Monday, April 30, 2012

தெரிந்த தமிழ்- தெரியாத புலவர்கள்-1

அந்தகக் கவி வீரராகவ முதலியார்

எத்தனையோ புலவர்கள் இந்த நாட்டுக்கும் தமிழுக்கும் 
சேவை செய்திருக்கிறார்கள். 
அவர்கள் இப்பொழுது இல்லை. 
அவர்கள் பாடிக் கொடுத்த பாடல்கள்தான் 
சிரஞ்சீவியாக இன்னும் ஒலித்துக்
கொண்டிருக்கின்றன. 
தமிழ் தெரிந்த பெருபான்மையோருக்கு 
திருவள்ளுவர், கம்பர், ஔவையார், அருணகிரிநாதர்
பட்டினத்தார், ராமலிங்க அடிகள், காளமேகப் புலவர்... 
இவர்களைப் பற்றி ஓரளவு தெரிந்திருக்கும். 
ஆனால், எத்தனை பேருக்கு தெரியும்
தமிழ் புலவர்கள் நூற்றுக்கும் மேலே 
இருந்திருக்கிறார்கள் என்று. 
இவர்களில் பெரும்பான்மையோர் 
வறுமையினால் வாடி, கஷ்டப்பட்டு
வயிற்றுப்பிழைப்புக்காக 
அரசர்களையும், தனவந்தர்களையும் புகழ்ந்துப் 
பாடி வாழ்க்கையை நடத்தி வந்திருக்கிறார்கள். 
இதில் பாராட்ட வேண்டிய விஷயம் 
என்னவென்றால், எந்த சூழ்நிலையிலும் 
இந்தப் புலவர்கள் தங்கள் நகைச்சுவை 
உணர்வை (sense of humor
விட்டுக்கொடுத்ததில்லை. 
அதிகமாகப் பரிச்சயம் இல்லாத 
சில புலவர்களைப் பற்றியும் அவர்கள் படைத்த 
சில பாட்டுகளைப் பற்றியும் 
சுருக்கமாகத் தெரிந்துகொள்ளலாமே!

இதோ, முதலில் 
அந்தகக் கவி வீரராகவ முதலியார்.
 

இவர் ஒரு பெரும் புலவர். காஞ்சிபுரம் ஜில்லாவில் 
உள்ள பொன் விளைந்த களத்தூர் என்ற கிராமத்தில் 
15ஆம் நூற்றாண்டில் பிறந்தவர். 
பிறவியிலேயே அந்தகர் - பார்வை இல்லாதவர். 
ஆனால் இந்த ஊனத்தை அவர் பொருட்படுத்தியது இல்லை. 
தமிழைக் கற்று இளமையிலேயே அழகுத் 
தமிழில் கவிபாடும் திறமையை வளர்த்துக்கொண்டார். 
ஓதாது உணர்ந்தார்போல் சகல கலையிலும் 
தேர்ச்சி பெற்றார். 

பொருள் தேடிப் பல தேசங்களுக்குச் சென்று 
வந்திருக்கிறார். 
ஈழ நாட்டுக்கும் (ஸ்ரீலங்கா) சென்று பாடிப் 
பரிசும் பெற்றிருக்கிறார். 
பரிசு என்றால் சாதாரணப் பரிசா
யாழ்ப்பாணத்தையே (Jaffna) பரிசாக 
அடைந்த புலவர். 
இவரோ, இவருடைய சந்ததியார்களோ
இந்தப் பரிசின் ஆவணங்களை வைத்திருந்தால் 
இன்றைக்கு சட்டப்படி உலக கோர்டில் 
வாதாடி யாழ்ப்பாணத்தை மீட்டிருக்கலாம். 
(இது Jokeதான் சீரியஸாக ஈழப்பிரச்சினைபற்றி 
எழுதுகிறேன் என்று நினைக்க வேண்டாம்.)

இவர் இலங்கைக்குச் சென்றபோது 
பரராஜ சேகரன் என்ற அரசன் ஆண்டுவந்தான். 
தமிழிலும் தமிழ்ப் புலவர்களிடம் அதிகப் 
பற்று உள்ளவன். 
நம் புலவர் அரசனைப் பார்க்க சென்றபோது 
கண்ணில்லாதவரை அரசன் காண்பது கூடாது 
என்று கருதி அமைச்சர்கள் ஒரு திரையைப் 
போட்டுவிட்டனர். 
குருவிடம் திரை போட்ட விஷயத்தைச் சூசகமாக 
சிஷ்யன் சிவசிதம்பரம்என்றான். 
கவிராயருக்குச் சுருக்கென்றது. 
சிதம்பரத்தில் சிதம்பர ரகசியம் என்று 
ஒரு திரை உண்டு. 
கவிராயர் அண்ணாமலை என்றார். 
உடனே திரை தீப்பிடித்து எரிந்தது.

மன்னரே, எனக்குக் கண்ணில்லை 
என்று நினைக்கிறாயா
எனக்கு ஞானக்கண் உண்டுஎன்றார்.

உடனே அரசர், “அப்படியாயின் 
இப்பொழுது நான் எப்படியிருக்கிறேன்” 
என்றார்.

அரசன் கையில் வில் ஏந்தி நின்றான்.

கவிராயர் கலைப் பிடித்த என் முன்னே 
நீ சிலை பிடித்து நிற்கிறாய். 
இங்கே இராவணனோ, மானாகிய 
மாரீசனோ ஏழு மா மரமோ 
(ராமர் ஒரே அம்பினால் 7 மரங்களை வீழ்த்தியது) 
இல்லையே? என்று கருத்துப்பட

வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை
ஏழு மராமரமோ வீ ங்கில்லை ஆழி
அலையடைத்த செங்கை யபிராமா வின்று
சிலையெடுத்த வாறேமக்குச் செப்பு
என்ற வெண்பாவை பாடினார். 
அரசன் மகிழ்ந்து பரிசாக யாழ்ப்பாணம் 
நகரத்தையே வழங்கினான். 

இவர் சிறு வயதில் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார். 
ஒரு சமயம் இவருடைய பிரயாணத்திற்காக 
இவர் மனைவி கொஞ்சம் தயிர் சாதத்தைக் 
கொடுத்து அனுப்பி வைத்தாள். 
சாப்பாடு நேரம். கவிராயர் ஒரு குளக்கரையில் 
உணவுப் பொட்டலத்தை வைத்துவிட்டுக் 
கை, கால் சுத்தம் பண்ணத் தயாரானார். 
அப்பொழுது ஒரு நாய் அந்த சாதத்தை 
எடுத்துக்கொண்டு வேகமாக ஓடிவிட்டது. 
வேறு சாப்பாடு கிடையாது.

அகோரப் பசி. வயிற்றெரிச்சல்
பசியின் கொடுமை பாட்டாக வெளிவருகிறது. 
இதோ அந்தப் பாடல்.

சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து
பாராறு நான்முகன் வாகனந் தன்னைமுன் பற்றிக்கவ்வி
நாரா யணனுயர் வாகன மாயிற்று நமமைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே

அர்த்தம்

சீராடையற்ற வயிரவன் -- வயிரவன் சுவாமிக்கு
ஆடை கிடையாது அவருடைய வாகனம் - நாய்
அன்னம் - சாதம்; பிரம்மாவுடையை வாகனம்
ஓடிய வேகம் - நாராயணின் வாகனமான 
கருடனைப் போல் மை வாகனன் - மை. ஆடு. 
இதில் ஏறுபவர் அக்னி பகவான்.
வயிரவன் வாகனம் - நாய் - 
பிரம்மாவுடைய வாகனமான
அன்னத்தை - சாதத்தைக் கவ்விக்கொண்டு 
நாராயணனின் வாகனம் - 
கருடன் போல் - ஓடிவிட்டது.

மை வாகனன் - அக்னி பகவான் என் வயிற்றில் 
புகுந்துவிட்டான். 
பசித் தீ கொழுந்துவிட்டு எரிகிறது. 

வாகனம் என்ற வார்த்தையை வைத்து 
ஒரு ஆட்டம் ஆடிவிட்டார். 
இது எப்படியிருக்கு?

இன்னொரு சாம்பிள் -

இவர் ஒரு சமயம் ராமன்என்ற பணக்காரரைப் 
புகழ்ந்து பாடினார். மகிழ்ச்சி அடைந்த ராமர்
நம்முடைய கவிக்கு ஒரு யானையைப் பரிசாக 
அளித்துக் கௌரவித்தார். 
புலவருக்கு தர்மசங்கடம். 
தனக்கும் தன் மனைவிக்கும் உணவு 
கிடைப்பதே கஷ்டம். 
இதில் யானைக்கு எப்படித் தீனிப் போடுவது
இருந்தும் யானையை வீட்டுக்கு 
அழைத்துச் சென்றார்.

மனைவி ஒரு புத்திசாலி. கணவன் வாழ்க்கைக்குத் 
தேவையான ஒரு நல்ல பரிசைக் கொண்டு வருவார் 
என்ற நம்பிக்கையில் வீட்டுக்குள் சமையல் 
செய்துகொண்டிருந்தாள். 
கணவன் வருவதை அறிந்து-
வீட்டுக்குள் இருந்துக்கொண்டே

என்ன பரிசு கொண்டு வந்திருக்கிறீர்கள்?” 
என்று கேட்டாள்.

கவிராயருக்கு சங்கடமான நிலை. 
வேறு பரிசு இல்லை. யானைதான் கிடைத்தது” 
என்று மனைவியிடம் சொல்லி அவள் மனதை 
நோகச் செய்ய விருப்பம் இல்லை.

ஆகையால், வெளியில் இருந்தபடியே யானைக்கு 
உண்டான தமிழில் உள்ள பல்வேறு சொற்களை 
ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி விளையாடுகிறார். 
அந்தச் சொல்லுக்கு அவருடைய புத்திசாலி மனைவி 
வேறு அர்த்தத்தை நினைத்துக்கொண்டு பதிலளிக்கிறார்.

இம்பர் வான் எல்லை இராமனையே பாடி
என் கொணர்ந்தாய் பாணா நீ என்றாள் பாணி
வம்பதாம் களப மென்றென் பூசுமென்றாள்
மாதங்க வேழ மென்றேன் தின்னும் என்றாள்
பக டென்றேன் உழம் என்றாள்
பழனம் தன்னை கம்பமா என்றேன் நல்காரியம் என்றாள்
கைம்மா என்றேன் சும்மா கலங்கினாளே.



கவி மனைவி - 
வள்ளல் ராமனைப் பாடி 
என்ன கொண்டுவந்திருக்கிறீர்கள்?

களபம் -யானை;சந்தனம்:
மேனியில் பூசிக்கொள்ளுங்கள்.
மாதங்கம் -யானை; மா(பெறிய)தங்கம்   
பெரும் அளவிலான தங்க நகைகளோ?
பம்பு சீர் வேழம் (நற்குணமுடைய) யானை - கரும்பு   
சாப்பிடுங்கள்
பகடு -யானை;எருமைக் கடா
வயல் வெளிகளை வளம் செய்ய                 
உபயோகப்படுத்துவோம்.

கம்ப மா (எப்பொழுதும் அசைந்துகொண்டிருக்கும் 
யானை)-
கம்பு என்னும் தானியத்தில் செய்யப்பட்ட மா          
களி செய்ய உதவும்.
கைம்மா (தும்பிக்கையுடைய யானை)
மனைவிக்கு இதற்குமேல் பதில் 
சொல்ல வார்த்தையில்லை. 
யானையைத்தான் பரிசாகக் கொண்டு 
வந்திருக்கிறார் என்று கலங்கிவிட்டாள்.

இவர் பாடிய பாடல்களில் இவருடைய தமிழ்ப் 
புலமையையும் நகைச்சுவை உணர்வையும் 
நன்றாகக் காண முடிகிறது. 
தினமும் இவரால் தொழப்படும் திருமாலைப் பற்றி 
இவர் பாடியப் பாடல் இதோ:
சோனையும் காத்து நல் லானையும் காத்துத்
 துரோபதை தன் தானையும் காந்து
 அடைந்தானையும் காத்து தடத்து அகலி
 மானையும் காத்து அனுமானையும் காத்து
 மடுவில் விழம் ஆனையும் காத்தவனே!
 எனைக் காப்பது அரிதல்லவே!

மலையைக் குடையாகப் பிடித்துச் சோனையைக் 
காத்தவனே, நல்லவரான தருமரையும், துரோபதியையும் 
காத்தவனே, சரணாகதி அடைந்த விபீஷணனையும்
அகலியையும், அனுமானையும், யானையையும் காத்த 
உனக்கு என்னைக் காப்பாற்றுவது பெரிய காரியமா?

இவர் காலமானபோது இவர் சமகாலப் புலவர்கள் 
இவரைப் பாராட்டி இரங்கற்பா எழுதி  
இவரைச் சிறப்பித்திருக்கிறார்கள்.

ஆதாரம்:

கிருபானந்தவாரிய சுவாமிகள்
சிதம்பரம் நடராஜ தீக்ஷிதர்
புலவர் கீரன் மற்றும்
இதர சமயச் சொற்பொழிவாளர்கள்.

... கிளறல் தொடரும்.

3 comments:

இமயமும் இளைய தலைமுறையும் said...

useful informations about tamil literature.

Anonymous said...

நல்ல சுவையான மாணிக்கம்! - எங்கேங்கோ தேடி இங்கு கண்டேன். பதித்தற்கு மெத்த நன்றி.

Unknown said...

யானைக்கு நம் தமிழில் இவ்வளவு சொற்களா,மிக பெருமை