத்துக்கொண்டு யாருக்கெல்லாம் 
உதவி தேவையோ அவர்களுக்கெல்லாம் 
உன்னால் முடிந்த அளவு உதவி செய். 
இந்தப் பாடத்தை எப்பொழுதும் நினைவில் 
வைத்துக்கொள். உனக்கு வெற்றி உண்டாகட்டும்.” 
என்று ஆசிர்வதித்து மாணவனை 
வழியனுப்பி வைத்தார்.

அருமையான கதைஎன்று பாராட்டுவது 
காதில் கேட்கிறது. 
பாராட்டுப் பெறுவதற்காக 
எழுதப்பட்ட கதையில்லை. 
நம்மைச் சிந்திக்கச் செய்யும் கதை. 
பிறருக்காக உதவிடும் 
நல்ல ஒழுக்கத்தை 
நாம் எல்லோரும் வளர்த்துக்கொள்ள 
வேண்டும். 
அந்த உதவி சுயநலம் கருதாமல் 
இருக்க வேண்டும். 
அப்படி ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு 
வாழ்ந்தால் உலக நன்மை ஏற்படும்.

மகாத்மா காந்தி சொல்கிறார்:-

நான் இந்த உலகத்தில் பயணம் செய்வது 
ஒரே ஒருமுறைதான். யாருக்காவது ஏதாவது 
உதவி செய்ய நான் நினைத்தால் 
அதை இன்றே செய்ய முயற்சிக்கிறேன். 
அதை தள்ளிப் போட்டால் மறுபடி எனக்கு 
ஒரு சந்தர்ப்பம் கிடைப்பது அரிது.

இந்த சுயநலமற்ற சமூக சேவைஎன்பது எது
ஏன் நாம் செய்ய வேண்டும்
எப்படி செய்ய வேண்டும்
யாருக்கு செய்ய வேண்டும்
என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

... கிளறல் தொடரும்.No comments: