Tuesday, March 12, 2013

கேள்வியும் நானே - பதிலும் நானே. ஆதி சங்கரர்



வார, மாதப் பத்திரிகைகளில் 
பாப்புலரான பகுதி "கேள்வி - பதில்".
இதில் முதல் இடம் வகித்தவர் - 
Babu Rao Patel. (Film India). 
தமிழில் பிரபலமானவர்கள் - 
தமிழ்வாணன் (கல்கண்டு)
சோ (துக்ளக்), அரசு (குமுதம்)
தராசு (கல்கி).
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னோடிகள், உபநிஷத்துகளை 
இயற்றிய ரிஷிகள். பெரும்பான்மையானவை
கேள்வி - பதில் வடிவத்திலேயே உருவாக்கப்பட்டவை. 
மகாபாரதத்தில் வரும் யக்ஷ-பிரச்னம் (பிரச்னம் என்றால் கேள்வி) 
ரொம்பவே பிரசித்தம். 
கேள்வி கேட்டால்தான் 
விடை பிறக்கும், தெளிவு உண்டாகும்’ 
என்ற சித்தாந்தத்தை நம் பெரியோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். 
பகவத் கீதை ஒரு சான்று.
"கேள்வி - பதில்" படைப்புகளில், அவ்வளவாக, பிரபலமாகாத ஒன்று.
பிரச்னோத்தர - ரத்ன மாலிகை.’ 
இதை இயற்றியவர் ஆதிசங்கரர் 
என்று பேசப்படுகிற 
ஸ்ரீ சங்கராசாரியர் அவர்கள்.














சங்கர பகவத் பாதர் என்று 
அழைக்கப்படும் சங்கராச்சாரியாரைப் பற்றித் தெரியாத இந்து இருக்க முடியாது.
அத்வைத சித்தாந்தத்தின் குருவான 
இவர் மக்களின் மூட நம்பிக்கைகளையும் அறியாமையையும் போக்க 
அநேக நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். 32 வயதே இருந்த 
இவர் எழுதாத பாஷ்யமோ
கடவுள் மேல் எழுதாத 
ஸ்தோத்திரமோ இல்லை. 
இந்தியா முழுவதும் நடந்து 
மடங்களை ஸ்தாபித்து இந்து 
சநாதன மதத்தைப் பரப்பினார். 
"ஷண்மதம்" என்ற 
6வகையான பூஜை கடவுள்களையும் ஏற்படுத்தினார்.
அந்த மகான் மக்கள் வளம் பெற ஆங்கிலத்தில் சொல்வார்களே - 
அதே மாதிரி One Liner என்ற 
ஒரே வாக்கியத்தில் 
கேள்வியையும் 
அதற்கான பதிலையும் 
சொல்லியிருக்கிறார்.
மக்கள் எப்படி வாழ வேண்டும் 
என்ற கோட்பாடுகளை எளிய 
முறையில் விளக்கியிருக்கிறார். 
இந்தச் சிறிய நூல் மூலம் 
எல்லோரும் நலம்பெற அதிலிருந்து 
சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மகிழ்ச்சி அடைகிறேன்.

பிரச்னோத்தர ரத்ன மாலிகா
1.எதை முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்?
மெஞ்ஞானம் சொல்லித்தரும் 
பாடத்தை.
2. எதை நிராகரிக்க வேண்டும்?
எதைச் செய்யக்கூடாதோ
எது கெட்டதோ.
3. யார் உண்மையான குரு?
உண்மை தெரிந்தவரும் 
மாணாக்கனின் நலத்தை 
விரும்புவரும்.
4.படித்தவனின் தலையாயக் 
கடமை என்ன?
சம்சார சாகரத்திலிருந்து 
விடுபட முயற்சிகள்
5. எது நன்மை பயக்கும்?
தர்மம், நன்னடத்தை.
6. எவன் சுத்தமானவன்?
மனதில் தூய்மையானவன்.
7. எவன் புத்திசாலி?
நன்மை-தீமைகளைப் பிரித்துச் 
சொல்லும் திறன் படைத்தவன்.
8. எது விஷம்?
பெரியவர்களின் யோசனைகளை நிராகரிப்பது.
9. வாழ்க்கையில் தெரிந்துகொள்ள வேண்டிய பாடம்?
வாழ்க்கையின் காலம் குறைவு. 
அழிந்து மறையக் கூடியது.
10.பயத்தின் காரணம் எது?
மரணம்
11.எவன் குருடன்?
பந்தத்தினால் கட்டுண்டவன்.
12.எது நல்ல வாழ்க்கை?
யாராலும் குற்றம் சொல்ல 
முடியாத வாழ்க்கை.
13.எது தாமரை மேல் இருக்கும் 
நீர் குமிழ் போல் இருக்கிறது?
இளமை, பணம், வாழும் நாட்கள்.
14. எது நரகம்?
மற்றவர்களிடம் அடிமையாக 
இருப்பது.
15. எது சந்தோஷம்?
பற்றற்ற நிலை.
16. எது உண்மை?
உயிர் வாழும் இனங்களுக்கு 
நன்மை செய்வது.
17. ஏமாற்றத்தின் காரணம்?
தன்னைப் பற்றி அதிகமாக 
மதிப்பிடுவது.
18.எது சந்தோஷத்தைக் 
கொடுக்கும்?
சான்றோரின் நட்பு.
19. மரணம் யாது?
 அஞ்ஞான நிலை.
20. சாகும்வரை நம்மைப் 
படுத்துவது யாது?
தெரிந்து செய்த பாவச் செயல்கள்.
21.எதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்?
நல்ல படிப்பு, நல்ல மருத்துவ சிகிச்சை, தானம் வழங்கும் பழக்கம்.
22.எந்த விதமான மனிதர்களைக் கட்டாயப்படுத்திக்கூட 
நல்ல வாழ்க்கைப்பாதையைக் 
காட்டக் கூடாது?
பரம்பரை போக்கிரி, 
சந்தேகப் பேர்வழி
எதையும் எதிர்மறையாகப் பார்க்கும் 
நபர்நன்றி கொன்றவன்.
23.தேவர்களும் பூஜிப்பவர் யார்?
கருணையுள்ளம் படைத்தவனை.
24. யார் குருடன்?
செய்யக் கூடாதவை என்று 
தெரிந்தும் காரியங்களைச் 
செய்து மகிழ்ச்சி அடைபவன்.
25. யார் செவிடன்?
நல்லவர்களின் பேச்சைக் 
கேட்காதவன்
26.யார் முட்டாள்?
தேவையான நேரத்தில் 
இனிமையாகப் பேசத் தெரியாதவன்.
27.எது சரியான பரிசு?
கேட்காமலேயே கொடுப்பது.
28. எது ஒருவன் பேச்சை மெருகுப்படுத்துகிறது?
உண்மை.
29. நினைத்ததைக் கொடுக்கும் 
தேவலோக சிந்தாமணிக் கல்லைவிட இருக்கும் அரிய விஷயங்கள் எவை?
மரியாதையான வார்த்தைகளோடு கொடுக்கும் தானம்
அகம்பாவம் இல்லாத படிப்பு
மன்னிக்கும் திறனோடு கூடிய வீரம், தானத்திற்காகச் செலவிடும் பணம், 
இந்த நான்கும் அபூர்வமானவை.
30. எது பரிதாபத்திற்குரியது?
தானும் அனுபவிக்காமல் 
மற்றவர்களுக்கும் கொடுக்காமல் 
பணத்தைச் சேர்த்து வைக்கும் 
கருமி பரிதாபத்துக்குரியவன்.
31.எது புகழக் கூடியது?
தாராள மனபான்மை.
32.எந்த மனிதன் சந்தோஷமாக 
இருப்பான்?
பாசமுள்ள மனைவி கிடைத்தால்.
33.இரவும் பகலும் சிந்திக்க 
வேண்டிய விஷயம் என்ன?
எல்லாம் வல்ல இறைவனை.
34. கண்ணிருந்தும் குருடர் யார்?
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்.
35.புத்திசாலிகள் எதைத் தவிர்க்க வேண்டும்?
மற்றவர்களைப் பற்றி வம்பளப்பது.
36. மனிதனை முழுவதுமாக 
நாசம் செய்வது எது?
பேராசை.
37.கடவுளுக்குப் பாத்திரமானவன் யார்?
தானும் கோபப்படாமல் 
மற்றவரையும் கோபப்படுத்தாமல் இருப்பவன்      
ஹரிக்குப் பிரியமானவன்.
38.யார் உயர்ந்த பதவியை 
அடைகிறான்?      
பணிவுள்ளவன்.
யார் விழுகிறான்?                  
கர்வம் பிடித்தவன்.
யாரை நம்பக் கூடாது?           
பொய்யையே வாழ்க்கையாக வைத்திருப்பவனை.
39.எந்தப் பொய் பாவமற்றது?
தர்மத்தைக் காக்க வேறு வழி தெரியாதபோது பொய் 
சொல்வது பாபமில்லை.
40. வீட்டு எஜமானரின் 
உண்மையான நண்பரும் 
நலம் விரும்பியும் யார்?
விசுவாசமான மனைவி
41.மனிதனுக்குக் கிடைக்கும் 
பெரிய சொத்து எது?
நல்ல ஆரோக்கியம்.
42.யார் நற்பயன் அடைகிறார்கள்?
பாவத்திலிருந்து விடுபட்டவர்கள்.
43.மனிதனுக்குக் கஷ்டமான 
செயல் எது?
மனதை ஒரு நிலைப்படுத்தி 
ஒரு கட்டுப்பாட்டுக்குள் 
கொண்டுவருவது.
44. யார் வீரமுள்ளவன்?
பயந்தவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பவன்.
45.கண்கண்ட தெய்வம் யார்?
 அன்னை.
46.எந்த மூத்தவரை எப்போதும் 
மதிக்க வேண்டும்?
தந்தையை.
47.யார் உணவு தானத்திற்கு 
ஏற்றவன்?
பசியுள்ளவன்
48.யாரை உபாசிக்க வேண்டும்?
 அவதாரப் புருஷரான பகவானை.           
49.யார் பகவான்?
 சங்கரர், நாராயணர் என்று போற்றப்படுபவர்.
50. எது விடுதலை?
 அஞ்ஞானம் நீங்கி 
மெஞ்ஞானம் கிட்டுவது.

... கிளறல் தொடரும்

No comments: