Sunday, December 23, 2012

அமெரிக்கக் குழந்தைகளுடன் ஒரு இனிமையான கலந்துரையாடல்



மேலேயுள்ள படத்தில் இருப்பது -
 "நாந்தேன்". 
என்னுடன் இருக்கும் குழந்தைகள் - 
(இடமிருந்து-வலம்)
நேகா குமார்,மயூகா கார்திக்
சோனிதா சீனிவாசன்,
நேகா அரவிந்த், தீக்ஷா அய்யர்.
தலைப்பைப் பார்த்தவுடன் 
"வெள்ளைக்கார" அமெரிக்கக் 
குழந்தைகளை எதிர்பார்த்தவர்களுக்கு 
ஏமாற்றமாக இருக்கலாம். 
இங்கேயிருக்கும் குழந்தைகள் எல்லாம் 
அமெரிக்காவில் பிறந்து, படித்துவருகிற 
இந்தியத் தமிழ்க் குழந்தைகள். 
இந்தியத் தமிழ் வேர்களை மறக்காத 
குழந்தைகள். அதற்காக முழுப் பாராட்டும் 
அவர்களுடைய பெற்றோர்களைத்தான் 
சேரும். இந்தியாவில் படித்து 
வேலை தேடி வந்த 
இந்தப் பெற்றோர்கள் - 
இவர்கள் மாதிரி 
நிறையப் பேர் இருக்கிறார்கள் - 
தங்கள் குழந்தைகள் இந்திய/தமிழ்க் 
கலாச்சாரத்தை மறந்துவிடக் கூடாது 
என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 
Sunday Schoolக்கு அனுப்பி 
ஸ்லோகங்கள்தியானம், கீதை மூலம் 
தெய்வ பக்தியை வளர்ப்பதோடு 
இல்லாமல் தமிழ் மொழியைக் 
கற்றுத்தர ஏற்பாடுகளும் செய்கிறார்கள். 
‘Yatra’ விளம்பரத்தில் வரும் குழந்தைகள் 
மாதிரி இவர்கள் இருக்க மாட்டார்கள் 
என்பது ஒரு வரவேற்கத் தகுந்த விஷயம்.

(யாத்ரா விளம்பரத்தில்)
அம்மா காலையில் 
அறைஅறையாகச் சென்று 
சாம்பிராணி புகையைக் 
காட்டி வருகிறாள். 
அமெரிக்க பெண்மணி கேட்கிறாள் 
"உங்கம்மா என்ன செய்கிறாள்?" 
பையன் சொல்கிறான் 
"என் அம்மா, தினந்தோறும் 
fire alarm சரியாக இருக்கிறதா 
என்று செக் பண்ணுகிறாள்." 
விளம்பரத்தின் பஞ்ச் லைன் 
'Before they forget their roots, 
take them to India.

சரி விஷயத்திற்கு வருவோம்...
இந்தக் குழந்தைகள்LEGO 
என்ற ஸ்தாபனத்தின் அங்கத்தினர்கள். 
இது குழந்தைகளின்"creative" 
ஆர்வத்தை வளர்க்க உதவும் 
ஒரு ஸ்தாபனம். 
"சீனியர் சிட்டிசன்" பற்றி 
ஒரு project பண்ணுகிறார்கள். 
அதற்காக, என்னை 
interviewக்கு கூப்பிட்டார்கள். 
என் நண்பர் வீட்டில், ஞாயிற்றுக்கிழமை 
மாலை இந்தக் குழந்தைகளைச் சந்தித்தேன். 
அவர்கள் பெற்றோர்களும் இருந்தார்கள். 
"என்ன பேச வேண்டும்" 
என்று கேட்டபோது
நண்பர் நந்தா சொன்னார் 
"நீங்கள் ஒன்றும் தயார் செய்துகொண்டு 
வர வேண்டாம். குழந்தைகள் கேட்கும் 
கேள்விகளுக்கு நீங்கள் பதில் 
சொன்னால் போதும்" என்றார்.

"சரி" என்று சரியாக ஆஜரானேன். 
ஆச்சரியம் ஒவ்வொரு குழந்தையும் 
ஒரு ipadஐ வைத்துக்கொண்டு 
என்னை interview பண்ணத் தயாரானார்கள். 
முதலில் இந்தச் சந்திப்பைக் 
கொஞ்சம் casual 
ஆகத்தானே எடுத்துக்கொள்ள 
நினைத்தேன். 
கொஞ்ச நேரத்தில் தெரியவந்தது
இவர்கள் எமகாதகக் குழந்தைகள் 
என்று. முன்னேற்பாடாகக் கேள்விகளைத் 
தயார்பண்ணிக் கொண்டுவந்திருந்தார்கள். 
இதோ அந்தக் கலந்துரையாடலின் 
சுருக்கம். 

கேள்விகளை ஒருவர் மாறி 
ஒருவர் கேட்டனர். 
பதில்களை ஆங்கிலமும் தமிழும் 
கலந்து சொன்னேன். 
பெற்றோர்கள் interviewஐ 
மானிட்டர் பண்ணவில்லை. 
எனக்கும் குழந்தைகளுக்கும் 
முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டது.

கேள்வி: உங்களைப் பற்றிக் கொஞ்சம் 
சொல்லுங்களேன்?

நான்: என்னை சீனியர் என்று 
கூப்பிட்டிருக்கிறீர்கள். 
நான் ஒரு super senior. 
அதாவது 80 plus. 
நான் வாழ்நாளில் பெரும்பகுதியை 
இந்தியாவிலும், குறிப்பாக தமிழ் 
நாட்டிலும் செலவழித்திருக்கிறேன். 
இப்பொழுது இங்கு என் மகன்களோடு 
தங்கியிருக்கிறேன். 
கொஞ்சம் என் படிப்பு, வேலையைப் 
பற்றிச் சொன்னேன்.

கேள்வி: 
உங்கள் சின்ன வயது படிப்பு பற்றிச் 
சொல்லுங்கள்?

நான்: ரொம்ப வருஷங்கள் 
முன் நடந்தது. இருந்தாலும் 
அது ஒரு மறக்க முடியாத சம்பவம்.  
எங்கள் நாளில், பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது 
என்பது ஒரு ஸ்பெஷல் விசேஷம். 
பொதுவாக, விஜயதசமி அன்றுதான் 
பள்ளியில் சேர்ப்பார்கள். வசதிக்கேற்றவாறு 
பள்ளிக்கூடப் பிரவேசம் நடக்கும். 
ஊர்வலத்தோடு எங்கள் தெருவில் உள்ள 
"ராமா சார்" எலிமெண்டரி பள்ளிக்குக் 
கூட்டிக்கொண்டு போவார்கள். 
ஒரு பெரிய தட்டில் அரிசியைப் 
பரப்பி வைப்பார்கள். 
பையன்,அப்பா மடியில் 
உட்கார்ந்துகொள்வான். 
அப்பா பையனின் 
ஆட்காட்டி விரலைப் 
பிடித்துக்கொண்டு 
அரிசியில் முதல் எழுத்தான 
"அ"வை எழுத வைப்பார். 
மறுநாளிலிருந்து பையன் பள்ளிக்குச் 
செல்ல ஆரம்பிப்பான்.

கேள்வி: 
உங்களுக்கும் அப்படி நடந்ததா?

நான்: சாரி, எனக்கு அப்படி நடக்க வில்லை. 
என் அப்பா ரொம்பவே வசதிபடைத்தவர். 
அதனால் தடபுடலாக ஏற்பாடுகள் 
பண்ணியிருந்தார். ஆனால் விசேஷத்திற்கு 
முந்திய இரவு என் அண்ணாவும் அக்காவும் 
என்னிடம் வந்து "நாளைக்கு ஸ்கூலுக்கு 
போகப் போகிறாய் அல்லவா
அங்கு வாத்தியார் உன்னை 
பிரம்பால் அடிப்பார்" என்றார்கள். 
5 வயது எனக்கு, பயந்துவிட்டேன். 
மறுநாள் விசேஷத்தில் கலந்துகொள்ளாமல் 
ஒரே கத்தி, அழுது 
ஆர்பாட்டம் பண்ணினேனாம். 
என் அப்பாவுக்குத் தலைக்குனிவு, வெட்கம். 
சனியன் என்று சொல்லி விசேஷத்தை 
கான்ஸல் பண்ணிவிட்டார். 
அதுதான் அவர் கலந்துகொண்ட 
கடைசி நிகழ்ச்சி. கொஞ்ச மாதங்களில் 
இறந்துவிட்டார். 
அதற்குப் பிறகு நிறைய பட்டங்கள் 
வாங்கினேன். ஒவ்வொரு முறையும் 
என் அம்மா சொல்வார்கள். 
"பார்த்தாயா, உன் அப்பா இல்லையே. 
அன்றைக்கு அவருக்குத் தலைக்குனிவை 
ஏற்படுத்திவிட்டு இன்று பட்டமாக 
வாங்குகிறாயா" என்று. 
நான் சொல்வேன் 
"கவலைப்படாதே. 
மேலேயிருந்து கட்டாயம்பார்த்து
சந்தோஷப்படுவார்" என்று.
இதைச் சொல்வதற்குக் காரணம். 
குழந்தைகளே
வேடிக்கை, விளையாட்டுகளில் 
ஈடுபடும் காலம்தான். 
ஆனால் அது மற்றவரைப் 
பாதிக்கும் அளவுக்கு நீங்கள் 
செயல்படக் கூடாது. 
ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். 
விளையாட்டும் சில சமயம் 
வினையாகிவிடும்.

கேள்வி:என்னென்ன
பாடங்கள் படித்தீர்கள்
கணக்குப் போட 
calculator உபயோகித்தீர்களா?

நான்: ஆங்கிலம், தமிழ், கணக்கு. 
சரித்திரம்பூகோளம்,சயன்ஸ்.

ஒவ்வொரு நாளும் கடைசி 
பீரியடில் எல்லோரும் 
எழுந்து 1லிருந்து 16 வரை 
வாய்ப்பாடைச் சொல்ல வேண்டும். 
தினசரி சொல்வதால் 
மனப்பாடமாக ஆகிவிடும். 
calculator இல்லாமலேயே 
எந்தக் கூட்டல்
கழித்தல், பெருக்கல்
வகுத்தல் கணக்குகளைப் 
போடத் திறமையிருக்கும்.

கேள்வி: 
After-school activities என்ன?

நான்: பெரும்பாலும் அரட்டைதான். 
சினிமா பார்ப்பது, அரசியல் பேசுவது
எப்போவாவது நல்ல பாடகர்கள் 
கச்சேரி கேட்பது. 
என் ஊருக்குப் பெரிய பாடகர்கள் 
எப்போதாவது பாட வருவார்கள். 
ராம நவமி பஜனை 10 நாள் நடக்கும்.

கேள்வி: என்ன விளையாட்டுகள் 
ஆடியிருக்கிறீர்கள்? எதில் அதிக ஈடுபாடு?

நான்: கிரிக்கட்டில் ஆர்வம் உண்டு. 
ஆனால் பள்ளிகளில் ஆடச் சந்தர்ப்பம் 
கிடையாது. Football (soccer), hockey, 
சடுகுடு (கபடி), volley ball - 
இவைகள்தான் பள்ளியில் 
விளையாடவிடுவார்கள்.

கேள்வி: உங்கள் சாப்பாடு விஷயம் எப்படி
உங்களிடம் fridge இருந்ததா
எப்படித் துணிமணிகளை wash 
பண்ணுவீர்கள்? சமையலுக்கு oven 
எல்லாம் உண்டா?

நான்: மெதுவாக.... 
இந்தியாவுக்கு சுதந்திரம் வந்தது 1947. 
ஏழ்மையான நாடாகத்தான் 
வெள்ளைக்காரன் வைத்துவிட்டு போனான். 
உங்கப்பா, அம்மா வளரும் காலத்தில் 
நீங்கள் இங்கே இப்பொழுது உபயோகிக்கிற 
எல்லாச் சாதனங்களும் இருந்திருக்கின்றன. 
ஆனால் நான் வளர்ந்து வந்த காலத்தில் 
இது எதுவுவே கிடையாது. 
cooking எடுத்துக்கொள்ளுங்கள். 
cooker எல்லாம் கிடையாது. 
அரிசிதான் மெயின் டிஷ். 
அதைப் பாத்திரத்தில் 
போட்டுத் தண்ணீரில் 











கொதிக்க 

வைத்துச் சோறாக்குவார்கள். 
பெரும்பாலும் ஒரு வேளைதான் குக்கிங். 
ராத்திரி அதே சாப்பாடுதான். 
மிச்சமிருந்தால் 
அதைத் தண்ணீரில் ஊறவைத்து 
மறுநாள் "பழையதாக" போடுவார்கள். 
டைனிங் டேபில், fork, spoon 
எல்லாம் கிடையாது. 
ஒவ்வொருவருக்கும் ஒரு தட்டு உண்டு. 
அதில் சாப்பிட்டுவிட்டு
கழுவி, ஒரு பொது இடத்தில் 
வைக்க வேண்டும். 
மறக்க முடியாத நிகழ்ச்சி. 
இரவு சாப்பாட்டு வேளையில் 
எல்லா குழந்தைகளும் 
ஒரு வட்டமாக உட்கார்ந்துகொள்வார்கள். 
அம்மா ஒரு பாத்திரத்தில் 
சாம்பார் சாதத்தையோ
தயிர் சாதத்தையோ பிசைந்து
ஆளுக்கு ஒரு வாய் கவளமாகக் கையில் 
கொடுப்பாள். 
எல்லோருக்கும் போட்ட பிறகு 
மறுபடி உங்கள் turn வரும். 
7, 8 கவளங்கள் உள்ளே போனபின் 
வயிறு நிரம்பிவிடும். 
அம்மாவுக்குச் சாப்பாடு இருக்கா 
என்ற நினைப்பே வராது. 
இப்பொது நினைத்தால் 
வெட்கமாக இருக்கிறது. 
யாரும் சொல்லித் தரவில்லை. 
குழந்தைகளே
ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.
"உங்கள் அம்மாக்கள் உங்களுக்காகச் 
செய்யும் தியாகத்துக்கு நன்றியை 
உடனுக்குடன் தெரிவியுங்கள்.

washingஐப் பற்றிக் கேட்டீர்கள்:
பெரும்பாலும் வீட்டில்தான்
குளிக்கும்போது சோப்பை உபயோகித்து
வேஷ்டி, பனியன்களைத் தோய்த்து 
வெயிலில் உலர்த்துவோம். 
சில சமயங்களில் ஆற்றிற்குச் சென்று 
துணிகளைத் துவைப்பேன். 

வெள்ளைத் துணிகளில் வெண்மை 
மறைந்தவுடன் dhoby - வண்ணானிடம் 
சலவைக்குப் போடுவோம். 
துணி மூட்டைகளைச் சுமக்க 










கழுதைகளை உபயோகிப்பார்கள்.

கேள்வி: 
குளிர், வெயில் காலத்தை 
எப்படிச் சமாளித்தீர்கள்?

நான்: R.K. நாராயணன் என்ற 
பிரபல ஆங்கில எழுத்தாளரைப் 
பற்றிப் படியுங்கள். 
அவரிடம் ஒரு வெளி நாட்டார் 
கேட்டார். 
"நாராயணன், சென்னை weather எப்படி?"  
என்று. நாராயன் பதில் சொன்னார் 
"சென்னையில் 10 மாதங்கள் hot." 
கொஞ்சம் நிறுத்தி
 "மற்ற 2 மாதங்கள் hotter" என்றாராம்.

நான் இருந்த திருநெல்வேலி
equatorக்கு சமீபம். அதனால்
வெயில்தான். 
கொஞ்சம் வீடுகளில்தான் 
மின்சார விசிறி. 
பெரும்பாலும், கை விசிறிதான். 
படுக்கை மொட்டை மாடியில் 
அல்லது வீட்டு வாசல்களில் 
கயிற்று கட்டில்போட்டுத் தூக்கம்.

கேள்வி: T.V. உண்டா
பொழுதுபோக்குக்கு என்ன செய்தீர்கள்?

நான்: இந்தியாவிற்கு TV வந்தது 
1970க்கு பிறகுதான். அதாவது 
என்னுடைய 40ஆவது வயதில் 
அதுவரை,Radioதான் 
பொழுதுபோக்கு சாதனம். 
விவித் பாரதி
radio சிலோன்தான் முக்கியமானவை.

கேள்வி: கம்யூட்டர் உண்டா?

பதில்: இதுவும் சமீபத்தில் வந்ததுதான். 
நான் முழுவதுமாக கம்யூட்டர் உபயோகிக்க 
ஆரம்பித்தது என்னுடைய 75ஆவது வயதில்.

இன்னும் சில கேள்விகளுக்குப் 
பதில் சொன்ன பிறகு 
கடைசியாக நான் சொன்னேன்.

"நான் சொன்னவை 
எல்லாம் உங்களுக்கு 
ஆச்சரியமாக இருக்கும். 
நீங்கள் உபயோகிக்கும் 
"gadgets"கள் இல்லாமல் 
மக்கள் வாழ்ந்திருக்க முடியுமா
என்று நீங்கள் திகைத்து போயிருப்பீர்கள். 
ஆனால் அதுதான் உண்மை. 
இந்த வயதிலாவது உங்கள் 
மாதிரி வாழ்க்கை 
வாழ முடிகிறது என்பதில் எனக்கு 
மகிழ்ச்சி இருந்தாலும் 
இன்னும் உலகம் முழுவதும் 
எத்தனையோ லட்சக் கணக்கான 
மக்களுக்கு இந்த வசதிகள் 
இல்லை என்பதை 
மறக்க கூடாது. உங்களுக்குக் கிடைத்த 
இந்த நல்ல வாழ்க்கைக்காக 
உங்கள் பெற்றோர்களையும் கடவுளையும் 
மறக்கக் கூடாது.

கடைசியாக என்னைப் போல் 
சீனியர்களுக்கு 
நீங்கள் என்ன செய்ய வேண்டும் 
என்பதைச் சொல்கிறேன்.

சீனியர்களுக்கு நீங்கள் பரிசு பொருள்கள் 
கொடுக்க வேண்டாம். 
அவர்களுக்குத் தேவை
 "A sense of being wanted" - 
அதாவது"அவர்களின் 
சேவை மற்றவர்களுக்கு 
தேவைப்படுகிறது" என்ற உணர்வு. 
அதை நீங்கள் கட்டாயம் 
கொடுக்க வேண்டும். 
தாத்தா, எனக்கு 
homework சொல்லித்தருகிறாயா
என்று நீங்கள் கேட்டால்
அன்று முழுவதும் 
தாத்தாவுக்கு மில்லியன் டாலர் 
லாட்டரி விழுந்த மாதிரி 
feeling இருக்கும்.

ரொம்ப சிம்பிள் gesture - 
மறக்காமல் செய்யுங்கள்.

Thanks - 
God Bless You All.

மறக்க முடியாத நிகழ்ச்சி. 
இந்தக் குழந்தைகள் என்னை 
என் இளம் பிராயத்துக்கு time machineஇல் 
எடுத்துச்சென்று என் பழைய டைரியைப் 
புரட்ட ஒரு சந்தர்ப்பத்தை அளித்தார்கள். 
அவர்களுக்கும் 
அவர்கள் பெற்றோர்களுக்கும் 
நன்றி.

கடைசியாக எனக்கு கிடைத்த 
feedback:

ஸ்நேகா அரவிந்த் - 
என் முதல் நாள் ஸ்கூல்
அரிசியல் எழுதிய காட்சி.
ஹோனிதா  - பழைய சாதம்-
வட்டமாக உட்கார்ந்து சாப்பிட்டது
மாயூகா - நான் சொன்ன riddles.
நேகாகுமார் -circleஆக உட்கார்ந்து 
சாப்பிடுவதைப் பற்றி.
தீக்ஷா  - no tv / sports பற்றி.


2012இல் நான் எழுதும் கடைசி 

கட்டுரை இதுதான். 
அடுத்த கட்டுரை அடுத்த வருஷம். 
அது வரை உங்கள் எல்லோருக்கும் 
Happy Holidays.


...கிளறல் தொடரும்.

No comments: