Monday, April 01, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி3


அலைகள் தொடர்கின்றன... 
நிறைய அனுபவங்கள்
பல வித்வான்கள் கச்சேரிகளில். 
சொல்லிக்கொண்டே போகலாம். 









M.L.Vasanthakumari














MLVயின் முதல் கச்சேரி 
1948  ஜனவரி 30ஆம் தேதி 
5.30 pm - 6.00. 
திருவையாறு ரிலே. 
யார் இவர்கள்
என்ன அருமையாகப் பாடுகிறார்கள் ,
என்ற வியப்போடு ரேடியோவை மூடினோம். 
2 நிமிடங்களில் செய்திகள் வந்தன. 
மஹாத்மா காந்தி சுட்டுக் 
கொல்லப்பட்டார்  என்ற செய்தி. 
திருவையாறு கச்சேரிகள் நிறுத்தப்பட்டன. 
இது  ஆர்டிஸ்டுக்கு அபசகுனமோ என்று 
நினைக்க தோன்றியது...
ஆனால்,தியாகதராஜ சுவாமிகளின்
கிருபையால்,MLV, புகழ் 
உச்சிக்கே  சென்றார்.
எம்.எல்.வி அவர்கள்,சினிமா 
பின் பாடகி யாகவும் சிறந்து விளங்கினார் 
என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால்,எந்த கச்சேரியுலும்,
சினிமா பாடல்களை பாட மாட்டார்.
(சின்னஞ் சிறு கிளியே..தவிர)

ரசிகர்களின் தொந்தரவை நாசுக்காக
சமாளிப்பார்கள்." சினிமாவில் நிறைய
வாத்தியங்களோடு பாடுவேன்.அப்ப தான்
பாட்டு சோபிக்கும்.இந்கே அப்படி ஏற்பாடு
செய்தால் கட்டாயம் பாடுகிறேன்." என்பார்.
பிறகு எவன் கேட்பான்?
சினிமா வேறு..கச்சேரி வேறு என்பதில் 
ஒரு தீர்மானத்தோடு இருந்தவர்.
அதிகமான கச்சேரிகள் பண்ணியவர்,
இவர் தான்.

மஹாராஜபுரம் சந்தானம்













புகழ் உச்சியில் இருந்த சமயம்,

நம்மிடமிருந்து பிரிக்கப்பட்டார் என்பது 
துயரமான விஷயம்.
Popular Musician-ஜனரஞ்கர்-என்ற 
அடைமொழி இவருக்குத் தான் பொருந்தும்.

ஒரு உதாரணம்...
ICC ஏற்பாடு செய்த கச்சேரி--
ஹோட்டல் சோழாவில்..
எல்லோரும் தறையில் தான்.
முதல் கச்சேரி,ரவிகிரனின் 
சித்ர வீணைக் கச்சேரி.மெயின் ராகம்
கல்யாணி.அருமையாக இர்ந்தது.
2 மணி நேரத்துக்கு பிறகு 
சந்தானம் அவர்கள் கச்சேரி.
2 பாட்டுகளுக்கு பிறகு
ஒரு ராகத்தை ஆரம்ம்பித்தார். 
உடனே எல்லாருக்கும் தெரிந்துவிட்டது--
கல்யாணி என்று.
மறுபடி கல்யாணியா என்று ஒருத்தரை
ஒருத்தர் பார்த்துக் கொண்டோம்.
ஒன்றும் செய்ய முடியாது.
வித்வானின் இஷ்டம். 
கேட்க தயாரானோம்.
சந்தானம்,ரசிகர்களின் சங்கடத்தை 
புரிந்து கொணடார்.எதிரில் உட்கார்ந்து 
இருந்த ரவிகிரனைப் பார்த்து,
"வாசித்தாயா" என்று கேட்டார்.
ரவிகிரனும் "ஆம்" என்று தலையை அசைத்தார்.
அவ்வளவு தான்,உடனே ராகத்தை
மாற்றினார். இது கச்சேரிகளில் சாதரணமாக
நடக்காதது ஒன்று.
கடைசி  காலம் வரை 
சளைக்காமல் ரசிகர்களை
திருப்தி பண்ணி பாடி வந்தார்.

வாழ்க அவர் புகழ்....

எம்.ஜி,ஆர்-கே.வி.என்











எம்.ஜி.ஆர் ,ஒரு சிறந்த கர்நாடக சங்கீத 

ரசிகர் என்பது தெரிந்திருக்கலாம்.

Music Academy துவக்க விழாவுக்கு 
முதன் மந்திரி-எம்,ஜி,ஆர் தலைமை 
தாங்கினார்.வருடம்-1978
துவக்கவிழாவுக்குப் பின் 
கே.வி.நாராயாண சுவாமி கச்சேரி 
பண்ண ஆரம்பித்தார்.
எம்.ஜி.ஆர், முன் வரிசையில்
உட்கார்ந்து கச்சேரி கேட்கலானார்.
நான் 2 வரிசை பின்னால் உட்கார்ந்து 
எம்.ஜி,ஆர் எப்படி ரசிக்கிறார் என்று
பார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா  V.I.P கள் மாதிரி,இவரும் 
ஒரு மரியாதை நிமித்தம்,2,3 பாட்டுக்கள் 
கேட்டுவிட்டு போய் விடுவார் என்று 
நினைத்தேன்.
கே.வி.என்.பாட்டு, அன்று படா ஜோர்.
உணர்ச்சியோடு நிறைய தமிழ் பாட்டுக்கள்
பாடினார்.எம்.ஜி.ஆர். கடைசி வரை 
நகரவில்லை.
கச்சேரி முடிந்து விடை பெறு முன்,
காரியதரிசி "ஆட்டோ பார்ட்" நடராஜ அய்யரிடம்,
"இந்த கச்சேரியின் ரிகார்டிங் கிடைக்குமா"
என்று கேட்டார்.நடராஜ அய்யரும்
"கட்டாயம்  ஏற்பாடு செய்கிறேன்" என்றார்.
 எல்லோருக்கும்,முதல்வரின் சங்கீத ஆர்வத்தை
நேரில் பார்த்ததில் மகிழ்ச்சி.

யாரும் எதிர்பாராதது நடந்தது,
மறு நாள் காலையில்.
என்ன நடந்தது என்பதை நடராஜ அய்யர், 
சில நண்பர்களுடன் (நான் உட்பட)
பகிர்ந்து கொண்டது.
கச்சேரிக்கு மறு நாள் காலை
9 மணிக்கு எம்.ஜி,ஆர் ,காரியதரிசி
நடராஜ அய்யர் வீட்டில் ஆஜாராகி
"சார்,ஐயா,டேப் கேட்டாங்களாம்,
ரெடியா",என்றான்.
அய்யர் ஆடிப் போய் விட்டாரம்.
முதல்வர் இவ்வளவு சீரியஸாக
எடுத்துப்பார் என்று நினைக்கவில்லை.
ஒரு ஏற்பாடும் பண்ண வில்லை.
அந்த காலத்தில் கச்சேரி ரிகார்டிங்
எல்லாம் spool tape ல்.
imported product.
அய்யர்,P.A.க்கு உபசாரம் பண்ணி 
உட்கார வைத்து விட்டு
நண்பர்களுக்கு போன் பண்ணி,
கடைசியில் ஶ்ரி.ஓபுல் ரெட்டி தயவில் 
டேப் கிடைக்க,ரிகார்டிங் பண்ணி 
அனுப்பி  வைத்து விட்டு
"தப்பினோம்,பிழைத்தோம் " 
என்று பெருமூச்சு விட்டாராம். 
(எனக்கும் ,சந்தடி சாக்கில் 
ஒரு காபி கிடைத்தது, பரம ரகசியம்)

வாழ்க  ...எம்.ஜி.ஆரின் சங்கீத ரசனை!

வாழ்க.....கே.வி.என்னின் பாட்டுத் திறமை

கடைசியாக, ஸ்ரீ. பாலமுரளிகிருஷ்ணா.











பாலமுரளியைப் பற்றிப் பேச, எழுத
"ஒரு நாள் போதுமா?"
Balamurali in Thiruvilayadal
பழகுவதற்கு நல்ல நண்பர். 
நல்ல conversationalist. 
கடவுள் கொடுத்த பரிசு - 
இன்றைக்கும் இளமை 
குன்றாத சாரீரம். இவர் கச்சேரிகளில் 
புதுமைக்கு குறைவிருக்காது. 
கச்சேரிக்குப் பிறகு ஏதாவது சந்தேகம் 
கேட்டால் களைப்பின்றி அழகாக 
விளக்கிச் சொல்வார்.













2 பாட்டுக்களைப் பற்றி அவர் 

விளக்கத்தைச் சொல்கிறேன்.

முதலாவது தியாகராஜர் இயற்றிய 
"க்ஷீர சாகர விஹார" என்ற 
ஆனந்த பைரவியில் 
உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனை. 
இதை அநேகமாக எல்லா வித்வான்களும் 
மத்யம காலத்தில் கொஞ்சம் 
speed  ஆகப் பாடுவார்கள். 
இவர் மட்டும் அந்தப் பாட்டை நன்றாக 
இழுத்து மெதுவாகப் பாடுவார்.
 "ஏன்?" என்று ஒருதரம் கேட்டேன். 

அதன் விளக்கம் இதோ:

இந்தப் பாட்டு தியாகராஜ சுவாமி 
எப்போது இயற்றினார் என்பதை  
கவனிக்க வேண்டும். 
உற்சவ சம்பிரதாயக் கீர்த்தனைகள் 
"ராமரின் ஒரு நாளை"ப் பற்றிப் 
பாடப்பட்டவை. 
காலையில் ராமரை எழுப்பி
கடைசியில் இரவில் 
அவரைப் படுக்க வைக்கும்வரை 
பாடியவை. 
இந்தப் பாட்டுக்கு முன், ராமருக்குப் 
போஜனம் செய்து தாம்பூலம் கொடுத்து
பின் ராமரை ஊஞ்சலில் வைத்து
ஆட்டித் தூங்க வைக்கிறார். 
நல்ல உணவு அருந்தியவரைத் தூங்கவைக்க 
ஊஞ்சலை எப்படி ஆட்ட வேண்டும்?
மெதுவாகத்தானே..
பாட்டும் அந்த "mood"ஐத் தானே 
பிரதிபலிக்க வேண்டும்.
வேகமாக ஆட்டினால் ராமர் 
சாப்பிட்டதை வாயில் எடுத்துவிடுவார்."
என்ன அருமையான விளக்கம்!
இதோ அந்த பாட்டு:
பாலமுரளி-ஷீரசாகர விஹார

இரண்டாவது: நனு பாலிம்பஎன்ற 
மோஹன ராக கீர்த்தனை. 
தியாகராஜர் இயற்றியது. 
இதில் நடசி வச்சிதேஎன்று இரண்டு 
தரம் சொல்லிப் பாடுவார்.
பாடாந்தரம் படி ஒரு தரம்தான் 
உபயோகிக்க வேண்டும். 
இதோ,சங்கீத ஜாம்பவன்,அரியகுடி
ராமானுஜ அய்யங்கர் அவர்கள்
பாடியது;நனு பாலிம்ப-அரியகுடி

இந்தப் பாட்டு இவர் முதலில் 

பாடினபோது  ஒரு controversy. 
இவருடைய விளக்கம்:
ராமர் படத்தை ஒருவர்
தியாகராஜருடையை பெண் கல்யாணத்திற்காகப் 
பரிசாகக் கொண்டு வருகிறார். 
தைப் பார்த்தவுடன் தியாகராஜ 
சுவாமிக்கு ராமரே நேராக வந்த மாதிரி 
ஒரு பிரமை. 
நம்மை ஆச்சரியப்படுத்தும் ஒரு நிகழ்ச்சி 
நடந்தால்நாம் திருப்பித்திருப்பி 
"உண்மையாகவா" என்று கேட்பதில்லையா
அதே மாதிரி தியாகராஜரும் 
"ராமா, என்னை ரக்ஷிக்க நடந்து வந்தாயா
நிஜமாகவே நடந்து வந்தாயா" 
என்று கேட்கிறார். 
சாகித்தியம் எழுதியவரின் 
மனப்பாங்கை  உணர்ந்த பாலமுரளி,
இதில் என்ன தவறு?
என்று கேட்கிறார்.
இவர் கொடுத்த விளக்கங்கள் 
அருமையானவை. 
கேட்ட எனக்கு மகிழ்ச்சி. 
உங்களிடம் பகரிந்துகொள்வதில் 
இரட்டை மகிழ்ச்சி.

என் கேள்வி-ஞானபயணம் 
இன்னும் தொடர்கிறது. 
எத்தனை வித்வான்கள் / விதூஷிகளும் 
இவ்வளவு வருஷங்கள் பாடி என்னையும் 
உங்களையும் மகிழ்த்திருக்கிறார்கள்.

அவர்களுக்கு என்ன பிரதி உபகாரம் 
செய்யப்போகிறோம்.

நாம், கடவுளிடம், என்னவெல்லாமோ
வேண்டிக்கொள்கிறோம். 
ஏன், நம்முடைய ஒவ்வொரு நாள் 
பிரார்த்தனையிலும் 
இந்த வித்வான்கள் உடல் நலம், குரல் வளம் 
மற்றும் வாழ்க்கைக்கு அவசியமான 
செழிப்புகளோடு வாழ வேண்டும் என்று 
சேர்த்துக் கேட்கக் கூடாது?

எனக்கு ஒரு குறை. 
அது குறையாகத்தான் இருக்கப்போகிறது. 
டவுளே நேரில் வந்து
 "பக்தா, உனக்கு என்ன வேண்டும்?" 
என்று கேட்டாலே ஒழிய 
அது நிறைவேறப் போவதில்லை. 
அது என்ன
"சங்கீதத்தை லட்சணத்தோடு 
கற்றுக்கொள்ளவில்லையே
அப்படி செய்திருந்தால் இந்த சங்கீதத்தை 
இன்னும் நன்றாக ரசித்திருக்கலாமே 
என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும்.

"நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
இறைவன் எதற்கு" என்ற கண்ணதாசன் 
பாட்டு பின்னணியில் ஒலிக்கிறது. 
அதை ஏற்று, அடுத்த ஜன்மத்தில் 
(கட்டாயம் உண்டு) 
ஒரு பாப்புலரான சங்கீத மேதையாகப் 
பிறக்க வேண்டும் என்று 
பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

வாழ்க கர்நாடக சங்கீதம் !
வாழ்க வித்வான்கள் / விதூஷிகள்!
வாழ்க கர்நாடக சங்கீத ரசிகர்கள்!


அலைகள் ஓய்கிறது--இப்போதைக்கு. 



...கிளறல் தொடரும்.





No comments: