Friday, January 04, 2013

இன்கா தலைநகரில் கொண்டாடிய ‘வருஷத்திற்கு ஒரு நாள்’



முதலில் இரண்டு விளக்கங்கள்:
வருஷத்திற்கு ஒரு நாள்
இந்துக்கள் வீட்டில் பண்டிகைகளுக்குப் பஞ்சமிருக்காது. என் வீடும், அதற்கு விலக்கல்ல. பிள்ளையார் சதுர்த்தி
சரஸ்வதி பூஜை, மகர சங்கராந்தி... 
இப்படிப் பல பல. எல்லாவற்றிற்கும் 
பொது பூஜை, நைய்வேத்யம். 
என் அம்மாவும் ஒவ்வொரு 
பண்டிகைக்கும் ஏற்ற உணவுப் பொருள்களை நிவேதனத்திற்காகத் தயார்பண்ணுவார்கள்.
சின்ன வயதில் - (தப்பு, தப்பு) 
2003வரை (என் 72 வயதுவரை) 
ஒவ்வொரு பண்டிகைக் காலத்திலும் 
பதார்த்தங்கள் தயாரானவுடன் அவற்றை taste பண்ண, தொட முயற்சிப்பேன். 
நானும் என் அம்மாவும் வழக்கமாகப் பேசிக்கொள்ளும் டயலாக்.
அம்மா: "சனியனே, கட்டேல போறவனே (வயதான பிறகு, இவையெல்லாம் dropped) பிராமணனாகப் பிறந்ததற்கு உருப்படியாக ஏதாவது செய். 
இன்றைக்கு வருஷத்திற்கு ஒரு நாள்போய்க் குளித்துவிட்டு, சுவாமிக்கு 
இரண்டு பூ போட்டுவிட்டு
அப்புறம் வந்து கொட்டிக்கோ." 
(இதுவும் later yearல் dropped).
நான்: "ஏன், அம்மா, எல்லோரும் கட்டையிலேதானே போவா
அதென்ன, வருஷத்திற்கு ஒரு நாள். 
எல்லா நாளும் வருஷத்தில் 
ஒரு நாள் தானே. இன்றைய நாள்
இனிமே அடுத்த வருஷம்தானே 
வரப் போகிறது?" 
அம்மா: "அதிகப்பிரசங்கித்தனம்..."
பிறகு குளித்துவிட்டுப் பூஜை செய்வேன். ஆசையோடு ஒவ்வொரு பட்சணமாகக் கொடுப்பாள். 
( I miss those glorious moments.)
விதண்டாவாதத்திற்காகச் சொன்னாலும் யோசித்துப்பார்த்ததில், 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற அடைமொழி சில விசேஷ நாட்களுக்குத்தான் 
பொருந்தும். எல்லோரும் சாப்பிட்டாலும் 
சில பேரைத்தானே சாப்பாட்டு ராமன்என்கிறோம்.
ஆக, இந்துக்கள் வாழ்க்கை என்று இல்லாமல் ஒவ்வொரு மதத்திலும் 
சில விசேஷ நாள்கள் 
வருஷத்திற்கு ஒரு நாள்என்ற 
அடைமொழியைப் பெறுகின்றன.
இந்தச் சில பல  
வருஷத்திற்கு ஒரு நாள்களில் 
ஒரே ஒரு பண்டிகை, விசேஷம்
event மட்டும் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் கொண்டாடிய பண்டிகையாக 
இருந்த நிலைமை மாறி, இன்றைக்கு உலகத்தினர் எல்லோராலும் தங்கள் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
சஸ்பென்ஸ் போதும் என்று நினைக்கிறேன். அதுதான்- New Year Eve /புது வருஷம் ஆரம்பத்தைக் கொண்டாடுவது. 
நான் கொண்டாடிய 
வருஷத்திற்கு ஒரு நாள்’. 
2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி.
இரண்டாவது விளக்கம்.
இன்கா தலைநகர்
நான் என் குடும்பத்தோடு
New Year Eveயும் புது வருஷ ஆரம்பத்தையும் கொண்டாடியது, 
இன்கா தலைநகரில்.
இதென்ன,கேள்விப்படாதப் பெயராக இருக்கிறது என்று சில பேர் நினைக்கலாம். ரோம, கிரேக்க, எகிப்திய, குப்த
விஜய நகர சாம்ராஜ்யங்கள் போல் 
இன்கா சாம்ராஜ்யமும் பிரபலமான 
ஒரு சாம்ராஜ்யம்.
இன்கா (Incas) என்ற பிரிவினர் ஸ்தாபித்த இந்த சாம்ராஜ்யம் 13/14ஆம் நூற்றாண்டில் தென்அமெரிக்கக் கண்டத்தில் கொடி கட்டிப் பறந்திருக்கிறது. 
இதனுடைய மையம் தற்போதைய 
பெரு நாடு. வடக்கே, equator, தெற்கே, பொலிவியா, சில்லி, அர்ஜண்டைனா 
என்று ஒரு பெரிய சாம்ராஜ்யம். 
இதன் தலைநகரம் பெரு நாட்டின் 
2ஆவது நகரமான, குஸ்கோ (Cusco). 15ஆம் நூற்றாண்டில், ஸ்பெயின் நாட்டினர் படையெடுத்து, இன்கா கலாச்சாரத்தை முழுவதுமாக அழித்துவிட்டுத் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தினார்கள். 
சென்ற நூற்றாண்டில் 1911ஆம் ஆண்டு  Bingham என்ற அமெரிக்க விஞ்ஞானி 
இந்த உன்னதமான இன்கா காலச்சாரத்தையும் அவர்கள் சாதனைகளையும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார்.
விளக்கம் போதும் என்று நினைக்கிறேன். இந்த வருஷம் புது வருஷத்தைக் குடும்பத்தோடு நான் கொண்டாடியது குஸ்கோ நகரில். இது தற்போதைய பெரு நாட்டின், 2ஆவது நகரம் 
(லீமா - பெரு நாட்டின் தலைநகரம்)- முந்தைய இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகர். 
நான், எப்படி, அங்கே
கேள்விகளுக்கு விடை இதோ.

2012/13,எனக்கும் என் மனைவிக்கும் 50ஆவது கல்யாண வருஷம்- 
என் மூத்த மகன், மருமகள்,பேரன்,பேத்தி - 
நான்கு பேரும் எங்களுக்கு ஒரு பரிசு கொடுக்க நினைத்து எங்களைப் பெரு நாட்டிற்கு 9 இரவுகள் பிரயாணமாகக் கூட்டிச் சென்றார்கள். 
அற்புதமான 9 நாட்கள் - 
லீமா, குஸ்கோ, அமேசான் மழைக் 
காடுகள் (Rain Forest)- Machu Pichu மலைகள், இன்கா கலைச் சின்னங்கள். மறக்க முடியாத அனுபவம். 
அவை பற்றி அடுத்த சில பகுதிகளில் 
எழுத உத்தேசம்.
இந்தப் பிரயாணத்தின் climax தான் 
புது வருஷக் கொண்டாட்டம்.
குஸோ நகர் 11000 அடி உயரத்தில் 
உள்ள நகரம். கடல் மட்டத்திலிருந்து செல்பவர்களுக்கு altitude sickness 
என்பது வரும். தலைவலி, மூச்சுத் திணறல் வரும். கண்ணன் பாட்டில் வருமே
 "சின்னச் சின்ன பாதம் வைத்து வா, கண்ணா" என்ற மாதிரி அடிமேல் அடி வைத்து நடக்க வேண்டும். 
கோகா டீ குடித்துக்கொண்டே 
இருக்க வேண்டும். எப்படியோ சமாளித்துவிட்டு பத்திரமாக ஊர் திரும்பிவிட்டோம். 

டிசம்பர் 31ஆம் தேதி, குஸ்கோ முனிசிபாலிட்டியே முன்னின்று 
நடத்திய புத்தாண்டு விழாவில் கலந்துகொண்டோம்.
நகரத்திலேயே ஒரு பெரிய கதீட்ரல் 







அதன் முன் ஒரு பெரிய மைதானம் மாதிரி பிளாசா. கதீட்ரல் வாசலில் பந்தல்
மேடை போட்டு சங்கீத band. 









10 மணியிலிருந்து மக்கள் கூட்டம்
கூட்டமாக வந்துவிட்டார்கள். 
அந்த ஊரிலேயும் எப்படியோ விசாரித்து 
ஒரு Indian restaurantஐக் கண்டுபிடித்தோம். மேனேஜர் உத்தராஞ்சலை சேர்ந்தவர். 
spicy potato என்று ஒரு உருளைகிழங்கு கறி. காரம் என்றால் உங்கள் வீட்டு
எங்கள் வீட்டுக் காரம் இல்லை
ஜிவ்வென்று ஏறும். 
என்னுடைய ஆந்திர நண்பர்களை
நினைத்துக்கொண்டேன். 
வாழ்க காரம், வாழ்க ஆந்திரா!
பத்தரை மணி Massல் கலந்துகொண்டோம். அருமையான, பிரம்மாண்டமான கதீட்ரல். எங்கும் ஸ்பானிஷ். எல்லாம் ஸ்பானிஷ் பிரசங்கம் உட்பட.
கதீட்ரலில் எங்கு திரும்பினாலும் 
தங்கம் இழைத்த தூண்கள், கதவுகள். 









தங்கம் எங்கேயிருந்து வந்தது என்று கேட்காதீர்கள். இன்கா சாம்ராஜ்யத்தில் இப்பொழுது ஒரு பொட்டுத் தங்கம்கூட இல்லையாம். 

நினைத்துப் பார்க்கிறபோது,  
நல்ல வேளை - 
lesser devil என்று சொல்வார்களே, வெள்ளைக்காரன் நம்மை ஆட்சி செய்தான். 
மற்றவை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.
12 மணி வரை பாட்டும் நடனுமும்தான். 









12 மணிக்கு முன்னால் count down. 
12 மணிக்குப் புத்தாண்டு பிறந்தது. தடையில்லாமல் ஒரே வாண வேடிக்கை. இப்படியாக நினைத்தே பார்க்காத 
ஒரு தூர தேசத்தில் குடும்பத்தோடு புத்தாண்டை வரவேற்ற காட்சி
ஒரு சுகமான அனுபவம். 
ஆண்டவனுக்கு நன்றி. 
என் குழந்தைகளுக்கு நன்றி.
God Bless Them.
மறுநாள், லீமா, அதே இரவு திரும்பி அமெரிக்க பயணம்.
எனக்கு ரொம்பவும் பிடித்தது - total involvement of the people and 
the local government in the celebration. வருஷாவருஷம் New York நகரின் 
Time Squareல் நடக்கும் புத்தாண்டு விழா மாதிரிதான் இதுவும் — 
கொஞ்சம் சிறிய அளவில் ஒரு நப்பாசை — 
நாமும் ஏன் Island ground மாதிரி திடலில் இந்த மாதிரி விழாவைக் கொண்டாடக் கூடாது?

ஆக ஒரு வழியாக, 2013 பிறந்துவிட்டது. 2013ஐ வரவேற்க இந்த உலகம் இருக்குமா என்று பயந்த நிலை மாறிவிட்டது.
உலகம் அவ்வளவு சீக்கிரம் அழியாது. 
அது எப்போது, எப்படி அழியும், அழிய வேண்டும் என்று தீர்மானிப்பது 
அந்த ஆண்டவன் ஒருவன்தான். 
அது அவன் வேலை. அவன் மேல் பாரத்தைப் போட்டுவிட்டு நாம் 
நம்முடைய வழக்கமான வேலையைத் தொடர்வோம்.
2013 ஒன்றும் மற்ற ஆண்டுகளைவிட வித்தியாசமாக இருக்கும் என்று தெரியவில்லை. 
இது ஜோசியம் இல்லை. பழைய trendsகளை அலசும்போது
நிலைமை அப்படியேதான் இருக்கும் 
என்று தோன்றுகிறது.
வழக்கம்போல், புத்தாண்டுத் தீர்மானங்களைப் போடுவோம். 
எவ்வளவு முடியுமோ முயற்சிப்போம். முடியவில்லையானால் இருக்கவே 
இருக்கு, அடுத்தாண்டு.

கடைசியாக, ஒரு வேண்டுகோள்:
ஏற்பதும், ஏற்காததும் அவரவர் விருப்பம். கொஞ்சம் சிந்திக்கவாவது செய்ய முயற்சி பண்ணுங்கள்.
நாட்டில் ஆத்திகம் வளர்ந்திருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது. 
அதற்கு ஒரு உதாரணம் கோயில்களிலும் புண்ணிய ஸ்தலங்களிலும் பெருகிவரும் கூட்டம். ஒரு நம்பிக்கையோடு 
செயல்படும் எந்தக் காரியமும் 
வரவேற்க வேண்டியதுதான். 
ஆனால், வருத்தப்பட வேண்டிய 
விசேஷம் - இந்த barter சமாச்சாரம்தான். (அதாவது பண்ட மாற்று விஷயம்) கடவுளிடம் நாம் பிரார்த்தனை பண்ணுவது மனதிலிருந்து உண்மையாக வருவதாக தெரியவில்லை.
கடவுளே, என்ன வெற்றிக்கொள்ளச் செய். நான் 108 தேங்காய்கள் உடைக்கிறேன்’ - நான் உனக்கு வெள்ளி வேல் சாத்துகிறேன் - நான் மொட்டை அடித்துக்கொள்கிறேன் இத்யாதி - இது அவசியம்தானா
கடவுளா கேட்கிறார்? கேலியாக எழதவில்லை. நான் கடைப்பிடிப்பதைச் சொல்கிறேன்.
வெங்கடேச சுப்ரபாதத்தை எல்லோரும் பாராயணம் பண்ணியிருப்பீர்கள். கேட்டாவது இருப்பீர்கள்.
அதில் ஸ்தோத்திரப் பகுதியில்
9ஆவது ஸ்லோகம் ஒரு அருமையான எடுத்துக்காட்டு.

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
ஸதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி,
ஹரே வேங்கடேச பிரஸீத பிரஸீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச//
இதன் அர்த்தம்:
திரு வேங்கடமுடையானைத் தவிர வேறொரு தேவன் இவ்வுலகில் இல்லை. உன்னையே சதா காலமும் தியானிக்கிறேன். ஸ்ரீ ஹரியே, அருள் புரிவாய். எனக்கு எது நன்மையோ அதை நிறைவேற்றிவைப்பாய்.

கடவுளிடம் நீங்கள் கேட்பதெல்லாம் இது ஒன்றே ஒன்றுதான். 
உங்களுக்கு எது அவசியம் என்று கடவுள் நினைக்கிறாரோ அதை அவர் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்று. அவருக்கு எல்லாம் தெரியும் என்று நினைத்து நாம்  செயல்பட்டால் போதும்.
இந்த ஸ்லோகம் ஒரு universal ஸ்லோகமாகச் செயல்பட முடியும். வெங்கடேசன் பெயருக்குப் பதிலாக, உங்கள் இஷ்ட தெய்வ பெயரை 
substitute செய்துகொள்ளுங்கள். 
ராம, கிருஷ்ண, முருக, கணேச, சூர்ய, புத்தர், இயேசு, அல்லா என்று. 
அர்த்தம் ஒன்றுதான். கேட்பதும் ஒன்றுதான்.
எத்தனையோ புது வருடத் தீர்மானங்களோடு இதையும் சேர்த்துக்கொள்ளுங்களேன்: 
"நான் இந்த வருஷம் பிரார்த்தனை செய்யும்போது கடவுளிடம் பேரம் பேசி, அவரையும் என் பிரார்த்தனையையும் கொச்சைப்படுத்த மாட்டேன்"

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

... கிளறல் தொடரும்.

2 comments:

ganesh said...

good article

பாலாஜி said...

Very nice. Made me feel as if I traveled with you all.
Thank you for taking the effort to share. Regards Balaji