Monday, April 09, 2012

பொறாமை கொடிது - ஒரு திருஷ்டாந்தக் கதை


பொறாமைக்கு க்ரியா அகராதி 
கொடுக்கும் விளக்கம்: 
ஒருவருக்குக் கிடைத்திருப்பது தனக்குக் 
கிடைக்கவில்லை என்பதைப் பொறுக்காமல் 
ஒருவர் அடையும் எரிச்சல் கலந்த மனக்குறை.’ 
ஆங்கிலத்தில் envy, jealousy என்று 
சொல்வார்கள். 
கிறிஸ்துவர்கள் கருதும் 
‘deadly sins’ listல் 
envyக்கும் ஒரு சிறப்பிடம் உண்டு. 
பொறாமைப் பிடித்தவனுக்குத் 
தண்டனை ஐஸ் கட்டித் தண்ணீரில் 
மூழ்கடிப்பது.’ (Freezing water)

வள்ளுவர், ‘அழுக்காறாமைஎன்று 
பொறாமையைப் பற்றி  
10 குறள்கள் இயற்றியுள்ளார்.


அழுக்கற்று அகன்றாரும் இல்லை; அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல்லை.

பொறாமைப் பிடித்தவன் ஒருபோதும் 
மகானாக ஆவதில்லை. 
பொறாமையில்லாத 
மனதுடையவர்கள் மகானாக 
ஆகாமல் இருந்ததில்லை. 


இதை விளக்க ஒரு சிறிய கதை.

ஒரு ஊரில் செல்வம் படைத்த 
ஒரு அரசன் இருந்தான். 
ஆனால் சுய அறிவு இல்லாதவன். 
பிறர் கூறும் சொல்லை நம்புகிறவன். 
முகஸ்துதி செய்பவர்களுக்கு 
அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்டவன். 
பலர் அவனை ஏமாற்றிப் 
புகழ்ந்து பேசிப் பெரும் பொருள் 
பெற்றுச் சென்றார்கள்.

அந்த ராஜாவிடம் ஏகாலி என்ற 
ஒரு வண்ணான் விசுவாசமாக வேலைப்
பார்த்துவந்தான். 
நம்பிக்கையான வேலையாள். 
வேலை சுத்தம். 
அரசனுக்கு அவன் மேல் ஒரு தனிப் பிரியம். 
ஏகாலிக்கு அவ்வப்போது தாராளமாகப் 
பணம் கொடுத்துவந்தான். 
அதே அரண்மனையில் மண்பானைகள் 
செய்துவரும் ஒரு குலாலன் இருந்தான். 
அவனுக்கு ஏகாலி மீது பொறாமை. 
எப்படியாவது ஏகாலியை அரசனிடமிருந்து 
பிரித்துவிடத் திட்டம் தீட்டினான்.

ஒரு நாள் குலாலன் அரசனிடம் சென்று 
கூழை கும்பிடு போட்டான். 
அரசனும், “என்ன குலாலனாரே! சௌக்கியமா
என்ன சேதி? ஏதாவது வேண்டுமா?” 
என்று கேட்டான்.

குலாலன், “அரசே! தங்கள் பெருமை எங்கும் 
பரவியுள்ளது. தங்களைப் போல் 
ஒரு உத்தம அரசர் 
உலகத்திலேயே கிடையாது. 
இந்திர லோகமே தங்கள்பால் அமைந்துள்ளது. 
அனால், ஒரு குறை. 
அதுவும் நீங்கிவிட்டால் நீங்கள்  
பூலோக இந்திரனைப் போல் இருக்கலாம்
என்றான்.

அரசன், “எனக்கு என்ன குறை, குலாலனரே
அதனைச் சொல்என்றான்.

குலாலன், “அரசே, வேறு ஒன்றுமில்லை. 
உங்களிடம் எல்லா சிறப்பும் இருக்கிறது. 
ஆனால், இந்திரனிடம் இருப்பதுபோல் 
உங்களிடம் ஒரு வெள்ளை யானை இல்லை. 
உங்களிடம் கருப்பான யானைதானே 
இருக்கிறது? 
நமது அரண்மனை ஏகாலியிடம் கூறி 
அந்த யானையை மெல்ல வெளுத்துத் 
தருமாறு கட்டளையிடுங்கள். 
வெளுத்து தந்துவிடுவான். 
வெள்ளை யானை உங்களுக்குக் 
கிடைத்தவுடன் 
நீங்கள்தான் பூலோக இந்திரன்” 
என்றான்.

யானையை வெளுக்க முடியுமா
என்ற அறிவு இல்லாத அந்த அரசன்
ஏகாலியைக் கூப்பிட்டு
ஏகாலி, நம்முடைய பட்டத்து யானையை 
8 நாட்களுக்குள் வெளுத்துக் கொண்டுவா. 
வெள்ளை யானையாக இருக்க வேண்டும். 
கருத்துடன் செயல்படு. 
தவறினால் உன் தலை 
துண்டிக்கப்படும். போய் வாஎன்று
கட்டளையிட்டான்.

ஏகாலிக்கு என்ன செய்வது என்று 
தெரியவில்லை. 
தனது வாழ்வு முடிந்துவிட்டது 
என்று எண்ணினான். 
மறுவார்த்தை பேசாமல் நல்லதுஎன்று 
கூறிவிட்டுப் புறப்பட்டான்.

அரண்மனையை விட்டுப்போகும்போது 
ஒருபுறம் குலாலன் நின்று அவனைக் 
கண்டு ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தான். 
ஏகாலிக்குப் புரிந்துவிட்டது. 
இந்த வினையை மூட்டியது 
குலாலன்தான் என்று.

தெய்வமே, நீதான் துணைஎன்று 
நினைத்து வீடு திரும்பினான்.

ஏகாலி வீட்டின் பின்புறம் பட்டத்து யானை 
நின்றுகொண்டிருந்தது. 
எட்டு நாள் கடந்தது. 
இன்று ஏகாலியின் தலை போகும் 
என்ற மகிழ்ச்சியில் 
குலாலன் அரசனை அண்டி 
அரசே, ஏகாலி உங்கள் கட்டளையை 
நிறைவேற்றுவதாகத் தெரியவில்லையே” 
என்று கோள் மூட்டினான்.

அரசனுக்கு கோபம். ஏகாலியைக் கூப்பிட்டு 
என்ன ஆயிற்று யானைக்குஎன்று கத்தினான்.

ஏகாலி, அமைதியாக அரச பெருமானே
தங்கள் கட்டளையை மீறுவேனா! 
யானையை வெளுப்பது 
சுலபமான வேலை. 
ஆனால் ஒரு சிறு தடை. 
துணிகளை பானையில் இட்டு 
அடுப்பில் வைத்து அவித்துத்தான் 
வெளுப்பது வழக்கம். 
அதுபோல் யானையையும் 
பானையில் வைத்து அடுப்பில் ஏற்றி 
அவித்துத்தான் வெளுக்க வேண்டும். 
நமது குயவனாரை யானையை வைத்து 
அவிப்பதற்கு ஏற்றவாறு ஒரு 
உடையாத பானையைச் செய்துகொடுக்குமாறு 
ஏற்பாடு செய்யுங்கள். 
பானை வந்துவிட்டால் ஒரே நாளில் வெளுத்துத் 
தருகிறேன்என்றான்.

உடனே, அரசன் குலாலனை நோக்கி
யானைக்கு ஏற்றவாறு பானையை 
உடனே செய்துகொடு. 
இல்லையெனில் உம்முடைய தலை 
துண்டிக்கப்படும்என்றார்.

இதை கேட்ட, குலாலன் நடுநடுங்கினான். 
ஏகாலிக்குக் கஷ்டம் கொடுக்க நினைத்தது 
தன் உயிருக்கே ஆபத்தாகிவிட்டதே 
என்று கலங்கி
ஏகாலியின் வீட்டுக்கு ஓடினான். 
அங்கே போய், “தம்பி, என்னை ஆபத்தில் 
சிக்கவைத்துவிட்டாயே! 
யானைக்குப் பானை செய்ய முடியுமா? ” 
என்று கேட்டான்.

ஏகாலி சாந்தமாக, “அண்ணே, நீங்கள்தானே 
என் தலையை உருட்ட திட்டம் தீட்டினீர். 
வினையை விதைத்தவன் வினையைத்தான் 
அறுப்பான். 
நானும் ஒரு தொழிலாளி, நீரும் ஒரு தொழிலாளி. 
எனக்கு எப்படி உம்மால் இப்படி ஒரு கீழ்த்தரமான 
காரியம் செய்ய முடிந்ததுஎன்றான்.

குலாலன், வெட்கித் தலைகுனிந்து
மன்னித்துவிடு தம்பி, நான் உண்மையை 
உணர்ந்து கொண்டேன். 
தயவுசெய்து, என்னைக் காப்பாற்று” 
என்று கெஞ்சினான்.

மறுநாள், ஏகாலி குலாலனை 
அழைத்துக்கொண்டு 
அரசனிடம் சென்றான். 
அரசனை வணங்கி
அரசே! குலாலனார் யானைக்கு 
ஏற்ற பானை செய்ய முயலும்போது 
இந்தத் தகவல் இந்திரனுக்கு எப்படியோ 
எட்டிவிட்டது. 
அவன் கோபப்பட்டு பூலோகத்தில் இன்னொரு 
வெள்ளை யானை வருவது நல்லதல்ல. 
இந்த முயற்சியில் ஈடுபடும் அரசனையும் 
அவன் நாட்டையும் அழித்துவிடுங்கள்’ 
என்று கட்டளையிட்டுவிட்டாராம். 
அதனால் நாங்கள் எங்கள் வேலையை
நிறுத்திவிட்டோம்” என்றான்.

அரசன் அதைக் கேட்டு நடுநடுங்கி, 
வேண்டாம் வெள்ளை யானை. 
யானையை வெளுக்க முயற்சி செய்ய 
வேண்டாம். 
உங்களுக்கு வீண் துன்பம் தந்துவிட்டேன். 
இதோ, அதற்காக ஆளுக்கு ஆயிரம் வராகன் 
பரிசை எடுத்துக்கொண்டு சுகமாக இருங்கள்” 
என்றார்.

இருவரும் பரிசைப் பெற்றுக்கொண்டு 
வீடு திரும்பினார்கள்.

ஏகாலி, குலாலனைப் பார்த்து
இப்போதாவது புத்தி வந்ததே. 
இனிமேலாவது மற்றவரைப் பார்த்து 
எரிச்சல் படுவதை நிறுத்தும். 
மற்றவர்களுக்கு உபகாரம் புரிந்து 
ஒற்றுமையாய் வாழ வேண்டும்” 
என்று சொன்னான்.

நாடெங்கும் வாழக் கேடொன்றுமில்லை’ 
என்பது பெரியோர்கள் வாக்கு.

வள்ளுவர் சொல்கிறார்.

பொறாமையால் பிறர்க்குக் கேடு செய்தால் 
கேடு செய்கின்றவன்தான் கெடுவான்.

நன்றி: கிருபானந்த வாரியர் சுவாமிகள்

                                                      ... கிளறல் தொடரும். 

2 comments:

Anonymous said...

குலாலனுக்குப் புத்தி கற்பித்த ஏலாலனின் திறமை என்னை
முல்லா
நசுருதீன் குட்டிகதைகளில் ஒன்றை நினைக்கவைக்கிறது,சார்.நசுருதீன், ஒரு நாள் ராஜாவின் முன்னால் வந்து நின்று அவரைப்புகழ்ந்து,தான் எழுதிய கவிதையைப் படித்துக்
காட்டினார்.கவிதை நயத்தில் சொக்கிப்போன அரசர் ‘என்ன பரிசுவேண்டும் கேளுங்கள் தருகிறேன்’என்றார்.உடனே முல்லா ‘50 சாட்டை அடி கொடுங்கள்’ என்றார்.மிகுந்த மனச்சங்கடத்துடன்,அரசர் முல்லாகேட்ட சாட்டையடிப் பரிசை வழங்க உத்தரவிட்டார்.25-அடிகள் விழுந்தவுடன்,நிறுத்தும்படி சொன்ன முல்லா, ‘அரசே, இது எனக்கு உரிய பரிசு;மீதிபாதி என் பங்குதாரரான உங்கள் வாயில்காப்போனுக்குக் கொடுக்கச் சொல்லுங்கள்;ஏனெனில்,அரச சபையில் என்ன பரிசு கிடைத்தாலும் அதில் பாதியை அவனுக்குக் கொடுத்தால்தான் என்னை இங்கே உள்ளே விடுவதாக என்னிடம் கூறினான்;ஆதலின்,பாதியைப் பங்குதாரருக்குக் கொடுக்க அருள்புரியுங்கள்” என்று பணிவோடு கேட்டுக்கொண்டார். வாயிற்காப்போனுக்கு 25 பலமான சாட்டைஅடிகளுடன் வேலையும்போயிற்று !! பாவம், பார்ட்னர்.
உங்கள் அருமைக் “குப்பை”தான் இந்த மணியான என்மனத்தூண்டுலை
உந்தக்காரணம்.மேலும் மேலும் “குப்பை” வளர்க.

tsnagarajan said...

anonymous அவர்களுக்கு வணக்கம்.
நன்றி. உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள்.

தெநாலி ராமன் கதையில் முல்லா கதை மாதிரி ஒரு நிகழ்ச்சி
வரும்.

நாகராஜன்