Monday, July 16, 2012

தேர்தலில் ஜெயிப்பது எப்படி?

எத்தனை “ How to ” - “எப்படி” 
புத்தகங்கள் படித்திருப்பீர்கள்?

ஒரே வருஷத்தில் கோடீஸ்வரராக 
ஆவது எப்படி?”
ஒரே மாதத்தில் 20 பவுண்ட் எடை 
குறைப்பது எப்படி?”
“30 நாளில் ஆங்கிலத்தில் பேசுவது 
எப்படி?”
என்று பலதரப்பட்ட விஷயங்களைப் பற்றிப் 
புத்தகங்கள் வெளிவந்திருக்கின்றன. 
ஆனால், இதுவரை வெளிவராத விஷயம் 
தேர்தலில் ஜெயிப்பது எப்படி?”  என்பது. 
எல்லோருக்கும் உள்மனதில் இருக்கும் 
ஆசைஅரசியலில் ஒரு செல்வாக்குள்ள 
பதவியைப் பிடிப்பது. 
ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். 
இன்றைய உலகில் தகுதி எதுவும் 
இல்லாமல் கிடைக்கும் பதவி
அரசியல் பதவிதான்.

அந்த அரசியல் பதவி, எந்த மட்டத்தில் 
இருந்தாலும், கிடைக்க வேண்டுமானால் 
கீழே சொல்லப்பட்டிருக்கிற அறிவுரைகளை 
முழுவதுமாக நம்பிப் பின்பற்ற வேண்டும். 

இந்த அறிவுரைகள் — fool proof —  
எல்லாக் காலத்திற்கும் ஒத்து வரக்கூடியவை. 
வெற்றி நிச்சயம். 
மேலே படியுங்கள்.

1.உங்கள் உறவினரும், குறிப்பாக 
உங்கள் குடும்பத்தினரும், நண்பர்களும் 
உங்களை ஆதரிப்பார்கள், ஆதரிக்க 
வேண்டும் என்ற நிலையை 
உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 
உங்கள் குடும்பத்தின் ஒற்றுமைபற்றி 
கிசுகிசுவராமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

2. உங்களைச் சுற்றி, அரண் மாதிரி
சரியான ஆட்களை வைத்துக்கொள்ளுங்கள். 
நல்ல புத்திசாலியான
நம்பகரமான “Team”ஐத் 
தேர்தெடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

3. யாரெல்லாம் உங்களுக்கு உதவிசெய்ய 
வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்களோ
அவர்களிடம் நயமாகவோ 
(தேவைபட்டால் கடுமையாகவோ) 
நீங்கள் செய்த உதவிகளை ஞாபகப்படுத்தி 
அவர்களுடைய நன்றிக்கடனைத் தீர்க்க 
இதுதான் சரியான சமயம் என்று 
எடுத்துச்சொல்லுங்கள்.

4. ஒரு குறிப்பிட்ட ஜாதியினரையோ
மதத்தினரையோ நம்பாமல் உங்கள் 
ஆதரவாளர்களை விரிவாக்கிக்கொள்ளுங்கள்.

இது எப்படிச் சாத்தியமாகும்?  


5ஆவது குறிப்பைப் படியுங்கள்.

5. எல்லோருக்கும் எல்லாவற்றையும் 
கொடுப்பதாக வாக்குறுதி கொடுங்கள். 
இலவசங்களைக் கண்ணை மூடிக்கொண்டு 
அள்ளி வீசுங்கள். 
ஜெயித்தால் எப்படி நிறைவேற்ற முடியும்?” 
என்ற எண்ணத்தைத் தூக்கி எறியுங்கள்.
“Public memory is short” என்பது
முக்காலும் உண்மை.

6. பேச்சுத் திறமை வெற்றிக்கு 
ஒரு அருமையான சாதனம். 
அதை வளர்த்துக்கொள்ளுங்கள். 
என்ன பேசுகிறோம் என்பது 
முக்கியமில்லை. எப்படிப் பேசுகிறோம் 
என்பதுதான் முக்கியம். 
வாக்காளப் பெருமக்களை எவ்வளவு 
குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்புங்கள். 
வெற்றி நிச்சயம்.

7. தேர்தலின்போது உங்கள் ஊரை விட்டு 
வெளியே செல்லாதீர்கள். நிச்சயமாக 
உல்லாசப் பயணம் மேற்கொள்ளாதீர்கள். 
வெற்றிக்குப் பிறகு கொண்டாடுங்கள்.

8. உங்கள் எதிரிகளின் பலவீனத்தை 
அறிந்து அதை முழுவதுமாக 
உபயோகித்துக் கொள்ளுங்கள். 
லஞ்ச ஊழல்பற்றித் தெரிந்தால் 
அது உங்களுக்குச் சரியான ஆயுதம். 
அதைவிட உயர்ந்தது உங்கள் எதிரிகளின் 
சின்ன வீட்டுலீலைகள்.

9.வெட்கப்படாமல் வாக்காளர்களை 
வானளாவப் புகழுங்கள். 
அவர்களை நேரடியாகப் பார்த்து
அவர்களின் முதுகில் தட்டி
அவர்கள்தான் உங்கள் உலகம் 
என்று சொல்லுங்கள்.

10.உங்கள் வாக்காளர்களுக்கு ஒரு 
நம்பிக்கையைக் கொடுங்கள். 
எல்லோரும் யாரையாவது நம்ப 
வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். 
உங்களைத் தேர்தெடுத்தால் 
அவர்கள் வாழ்க்கை ஒளிமயமாக 
ஆகும் என்ற நம்பிக்கையைக் கொடுங்கள்.

இன்னும் நிறைய இருக்கின்றன. 
இது போதும். 
மனசாட்சியைத் தூக்கி ஒரு ஓரமாக 
வைத்துவிட்டு, தேர்தலைச் சந்தியுங்கள். 
வெற்றி நிச்சயம்.

அருமையான யோசனைகள் என்று 
என்னைப் பாராட்ட நீங்கள் நினைத்தால் 
கொஞ்சம் பொறுமையாக இருந்து 
இந்தக் கட்டுரையைக் 
கடைசிவரை படியுங்கள்.

இந்த அறிவுரைகளுக்கு ஆசிரியன் 
நான் இல்லை.

யார் அவர்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்
எந்த நூற்றாண்டில் வாழ்ந்தவர்?

உங்களால் ஊகிக்க முடியாது என்று 
எனக்கு நிச்சயம் தெரிவதால் 
விடையை நானே சொல்லிவிடுகிறேன்.

இதை எழுதியவர்: 


Quintus Tullius Cicero என்ற ரோமானியர். 
                          












எழுதிய காலம் 64 B.C. 
அதாவது சரியாக, 2076 வருஷங்களுக்கு முன்.

இப்போது கொஞ்சம் “flashback.”

Marcus Tullius Cicero (106 BC - 43 BC) 
ரோமானியத் தத்துவஞானி
அரசியல்வாதி, சிறந்த பேச்சாளர், வக்கீல்
கான்ஸல், etc., 
கிரேக்கத் தத்துவங்களை ரோமானியர்களுக்கு 
அறிமுகம் செய்தவர்.











Quintus Tullius Cicero (102 BC - 43 BC) 
மார்க்கஸின் இளைய சகோதரர். 
ஜூலியஸ் சீஸரால் ஒரு சிறந்த ராணுவத் 
தலைவர் என்று புகழப்பட்டவர்.

64 BCயில் மார்க்கஸ் சிசரோ
அரசுத் தூதர் பதவிக்குப் 
போட்டியிட மனு தாக்கல்செய்தார். 
தூதர் என்ற பதவி ரோம் குடியரசில் 
உயர்ந்த பதவி. 
மார்க்ஸுக்கு 42 வயது. 
பணவசதி படைத்த குடும்பம். 
நல்ல படிப்பாளி. நல்ல பேச்சாளியும்கூட.

இவரைப் பற்றிச் சொல்லக்கூடிய ஒரே குறை,
இவர் உயர்வகுப்பைச் சேர்ந்தவர் இல்லை. 
அந்தக் காலத்தில் ரோமானியர்கள் 
ரொம்பவே மேல்வகுப்பு, கீழ் வகுப்பு 
என்று பாகுபாடு செய்துவந்தார்கள். 
ஆனால், மார்க்கஸுக்குத் தன்னால் 
மேல்வகுப்பினருக்குச் சமமாகச் 
சாதனைகள் செய்ய முடியும் என்ற 
திடமான நம்பிக்கை இருந்தது.

இவருக்கு நிறையவே எதிர்ப்பு இருந்தது. 
இந்தச் சமயத்தில் மார்க்கஸின் சகோதரர் 
குவிண்டஸ் தன் சகோதரனுக்கு 
நல்ல ஆலோசனைகள் தேவை 
என்று நினைத்தார். தன்னைவிட 
நான்கு வயது சின்னவரான 
குவிண்டஸ் தன் சகோதரன்மேல் 
அளவு கடந்த அன்பு வைத்திருந்தார்.

இவர் தன்னுடைய சகோதரருக்கு 
ஒரு கடிதம் மூலம் 
எப்படித் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டும்?” 
என்று தெளிவுபட எழுதினார். 


இது லத்தீன் பாஷையில் 
எழுதப்பட்ட மடல். 


Commentariolum Petitionis என்று பெயர். 
ரொம்ப காலம் இது வெளி உலகத்திற்குத் 
தெரியாமலேயே இருந்தது. 


Machiavelliயின் Prince போல இதுவும் 
ஒரு அருமையான treatise. 


பதவிக்கு வர ஆசைப்படும் ஒவ்வொருவரும் 
கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

மார்க்கஸ் இதைப் பின்பற்றி 
மகத்தான வெற்றி பெற்றார் 
என்பது உண்மையான நிகழ்ச்சி. 

இதை, இப்பொழுது படிக்கிறவர்களுக்கு
ஏதோ தமிழ் நாட்டு அரசியலை அலசிப்பார்த்த 
ஒரு நபர் சொன்ன வார்த்தைகள் மாதிரி 
இருக்கிறதல்லவா?

இதைத்தான் — 
Timeless, Time Tested, 
No Nonsense Advice 
என்று சொல்லுகிறார்களோ?

Ref: ‘How to Win an Election’
Quintus Tullius Cicero
Translated and with an introduction 
by Philip Freeman

... கிளறல் தொடரும்.

No comments: