Sunday, July 28, 2013

கோயம்புத்தூர், சென்னை விஜயம் - சில அனுபவங்கள்-1

14 மாத இடைவெளிக்குப் பிறகு 
இந்தியப் பயணம். 
சரியாக 30 நாட்கள் 
(ஜூன் 21-ஜூலை 21) 
முந்தையப் பயணத்தில் மனைவியுடன்
தென்இந்தியாவையும் 
வடஇந்தியாவையும் கலக்கின 
மாதிரி இந்தத் தடவை 
செய்ய முடியவில்லை. 
தனி ஆள், கோவை 1 வாரம்
சென்னை 3 வாரங்கள் 
என்று நிறுத்திக்கொண்டேன்.

ஆனால் அனுபவங்களுக்குக் 
குறைச்சல் இல்லை. 
பலதரப்பட்ட சுவைகள். 
அதில் தூக்கலாக இருப்பது - 
வருத்தம் (sadness).
உங்களிடம் பகிர்ந்துகொள்ள 
ஆசை! இதோ ஆரம்பம்.
முதல் தடவையாக, அமெரிக்க நகர்
Newark (EWR)லிருந்து மும்பைக்கு 
non-stop பயணம். அதுவும் முதல் 
தடவையாக,business classல். 
சொர்க்கத்தைப் பார்க்க 
முடியாதவர்களுக்கு 
இந்த மாதிரிதான் இருக்கும் 
என்று தோன்றவைக்கும் பயணம். 
14 1/2 மணி நேரப் பயணம் 
அலுப்பில்லாமல் கழிந்தது. 
Flat bed மூலம் காலை நீட்டிப் 
படுத்து தூங்க முடிந்தது. 
(கொடுத்துவைத்தவர், சார் 
நீங்கள் என்று முணுமுணுப்பது 
கேட்கிறது. Yes. உண்மைதான்!) 
மும்பையில் இரவு தங்கி
மறுநாள் சென்னை வழியாக 
கோயம்புத்தூர் பயணம். 
கோயம்புத்தூரில் என் பேரனுக்குப் 
பூணூல் வைபவம். 

சிக்கனத்தைப் பற்றி எழுதிய 
எனக்கு என் இரண்டாவது மகன் 
பண்ணிய பூணூல் நிகழ்ச்சி 
உண்மையிலேயே மகிழ்ச்சி தந்தது. 
15-20பேர்கள்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். 
ஆடம்பரம் கிடையாது. 
ஆனால் சாஸ்திரோக்தமாக 
பிரம்மோபதேசம் நடந்தது. 
சிறப்பு அம்சம் பூணூலுக்கு முந்திய 
நாள் நடந்த "உதக சாந்தி" 
பூஜைக்கு என் பேரனின் சங்கீத குரு 
திரு. O.S. Thyagarajan 
வந்திருந்து அவனுக்கு அபிஷேகம் 
பண்ணும்போது "சங்கரகுரு வரம்" 
என்ற பாடலைப் பாடியது 
மறக்க முடியாத அனுபவம். 
(என் பேரன், சங்கரா 
அமெரிக்காவிலிருந்து டெலிபோன் 
மூலம் சங்கீதம் கற்றுவருகிறான்.)

பூணூல் நிகழ்ச்சிக்குப் பிறகு 
நண்பர்களைப் பார்க்கச் சென்றேன். 
என்னுடைய பல நண்பர்கள் 
இப்போது தங்கள் ஜாகைகளை 
மும்பையிலிருந்து கோயம்புத்தூருக்கு 
மாற்றியிருக்கிறார்கள்.
கோயம்புத்தூரில் இப்போது 
latest-trend-gated-community 
என்று சொல்வார்களே அதே மாதிரி 
நிறைய senior citizen homes 
தோன்றஆரம்பித்திருக்கின்றன. பிருந்தாவனம்,சந்தோஷ்புரம் 
என்று பலத்தரப்பட்ட homes. 
சில Town Homes 
சில தனி வில்லாக்கள். 
கணவன், மனைவி ஒரு community
கூட வசிக்க சந்தர்ப்பம். 
பொது சமையலறை. 
காபி, டிபன், சாப்பாடு 
எல்லாம் கிடைக்கின்றன. 
விசேஷ நாட்கள் 
கொண்டாட்டங்களும்உண்டு. 
மருத்துவ வசதியும் உண்டு. 
வயதான காலத்தில் 
தனிமையில் கஷ்டப்படாமல் 
ஒரு சமூகத்தோடு 
தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளும் 
இந்த அமைப்பு சீனியர் 
சிட்டிசன்களுக்கு வரப்பிரசாதம்.
இந்த மாதிரி அமைப்பு பெரிய 
நகரங்களில் ஏற்பட்டால் 
நல்ல வரவேற்பு இருக்கும். 
50, 60 ஆண்டுகள் மும்பையில் 
வசித்துவிட்டு நிம்மதியாக வசித்து 
வரும் ஒரு "மும்பை கூட்டத்தை" 
பார்த்தது மகிழ்ச்சியான அனுபவம். 
2 மைல் தூரத்தில் தன் பெண் 
வசித்தாலும் தனிமையை 
விரும்பி இந்த அமைப்பில் வசித்து 
வரும் ஒரு தம்பதியினரைப் பார்த்தேன்.
மருமகள் கொடுமை
மகனின் அலட்சய பாவம் 
என்ற கவலையில்லாமல் 
தங்கள் இறுதி நாட்களைக் கழிக்கும் 
வயதான தம்பதியினரைப் பார்ப்பதில் 
மிக மகிழ்ச்சி அடைந்தேன்.
இதில் சிந்திக்க வேண்டிய விஷயம். 
வசதியுள்ள மூத்த குடிமக்களுக்கு 
இந்த வாய்ப்பைப் 
பயன்படுத்திக்கொள்ள முடிகிறது. 
வசதியில்லாதவர்களுக்கு...
ஒரு வாரத்திற்குப் பிறகு
சிங்காரச் சென்னைக்குத் 
திரும்பினேன். 
மூன்று வாரத்தில் பெரும்பகுதி
சென்னைமருத்துவமனைகளில் செலவழித்தேன். 
என் மூத்த சகோதரி தீவிர 
மூச்சுதிணறலினால் 
மருத்துவமனையில் 
சேர்க்கப்பட்டிருந்தார்கள். 
கடந்த 6 மாதங்களில் 
4 தடவை மருத்துவமனை விஜயம். 
செலவு ஒரு புறமிருக்க
கஷ்டப்படுவதைப் பார்க்க 
முடியவில்லை. ஊருக்குத் திரும்பும் 
நாளன்று மறுபடியும் 
மருத்துவமனையில் 
சேர்க்கப்பட்டார்கள். 
Lungs power இல்லையாம். 
முழுக்கமுழுக்க oxygen வைத்து 
வாழ்க்கை ஓடுகிறது. 
"வருத்தம்" என்று சொன்னதில் 
இதுவும் ஒன்று. 
உலகத்தில் உள்ள எல்லோரும் 
விரும்புவது 
"அநாயச மரணம்."  
மற்றவர்களைத் தொந்தரவு 
செய்யாமல் போய்ச் சேர வேண்டும் 
என்ற பிரார்த்தனை. 
எத்தனை பேருக்கு அது கிடைக்கிறது
ஏன் கிடைக்கவில்லை
எது செய்தால் அது கிடைக்கும்
கேள்விகள் நிறைய... 
விடை தேடுகிறோம்.
ஏற்கனவே எழுதியபடி
இந்தப் பயணத்தின் முடிவில் 
என்னுள் இருந்த 
predominant feeling 
வருத்தம், அடுத்தது 
எதிர்காலத்தைப் பற்றி 
ஒரு இனம் தெரியாத பயம். 
சென்னையிலும் கோவையிலும் 
நான் சந்தித்த பெரும்பாலான 
நண்பர்களும் உறவினர்களும் 
என் வயதினரோ அல்லது 
என்னைவிடமூத்தவர்களாகவோ இருந்தார்கள். 
மூப்பின் அடையாளங்கள் 
நிறையவே தெரிந்தன. 
இது தவிர்க்க முடியாத 
இயற்கையின் விளையாட்டு. 
ஆனால்,4,5நண்பர்கள்/
உறவினர்கள் 
Parkinson's நோயால் 
பாதிக்கப்பட்டதைப் பார்த்தபோது 
மனசுக்கு வருத்தமாக இருந்தது. 
"இவர்களுக்கு ஏன்?" என்ற 
கேள்விக்குப் பதில் இல்லை. 
இது குணப்படுத்த முடியாத
மூளை சம்பந்தமான வியாதி. 
இதைப் பற்றி கொஞ்சம் 
அதிகமாகத் தெரிந்துகொள்ள 
முயற்சி எடுத்தேன். 
அதை உங்களிடம் இன்னும் 
ஓரிரண்டு வாரங்களில் 
பகிர்ந்துகொள்கிறேன்.
Kampa Vada என்று ஆயுர்வேதத்திலும் 
நடுக்கு வாதம் என்று 
சித்த மருத்துவத்திலும் 
சொல்லப்பட்ட இந்த 
Parkinson's வியாதி 
சமீப காலமாக அதிக பேரைப் 
பாதித்துவருகிறது. 
குணப்படுத்த முடியாவிட்டாலும் 
ஒரு ஸ்திரமான நிலையைக் 
கொண்டுவர முடியும் என்று 
மருத்துவர்கள் நம்புகிறார்கள். 
எனக்கும் நம்முடைய பெரியோர்கள் 
இந்த நோயைப் பற்றி 
ஏதாவது எழுதியிருக்கிறார்களா 
என்று தெரிந்துகொள்ள ஆசை. 
கொஞ்சம் தீவிரமாகப் 
படித்துவருகிறேன். நண்பர்களிடம் 
இதைப் பற்றி பேசிவருகிறேன். 
அப்படி பேசியதில் ஒரு நண்பர் 
தன்னுடைய சித்தப்பாவிற்கு 
3 ஆண்டு காலமாக
3 சித்த மருந்துகளைக் 
கொடுத்து வருகிறார் என்று தெரிந்தது. 
அவர் நிலைமை ஸ்திரமாக இருக்கிறதாம். 
அந்த 3 மருந்துகள் 
குங்குமப் பூ காப்சூல்
செம்பருத்தி காப்சூல்
கஸ்தூரி காப்சூல். 
கிடைக்குமிடம் - 
காதி கிராமத்யோக் பவன்
லாயிட்ஸ் ரோடு, சென்னை - 14. 
இது எந்தக் கெடுதலையும் 
பண்ணாதாம். 
Scientific evidence கேட்டால் 
கிடைக்காது. 
நம்பிக்கையில் உபயோகிக்கலாம். 
இந்த மாதிரி உங்கள் அனுபவத்தில் 
ஏதாவது மருந்துகள், சிகிச்சை 
முறைகள் கேள்விப்பட்டால் 
தயங்காமல் மற்றவர்களோடு 
பகிர்ந்துகொள்ளுங்கள்.
பயமாக இருக்கிறது 
என்று சொல்லியிருக்கிறேன். 
"நமக்கு வந்தால்..." அதுதான் பயம். 
"வருவது வந்துதான் ஆகும்" 
என்று ஆண்டவன்மேல் பாரத்தைப் 
போட்டு நம் காரியத்தைத் 
தொடர வேண்டியதுதான். 

வியாதிகளையும் 
வியாதியஸ்தர்களையும் 
பார்த்து மன வருத்தத்தோடு 
நாட்களைச் செலவழித்த 
எனக்கு relief ஆட்டோ ரிக்ஷா 
ஓட்டுநர்களால் கிடைத்தது. 
சென்னைக்கு வரும்முன்
மனைவியிடம் 
சத்தியம் செய்துகொடுத்திருந்தேன்.

என்ன சத்தியம்?

"ஆட்டோ ஓட்டுநர்களிடம் 
சண்டைபோட்டு, tension 
பண்ணிக்க மாட்டேன்" என்று. 
சத்தியத்தைக் காப்பாற்றினேனா?
2 சந்தர்ப்பங்களைத் தவிர
மற்ற சமயங்களில் நல்ல 
பிள்ளையாகவே நடந்துகொண்டேன். 
முதல் சந்தர்ப்பம் ஆட்டோக்காரர். 
ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு 
ரூ.250 கேட்டார். மரியாதையுடன் 
"ஏன் இப்படி மனச்சாட்சியில்லாமல் 
கேட்கிறீர்கள்?" என்றேன். 
சென்னை பாஷையில் திட்ட 
ஆரம்பித்தார்.

பொறுமை என்னும் நகை 
அணிய விருப்பம் 
இல்லாமல் 
மடைதிறந்தாற்போல் 
நானும் சென்னை பாஷையில் 
திருப்பித் திட்டினேன். 
ரசாபாசமாவதற்கு முன்னால் 
gentlemanஆன நான் ஜகா 
வாங்கிவிட்டேன்.

அடுத்த நிகழ்ச்சியில்
ரூ.250 கேட்டவரிடம் 
ரூ.100க்கு வருவீரா என்று கேட்க. 
அவர் "என்ன பெரிசு
இப்படிக் கேட்கிறாயே?" 
என்றார். நான் பதிலுக்கு 
நீ அநியாயமாய் கேட்டால் 
நானும் இப்படித்தான் கேட்பேன்" 
என்றேன்.
மற்றபடி எப்படி சமாளித்தேன்
Short distanceக்கு பஸ்ஸோ 
நடையோதான். 
அது ஒன்றும் புதிதல்லவே?

Point to pointக்கோ 
5 / 6 மணி பிராயணத்திற்கோ 
call taxiதான்.

இன்னொரு technic சரியாக 
வேலை செய்தது. ஆட்டோ டிரைவரிடம் 
"சார், நான் பேரம் 
பேசப்போவதில்லை. 
உங்கள் மனசாட்சிக்கு 
எது நியாயமானதோ 
அதை கேளுங்கள்" என்பேன். 
"நம்ம ஆட்டோ" என்ற அமைப்பு 
வரவேற்க வேண்டிய விஷயம். 
தற்சமயம் 100 ஆட்டோக்கள்தான் 
ஓடுகிறதாம். 
மீட்டர் போட்டு, சரியான 
பில்லையும் கொடுக்கிறார்கள். 
அரசு ஏன் ஒரு முடிவான 
திட்டத்தைச் செயல்படுத்த 
மாட்டார்கள் என்பது புதிராக இருக்கிறது.

சரவண பவனில் காபி 38 ரூபாய் 
என்றால் பேரம் 
பேச மாட்டோம். 
வசதியிருந்தால் சாப்பிடுவோம் 
அல்லது தவிர்ப்போம். 
அதே மாதிரி ஆட்டோவுக்கும் 
ஒரு விலை நிர்ணயம் செய்தால் 
பேரம் / சண்டை போட வேண்டிய 
அவசியம் இருக்காதே?
ஆட்டோ ஓட்டுநர்களிடம் 
பேச்சுக் கொடுத்ததில் 
சில சுவையான விஷயங்கள் கிடைத்தன. 
ஒரு ஆட்டோக்காரர் சொன்னார் 
"சார், என்ன சுதந்திரம்
வெள்ளைக்காரன் காலத்தில் 
1 டாலருக்கு 1 ரூபாய் கிடைத்தது. 
இன்று 1 டாலருக்கு 60 ரூபாய். 
பொருளாதார மேதை என்று 
பீத்திக்கொள்ளும் 
மந்திரிகள் என்ன கிழிக்கிறார்கள்?" 
67 வருட சுதந்திரத்திற்குப் பிறகு 
இன்னும் வெள்ளைக்காரன் 
ஆட்சி உசத்தி என்று சொல்லும் 
நபர்கள் இருக்கும்போது 
Quo Vadis எங்கே போகிறோம் 
என்று நினைக்கத் தோன்றுகிறது.
இன்னொரு முஸ்லிம் ஓட்டுநர் 
சொன்னது "நான் 37 வருடம் 
ஓட்டுநராகப் பணிபுரிகிறேன். 
என் பெண்ணுக்குக் கல்யாணம் 
செய்ய வேண்டுமென்றால் 
மாப்பிள்ளைக்கு ஸ்கூட்டர் 
வாங்கித்தர வேண்டும். 
பெண்ணுக்கு 50 பவுன் 
நகை போட வேண்டும்." 
பெண் உரிமை பேசும் அரசியல் 
தலைவர்கள் யோசிக்க 
வேண்டியது. 
"மாப்பிள்ளை என்று 
ஒரு தர்ப்பையைப் போட்டாலும் 
அது துள்ளுமாம்." 
ஜாதி மத வேறுபாடு 
இல்லாமல் கேட்கப்படுவது
வரதட்சணை ஒன்றுதான்.

சென்னை விஜயத்தின் அனுபவங்களை 
என் நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர்கள் சொன்னார்கள் 
"உனக்கேன் இந்த வம்பு எல்லாம்
நீயோ,happyஆகஅமெரிக்காவில் settle ஆகிவிட்டாய். 
இந்த நாடு எப்படிப் போனால் என்ன?" 
என்று.

அவர்களுக்குச் சொன்ன 
பதில் இதுதான்.

நான் அமெரிக்காவில் settle 
ஆனாலும் மனத்தளவில் நான் 
இன்னும் சென்னை வாசிதான். 
70 ஆண்டு வாழ்க்கையை 
எப்படித் தூக்கி எறிந்துவிட முடியும்
இன்றும் உங்கள் 
எல்லோரையும்விட அதிகமான 
தமிழ், ஆங்கில இந்தியப் 
பத்திரிகைகளைப் படிப்பவன். 
4 மணிக்கு எழுந்து கிரிக்கட் 
பார்க்கத் தவறியதில்லை. 
உங்களில் எத்தனை பேருக்குத் 
தெரியும் சமீபத்தில் வந்த 
உலகத்தையே கலக்கின செய்தி
சிம்புவினால் மனக் குழப்பத்தில் 
இருக்கிறார் ஹன்சிகா மோட்வானி. 
காரணம்: சிம்பு புதிய 
இளைஞர்களோடு ஹன்சிகா 
நடிக்க கூடாது என்று சொன்னது.

இரண்டாவது: 
பிரபல சின்னத்திரை நடிகை 
காவேரி, ரிஷிவந்தியத்தில் 
பெற்றோருக்குத் தெரியாமல் 
கல்யாணம் செய்துகொண்டார்.

இந்த அளவுக்கு 
உலக அறிவும்
தமிழ்நாட்டைப் பற்றித் 
தெரிந்துவைத்திருக்கும் 
எனக்கா தமிழ் நாட்டைப் பற்றி 
அக்கறை இருக்கக் கூடாது
நண்பர்கள், "கப்சிப்" என்று 
வாயடைத்து உட்கார்ந்தார்கள்.

உங்களுக்கும் அந்தச் சந்தேகம் 
வராது என்று நினைக்கிறேன்.

அடுத்த வாரம்
call taxi ஓட்டும் வித்தியாசமான 
2  இளைஞர்களைப் பற்றி எழுதுகிறேன்.


... கிளறல் தொடரும்.


2 comments:

வழிப்போக்கன் said...

படித்து நெகிழ்ந்து போனேன்.
அனுபவங்களைச் சுவைபடச் சொல்லுவதும் எழுதுவதும் ஒரு கலை. அது தங்களுக்குக் கைவந்திருக்கிறது.
குறிப்பு: நானும் பெரிசுதான். 81

வழிப்போக்கன் said...

படித்து நெகிழ்ந்து போனேன்.
அனுபவங்களைச் சுவைபடச் சொல்லுவதும் எழுதுவதும் ஒரு கலை. அது தங்களுக்குக் கைவந்திருக்கிறது.
குறிப்பு: நானும் பெரிசுதான். 81