Tuesday, May 14, 2013

அம்மாவும் நானும் - ஒரு flashback









மே மாதம் 12ஆம் தேதி - 
அன்னையர் தினம் (Mother'sDay). 
ஒவ்வொரு வருடமும் மே மாதம் 
இரண்டாம் ஞாயிற்றுக் கிழமையை 
அன்னையர் தினமாக உலகத்தினர் 
கொண்டாடிவருகின்றனர்.
இதன்ஆரம்பம்,
நூறாண்டுகளுக்குமுன் - 
1907இல் அமெரிக்காவில் 
Anna Javis,Julia Ward Howe 
என்ற இரண்டு பெண்மணிகளுக்குத் 
தாய்மையையும் தாய்மார்களையும் 
நினைவுகூர ஒரு நாள் 
ஒதுக்கப்பட வேண்டும் 
என்ற யோசனை தோன்றியது. 
அந்தச் சின்ன விதை
இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்து
இன்று கிட்டத்தட்ட 50 நாடுகளுக்கு 
மேல் இந்த யோசனையை ஏற்றுத் 
தாய்மார்களைக் கெளரவிக்க 
தொடங்கியுள்ளார்கள்.
1914இல் அமெரிக்க ஜனாதிபதி
உட்ரோ வில்ஸன் இதை 
ஒரு விடுமுறை நாளாக அறிவித்து 
அதற்கு  ஒரு விசேஷ 
அந்தஸ்த்தைக் கொடுத்தார்.
அன்னையரை ஞாபகப்படுத்திக் 
கெளரவிக்கும் நாளாக ஆரம்பித்த 
விழாஇன்று அமெரிக்காவிலேயே 
ஒரு சாதனை படைத்த வர்த்தக 
நிகழ்வாக ஆகிவிட்டது. 
ஒரு சின்ன புள்ளி விவரம் - 
போன வருடம் அமெரிக்கர்கள் 
அன்னையர் தினத்தன்று 
செலவழித்த டாலர்கள்
புஷ்பங்கள் - $ 2.6 பில்லியன்.
பரிசுப் பொருள்கள் - $ 1.53 பில்லியன்.
வாழ்த்து அட்டைகள் - $ 68 மில்லியன்.
இதைத் தவிர, நகைகளுக்காகச் 
செலவு செய்தது தனி. 
Anna Javis இதை 
எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். 
அவர்கள் நோக்கம், 
தாய்மையைக் கெளரவப்படுத்த 
வேண்டிய அவசியத்தினால். 
அமெரிக்க வாழ்க்கையைப் 
பற்றி அறிந்தவர்களுக்கு 
அங்கே கூட்டுக் குடும்பம் 
என்ற concept கிடையாது 
என்பது தெரிந்திருக்கும்.
மகனோ, மகளோ 18 வயது 
ஆனபின் சுதந்திரப் பறவைகளாக 
வீட்டை விட்டு சுயேச்சை 
வாழ்க்கையைத் 
தேர்தெடுப்பார்கள். 
பெரியோர்களின் தொடர்பு 
அவ்வளவாக இருக்காது. 
இந்தச் சூழ்நிலையில்தான் 
Mother's Day, Father's Day,  
என்று ஆரம்பித்தார்கள்.
இந்தநாகரீகம்,மேல்நாடுகளில் 
பரவ ஆரம்பித்தது ஆச்சரியமான 
விஷயம் இல்லை. 
கூட்டுக் குடும்பம் என்ற வட்டத்தில் 
வாழும் இந்தியா,சீனா, ஜப்பான் 
போன்ற நாடுகளும் இதைப் 
பின்பற்ற ஆரம்பித்ததுதான் 
ஒரு விந்தையான விஷயம்.
மேல்நாட்டுக் கலாச்சாரங்கள் 
பலவற்றைச் சமீபக் காலமாகத் 
தனதாக்கிக்கொண்ட இந்தியா
இந்த Mother's Dayஐயும் 
பின்பற்ற ஆரம்பித்தது 
ஆச்சரியப்பட வேண்டிய 
விஷயம் இல்லை. 
கொஞ்சம் நெருடலான 
சமாச்சாரம்தான்.
அன்னைதான் எல்லாம்என்று 
சின்ன வயதிலிருந்து 
சொல்லப்பட்ட 
தாரக மந்திரம். 
புராண இதிகாசங்களிலிருந்து 
கதைகள், நாடகங்கள்
கவிதைகள் வரை 
தாய்மையையும் தாயாரையும் 
பற்றி எழுதி, பேசி வந்திருக்கிறார்கள்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
தாய் சொல்லைத் தட்டாதே
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
தாயில்லாமல் நான் இல்லை
மாத்ரு தேவோ பவ
என்று உபதேச மொழிகளினால் 
சிறுவர் சிறுமியர் brainwash 
செய்யப்பட்டிருக்கின்றனர். 
அப்படிபட்ட கலாச்சாரத்திலா
ஒரே ஒரு நாள் மட்டும் 
தாயாரை நினைவுகூருங்கள் 
என்று கொண்டாடுவது?
கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் 
இதுவும் ஒரு நன்மைக்குத்தான். 
சமீப காலங்களில் மீடியாக்களில் 
அதிகம் பேசப்படும், எழுதப்படும் 
விஷயம் - 
"பெண்கள் கொடுமை" 
(Women Abuse) பற்றித்தான். 
இதில் Mother Abuseம் அடங்கும்.
கடவுளுக்குச் சமமாக வணங்க 
வேண்டிய தாயாரை 
வருடம் முழுவதும் 
கொடுமைசெய்துவிட்டு 
அதற்குப் பிராயச்சித்தமாக 
ஒரு நாள் "Sorry,I love you" 
என்று பரிசு கொடுத்து 
அன்னையைக் கெளரவிக்கும் 
நாளை வரவேற்க வேண்டியதுதான்.

டி.வி.யில் பிரபலங்கள் 
தங்கள் தாய்மார்களைப் பற்றிப் 
பேசுவதைக் கேட்கும்போது 
நெகிழ்வாகவும் 
சந்தோஷமாகவும் இருக்கிறது. 

நானும் என் பங்கிற்கு 
இந்த அன்னையர் தினத்தில் 
என் தாயாரைப் பற்றிச் 
சில வரிகள் எழுதலாம் 
என்று நினைக்கிறேன்.
என் தாயார் பெயர் - சுந்தரி.
வாழ்ந்த காலம் - 1911-2003  
92 வயது.














இந்து சாஸ்திரங்களில்
பெண்களுக்கு ஒரு தனி இடம் உண்டு. 
ஆண்களுக்கு ஒரு கட்டளையையே 
இட்டிருக்கிறார்கள், நம் பெரியோர்கள். 
ஒரு பெண் தன் கல்யாணம்வரை 
பெற்றோரால் பாதுகாக்கப்பட வேண்டும். 
கல்யாணத்திற்குப் பிறகுகணவன் 
அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள 
வேண்டும். 
வயதான காலத்திலோ
கணவன் இறந்துவிட்டாலோ
பிள்ளைகள் அந்தப் 
பொறுப்பைச் செவ்வனே செய்ய 
வேண்டும். இது பெண் 
அடிமையாக இருக்க வேண்டும் 
என்பதற்காகச் 
சொல்லப்பட்டதில்லை. 
"பெண் ஒரு கெளரவமான 
ஸ்தானத்தில் இருக்கிறாள். 
அதனால் அவளை மதித்து 
அவளைப் பாதுகாக்க 
வேண்டியது ஆண்களின் 
கடமை" 
என்று உணர்த்தவே 
சொல்லப்பட்டிருக்கிறது. 
என் தாயார் முதல் இரண்டு 
கட்டங்களில் அதிர்ஷ்டம் 
செய்யாதவர்கள்.
தகப்பனாருடைய போஷாக்குக் 
கிடைக்காத துரதிர்ஷடசாலி. 
என்தாயார்,ஒரு posthumous child - 
அதாவது என் பாட்டி 
என் அம்மாவைக் கர்ப்பத்தில் 
சுமக்கும்போது அவர்கள் தந்தை 
(என் தாத்தா) இறந்துவிட்டார். 
தகப்பனார் எப்படி இருப்பார் 
என்று தெரியாமலேயே வளர்ந்தவர்.
அடுத்தது, கணவருடன் வாழ்ந்த 
வாழ்க்கை 10 ஆண்டுகள். 
15 வயதில் கல்யாணம். 
சாரதா சட்டம் நடைமுறையில் 
இருந்த காலம். கல்யாணம் பக்கத்தில் 
உள்ள நாகர்கோவிலில் 
(திருவாங்கூர் சமஸ்தானம்). 
கணவர்- சுப்ரமணிய அய்யர் .











முதல் மனைவி காலமான பிறகு 
சுப்ரமணிய அய்யர் (என் தந்தை)
தன் மச்சினிப் பெண்ணைக்
(என்தாயார்) கல்யாணம் 
பண்ணிக் கொண்டார். 
வயது வித்தியாசம் நிறையவே. 
கல்யாணம் நடந்தது-1925 
முதல் குழந்தை, என் அக்கா 1926, 
அடுத்தது என் அண்ணா 1928. 
அப்புறம் நான் (1931). 
பிறகு ஒரு தம்பி (1933). 
கடைசியாக ஒரு தங்கை (1934). 
என் தந்தை ஒரு பிரபலமான 
ரயில்வே காண்டிராக்டர். 
நிறைய பணம் சம்பாதித்தார். 
நண்பர்களுக்காகப் பணத்தைச் 
செலவிட்டார். 
என் தாயாரை Princess 
மாதிரி நடத்தினாராம்.

1936இல் விதி விளையாட 
ஆரம்பித்தது.
என் தாயார் வாழ்க்கையில்.

என் தந்தையின் தமக்கை 
இறந்துபோனாள்.
அடுத்த ஒரு வாரத்தில் 
காலராவில் என் தந்தை 
இறந்துவிட்டார். 
அடுத்த வாரம் என் 3 வயது
தம்பி. அதற்கு அடுத்த மாதம் 
என் ஒரு வயது தங்கை.
400 ரூபாய் கடனுக்காக 
ஒரு நண்பர் கோர்டில் கேஸ் போட
கோர்ட் ஒரு ரிஸீவரை அமைத்தது. 
அவரும் அடிமாட்டு 
விலைக்குச் சொத்துகளை 
விற்றுக் கடனை பைசல் 
பண்ணினார். 
40,000 கடன், 2 லட்சம் சொத்து. 
பின்புதான் தெரிந்தது .
பிராமண சம்பிரதாயப்படி
கன்னியாகுமரிக்குச் சென்று 
மொட்டை போட்டாயிற்று. 
என் தாயாருக்கு. 
மொட்டைபோடக் கூட்டிச் 
சென்ற ஒன்றுவிட்ட மாமாவைச் 
கொல்ல வேண்டும் என்று ஒரு வெறி 
ரொம்ப நாளாக இருந்தது. 
25 வயதில் 3 குழந்தைகளுடன் 
(வயது 10, 8, 5) 
என் தாயார் வாழ ஆரம்பித்தார்கள்.
ஆக, புராணத்தில் சொன்னபடி
2 நபர்களின் (தந்தை, கணவன்) 
பாதுகாப்பு என் தாயாருக்குக் 
கிடைக்கவில்லை. 
சுப்ராயன் (அது தான் 
என் அப்பாவின் செல்ல பெயர்) 
குடும்பம் "குளோஸ்" என்று 
நினைத்த திருநெல்வேலி டவுன் 
அக்கிரஹாரம்பொறாமைப்படும் 
அளவுக்கு எங்களை எங்கள் தாயார் 
என் அத்தை உதவியுடன் 
வாழவைத்தார்கள். 
என் அக்காவுக்குத் திருமணம் நடந்தது. 
நானும் என் அண்ணாவும் B.A. படிப்பு 
முடித்தோம். 
திருநெல்வேலிக்குக் 
குட் பை சொல்லிவிட்டுச் 
சென்னை வந்தோம். 
கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் 
எங்களுடன் வாழ்ந்து எங்கள் 
கல்யாண, குடும்ப 
நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து
எங்களை வாழ்த்தி
வந்திருக்கிறார்கள்.
3 குழந்தைகள், 4 பேத்திகள்
3 பேரன்கள், 4 கொள்ளுப் பேரன்கள்
4 கொள்ளுப் பேத்திகள் - 
என்று நான்கு தலைமுறைகளையும் 
பார்த்து அனுபவித்தார்கள். 
மாமியார்-மருமகள் சண்டை
டி,வி யில் பார்த்தும்,கதைகளைப்
படித்தும் தான் தெரிந்து கொண்டோம்.
மருமகன், மருமகள்கள்
குடுபத்தோடும் நல்ல உறவு - 
கடைசிவரை. 
கடைசி 3 வருடங்கள் 
என் மாமியாருடன் வாசம். 
அவ்வளவு அன்னியோன்யம்
இரண்டு பேருக்கும்.

மாமியார் இறந்த 27ஆம் நாள்
அதே நட்சத்திரத்தில்
2003 ஜூன் 27ஆம் தேதி 
காலமானார்கள்.
இளவயது, ரொம்ப கஷ்டமாக 
இருந்தாலும் கடைசி காலம் 
நன்றாகவே நடந்தது. 
ஒரே குறை, அவர்கள் 
வாழ்க்கையின்போதே 
என் அக்கா கணவர் இறந்தது.
"சுந்தரி அம்மா" என்று 
எல்லோராலும் 
அன்புடன் அழைக்கப்பட்டவர்,
தகப்பனார், கணவர் கொடுக்க 
முடியாத சந்தோஷத்தை மக்களான 
நாங்கள் எவ்வளவு கொடுத்தாலும் 
அந்த இழப்பை முழுவதுமாக 
எங்களால் நிரப்ப முடியாததுதான். 
தாங்கள் இழந்துபோன 
வாழ்க்கையை நினைத்து 
ஒரு நாள்கூட உட்கார்ந்து 
புலம்பியதில்லை. 
என்மேல் (நான் கடைக்குட்டி 
என்பதால் இருக்கலாம்) 
ஒரு soft corner). 
பிராமணர்கள் வீட்டில் 
"பத்து" என்று ஒரு விஷயம் 
பேசப்படுவது உண்டு. 
பொதுவாகசாப்பிடுவதெல்லாம் 
தரையில்தான். மற்றவர்கள் பரிமாற
நாம் சாப்பிட வேண்டும். 
தெரியாத்தனமாக
இடது கையினால் கரண்டியால் 
எடுத்து சாப்பாட்டை எடுத்தால் 
அதற்குப் பிறகு அந்த கையினால் 
வேறு பதார்த்தத்தை தொடக் கூடாது. 
இடது கையைத் தண்ணீரால் 
சுத்தப்படுத்திக்கொண்டுதான் 
சாப்பிட வேண்டும். 
இது கண்டிப்பாகப் பின்பற்ற 
வேண்டிய விஷயம். 
(ஞாபகம் வைத்துக் கொள்ள 
வேண்டியது இது "buffet" 
காலத்திற்கு முன்
என் அம்மாவின் Buffet
பற்றின காமண்ட்:
"அது என்னடா,பிச்சைக்காரன் 
மாதிரி தட்டை எடுத்துக்கொண்டு 
இட இடமாகஅலைகிறது"-
அவர்கள் வாழ்ந்த காலம் வேறே:)
எங்கள் அம்மா காலம்வரை 
இது பின்பற்றப்பட்டுவந்தது. 
மற்றவர்கள் இந்தத் தப்பைப் 
பண்ணினால் கோபப்படுவார்கள். 
நான் அடிக்கடி, இந்தத் தப்பு 
பண்ணுவேன். வேண்டுமென்றே 
இடது கையினால் சாம்பாரை 
எடுத்துப் போட்டுக்கொண்டு 
என் தரையில் கொஞ்சம் 
தண்ணீரை கொட்டிவிட்டு
"அம்மா, இதோ பார், நான் 
சுத்தமானவன்" என்று சொல்லி 
அந்தத் தண்ணீரைத் தட்டுவேன். 
சிரிப்பு வந்துவிடும் 
அவர்களுக்கு. 
"கடன்காரன், கர்மம், கர்மம்
பிராமணனாக ஏன் தான் 
பிறந்தாயோ" என்பார்கள். 
என் மனைவிகூடக் கேட்பாள் 
"இப்படியே செல்லம் கொடுத்துக் 
குழந்தையாகவே வளர்த்திருக்கிறீர்கள்" 
என்பாள். 
அம்மாவும் "தரணிக்கு ராசாவானாலும் 
தாய்க்குப் பிள்ளைதானே" என்று 
சொல்வாள். 
அருமையாகச் சமைப்பார்கள். 
முழுக்கடலை வாழைக்காய் சாம்பார். 
"அம்மா சமையலைப் பற்றி 
மனைவியிடம் சொல்லாதீர்கள்" 
என்ற மகத்தான வேத வாக்கை 
அடிக்கடி மறப்பவன் நான். 
நேற்றுக்கூட "எங்க அம்மா 
பண்ணுகிற மாதிரி இந்த 
உப்புமா இல்லை" என்றேன். 
பூகம்பம் வெடிக்கும் என்று 
எதிர் பார்த்தேன்.
நல்ல வேளை
ஒரு தீவிர முறைப்போடு 
முடிந்தது 

ரிஷி பஞ்சமி விரதம்-
பெண்களுக்கான பண்டிகை.
விநாயகர் சதுர்த்திக்கு
 மறு நாள் வரும்-
நான் பிறந்ததும்
ஒரு ரிஷி பஞ்சமி அன்று தான்.
7 வருடங்கள் தொடர்ந்து 
பண்ண வேண்டும்.
அம்மாவுக்கு  விரத முடிவை 
காசியில் பண்ண
ஆசை.எங்களுக்கும் 
அதை செய்ய விருப்பம்.
காசியில் நன்றாகவே நடந்தது.
அம்மாவுக்கு ரொம்ப திருப்தி.
காசிக்கு போனவர்கள்,
தங்களுக்கு பிடித்த காய் 
வகை ஒன்று,பழ வகை ஒன்று 
கங்கையில் விட வேண்டும்.
அம்மாவுக்கு உருளை கிழங்கு 
அவ்வளவாக பிடிக்காது.
ஆனால்,எனக்கு அது உயிர்
என்பதால்,அதை தவிர்த்து ,
அவர்களுக்கு பிடித்தமான
புடலையை விட்டார்கள். 
அம்மாவுக்கு தெரியும்,அவர்கள் 
உருளையை விட்டு விட்டால்
வீட்டில் சமைக்க மாட்டோம் என்று.
எத்தனையோ தியாகங்களில் 
இதுவும் ஒன்று.
பழங்களில் விட்டது-சீதாப்பழம்.
அதுவும் எனக்கு பிடிக்காத ஒன்று.
நான் படிக்கும் காலத்தில் 
என் கூடவே இருப்பார்கள். 
ராத்திரி எனக்கு டீ 
போட்டுக் கொடுத்துவிட்டு 
பக்கத்திலேயேப் 
படுத்துக்கொள்வார்கள். 
எத்தனை மணிக்கு எழுப்ப வேண்டும் 
என்று சொல்லிவிட்டுத் தூங்கப் போனால் 
சரியான மணிக்கு எழுப்பிவிடுவார்கள்.
நான் M.A. படித்துக்கொண்டிருந்தேன். 
அது என் எதிர்காலத்தைத் 
தீர்மானிக்கும் பரீட்சை. 
முதல் நாள் பரீட்சை முடிந்துவிட்டது. 
2ஆம் நாள் 
பரீட்சைக்குத் தயார்செய்துகொண்டிருந்தேன். புரசைவாக்கம் மொட்டை மாடி. 
என் அம்மா என் பக்கத்திலேயே 
படுத்துக்கொண்டிருந்தாள். 
திடீரென்று என் அம்மாவுக்கு 
வயிற்றுப்போக்கு. 
2, 3 தடவை போய்விட்டார்கள். 
பக்கத்து வீட்டு டாக்டரிடம் 
காட்டினோம். அவர் சொன்னார் 
"பல்ஸ் குறைகிறது. 
இது காலரா மாதிரி இருக்கு. 
உடனே மருத்துவமனைக்குக் 
கூட்டிச் செல்லுங்கள்" என்றார்.

தண்டையார்பேட்டை 
மருத்துவமனைக்கு என் அண்ணா 
அழைத்துக்கொண்டு 
போனார்கள். குவாரண்டைனில் 
போட்டு சிகிச்சை பண்ணினார்கள். 
எனக்குப் படிப்பு ஓடவில்லை. 
பரீட்சைக்குப் போக இஷ்டமில்லை. 
காலை 8 மணிக்கு டாக்டர் 
பயமில்லை என்று சொல்லிவிட்டார். 
கண் முழித்தவுடன் என் 
தாயார் சொன்னார்களாம். 
"எனக்கு ஒன்றும் ஆகாது. 
நாகராஜனைப் பரீட்சைக்குப் 
போகச் சொல்" என்று.

பரீட்சை எழுதினேன். 
பாஸ் பண்ணினேன். 
Universityயில் பரீட்சை 
முடிவைப் பார்த்துவிட்டு
புரசைவாக்கம் வீட்டுக்கு ஓடினேன். 
வீடு பூட்டியிருந்தது. 
பக்கத்து வீட்டுக்காரர் 
அம்மா, அக்கா எல்லோரும் 
காஸினோ தியேட்டருக்குப் 
போயிருப்பதாகச் சொன்னார். 
ஓடிப்போய் தியேட்டர் 
முதலாளியைப் பார்த்து 
நான் உள்ளே செல்ல அனுமதி 
கேட்டேன். அவரும் அனுமதி 
கொடுத்தார். இருட்டில் 
அவர்களைச் சந்தித்து 
விஷயத்தைச் சொன்னேன். 
இண்டர்வலில் ஐஸ்கிரிமோடு 
கொண்டாட்டம்.

என்னை வாழ வைப்பதற்காக 
அவர்கள் காலரா கண்டத்திலிருந்து 
பிழைத்தார்களோ என்னவோ 
யாருக்குத் தெரியும்?


வம்பளப்பது பிடிக்காது. 
கடைசி காலம்வரை
mentally alert ஆக இருந்தார்கள். 
அதற்குக் காரணம் புத்தகம் 
படிக்கும் பழக்கம். தமிழ்ப் புத்தகங்கள் 
படிக்க ரொம்ப ஆசை. 
பேரக் குழந்தைகளுக்கு 
(40 வயது ஆகிறது)
இன்றும் நிநைவுகூர்வது பாட்டி 
சொல்லிக் கொடுத்த தமிழ்
பாடங்களும்,ABC யும்.


கிரிக்கட் விடாமல் பார்ப்பார்கள். 
இந்தியா பேட்ஸ்மேன் 
வரிசையாக 
அவுட்டாகும்போது 
(அப்பொழுது இது வழக்கமாக 
நடக்கும் படலம்) 
பக்கத்தில் வந்து, கவலையுடன் 
"ஏண்டா, இப்படி அவுட்டாகிறீர்கள்
கொஞ்சம் ஜாக்கிரதையாக 
ஆடக் கூடாதா" என்பார்கள். 
நான் சொல்லுவேன் 
"உனக்குத் தெரிகிறது 
அம்மா. அவர்களுக்குத் 
தெரியவில்லையே" என்று.

கடைசி காலம்வரை
உடல்ரீதியாகவும் 
மனரீதியாகவும் நன்றாகவே 
இருந்தார்கள். 
சொல்லிக்கொண்டே போகலாம் 
70 வருட அனுபவங்கள். 
கூடவே இருந்தார்கள். 
என்னுடைய சுகதுக்கங்களில் 
முழுவதுமாகக் கலந்துகொண்ட 
ஒரு ஆத்மா.

"நினைத்தேன்" என்று 
சொல்ல முடியாது. 
மறந்தால்தானே நினைக்கத் 
தோன்றும்.

அம்மாவை நினைக்கும்போது
இரண்டு மகான்கள் சொன்ன 
விஷயம் ஞாபகத்திற்கு 
வருகிறது. 
அன்னையர் தினத்தில் 
உங்களுடன் 
அவற்றைப் பகிர்ந்துகொள்வதில் 
மகிழ்ச்சி.

பட்டினத்தாரைப் 
பற்றிக் கேள்விபட்டிருப்பீர்கள். 
தன் தாயின் இறுதிச் சடங்கில் 
அவர் பாடிய பாடல்கள் 
உருக்கமானவை. 
அதிலிருந்து:


ஐயிரண்டு திங்களாய் 
அங்கம் எல்லாம் நொந்துபெற்றுப்
பையல் என்ற போதே பரிந்து 
எடுத்துச் - செய்ய 
இரு கைப்புறத்தல் ஏந்திக் 
கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.

முன்னை இட்ட தீ முப்புரத்திலே
பின்னை இட்ட தீ தென் இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்க மூள்கவே.

முழுப்பாடலைப் படிக்க 
கீழே  கிளிக் செய்யவும் 
இன்னொருவர் ஆதிசங்கரர்.

இவர் எழுதிய "மாத்ரு பஞ்சகம்". 
எல்லோரும் படிக்க வேண்டிய 
பாடல்கள். 5 செய்யுள்களில் 
தன் தாய்க்கு மரியாதைச் செய்கிறார். 
அதை படிக்க விரும்புகிறவர்கள் 
கீழே கிளிக் செய்யவும்.


அதன் சாராம்ஸம் இதோ:

அம்மா, உன் பல்லைக் 
கடித்துக்கொண்டு தாங்க 
முடியாத வலியுடன் 
என்னை ஈன்றெடுத்தாய். 
நான் அசிங்கம் ஆக்கின 
படுக்கையில் ஒரு வருஷம் 
என்னுடன் கூட இருந்தாய். 
எவ்வளவோ கஷ்டப்பட்டாய். 
அதற்கு நான் என்ன 
பிரதிஉபகாரம் செய்வேன். 
உனக்கு என் நமஸ்காரத்தைத் 
தவிர வேறு என்ன தர முடியும்
உன் மரணத்தின்போது உனக்குத் 
தண்ணீர் கொடுக்கவில்லை. 
உனக்குச் செய்ய வேண்டிய 
இறுதிச் சடங்குகளைச் செய்யவில்லை. 
ராமா என்ற நாமத்தை உன் 
காதில் ஓதவில்லை. 
நான் நேரம் கழித்து வந்ததற்கு 
என்னை மன்னிப்பாயா

எத்தனை தரம் எனக்காகப் 

பாடியிருக்கிறாய் 
"கண்ணே, கண்மணியே
என் ரத்தினமே
என் உயிரின் உயிரே" என்று. 
இதற்கு நான் உனக்குக் 
கொடுப்பது கொஞ்சம் உலர்ந்த 
அரிசிதான். 

முற்றும் துறந்த சந்நியாசியானாலும்

தாயார் என்று வந்துவிட்டால்
அந்த உறவே தனி.


வாழ்க தாய்க்குலம். 
வாழ்க தாய்மை. 
வாழ்க அம்மா.


...கிளறல் தொடரும்.

2 comments:

பாலாஜி said...

மிக அருமை.
இந்தியாவில், மேலை நாகரீகங்களும், முதியோர் விடுதிகளும் அதிகமாக, அதிகமாக 'அம்மா தினம்" வியாபாரமாக்கப் படுவதில் அதிசியமில்லைதான். சில வருடங்கள் கழித்து "அம்மா தினம்" அ.தி.மு.க. வின் அரசியல் கொண்டாட்ட நாளாக மாறினாலும் மரத்தமிழர்கள் மனமுவர்ந்து ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்!!
அன்புடன்
பாலாஜி

வழிப்போக்கன் said...

உருக்கமும் பாசமும் பொங்கி வழியும் பதிவு. என் கண்கள் பனித்தன படித்து முடித்தவுடன்.
வாழ்த்துக்கள்