Monday, May 07, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 2


சீனிச் சர்க்கரைப் புலவர்

சீனியும் சர்க்கரையும் ஒரே பொருளைத்தான் 
குறிக்கின்றன. ஆனால், எது சீனி? எது சர்க்கரை
என்பது நீங்கள் எந்த மாவட்டத்துக்காரர் 
என்பதைப் பொறுத்தது.

நான் திருநெல்வேலிக்காரன். 
முதல் முதலில் (1953) சென்னை வந்தபோது 
ஒரு ஹோட்டலில் போய் ஒரு கப் காப்பி 
ஆர்டர் பண்ணினேன். சர்வரிடம் கொஞ்சம் 
அதிகமாகச் சீனி போட்டுக் கொண்டுவரச் 
சொன்னேன். (அது அந்தக் காலம். 
இப்பொழுது sugarless தான் - டயபிடிஸ் இல்லை) 
அவன் ஒரு முழி முழித்தான். 
நான் ஆங்கிலத்தில் sugar என்றேன். 
உடனே, புரிந்துகொண்டு, வெள்ளை பொடிச் 
சர்க்கரையைப் போட்டு கொண்டுவந்தான். 
மேலும், என்னிடம் சார், இனிமேல்
சர்க்கரை என்று சொல்லுங்கள்” 
என்று அட்வைஸ் பண்ணினான். 
நான் மனதுக்குள் வா, மகனே, எங்கள் ஊர்ப் பக்கம். 
சாதாரண ஹோட்டலில் போய்
சர்க்கரை என்று சொல்லிப்பார். 
கருப்பட்டித் தண்ணீர்தான் கொண்டுவருவான். 
பெரிய ஹோட்டல்களில் அச்சு வெல்லத்தை 
(கோபுரம் மாதிரி இருக்கும்) 
உடைத்துப் பொடியாகக் கொண்டுவருவார்கள். 
சீனி என்று சொன்னால் மட்டும்தான் 
வெள்ளைப் பொடி சர்க்கரைக் கிடைக்கும்” 
என்று கருவிக்கொண்டேன். 
400 மைல் தூரம்தான். 
நெல்லைக்கும் சென்னைக்கும் 
இதற்கு நடுவில் எத்தனை விதமான 
டமில்ஸ்’.

வாழ்க தமிழ்.

Diversionக்கு மன்னிக்கவும்.

புலவரைச் சந்திப்போம்.

சர்க்கரைக் கட்டிஎன்று செல்லமாகக் 
குழந்தைகளைக் கொஞ்சுவது உண்டு. 
பெயராகவே வைப்பது இதுதான், 
முதல் தடவை என்று நினைக்கிறேன். 
இந்தப் புலவர், ரொம்பவே இனிமையானவராக 
இருந்திருக்க வேண்டும். இவருடைய பெற்றோர்
ஒரு double emphasisக்காக சீனியையும் சர்க்கரையும் 
சேர்த்து சீனிக் சர்க்கரை என்று 
பெயர் வைத்துள்ளார்கள். 
இவ்வளவு இனிமையான பெயர் வைத்துக்கொண்ட 
இந்தப் புலவர் பிரபலமானது, ஒரு காதல் காவியம் 
எழுதியோ, வீரக் கவிதை எழுதியோ அல்ல. 
இப்பொழுது உலகத்தில் உள்ள எல்லா 
நாடுகளாலும் வெறுக்கப்படும் ஒரு பொருளைப் 
பற்றி எழுதிப் பிலபலமடைந்திருக்கிறார். 
அதுதான் விளம்பரதாரர்கள் அடிக்கடி 
காரம், மணம், குணம், சுவைஎன்று 
விளம்பரம் செய்யும் புகையிலை.

இவர் எழுதிப் பிரபலமானது - 
புகையிலை விடு தூது 
என்ற தூது இலக்கியம்.

சீனிச் சர்க்கரைப் புலவர் பரம்பரைப் 
புலமை வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். 
இவருடைய தகப்பனார் சர்க்கரைப் புலவர்.
சாந்துப் புலவரின் தம்பி
இவர் காலம், 18ஆம் நூற்றாண்டின் 
பிற்பகுதி - 19ஆம் நூற்றாண்டின் 
முற்பகுதி.

தூது இலக்கியங்கள் - பிரபந்தங்கள் - 
எல்லா இலக்கிய மொழிகளிலும் உண்டு. 
எல்லோருக்கும் பரிச்சயமானது 
காளிதாசனின் மேக சந்தேசம்என்ற நூல். 
மேகத்தை தூதாக அனுப்பித் 
தன் தாபத்தை வெளிபடுத்துவதாக அமைந்தது.

தமிழிலும் நிறைய தூது இலக்கியங்கள் 
பிரபலமாக இருக்கின்றன. 
இளம் வயதில் கவிதை என்றால் 
என்ன என்று தெரியாமலேயேப் 
பாடிப் பரிசுப் பெற்றது 
நாராய் நாராய் செங்கல் நாராய்” 
என்று தொடங்கும் சத்திமுற்றத்துப் புலவர் 
எழுதிய நாரை விடு தூது.

SMS, twitter, email, skype இல்லாத காலம். 
எது கிடைத்தாலும் அதைத் தூதுவனாகக் 
கற்பனை பண்ணித் தான் சொல்ல வேண்டிய 
செய்தியைக் கவிநயத்துடன் எழுதினார்கள்  
அந்தக் காலத்துப் புலவர்கள். 
முதலில் பத்து தூது காவியங்கள்தான் 
இருந்ததாம்.

எகினம், மயில், கிளி, மழை, பூவை, சகி
குயில், நெஞ்சம், தென்றல்-, வண்டு என்று. 
பிறகு பணம், தமிழ், மான், சவ்வாது
நெல், விறலி என்று நிறைய வந்தன.

கழுதையையும், செருப்பையும்கூட 
தூதுவனாக அனுப்பியிருக்கிறார்கள்.

நம்முடைய புலவர் புகையிலையைத் 
தூதுவனாக ஆக்கிக் கவிதை எழுதியிருக்கிறார். 
புகையிலை விடு தூதுஇப்புலவரால் 
பழனி ஆண்டவர் மீது இயற்றப்பெற்றது. 
ஒரு தலைவி புகையிலையை அக்கடவுள் பால் 
தூதனுப்புவதாக அமைந்திருக்கிறது.

பாட்டுடைய தலைவரான பழனி ஆண்டவருக்குப் 
புகையிலை சுருட்டு நிவேதனமுண்டு 
என்று சிலர் சொல்வதுண்டு. 
விராலி மலை முருகனுக்கு 
அப்படியொரு நிவேதனம் உண்டென்று 
சொல்கிறார்கள்.

இந்தத் தூது 59 கண்ணிகள் கொண்ட 
பாட்டு. முதல் 53 கண்ணிகளில் 
புகையிலையின் பெருமைகளை விளக்குகிறார். 
தூது விடும் செய்தியைக் கடைசி 
6 கண்ணிகளில் சொல்லியிருக்கிறார்.

இந்தப் பாட்டில் புகையிலையின் பெ
ருமையையும்-, புகையிலையை வைத்துச் 
செய்யும் சுருட்டு, பொடி போன்ற 
பொருள்களையும் பாராட்டியிருக்கிறார்.

புகையிலையை - திருமால், சிவன், பிரம்மன்
தமிழ், முருகக் கடவுள் இவர்களுடன் 
சிலேடை வகையில் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார். 
புகையிலை வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு 
வந்த பொருள் என்றாலும் இவர் 
மும்மூர்த்திகளையும் புகையிலையையும் 
இணைத்து ஒரு கற்பனைக் கதையைச் 
சொல்லியிருக்கிறார்.

ஒருமுறை மும்மூர்த்திகளுக்குள் ஒரு வழக்கு 
உண்டாயிற்று. தேவ சபை கூடியது. 
தேவர்கள் வழக்கைக் கேட்டவுடன்
உங்கள் வழக்கைப் பிறகு கவனித்து 
பதில் சொல்கிறோம்என்று சொல்லி 
சிவன், பிரம்மா, விஷ்ணுவிடம் முறையே 
வில்வம்-, புகையிலை, திருத்துழாய் (துளசி) 
கொடுத்து மறுநாள் அவற்றைக் 
கொண்டுவரச் சொன்னார்கள்.

சிவபெருமான் வாங்கிய வில்வத்தை 
கங்கையின் அலை கொண்டுபோயிற்று. 
அதே மாதிரி, விஷ்ணுவின் திருத்துழாய் 
பாற்கடலில் விழுந்துவிட்டது. 
பிரம்மா தன்னிடமுள்ள புகையிலையைக் 
கலைமகளிடம் கொடுத்திருந்ததால் 
அது பத்திரமாக இருந்தது.

மறுநாள், தேவ சபையில், சிவனும் விஷ்ணுவும் 
தங்கள் பத்திரங்கள் போயின என்றார்கள். 
பிரம்மா, கலைமகளிடமிருந்து புகையிலையை 
வாங்கி இதோ, என் பத்திரம்
என்னுடையது போகையிலைஎன்று கூறினார். 
பிரம்மா தேவர் வழக்கில் வென்றார். 
அன்று முதல் இதற்கு பிரம்ம பத்திரம் 
என்ற பெயர் வந்தடைந்தது. 
இந்தக் காவியத்தைப் படித்தால்
சுருட்டை ஒரு தரமாவது இழுத்துபார்க்கலாமே 
என்று தோன்றும். சுருட்டு, புகையுடையது,  
அனலேந்துவது, நுனியிற் சாம்பலுடையது. 
ஆகாயம் சுருட்டுப் புகை போல 
இருப்பதால் இறைவன் ஆகாயமும் 
திருமேனியாக ஆனாரென்பர்.

கற்றுத் தெளிந்த கனப்ரபல வான்களுமுன்
சுற்றுக்கு ளாவதென்ன சூழ்ச்சியோ” 
என்று சுருட்டை நினைத்துப் பாராட்டியிருக்கிறார்.

பொடியின் மகிமை இன்னொரு கண்ணியில்
வாடைப் பொடிகதம்ப மானவெல்லா 
முன்னுடைய சாடிப் பொடிக்குச் சரியுண்டோ

ஒரு சிட்டிகை பொடிக்காக மனிதரை 
ஏங்கவைப்பதால்அதை
சொற்காட்டு நல்ல துடிகார ராரையும்போய்ப்
பற்காட்ட விட்ட பழிகாராநிந்திக்கிறார்.

புகையிலை விளையும் இடங்களைப் பற்றிப் 
பாடியிருக்கும் இவர், பரத்தை வயலில் 
விளையும் புகையிலையே உசத்தி என்கிறார்.


தயவுசெய்து இதை Tobacco lobbyக்கு 
சொல்லிவிடாதீர்கள்.

ஆதாரம்
சீனிச் சக்கரைப் புலவர் இயற்றிய புகையிலை விடு தூது

பதிப்பாசிரியர்
மகாமகோபாத்தியாய கலாநிதி டாக்டர் உ. வே. சாமிநாதையர் (1939)
விலை: இரண்டணா.                                      


... கிளறல் தொடரும்

No comments: