Tuesday, March 27, 2012

இறைவனை அடைய ஒன்பது வழிகள் - இறுதிப் பகுதி


7. தாஸ்யம் - தொண்டு

ஏழாவது நிலை, ‘தொண்டு’ - ‘தாஸ்யம்’ 
என்று சொல்வார்கள்.
இறைவனிடமோ அல்லது இறைவன் 
சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயங்களிலோ 
தன்னை ஈடுபடுத்திக்கொண்டு 
தொண்டுசெய்வது.

தன்னலமற்ற தொண்டுக்குச் சிறந்த உதாரணம் 
அப்பர் என்று அழைக்கப்படும் 
திருநாவுக்கரசர் சுவாமிகள்.

கோவில்கள்தோறும் சென்று உழவாரத் 
தொண்டு புரிந்தார். அவருக்காக இறைவன் 
தன் தலைமீது கட்டுச்சோறு சுமந்து சென்று
அப்பரின் பசிப் பிணியைத் தீர்த்து
தொண்டர்க்குத் தொண்டன்என்று 
பெயர் பெற்றான்.

அடுத்ததாக நினைவுக்கு வருவது
இளையவனாகிய இலக்குமணனின் 
தன்னலமற்ற தொண்டு. 
தன்னைப் பற்றிக் கொஞ்சம்கூடச் 
சிந்தனையில்லாமல் ராமனுக்குத் தொண்டு 
செய்வதே தன் வாழ்க்கையின் 
லட்சியம் என்று செயல்பட்டவன். 
தாஸானு தாஸன், அடியேன் என்றெல்லாம் 
வெறும் வாய் வார்த்தைகளாகச் சொல்லாமல் 
இறைவனுக்கும் மற்றவர்களுக்கும் 
தொண்டுசெய்வது ஒரு சிறந்த செயலாகும். 
கடவுளுக்கு மிகவும் பிரியமான ஒரு காரியம்  - 
தொண்டு.

8. சக்யம் - சிநேகம்

எட்டாவது நிலை, ‘சிநேகம்’ - ‘சக்யம்என்பர்.

மற்ற மதங்களில் இல்லாத ஒரு பெருமை 
இந்து மதத்திற்கு உண்டு. 
மற்ற மதங்களில் இறைவனோ அல்லது 
அவருடைய தூதரோ ஒரு மதிப்புக்குரிய 
உயர்ந்த மனிதர். 
கடவுள் பெரியவர்-, நாம் எல்லாம் அவரின் 
அருளைப் பெற ஆசைப்படும் ஜீவன்கள். 
இந்த (relationship) உறவில் மாறுதல் கிடையாது. 
இந்து மதம் இதிலிருந்து வேறுபட்டது. 
உன் இஷ்ட தெய்வத்தை நீ எப்படி 
வேண்டுமானாலும் தொழலாம். 
உனக்கும் உன் இறைவனுக்கும் 
உண்டான உறவு. உன்னுடைய 
மனப்பக்குவத்தைப் பற்றியது. 
குழந்தையாக, கணவனாக, காதலனாக
நண்பனாக நீ உன் தெய்வத்தைப் பார்த்து 
ரசித்துத் தொழலாம்.

அதில் இறைவனை நண்பனாகப் பார்ப்பது 
சக்யம்எனப்படும்.

இந்த வகையில் புராணிகர்கள் 
எல்லோராலும் அடிக்கடி சொல்லப்படுபவர்
தம்பிரான் தோழன்என்று பெயர் 
பெற்ற சுந்தரமூர்த்திநாயனார். 
செல்லாமனைக்கு ஈசுவரனேயே தூது’ 
அனுப்பக்கூடிய நட்பு அவருடையது.
கடவுளை நண்பனாகப் பாவித்த 
இன்னொரு புராண புருஷன் - அர்ச்சுனன்.

ராதை-கிருஷ்ண சக்ய பாவம் 
ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

எனவே, நட்பு - சிநேகம் 
ஈசத்துவம் பெற்றது.

9. ஆத்ம நிவேதனம் - ஒப்படைத்தல்

ஒன்பதாவது நிலை, ‘ஒப்படைத்தல்’ 
ஆத்ம நிவேதனம் என்ற நிலை.

உடல், பொருள், உயிர் ஆகிய அனைத்தையும் 
இறைவனுக்கே அர்ப்பணமாக்குவது. 
உனக்கே அடைக்கலம்என்று சொல்லி 
தங்களை முழுவதுமாக இறைவனிடம் 
ஒப்படைத்து பேறுபெற்ற மகான்கள் 
எத்தனையோ பேர்.

சூடிக் கொடுத்த நாச்சியார்என்று 
பெயர்பெற்ற ஆண்டாள்
நாராயணனே! நமக்கே பறை தருவான்’ 
என்று பாடித் திருமாலுக்குத் தன்னை 
முழுவதும் ஒப்படைத்து மோட்ச 
நிலையை அடைந்தார். 
மாணிக்கவாசகர். மீராபாய் இப்படி 
ஆத்ம நிவேதனத்தை ஒரு பக்தி 
மார்க்கமாகக் கருதி இறைவனை 
வழிப்பட்டார்கள்,

கடந்த 3 பகுதிகளில் இறைவனை 
அடைய உதவும் 9 வழிகளைப் 
பற்றிச் சுருக்கமாக விவாதித்தோம்.

மறுபடி சொல்லத் தோன்றுகிறது. 
இந்து மதம் உங்களுக்கு எந்தக் 
கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. 
பக்தி பண்ணி இறைவனை அடைய 
வேண்டும் என்பதுதான் முக்கியம். 
எப்படி பக்தி பண்ணபோகிறீர்கள் 
என்பது உங்கள் இஷ்டம்.

எங்கேயோ படித்தது, மூலம் ஞாபகத்தில் 
இல்லை. கருத்து இதுதான்.

ஒரு பக்தர் ஆண்டவனிடம் பிரார்த்திகிறார். 
ஆண்டவனே, என்னுடைய இரண்டு 
குற்றங்களைப் பொறுத்து மன்னிக்க வேண்டும். 
முதலாவது, நான் போன ஜன்மத்தில் 
உம்மை பக்தி பண்ணாதது. 
இரண்டாவது-, அடுத்த ஜன்மத்தில் நான் 
உம்மை பக்தி செய்யப்போவதில்லை 
என்பதற்காக. 
அதெப்படி நான் போன ஜன்மத்தில் 
உம்மை பக்தி செய்யவில்லை என்பது 
எனக்குத் தெரியும் என்று கேட்கலாம். 
நான் பக்தி பண்ணியிருந்தால் 
இந்த ஜன்மம் எனக்கு கிடைத்திருக்காதே
அடுத்த ஜன்மத்தில் நான் உம்மை பக்தி 
பண்ண மாட்டேன். 
ஏனெனில், எனக்கு அடுத்த ஜன்மம் 
என்று இருக்காதேஎன்றார்.

பாரதியின் கீதாசாரப்படி பக்தி செய்து 
பிழையுங்கள், பலன் கருதாது உழையுங்கள்.

பக்தி வளரட்டும்.

நன்றி கலைமாமணி
திரு. சரவணபவானந்தர்
                                                                 
... கிளறல்  தொடரும்.

No comments: