Monday, October 08, 2012

பசி வந்திடப் பத்தும் பறந்துபோகுமாமே... அது என்ன பத்து?

விடை கிடைக்கக் கொஞ்சம் நேரம் ஆகும்.
பசியைப் பற்றி எழுதலாமே என்று நினைத்தவுடன் 
என்னுள் எழுந்த எண்ண அலைகள் 
மனம் ஒரு குரங்குதான்அதிலும் கள் குடித்துத் 
தேள் கொட்டிய குரங்குதான் 
என்பதை உறுதிப்படுத்திவிட்டன.

2 நிமிடத்தில் வந்த எண்ணங்கள்:

பசி - உணவு - சாப்பாட்டு ராமன் - 
சமஸ்கிருத வாத்தியார் - சமஸ்கிருதம் - உபநிஷத் - 
உணவு - A.K. Chettiar - பசி

அதனால் இந்தக் கட்டுரையையும் 
என் மனம்போன போக்கில் 
எழுத உத்தேசம்.

நான் Fourth Form ( 9ஆம் வகுப்பு) 
படித்துக்கொண்டிருந்தேன்.  
ஆங்கில வகுப்பு - Grammar Class - Wren&Martin 
என்ற வேத புத்தகம். பாடம்: Phrases and Sentences (சொற்றொடர்களும்வாக்கியங்களும்.).

வாத்தியாரின் கேள்வி: 
கீழ்க்கண்ட Pharaseகளை உபயோகித்து 
வாக்கியங்கள் அமைக்க: 
கொடுத்திருந்த ஒரு Phrase — 
"in order to"

தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு 
ஒரு கெட்ட பழக்கம் - முதலில் தமிழில் யோசித்துவிட்டுப் 
பிறகு அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பது. 
நான் தமிழில் யோசித்த வாக்கியம்: 

நாம் வாழ உணவு சாப்பிடுகிறோம். — 
We eat in order to live
ஆனால் எழுதிய ஆங்கில வாக்கியம் — 
"We live in order to eat" (நாம் சாப்பிட வாழ்கிறோம்).

வாத்தியாரிடம் விடைத்தாள் சென்றது. படித்தார் - 
"ஏலேயார் இந்தச் சாப்பாட்டு ராமன்?" என்றார். 
வெட்கப்பட்டு எழுந்து நின்றேன். 
"தீத்துப் பண்டாரம். இப்படியா எழுதுவே?" 
என்று கொஞ்சம் அதிகமாகவே திட்டிவிட்டார். 
ஒரு வாரம்,பசங்களின் கேலி தாங்க முடியவில்லை.
எல்லா விஷயங்கள் போல்இதுவும் மறந்துவிட்டது. 
(நினைத்தது தப்பாயிற்று?)

இப்பொழுதுநான் 3rd Year B.A. 
ஹிந்து கல்லூரிதிருநெல்வேலி. 
முழுப் பெயர் - மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரி - எங்கள் கணக்கு ஆசிரியர் - சோமசுந்தரம் பிள்ளைக்கு 
இந்தப் பெயரைக் கண்டாலே கோபம் வரும். 
அவர் சொல்லுவார் - "என்னவேவெட்கக்கேடு. 
திருநெல்வேலியில் ஒரு பயல்கூட இல்லையா
மதுரையிலிருந்தா கடன் வாங்கிக் கல்லூரி 
நடத்த வேண்டும்?"
(சாரிகதைக்கு வருவோம்....)
எங்கள் சமஸ்கிருத வாத்தியார் 
Prof. Ramamurthy சமஸ்கிருதத்திலும் ஆங்கிலத்திலும் 
மகா மேதை. சொல்லப்போனால்,இவரிடம் சமஸ்கிருதத்தைவிட நிறையக் கற்றுக்கொண்டது bombastic style என்று சொல்லுவார்களேஅந்த ஆங்கிலத்தை.
உதாரணம்:
"Life is livable and lovable when love is lavished upon a living lass".
சுருக்கமாக.....காதல் பண்ணு.
இன்னொன்று:
In this world of calculated cunningness,
hardened hypocrisy and determined
diplomacy,money matters much,man marrying
money makes many miserable mistakes"
பயம் வேண்டாம்: பணம் பத்தும் படுத்தும்
Alliteration  அடுக்கு மொழி மன்னன்.
சமஸ்கிருதம் செத்த மொழியானதற்கு 
இவரும் ஒரு காரணம். ஏனெனில்சமஸ்கிருதத் தேர்வு ஒன்றைத்தான் சமஸ்கிருதத்தைத் தவிர 
எந்த மொழியிலும் எழுதலாம் என்ற விதியைக் 
கொண்டுவந்த சென்னை சர்வகலாசாலை 
Senate Member இவர்.
(மறுபடிகதை நழுவுகிறது ... சாரி)
ஒரு நாள் சமஸ்கிருதப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். 
ரகுவம்ஸ காவியம். ராமரைப் பற்றி ஒரு வர்ணனை. 
"பாஹீமான்" என்ற பதத்தை உபயோகித்துக் 
கவி ராமரை வர்ணிக்கிறார்
அர்த்தம் - "கையுள்ளவன்".
நாக்கில் சனி என்று சொல்வார்களே, 
பகவான் சனிக்கு அன்று வேலையில்லை போலும். 
என் நாக்கில் உட்கார்ந்து என்னை கேள்விக் 
கேட்கத் தூண்டினார். நானும், "சார்சந்தேகம்
எல்லாருக்கும் கை இருக்கிறதே! 
ஏன் ராமரை மட்டும் கையுள்ளவன் 
என்று சொல்கிறீர்கள்" என்று அவரை மடக்கிவிட்ட 
பெருமிதத்தில் கேட்டேன்.
அதற்கு அவர் ஒரு பார்வை பார்த்தாரே
சரிவெளியே போஅதிகப்பிரசங்கி என்று 
சொல்லப்போகிறார்போல் இருக்கிறதே என்று 
மனதுக்குள் வெளியே போக ரெடியாக இருந்தேன். 
ஆனால் அவர் புன்சிரிப்போடு
"பெரியவரே,எல்லோரும்தான் சாப்பிடுகிறார்கள். 
உம்மை மட்டும்ஏன் சாப்பாட்டு ராமன் என்று அழைக்கிறார்கள்?தெரிந்துகொள்ளலாமா?" 
என்றார்.
எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. 
என்றோ நடந்த விஷயம் இவருக்கு எப்படி தெரியவந்தது
அவரைப் பார்த்து "எப்படி" என்று கேட்கத் துணிவில்லை. 
ஆனால்அவர், "கவலைப்படாதேஎனக்குத் தெரியும். 
அது "தேவ ரகசியம்"  சொல்ல மாட்டேன்.
தலை சுக்குநூறாக உடையும்" என்று 
மதன காமராஜன் கதை பாணியில் சொன்னார்.
யார் அந்த Black Sheep ? 
என்னுடைய மூத்த சகோதரனா?
என் பாலிய நண்பர்கள் 2 பேரரா? - 
சந்தேகத்துக்கு விடை "லேது". 
சரி,கதைக்கு வருவோம்...
சமஸ்கிருத வாத்தியார் தொடர்ந்தார்.
அதிகம் சாப்பிடுபவர்களை "சாப்பாட்டு ராமன்" 
என்று சொல்வதுபோல்ராமருடைய கைகள் 
சாதாரணக் கைகள் இல்லை. 
சிவ வில்லை ஒடித்த கை - ராவணன் முதலான 
அரக்கர்களை அழித்த கை - கோதண்டத்தைத் தாங்கிய கை - எல்லோருக்கும் அபயமளிக்கும் கை - 
அதனால்தான் அவரை "பாஹீமான்" — 
நீண்ட கைகள் உடையவர் என்கிறார்.
என்னை ரொம்ப சங்கடத்திற்குள்ளாகிவிட்டோமோ 
என்ற நினைப்பில் என்னைப் பார்த்துச் சொன்னார்:
"நாகராஜா, jokeக்காகச் சொன்ன வார்த்தை. 
சாப்பாட்டு ராமன் என்ற சொல்லைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாதே. 
உனக்குத் தெரியுமாதிருநெல்வேலிக்காரர்கள்
நான் உட்பட நொறுக்குத்தீனிப் பண்டாரங்கள்’. 
சுற்றிப் பார். 5 கடைகள் இருந்தால் 2 கடைகள் 
நொறுக்குத்தீனிக் கடைகள்தான். 
பாதி பிராமண குடும்பங்கள் திவாலானதற்குக் காரணம்,
டின்டின்னாக (டின் விலை 3 ரூபாய்) தேங்காய் எண்ணெய் 
வாங்கி வாரம் தவறாமல் பட்சணம் பண்ணி 
சாப்பிட்டதனால்தான். அது கிடக்கட்டும். 
உணவுக்கு வருவோம்." 
முழு வகுப்பையும் பார்த்துச் சொன்னார்.
தைத்திரீய உபநிஷத்தில் உணவின் பெருமையைப் 
பற்றி நிறையவே சொல்லியிருக்கிறார்கள். 
சுருக்கமாகச் சொல்கிறேன்.

ஐந்து உடம்புகள் கொண்ட ஆன்மாவே மனிதன் 
என்கிறது இந்த உபநிஷதம். 
ஒரு உடம்பு இருப்பது நமக்கெல்லாம் தெரியும். 
அந்த 5 உடம்புகள் யாவை
அன்னமய ஆன்மா (தூல உடம்பு); 
பிராணமய ஆன்மா (பிராண உடம்பு);  
மனோமய ஆன்மா (மன – உடம்பு);  
விஞ்ஞானமய ஆன்மா – (புத்தி உடம்பு); 
ஆனந்தமய ஆன்மா – (ஆனந்த உடம்பு).
முதலில் சொன்ன உடம்பு – புற உடம்பு. 
இதன் வளர்ச்சிக்கு ஆதாரமாக இருப்பது உணவு. 
எனவேதான் மனிதன் உணவால் ஆனவன் என்று குறிப்பிடப்படுகிறான். மேலும் சொல்கிறது
 உணவிலிருந்தே மக்கள் தோன்றினார்கள். 
பூமியில் யாரெல்லாம் உண்டோஎவை எல்லாம் உண்டோ, 
அவை அனைத்தும் உணவிலிருந்தே உண்டாயின. 
அனைத்தும் உணவினாலேயே வாழ்கின்றன. 
கடைசியில் உணவில் கலக்கின்றன. 
அதனால்தான் உணவை அனைத்திற்கும் 
மருந்து என்கிறார்கள்.

பசி என்னும் நோய்க்கான மருந்தே உணவு 
என்கிறார் ஸ்ரீ சங்கரர். 
அதாவது ருசிக்காக உண்ணக் கூடாது. 
அளவுடன் உரிய வேளையில் மட்டும் உண்ண வேண்டும். 
உணவை மருந்துபோல் கையாள வேண்டும் 
என்று முடித்தார்.
முதலில்கேலி செய்யப்பட்டோமே என்ற 
எண்ணம் இருந்தாலும்முடிவில் வாத்தியாரின் 
கவனத்தை ஒரு நல்ல விஷயத்திற்காகத் திருப்பி 
அதனால் நாங்கள் எல்லோரும் பிரயோஜனம் 
அடைந்தோமே என்ற திருப்தியுடன் 
வெளியே வந்தேன்.

உணவைப் பற்றிச் சிந்தித்தவுடன் 
ஞாபகம் வந்தது ஸ்ரீ A. K. செட்டியாரையும் 
அவர் எழுதி வெளியிட்ட உணவு என்ற 
புத்தகத்தைப் பற்றியும்தான்.

முதலில்யார் இந்த 
A. K. செட்டியார்?

நிறையச் சொல்லலாம். சுருக்கமாக: 
தன்னலமற்ற, தியாகத்தை விலை பேசாத
நிறைய சாதனைகள் செய்தாலும் அதைத் தண்டோரா போட விருப்பமில்லாத ஒரு எளிய மனிதர் — 
“gem of a man". ஒரு காந்தீயவாதி. 
இவருடைய மிகப் பெரிய சாதனை,
 "மகாத்மா காந்தி, 20ஆம் நூற்றாண்டு தீர்க்கதரிசி என்ற டாக்குமென்டரி படத்தை எடுத்தவர். 
எடுத்த ஆண்டு 1940. 40 ஆண்டுகளாகக் கிடைக்காத 
காப்பி சமீபத்தில் அமெரிக்காவில் கிடைத்தது. 
இந்த டாகுமெண்டரிக்காகஇவர் ஒரு லட்சத்திற்கு மேலான மைல்கள் பிரயாணம் செய்திருக்கிறார். 
12000 அடி நீளம் அந்தப் படம்.

A.K. செட்டியார் – (1910-1983) - 
முழுப்பெயர் A.Rm.A. கருப்பன் செட்டியார். 
கோட்டையூரில் பிறந்து,திருவண்ணாமலையில் படிப்பு. 
1930இல் உலகப் பயணம். இவருடையப் பயணக் கட்டுரைகள் பிரசித்தம். இவரை உலகம் சுற்றிய தமிழன் 
என்று அழைக்க ஆரம்பித்தார்கள். 
ஜப்பானில் புகைப்படம் பாடம்  படித்து காந்தி 
டாக்குமெண்டரியை எடுத்தார்.

இவர் ஸ்தாபித்து வெற்றிகரமாக நடந்திவந்த 
பத்திரிகை குமரி மலர்”. 
விளம்பரத்தையே நம்பி நடத்தி வரும் 
பத்திரிகைகள் உலகத்தில் இவருடைய குமரி மலர்  
இரண்டே விளம்பரதாரர்களின் தயவில் — 
TVS, அசோகா பாக்குத்தூள் வெளிவந்தது. 
பெரும்பாலும் நடந்தே வருவார். 
டிவிஎஸ் விளம்பரம் வாங்குவதற்காக நான் வேலை 
பார்த்துவந்த விளம்பர கம்பெனிக்கு வருவார். 
அதன் மூலம் இவருடைய அறிமுகம் கிடைத்தது. 
நட்பாக மலர்ந்துகடைசிவரை ஒரு குடும்ப நண்பனாக 
இருந்தார்.

1964ஆம் ஆண்டு இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை. 
மக்கள் பெரும்பாலும் வழக்கமான உணவையே உட்கொண்டு வந்தார்கள். அரிசி சாப்பிடுகிறவர்கள் கோதுமை உணவுக்கு 
மாற மறுத்துவிட்ட காலம். 
மத்திய சர்க்கார்மத்திய உணவு ஆராய்ச்சிக் கழகம் 
என்ற அமைப்பை மைசூரில் அமைத்தது. 
138 வகையான ஆராய்ச்சிகள் நடந்துவந்தன. 
குறிப்பாக,குழந்தை உணவு அமுல் 
தவிட்டிலிருந்து எண்ணெய் எடுத்தல்
முட்டையை பவுடராக செய்தல்
பழங்களைக் கெடாமல் பாதுகாத்தல்
சத்துணவு பவுடர் என்ற பல சாதனைகள். 
இவர்கள் சாதனைகள் யாருக்குமே 
தெரியாதவையாக  இருந்து வந்த.

ஒரு PR effort தேவை என்ற நிலை. 
டிவிஎஸ்தாம்ஸன் (நான் வேலை செய்த கம்பெனி) 
உணவு ஆராய்ச்சிக் கழகம் உதவியுடன் 
A.K.செட்டியார் 144 பக்கத்தில் உணவு என்ற 
புத்தகத்தை வெளியிட்டார். அதில், Dr. இராஜம்மாள் தேவதாஸ்,டாக்டர். எம். எஸ். சுவாமிநாதன் போன்ற 
பெரிய மனிதர்களின் கட்டுரைகள் இருந்தன. 
செட்டியாரின் முகவுரை மட்டும் 40பக்கங்கள். 
உணவுப் பொருள்களின் பெயர் அகராதியும்
அறுசுவை விருந்து என்ற தலைப்பில் உணவு 
பற்றிய பல நாட்டுப் பழமொழிகளின் தொகுப்பையும் 
படித்து ரசிக்கலாம். 
இன்னொரு புத்தகம் grow more vegetables” 
என்ற வீட்டுத் தோட்ட வழிகாட்டி.

பசியைப் பற்றி எழுப்பிய கேள்விக்கு விடையும் 
மேலும் பசியைப் பற்றின சில சுவாரசியமான 
விஷயங்களும்  இந்த உணவுபுத்தகத்தின் 
ஆதாரத்தோடு கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மானம்குலம்கல்விவண்மைஅறிவுடைமை
தானம்தவம்உயர்ச்சிதாளாண்மை – தேனின்
கசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்.    -  (நல்வழி)
(வண்மை —  வாய்மை ,  உயர்ச்சி - மேன்மை,  
தாளாண்மை – விடாமுயற்சி )
இத்தனை கொடிய பசிப் பிணியினைப் பற்றிப் 
பேசாதஎழுதாத பெரியோர்களே இல்லை. 
அன்னதானத்திற்குப் பாத்திரன் யார்
என்று கேள்வியைக் கேட்டுவிட்டு
பதிலுக்கு பசியுள்ளவன் என்கிறார் ஆதி சங்கரர்.

ஆடுவதும் பாடுவதும் ஆளடிமை செய்கிறதும்
ஓடுவதும் தேடுவதும் தங்கமே
ஒரு சாண் வயிற்றுக்கடி — ஞானத்தங்கமே
ஒரு சாண் வயிற்றுக்கடி
— என்கிறார் ஒரு சித்தர்.
சுவேதகேது என்னும் மகான் தமது மகனுக்கு 
உணவளிக்காமல் தண்ணீரை மட்டும் சில நாட்கள் 
கொடுத்துவந்தார். உணவு இல்லாவிட்டால் 
எல்லா அறிவுகளும் மறைந்துவிடும் என்பதை 
நிரூபித்துக் காட்டுவதற்காகவே அவ்வாறு செய்தார் 
என்று சாந்தோக்கிய உபநிஷத் கூறுகிறது.

இராமலிங்க சுவாமிகள்பசியைப் பற்றிச் சொன்ன 
வாக்கியங்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கச் செய்யும்.

ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மயங்குகிறது.
அது மயங்கவே அறிவுக்கறிவாகிய 
கடவுள் விளக்கம் மறைபடுகிறது.
அது மறையவே புருட தத்துவம் சோர்ந்துவிடுகிறது.
அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது.
அது மழுங்கவே குணங்கள் 
எல்லாம் பேதப்படுகின்றன.
மனம் தடுமாறிச் சிதறுகின்றது.
புத்தி கெடுகின்றது.
சித்தம் கலங்குகின்றது.
அகங்காரம் அழிகின்றது.
பிராணன் சுழல்கின்றது.
பூதங்கள் எல்லாம் புழங்குகின்றன.
வாத பித்த சிலேட்டுமங்கள் நிலைமாறுகின்றன.
கண் பஞ்சடைந்து குமிந்து போகின்றது.
காது கும்மென்று செவிடு படுகின்றது.
நா உலர்ந்து வறளுகின்றது.
நாசி குழைந்து சுழல்கின்றது.
தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது.
பற்கள் தளருகின்றன.
மல சல வழி வெதும்புகின்றது.
மேனி கருகுகின்றது.
ரோமம் வெறிக்கின்றது.
நரம்புகள் குழைந்து நைகின்றன.
நாடிகள் கட்டுவிட்டுக் குழைகின்றன.
எலும்புகள் கருகிப் பூட்டுக்கள் நெக்குவிடுகின்றன.
இருதயம் வேகின்றது.
மூளை சுருங்குகின்றது.
ஈரல் கரைகின்றது.
இரத்தமும் சலமும் சுவறுகின்றன.
மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது.
வயிறு பக்கென்று எரிகின்றது.
தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றன.

உயிரிழந்து விடுவதற்கு மிகவும் சமீபத்த 
அடையாளங்களும் அனுபவங்களும் 
மேன்மேலும் தோன்றும். 
பசியினால் இவ்வளவு அவஸ்தைகளும் தோன்றுவது ஜீவர்களுக்கெல்லாம் பொதுவாகவே இருக்கின்றது.

இவ்வளவு அவஸ்தைகளும் – 
ஆகாரம் கிடைத்தபோது உண்டு பசி நீங்க – 
நீங்குகின்றன. 
அப்போது தத்துவங்கள் எல்லாம்- தழைத்து —  
உள்ளம் குளிர்ந்து - அறிவு விளங்கிஅகத்திலும்
முகத்திலும் ஜீவ களையும் கடவுள் களையும் 
துளும்பி  ஒப்பில்லாத திருப்தி இன்பம் உண்டாகிறது.

இப்படிபட்ட இன்பத்தை உண்டுபண்ணுகிற 
புண்ணியத்திற்கு இணை ஏது
இந்தப் புண்ணியவான்களைக் கடவுள் அம்சம் 
என்றே அறிய வேண்டும். என்கிறார் 
அருட்பெரும் ஜோதி ராமலிங்க அடிகள்.

மக்கள் பசியால் வாடியதால்தான் பேரரசுகளும் 
சாம்ராஜ்யங்களும் அழிந்தன.
விவேக போதினி சொல்கிறது 
துடிக்க வைக்கும் பசிக்குப் புசிக்க உதவாத 
உணவு பயனற்றது என்று.

பிறர் பசியை ஒரு பிறப்பில் ஒழித்தல் தன் பசியை 
எப்பிறப்பிலும் ஒழிக்கும் மருந்தாகும் என்கிறார் 
வள்ளுவர் பெருமான்.
அன்ன தானத்துக்குப் பெயற்பெற்றது இந்திய நாடு. 
உணவுப் பிரச்சினை தீராத பிரச்சினையாகவும் 
நிரந்தரப் பிரச்சினையாகவும் உள்ளது. 
அன்ன தானம் நிரந்தரத் தீர்வு இல்லை.
"தனி மனிதனுக்கு உணவு அளித்தல்
மானிட இனம் முழுவதையுமே உயிர்ப்பிப்பதை 
யொக்கும்"என்கிறது குர் ஆன்

தனிமனிதனுக்கு உணவில்லாவிடில் 
ஜகத்தை அழித்துவிடுவோம் என்ற 
பாரதி பாடல் இன்னும் கனவாகவே 
இருக்கிறது.

பசியை ஒழிப்போம்-வளமுடன் வாழ்வோம்


                                                                                                                                                ... கிளறல் தொடரும்.


1 comment:

Anonymous said...

சுவையான கட்டுரை. ஆனால் கேள்விக்கு பதில் தேவை அல்லவா?

பசி வந்திடப் பத்தும் பறந்து போம் !

மானம்
குலம்
கல்வி
வண்மை
அறிவுடைமை
தானம்
தவம்
உயர்ச்சி
தாளாண்மை
காமம்

மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம் (நல்வழி பாடல் 26)