Tuesday, April 09, 2013

ஞமலி (நாய்) புராணம் தொகுத்தவர்: வேதவியாச தாசன் தி.சு. பாம்பரசனார் பகுதி - 1


அறிமுகம்                                                          

                                                                             
                                                                       
நைமிசாரண்ய காடு புனிதமான 
ஸ்தலம். ரிஷிகள் கூடி ஜப,தப 
மற்றும் யாகங்கள் செய்யும் இடம். பிரவசனம் (உபன்யாசம்) கேட்க 
ரிஷிகள் கூடியிருந்தார்கள்.

















முதல் பிரவசன குரு - 
சூத மகரிஷி. 
வேத வியாசர் மகனான 
சுக மகரிஷியின் சிஷ்யர். 
நாரதர் மூலம் கேட்டு, 
வேதங்களையும் புராண,மகாபாரத இதிகாசங்களையும் எழுதிய 
வியாச மகரிஷி, தன் மகன் 
சுகருக்கு உபதேசிக்க, 
அதை சுகர், சூதருக்குச் 
சொல்லிக்கொடுக்க, 
அதை சூதர், மகரிஷிகளுக்கு 
எடுத்துச் சொன்னார். 
சூதர், எல்லாப் புராணங்களையும் 
விளக்கி, ஒரு நல்ல காரியத்தைச் செய்துமுடித்த திருப்தியோடு, 
தன் சீடர்களான மகரிஷிகளைப் 
பார்த்து, "ஏதாவது சந்தேகங்கள் 
உண்டா?" என்று கேட்டார். 
எல்லோரும் ஒரே மனதாக 
"சுவாமி, புண்ணியம் அடைந்தோம். 
தங்கள் உபன்யாசங்களைக் 
கேட்டு நீங்கள் சொன்னபடி 
நடப்பதைத் தவிர வேறு சந்தேகமே கிடையாது என்றார்கள்.
சூதருக்கு இதைக் கேட்டதில் 
மகிழ்ச்சி இல்லை.
 "சீடர்களே, ஒரு சாதாரண 
மானிடனுக்கு ஏற்பட்ட சந்தேகம், உங்களுக்கு ஏன் தோன்றவில்லை? 
என்று நினைக்கும்போது 
வருத்தமாக இருக்கிறது" என்றார்.
ரிஷிகளுக்கு ஒரு மாதிரியாக 

ஆகிவிட்டது. 
‘எதை மறந்தோம்’ என்ற கவலையில் 
"சுவாமி, கொஞ்சம் விபரமாகச் சொல்லுங்கள். 
யார் அந்த மானிடன்? 
அவன் என்ன சந்தேகம் 
கேட்டான்?" 
என்று கெஞ்சினார்கள்.
சூதர் பின் வரிசையில் அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்த 

ஒரு "81 வயது இளைஞரைக் 
(மற்ற ரிஷிகளைப் பார்க்கும்போது. 
அவன் இளைஞன்தான்) காட்டி 
"அதோ, அவர்தான். 
நான்தான் 
அவரை இங்கு வரவழைத்தேன். 
அவரையே நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே?" 
என்றார்.
பிறகு, அந்த மனிதரை 

முன்வரிசைக்கு வரச்சொல்லி, 
"அன்பரே, வருக, வருக, 
இந்தப் புனிதமான சபைக்கு. 
நீரே, உம்மைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டு 
என் சீடர்கள் கேட்ட 
கேள்விகளுக்கு விளக்கம் 
தாரும்" என்றார்.
அந்த மானிடனும், முன்வந்து, 

பணிவுடன் 
"சூத முனிவருக்கும் 
மற்ற எல்லா ரிஷிகளுக்கும் 
என் பணிவான வணக்கம். 
உங்கள் முன் நிற்கவே 
எனக்குக் கூச்சமாக இருக்கிறது. 
சூதர் கொடுத்த தைரியத்தில் 
இங்கு வந்திருக்கிறேன். 
எனக்கு உபன்யாசம் பண்ணத் 
தெரியாது. அதனால் நாம் 
இதைக் கேள்வி-பதில் 
முறையிலேயே நடத்தலாம்.
என் பெயர்: தி.சு. பாம்பரசனார்.
என் ஊர்:திருநெல்வேலி,தமிழ் நாடு. நர்மதை நதிக்குத் தெற்குப் 

பகுதியில் உள்ளது எங்கள் நாடு. 
எங்கள் மொழி தமிழ் — 
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து இருக்கும் 
மொழி. சங்கரனார் ஆரம்பித்து 
முருகப் பெருமான் ஆசியுடன் 
அகஸ்தியர் மற்றும் 
பல அறிஞர்களால் 
வளர்க்கப்பட்டத் 
தமிழ். 
சமஸ்கிருத வார்த்தை 
இல்லாமலேயே இயங்கும் 
மொழி - எங்களது தமிழ். 
தமிழில் இல்லாத விஷயமே 
கிடையாது. அப்படி ஏதாவது 
தமிழில் விடுபட்டிருந்தால் 
அது தேவையற்ற 
விஷயமாகத்தான் இருக்கும்..."
ஒரு ரிஷி இடைமறித்து 

"போதும் உங்கள் மொழிப்  
பிரதாபம். 
எங்களுக்கும் தெரியும். 
நீர் சொன்னபடி உங்கள் தமிழை 
வளர்க்க உதவியவர் எங்களில் 
ஒருத்தரான அகஸ்தியப்  
பெருமான்தானே? 
அது போகட்டும், 

அதென்ன உம் பெயர், 
தி.சு. பாம்பரசனார். 

"பாம்பரசன்: 
பெரியோர்களே, 
மன்னிக்க வேண்டும். 
பெரும்பாலும் தமிழர்கள் உணர்ச்சிவசப்படுபவர்கள். 
ஒரு சந்தர்ப்பம், மேடை 
கிடைத்தால் போதும் 
‘கல்தோன்றி, மண்தோன்றா’ 
என்று ஆரம்பித்துவிடுவார்கள், 
நானும் அதற்கு விதிவிலக்கு 
இல்லை. மன்னிக்கவும்.
‘தி.சு.’ என்பது என் இனிஷியல்.
‘தி’ - நான் பிறந்த 

திருநெல்வேலியையும் 
‘சு’ என்பது என் தந்தையார் 

பெயரான சுப்ரமணிய அய்யர் 
என்பதையும் குறிக்கும்.

பாம்பரசன் என்பது 

என் பெயரின் 
சுத்தத் தமிழாக்கம். 
என் பெற்றோர்கள் இட்ட பெயர் - நாகராஜன். 
நான் படிக்கிற 
காலத்தில் திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு ஓங்கியிருந்தது. 
எங்கும் தமிழ், எதிலும் தமிழ்
என்று பேசப்பட்ட காலம். 
எங்களில் ஒரு பெரிய மேதை - 
சூர்ய நாராயண சாஸ்திரி. 
தன் பெயரை "பரிதிமாற்  கலைஞர்" 
என்று மாற்றி வைத்துக்கொண்டார். 
பரிதி என்றால் சூரியன். 
மால் - நாராயணனைக் குறிக்கும். சாஸ்திரிக்குத்  தமிழ்ப் பெயர் - 
கலைஞர். 
எனக்கும் ஒரு ஆசை. 
நாகராஜன் - பாம்புகளுக்கு அரசன். அதனால் ‘பாம்பரசன்’ என்று அழைத்துக்கொண்டேன்.
ரிஷி : அது சரி, 

அதென்ன "னார்"
பாம்பரசன்: அது மரியாதைக்குரிய 

சொல். இலக்குவன் -இலக்குவனார், கிருஷ்ணன் - கிருட்டினார் 
(நாங்கள் ஜ,ஷ,ஸ உபயோகிக்க மாட்டோம்.)
ரிஷி: இது உங்களுக்குக் 

கொஞ்சம்‘ஓவராக’ 
தெரியவில்லை?
பாம்பரசன்: 
ஆச்சரியமாக இருக்கிறதே? 
எங்கள் ஊர் T.V. டயலாக் 
உங்களுக்குத் தெரிந்திருக்கிறதே? 
மகிழ்ச்சி. வாஸ்தவம்தான். 
சில சமயங்களில் கேலியாகவும் முடிந்திருக்கிறது. 
எங்கள் ஊர்த்  தமிழ் வாத்தியார் 
பெயர் - நவநீதகிருஷ்ணன். 
அதை அவர் நவநீதகிருட்டினனாக 
மாற்றி வைத்துக்கொண்டிருந்தார்.
ஒரு நாள், ஒரு பையன், 

அவரைப் பார்த்து
 "ஏன் ஐயா, உங்கள் பெயரைச் 
சுத்த தமிழாக மாற்றிவைத்துகொள்ள கூடாது என்றான். 
அவர் சொன்னார்
 "அதுதான், கிருட்டினன் என்று மாற்றியிருக்கிறேனே? 
பையன் சொன்னான். 
"இது சுத்தத்  தமிழ் இல்லை. 
நவநீதம் - சமஸ்கிருத வார்த்தை. 
அர்த்தம்- வெண்ணை
கிருஷ்ணன்- சமஸ்கிருதம்-கருப்பு 
தமிழில் நீங்கள் 
வெண்ணெய் கருப்பனார் 
என்றுதான் வைத்திருக்க வேண்டும் என்றான். 
வாத்தியார் கப்சிப் என்று உட்கார்ந்துவிட்டார். 
ஆனால் காலம் மாறிவிட்டது. 
எங்கள் முன்னாள் முதல்வர் 
திராவிடக் கொள்கையில் 
தீவிரமானவராக இருந்தாலும் 
தன் பெயரிலும் தன் பேரன்கள் 
பெயரிலும் நிதி என்ற 
சமஸ்கிருத வார்த்தையைத்தான் 
வைத்துக்கொண்டு இருக்கிறார்.

ரிஷி: தமாஷாகத்தான் இருக்கிறது. 
அதென்ன வேத வியாச தாசன்?

பாம்பரசன்: சுவாமி, 
இது தமிழ் நாட்டுப் பழக்கம். 
பாரதி தாசன், கண்ண தாசன், 
கம்ப தாசன் என்று பல பிரபலங்கள் 
தாங்கள் யாரால் மிகவும் ஊக்குவிக்கப்பட்டார்களோ 
அந்தப் பெரியவர்களுக்கு 
மரியாதை தெரிவிக்கும் முறையில் 
அவர்களுடையப் பெயரோடு 
தாசன் என்று சேர்த்துக்கொள்வார்கள். 
அதே பாணியில், இவ்வளவு 
புராணங்கள் எழுதிய வியாச 
மகரிஷிதான் எனக்கு inspiration. அதனால்தான், அவர் தாசன் என்று பெருமையோடு சொல்லிக்கொள்கிறேன்.
ரிஷி: வியாசருடைய புராணங்களை எப்படிக் கற்றுக்கொண்டீர்?
பாம்பரசன்: என்னுடைய அறிவு

எல்லாம் அமர் சித்ர கதா என்று அழைக்கப்படும் படங்களோடு 
உள்ள கதைகளிலிருந்தும், 
வசன நடையில் உள்ள புராணக் கதைகளைக் கேட்டும், படித்தும் தெரிந்துகொண்டவை.
ரிஷி: நீர் என்ன சந்தேகத்தை 

எழுப்பினீர்?
பாம்பரசன்: வியாச பெருமான் 

18 புராணங்கள் எழுதியுள்ளார். 
எத்தனையோ மிருகங்களின், 
பட்சிகளின் பெயர்களில் 
புராணங்கள் இருக்கின்றன. 
ஆனால் அவர் எழுதத் தவறியப் (மன்னிக்கவும், ஏன் என்று 
தெரியவில்லை) புராணம் - 
ஞமலியைப் பற்றியது.
ஒரு ரிஷி: அதென்ன - ஞமலி?
பாம்பரசன்: ஞமலி. 

சுத்த சங்ககாலத் தமிழ். 
சமஸ்கிருதத்தில் சுவானம்; 
ஆங்கிலத்துல் DOG 
எல்லோராலும் தெரியப்படுவது 
நாய்.
ரிஷி: நாயா? அதற்குப் புராணமா? 
உமக்கு ஏதாவது மறை 
கழன்றுவிட்டதா? 
ஒரு கடை ஜென்மம். 
மற்றவர்கள் சாப்பிட்டுத் தூக்கி 
எறியப்பட்ட இலைகளில் உள்ள 
மிச்சப் பதார்த்தங்களை ருசித்து 
சாப்பிடும் ஒரு ஜந்துவுக்காக 
புராணம்? 
ஒருவர், இன்னொருவரைக் 
கோபத்தில் திட்டும்போது 
"போடா, நாயே, வெளியே போ" என்றுதானே சொல்கிறார்கள். 
இவ்வளவு கேவலமான மிருகத்திற்கு 
ஏன் புராணம் எழுத வேண்டும்?

சூத மகரிஷி: அன்பரே, எனக்குத் 
தமிழ் இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. உங்களில் ஒரு புலவர் 
சுப்ரமணிய பாரதி என்று நினைக்கிறேன். 
அவர், அவருடையப் புதிய 
ஆத்திச்சுவடியில் என்ன 
எழுதியிருக்கிறார், என்று உமக்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன். 

"ஞமலி போல் வாழேல்" - 

நாய் போல் வாழாதீர்கள் என்று. 
இதற்கு என்ன சொல்கிறீர்?

பாம்பரசன்: சூத ரிஷியின் தமிழ் ஞானத்திற்குத் தலைவணங்குகிறேன். நானும் பாரதியைப் படித்தவன்தான். 
பாரதி, ஏன் அப்படி எழுதினார் 
என்று தெரியவில்லை. 
பாரதியார், ஒரு தேசீய சிந்தனையாளர். வெள்ளைக்காரன் அடிமைத் தளையிலிருந்து மக்கள் விடுபட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் விழிப்புறப்  
புரட்சிக்  கவிதைகள் எழுதியவர். 
நாயின் ஒரு குணம், மற்றவர்களை 
அண்டிப்  பிழைப்பு நடத்தி 
அவர்களுக்கு அடிமையாக 
வாழ்க்கையை நடத்துவது. 
இந்த மாதிரி மக்கள் வாழக்கூடாது 
என்று நாயை உதாரணம் காட்டியிருக்கலாம். 
ஒரு மிருகத்தின் ஒரே ஒரு
"எதிர்மறை குணத்தைக்கொண்டு 
அந்த மிருகத்தை 
எடை போடக் கூடாது. 
இன்றைக்கு உலகம் முழுவதிலும் 
உள்ள போதனையாளர்கள் சொல்வது "உதவி செய்தவரிடம் நன்றியுடன் நடந்துகொள். 
நன்றி மறப்பது நன்றன்று. 
உன் எஜமானனுக்கு விசுவாசமாக நடந்துகொள். 
அவனுக்கு எப்போதும் காவலனாக 
இருந்து அவனை எதிர்ப்புகளிலிருந்து 
காப்பாற்று" என்று. 
இந்தக் குணங்கள் உடைய 
ஒரே மிருகம் - நாய்தான்.
விசுவாசத்திற்கும் நன்றிக்கும் 

மறுபெயர் நாய்தான். 
இந்தக் காரணம் போதும் 
என்று நினைக்கிறேன். 
மேலும் நாய் ஒன்றும் நமக்குப் 
புதிய அறிமுகம் இல்லையே? 
ரிக் வேதத்தில் இந்திரனுடைய 
நாயைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. சிவபெருமானுடைய அவதாரமான, காலபைரவரின் வாகனம், 
ஒரு நாய்தானே!















இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். 
வியாச முனிவரும் மகாபாரதத்தில் 
ஒரு "நாய்க்  கதையை" சொல்லியிருக்கிறாரே? 
இது தவிர, 
இன்றைய பூலோகத்தில்
 "Pet" என்று அழைக்கப்படும் 
வீட்டுப் பிராணிகளில், 
நாய்க்கு ஒரு தனி இடம். 
சூதர்: அருமையான விளக்கம் 

நீர் என்ன செய்யலாம் என்று 
உத்தேசம்?
பாம்பரசன்: 

நான் ஒரு சிறு முயற்சி 
செய்திருக்கிறேன். 
என்னால் முடிந்தவரை, 
நாயைப் பற்றின எல்லா 
விபரங்களையும் திரட்டியிருக்கிறேன். 
இது பாரத தேசத்தில் உள்ள 
வரலாறு மட்டும் இல்லை. 
உலகத்தில் உள்ள 
மற்ற கலாச்சாரங்களில், 
மற்ற மதங்களில் மற்ற நாடுகளில் 
நாயைப் பற்றி 
என்ன நினைத்திருக்கிறார்கள் 
என்பதைத் திரட்டி, 
அதைத் தொகுத்து 
ஒரு புராணமாக எழுதியிருக்கிறேன்.
இதை, நானும் என் மனைவியும் சம்பாஷிக்கிற மாதிரி 

எழுதியிருக்கிறேன்.
உங்கள் சம்மதம் கிடைத்தால் 

அதன் சுருக்கத்தை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ரிஷிகள்: ரொம்ப சந்தோஷம். 

உங்கள் முயற்சிக்கு 
எங்கள் வாழ்த்துகள். 
ஆனால், எங்களுக்கு ஒரு பயம். 
புராண மன்னர், வியாச பெருமான் 
பெயரை வைத்துக்கொண்டு 
ஒரு புராணம் எழுதுகிறீரே? 
அவருடையப் புகழுக்கு ஏதாவது 
பங்கம் வருமா?
பாம்பரசன்: பயமே வேண்டாம். 

இந்தப் புராணம் பிரசுரிக்கப்படப் 
போவது என்னுடைய Blog ஆன "திருநெல்வேலியின் குப்பை"யில் 
அதைப் படிப்பவர்களின் 
எண்ணிக்கை - 20லிருந்து 30வரை. 
ஒருவேளை, நாய் வளர்ப்பவர்கள் 
படிக்க நேர்ந்தால் 
(வியாசர் ஆசிர்வதித்தால்) 
படிப்பவர்கள் எண்ணிக்கை 
அதிகமாகலாம். 
யாருக்கும் எந்த பங்கமும் வராது. 
சூதர்: மகிழ்ச்சி. உம்முடைய உத்திரவாதத்தைக் கேட்டதில்.


இப்பொழுது உம் புராணத்தைப் 
பற்றிச்  சொல்லும்.

'நாய்' புராணம் ஆரம்பம்....





















அடுத்த வாரம்...









No comments: