Sunday, May 13, 2012

தெரிந்த தமிழ் - தெரியாத புலவர்கள் 3


இரட்டைப் புலவர்கள்

கி.பி. 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இந்த இரண்டு 
புலவர்கள் பிறப்பில் இரட்டையர்கள் அல்ல. 
அத்தை மகன், அம்மான் மகன் உறவு 
முறையில் சேர்ந்து வாழ்ந்தவர்கள்.

சோழ நாட்டில் ஆலந்துறையில் செங்குந்தர் 
வேளாளர் குலத்தில் பிறந்தவர்கள். 
ஒருவருக்குப் பிறவியிலேயே கண் 
பார்வை கிடையாது. மற்றவருக்குக் கால்கள் 
கிடையாது. பெற்றோர்களுக்குக் கவலை. 
பெரியவர்கள் குழந்தைகளை ஊனம் இருந்தாலும் 
ஞானம் மிகப் பெற்று, ஞாயிறு போன்று 
பிரகாசித்து, ஞாலத்தை (தேசத்தை) வலம் 
வருவார்கள்என்று வாழ்த்தினார்கள். 
முன்னவருக்கு முதுசூரியர் என்றும் 
இளையவருக்கு இளஞ்சூரியர் என்றும் 
பெயரிட்டனர்.


சிறு வயதிலேயே தமிழில் மிகத் தேர்ச்சி 
அடைந்தார்கள். சிவபெருமான் மீது பக்தி. 
பெரியவர்கள் வாக்குப்படி தேசங்கள்தோறும் 
சென்று பாடிப் புகழ் சேர்த்தார்கள். 
இவர்கள் எப்படி தேச சஞ்சாரம் 
செய்தார்கள் என்பதைக் கீழ்கண்ட 
பாடல்  விளக்குகிறது.

அத்தை மகன்குரு டம்மான் மகன்முட 
மாகிக்கீழ்மேல்
ஒத்துறைந் தேகூறு பாடோ(டு) அணிகொள் 
உலப்பில்கவி
முத்தரில் ஓதிஏ கம்பர் உலாமுன் மொழிந்தவரும்
சித்தம் உவப்பத் திரிந்தோர்செங் 
குந்த சிலாக்கியரே

இதன் பொருள்.

குருடராகிய அத்தை மகன், முடவராகிய 
அம்மான் மகன் என்னும் இருவரும் 
பார்வை இழந்தவர் கால் இல்லாதவரைத் 
தூக்கி நடக்க, கால் இல்லாதவர் அவருக்கு 
வழிக்காட்ட, இருவரும் ஒற்றுமையாக வாழ்ந்து 
ஒரு பாடலின் முன்பகுதியைக் 
கால் இல்லாதவர் பாடுவது
பின்பகுதியைப் பார்வை இழந்தவர் பாடுவது 
என்ற முறையில் அழகிய அழியாத 
பாடல்களை இயற்றி ஏகாம்பர நாதர்மேல் 
உலா பாடிக் கவி வல்லவர்களாக உலாவி 
வந்த இரட்டைப் புலவர்கள் 
செங்குந்தருக்குள்ளே மிக உயர்ந்தவர்கள். 
இவர்கள் கலம்பகம் பாடுவதில் 
சமர்த்தர்கள். 
தமிழ் இலக்கணத்தில் கலம்பகம் என்பது 
கதம்ப மலர் மாலையைப் போன்று 
18 உறுப்புகள் அமைந்த இலக்கியம். 
கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ 
என்று பெயர் பெற்றிருந்தனர்.

இவர்களுடைய பாடல்களிலிருந்து ஓரிரண்டு 
மாதிரிக்கு இதோ:-

ஒரு சமயம் இரட்டைப் புலவர்கள் மதுரைக்குப் 
போனார்கள். அங்கே பொற்றாமரைக் 
குளக்கரையில் கால் இல்லாதவர் 
அமர்ந்திருந்தார். அந்தகர் தண்ணீரில் இறங்கித் 
துணியைத் தோய்த்து அலசுகிறபோது 
துணி கையை விட்டு விலகிவிடுகிறது. 
கண் தெரியாமல் இப்படி அப்படி என்று 
தேடுகிறார். 
கரையில் இந்தக் காட்சியைப் 
பார்த்துக்கொண்டிருந்த 
முடவர் கேலியாக.

அப்பிலே தோய்த்திட் டடுத்தடுத்து நாமதைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ

(அப்பு - தண்ணீர்; தப்புதல் - தோய்த்தல்;
நீ தப்பின(தோய்த்த), அது உன்னைவிட்டுத் 
தப்பி போச்சு

இதைக் கேட்ட அந்தகர் பாடுகிறார்
                                    - செப்பக் கேள்
ஆனாலும் கந்தை, அதிலுமோர் ஆயிரங்கண்
போனால் துயர் போச்சுப்போ

கந்தல் துணி - ஆயிரம் ஓட்டை - போனால் 
போகட்டும் நம்மை பிடிச்ச துன்பம் 
போச்சு போஎன்று. 
முடவர் விடவில்லை

கண்ணாயிரமுடைய கந்தையேயானாலும்
தண்ணார் குளிரையுடன் தாங்காதோ?’
(அது எத்தனை கந்தையானாலும் 
இரவிலே குளிருக்கு ஆகுமே)

இப்பொழுது முடிவாக
பார்வையில்லாதவர் சொல்லுகிறார்

எண்ணாதீர்,
இக்கலிங்கம் போனாலென்
ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை!
(கலிங்கம் - ஆடை சொக்கலிங்கமுண்டு - 
முண்டு என்றால் துண்டு
இன்னொன்று மதுரை ஆண்டவன் 
துணை உண்டு என்று).

அப்பொழுது துணி அலையில் தவிழ்ந்து 
அவர் கைக்கு வர, இருவரும் 
கரையேறுகின்றனர்.

தில்லை நடராஜ மூர்த்தியின் தூக்கிய 
திருவடியைப் பற்றிப் பாடியப் புலவர்களோ
ஞானிகளோ மிகமிக அதிகம். 
குஞ்சித பாதம் என்று அழைக்கப்படும் 
அந்த ஈசனுடைய திருவடியைத் தரிசனம் 
செய்தவர்களுக்கு மோட்சம் நிச்சயம் 
என்பது பக்தர்களின் திடமான நம்பிக்கை.

அந்தப் பாதத்தை இரட்டைப் புலவர்கள் 
இப்படி வர்ணிக்கிறார்கள்.

தில்லை மூவாயிரவர் பூசை புரி பாதம்
தேவருடனே இருவர் தேடரிய பாதம்
வல்லமாகாளியுடனே வாதுபுரி பாதம்
மாமுனிவர்காய் யமனை மார்பில் உதைபாதம்
சொல்லவே பரவையிடம் தூது சென்ற பாதம்
தொல்புலி பதஞ்சலியும் தொண்டு செயும் பாதம்
அல்லலாம் ஏழ்பிறவி தீர நடமாடும்
ஆதிபுலி யூரர் திருவம்பலவர் பாதம்

(தில்லை வாழ் அந்தணர்களாகிய தீக்ஷிதர்கள் 
பூசை செய்யும் பாதம்-, அடிமுடி காண இயலாது. 
தேவர்கள் காண இயலாத பாதம்
காளியுடன் போட்டி நடனம் 
ஆடிய பாதம், மார்க்கண்டேயருக்காக யமனை 
உதைத்த பாதம், சுந்தரருக்காகத் தூது சென்ற 
பாதம், பதஞ்சலி, வியாக்ரபாத ரிஷிகள்  
தொண்டு செய்யும் பாதம்,  
ஏழு பிறவிகளை நீக்கி மோட்சத்தைத் 
தரும் நடராஜர் பாதம்.)  
சொல்லிக்கொண்டே போகலாம்...

இந்த இரட்டைப் புலவர்கள் ஒன்றாகவே வாழ்ந்து 
பின் மரணம் அடைந்ததும் ஒரே நாளில் 
என்று சொல்கிறார்கள். 
அப்படி ஒரு ஒற்றுமை. 
வாழ்க அவர்கள் புகழ்.

குறிப்பு:

தெரியாத புலவர்கள் வரிசையில் எழுதுவதற்கு 
நூற்றக்கு மேலே புலவர்கள் இருக்கிறார்கள் 
என்று நினைக்கும் போது, தமிழையும்
தமிழ் இலக்கியத்தையும் பற்றி ஒரு பிரமிப்பு 
உண்டாகிறது. 
இதைப் பற்றி எழுதுவதற்காகவே 
ஒரு தனி “blog” தொடங்க வேண்டும். 
கிளறுவதற்கு வேறு விஷயங்கள் 
இருப்பதால் இந்த வரிசையைத் 
தற்காலிகமாக நிறுத்திக்கொள்கிறேன்.

தமிழில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா” 
என்ற ஒரு சிறிய கேள்விக்குறியை 
நான் தூண்டியிருந்தால் இந்த வரிசை 
எழுதினதன் பலனை அடைந்துவிட்டதாக 
நினைப்பேன்.



நன்றி: 
கிருபானந்த வாரியார் சுவாமிகள்
சிதம்பர தீக்ஷிதர் அவர்கள்
தமிழ் நூலகம்.

...கிளறல் தொடரும்.

No comments: