Tuesday, September 04, 2012

தர்மத்திற்கும் தர்மத்திற்கும் யுத்தம் நடந்தால்! வெற்றி யார் பக்கம்?


தலைப்பில் எழுத்துப்  பிழை இருக்கிறதோ 
என்று நினைக்கத் தோன்றும்
ஏனெனில் காலகாலமாக எல்லா 
கலாச்சாரங்களிலும்  எல்லா மொழிகளிலும் 
சொல்லப்பட்ட, எழுதப்பட்ட நீதிக் கதைகள் 
எல்லாமே தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் 
நடந்த மோதல்களைப் பற்றித்தான் 
விளக்கிஇருக்கின்றன. 
எல்லாக் கதைகளின் மையக் கருத்தும் 
ஒரே மாதிரிதான். 
ஒரு கதாநாயகன் (ஹீரோ) - 
தர்மத்தின் மொத்த உருவம். 
ஒரு வில்லன் - 
அதர்மத்தின் மறு அவதாரம். 
இரண்டு பேருக்கும் மோதல். 
முடிவு, தர்மம்தான் வெற்றி அடையும். 
அதர்மம் தோல்வி அடையும்.

குறும்புதனத்திற்காக, முடிவை மாற்றி 
அமைக்க யோசித்தால் - 
வில்லன் வெற்றி பெறுவதாக - 
வாசகர்கள், "முடிவு நன்றாக இல்லை" 
என்று தூக்கி எறிந்துவிடுவார்கள்.

"நமக்கேன் வம்பு" என்று 
கதை எழுதுபவர்களும் 
"Beaten Track " ஐப்   பின்பற்றித்  
தங்கள் தொழிலைத்  
தொடர்ந்து நடத்துகிறார்கள்.

ஆனால், எல்லாக் கதாசிரியர்களும், 
"அரைத்த மாவையே அரைப்பார்கள்" 
என்று சொல்ல முடியாது. 
இந்தக் கதாசிரியர் தலைப்பில் சொன்ன 
வித்தியாசமான கேள்வியைக் கேட்டு, 
விடை என்ன என்று ஒரு கதை மூலம் 
விளக்குகிறார்.
யார் இந்த ஆசிரியர்?
மகாபாரத இதிகாசத்தையும் பத்ம, விஷ்ணு, 
கருட முதலிய 18 புராணங்களையும் எழுதிய 
வேத வியாசர்தான். 
இந்தக் கதையின் சொந்தக்காரர். 
வேத வியாசர் எழுதிய 18 புராணங்களில் 
மார்க்கண்டேயப் புராணம் ஒரு அருமையான 
காவியம். 
அதில்தான் இந்தக் கதை வருகிறது. 
இப்பொழுது கதையைப் பற்றித் 
தெரிந்துகொள்ளலாமா?