Tuesday, November 01, 2011

தானம்




பிரும்மோபதேசக் கட்டுரை முடிவில் மனிதர்கள்
கடைப்பிடிக்க வேண்டிய தலையாயக் கடமை
தானம்தான் என்று சொல்லியிருந்தேன். 
அதன் விளக்கம் இதோ

க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதியில்
தானம் என்றால் (பிறருக்கு நன்மை செய்யும்
நோக்கத்தில்) தன்னிடம் இருப்பதை அல்லது
தன்னால் முடிந்ததை எந்த விதப் பயனையும் 
எதிர்பார்க்காமல் பிறருக்கு வழங்குதல் 
என்று கூறுகிறது.

தமிழ் படிக்கும் சிறுவர் சிறுமிகளுக்குச் சொல்லிக்
கொடுக்கும் முதல் செய்யுள் – 
ஒளவையாரின் ஆத்திசூடி’. 
சுலபமானது. எளிதில் மனப்பாடம் செய்யக் கூடியது.
அருமையான நீதி போதனைகள் அடங்கியது.
அறம் செய விரும்பு. (அறம் எனப்படும் நல்ல
உதவிகளைச் செய்ய விரும்பு)
இயல்வது கரவேல் (உன்னால் கொடுக்க 
இயன்றதை மற்றவர்களுக்குக்                           
கொடுக்கக் கற்றுக்கொள்)
ஈவது விலக்கேல் (தானம் செய்வதை நிறுத்தாதே)
ஐயம் இட்டு உண். (ஏழை எளியவர்களுக்கு 
தானம் செய்து உண் (சாப்பிடு)
தானமது விரும்பு (தன்னார்வமாக 
நன்கொடை கொடுப்பதை விரும்பு)

ஆக, குழந்தைகளுக்குச் சொல்லும் 
முதல் நீதிப் பாடமே 
தானத்தைப் பற்றித்தான். 
அப்படியிருந்தும் குழந்தைகள்
பெரியவர்களாக வளரும்போது 
ஏன் இதை மறந்துவிடுகிறார்கள்! 
சிந்தியுங்கள். விடை கிடைத்தால்
சொல்லுங்கள்.