Tuesday, March 26, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 2



1953ல் சென்னை வந்தேன்.
நேஷனல் ஸ்கூலில் வாத்யார்.
கல்சரல் ஷாக்,கல்சரல் வித்யாசம்
என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.
சொந்த அநுபவம்-சென்னையில்.
ஒரு தேசத்திற்க்கும்,ஏன்,ஒரு 
மாகணத்துக்கும் பேச்சிலே,
சாப்பாட்டிலே வித்யாசம்
இருக்கலாம்-நிறையவே இருக்கு.
ஆனால்,தமிழ் நாட்டு மொழியான 
தமிழ்,மாவட்டத்துக்கு மாவட்டம் 
எப்படி வித்யாசமாக 
அறியப்படுகிறது என்பதை 
தெரிந்து கொண்டேன்.
சென்னை வந்த சில நாள்களில்,
என் அக்காவுடன் ஜியார்ஜ் டவுனுக்கு
சென்றேன்.பஸ்ஸிலிருந்து இறங்கி
ஒரு ரிக்‌ஷாக்காரரிடம்,
( கார்..கவனியுங்கள்-நெல்லை பண்பு),
"என்ன வே..மின்ர்வா சினிமா
எங்கே இருக்கு?."என்று கேட்டேன்.
ரிக்‌ஷாக்காரருக்கு வந்ததே கோபம்..
"என்னையா,உன் பெண்டாட்டி 
என்று நினத்தாயா?
"ஏ" போட்டுக் கூப்பிடறே?"
(..சீவிடுவேன்..அப்போ அப்படி
சொல்லலை..இப்போ சொல்லி இருப்பார்..சினிமாவின் தாக்கம்)
என்று கத்தினார்.கூட்டம் சேர
ஆரம்பித்தது.(இது சென்னையின் இன்னோரு நல்ல பழக்கம் என்று 
பிறகு தெரிந்துகொண்டேன்)
முதலில் புரியவில்லை.
அவர் கோபத்தின் காரணம்.
அப்புறம் தான் புரிந்தது..
நெல்லையின் மரியாத சொல் ஆன
"வே",தப்பாக,"ஏ" ஆக புரிந்து
கொண்டது.
என் விளக்கத்தை கேட்க 
விரும்பாதவரிடம்
மன்னிப்பு கேட்பதை தவிர 
வேறு வழியில்லை.
மறு நாள்,பஸ் பயணம்..
பஸ் கண்டக்டர்
" டிக்கட் எடய்யா?" 
என்று ஏக வசனத்தில்,
சுந்தர தமிழில்,கூவினார்.
முதலில் ஷாக்காக இருந்தது.
இப்போ தப்பித்தவறி,கண்டக்டர்,
"சார்,டிக்கட் எடுத்து விட்டீர்களா" 
என்று கேட்டால் எனக்கு 
ஒரு கூச்சம் உண்டாகிறது.
என்.எஸ்.கிருஷ்ணன் சொல்வார்.
"சென்னையா,அவாளுக்கு என்று
ஒரு தனி பாஷை."
இப்படியாக அடுத்த 50 ஆண்டுகள்
சென்னையோடு ஒன்றி விட்டேன்.

இப்போ கதை தொடர்கிறது...

Wednesday, March 20, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 1



இது கர்நாடக சங்கீதத்தைப் 
பற்றிய கட்டுரை இல்லை. 
பொதுவாக, சங்கீதத்தைப் பற்றிக் 
கட்டுரை எழுதுபவர்கள் சங்கீத வித்வான்களாகவோ,சங்கீத சாஸ்திர மேதைகளாகவோ,விமர்சகர்களாகவோ
உயர்ந்த பதவியில் உள்ளவர்களாகவோ
தான் இருப்பார்கள். 
மேலே சொன்ன எந்தப் பிரிவுக்கும் 
நான் சொந்தக்காரன் இல்லை.

நான் வெறும் கர்நாடக சங்கீத ரசிகன் மட்டுமேரசிகன் மட்டும்தான்.
எனக்குத் தெரிந்த சங்கீதமெல்லாம் 
"கேள்வி-ஞானம்". 
தொடர்ந்து 75 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 
இன்னும் தொடர்கிறது.

நான் உண்மையிலேயே "கொடுத்துவைத்தவன்"
இரண்டு விஷயங்களில்.

ஒன்று, கர்நாடக சங்கீதத்தின் 
பேரில் ஆர்வம் ஏற்பட்டதைப் 
பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு "Acquired taste" - அதற்கான ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - என்பார்கள்.
அதன் முழுப் பரிமாணத்தைக் 
கேட்ககேட்க எனக்குப் பிடித்தமான சுவையாக மாற்றிக்கொண்டேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால்
இது மாத்திரம் நடக்கவில்லையானால், எப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை இழந்திருப்பேன்!

இரண்டாவது, கர்நாடக சங்கீத வித்வான்களின் ரசிகர்கள் 
பெரும்பாலும் தங்களுக்குப் 
பிடித்தமான பாடகர்கள் /பாடகிகள் மீது 
ஒரு வெறித்தனமாக பக்தியை வைத்திருப்பார்கள். 
அரசியலுக்கு அடுத்தபடியாகச் 
சண்டையில் முடிவது இரண்டு 
ரசிகர்கள் விவாதித்துக்கொள்ளும்போது. எனக்கு இந்த வெறித்தனம் வரவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கலெக்ஷனில், அநேகமாக பிரபலமான, அதிகம் தெரியாத
பல வித்வான்களின் கச்சேரிகள் இருக்கின்றன.

என்வரை, எந்த சங்கீதம் நம்மை 
மெய்மறந்து "ஆஹா, அற்புதம்" என்று சொல்லத் தோன்றுகிறதோ 
அதைப் பொக்கிஷமாகப் 
பராமரிக்க வேண்டும். 
அந்த அற்புத "flash" ராகத்திலாவது, பாட்டிலாவது, ஸ்வரத்திலாவது 
ஏற்படலாம்.
அந்த "flash"களின் சங்கீத அடிப்படை தெரியாது. ஆனால் அந்த flashகளை இன்றும் நினைவுகூருகிறேன்.

எத்தனை வித்வான்கள்... எத்தனைக் கச்சேரிகள்... எந்தனை இடங்களில்... கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. 
ஆனால், சில குறிப்பிட்ட சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சொல்லப் போகிற எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே ஒரு சரடுதான் பொதுவாக இருக்கும். 
அது வித்வான் - ரசிகனின் 
ஒரு அமானுஷ்யமான உறவு. 
சங்கீத உலக ஜாம்பவான்களும் சரி
புதிதாக மேடைக்குப் பாட வரும் 
இளம் பாடகர்களும் சரி
ரசிகர்களுக்காகவே பாடிவந்தார்கள், பாடிவருகிறார்கள்.

ரசிகர்களை எப்படிக் கவரலாம் 
என்பதை ஒரு "டெக்னிக்காகவே" 
கையாண்டு வந்தார்கள். எத்தனைப் பட்டங்கள் கிடைத்தாலும் ரசிகனின் அங்கீகாரத்தைத்தான் பெரிதாக நினைத்தார்கள். 
அவற்றிலிருந்து சில இதோ...

Tuesday, March 12, 2013

கேள்வியும் நானே - பதிலும் நானே. ஆதி சங்கரர்



வார, மாதப் பத்திரிகைகளில் 
பாப்புலரான பகுதி "கேள்வி - பதில்".
இதில் முதல் இடம் வகித்தவர் - 
Babu Rao Patel. (Film India). 
தமிழில் பிரபலமானவர்கள் - 
தமிழ்வாணன் (கல்கண்டு)
சோ (துக்ளக்), அரசு (குமுதம்)
தராசு (கல்கி).
ஆனால், இவர்களுக்கு எல்லாம் முன்னோடிகள், உபநிஷத்துகளை 
இயற்றிய ரிஷிகள். பெரும்பான்மையானவை
கேள்வி - பதில் வடிவத்திலேயே உருவாக்கப்பட்டவை. 
மகாபாரதத்தில் வரும் யக்ஷ-பிரச்னம் (பிரச்னம் என்றால் கேள்வி) 
ரொம்பவே பிரசித்தம். 
கேள்வி கேட்டால்தான் 
விடை பிறக்கும், தெளிவு உண்டாகும்’ 
என்ற சித்தாந்தத்தை நம் பெரியோர்கள் கடைப்பிடித்து வந்தார்கள். 
பகவத் கீதை ஒரு சான்று.
"கேள்வி - பதில்" படைப்புகளில், அவ்வளவாக, பிரபலமாகாத ஒன்று.
பிரச்னோத்தர - ரத்ன மாலிகை.’ 
இதை இயற்றியவர் ஆதிசங்கரர் 
என்று பேசப்படுகிற 
ஸ்ரீ சங்கராசாரியர் அவர்கள்.














சங்கர பகவத் பாதர் என்று 
அழைக்கப்படும் சங்கராச்சாரியாரைப் பற்றித் தெரியாத இந்து இருக்க முடியாது.
அத்வைத சித்தாந்தத்தின் குருவான 
இவர் மக்களின் மூட நம்பிக்கைகளையும் அறியாமையையும் போக்க 
அநேக நூல்களை சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார். 32 வயதே இருந்த 
இவர் எழுதாத பாஷ்யமோ
கடவுள் மேல் எழுதாத 
ஸ்தோத்திரமோ இல்லை. 
இந்தியா முழுவதும் நடந்து 
மடங்களை ஸ்தாபித்து இந்து 
சநாதன மதத்தைப் பரப்பினார். 
"ஷண்மதம்" என்ற 
6வகையான பூஜை கடவுள்களையும் ஏற்படுத்தினார்.
அந்த மகான் மக்கள் வளம் பெற ஆங்கிலத்தில் சொல்வார்களே - 
அதே மாதிரி One Liner என்ற 
ஒரே வாக்கியத்தில் 
கேள்வியையும் 
அதற்கான பதிலையும் 
சொல்லியிருக்கிறார்.
மக்கள் எப்படி வாழ வேண்டும் 
என்ற கோட்பாடுகளை எளிய 
முறையில் விளக்கியிருக்கிறார். 
இந்தச் சிறிய நூல் மூலம் 
எல்லோரும் நலம்பெற அதிலிருந்து 
சில பகுதிகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் 
மகிழ்ச்சி அடைகிறேன்.

Monday, March 04, 2013

பதின்மவயதினரைச் (Teenagers) சமாளிக்கச் சில யோசனைகள்



13 வயதிலிருந்து 19 வயதுவரை உள்ளவர்களை டீன்ஏஜர் 
என்று அழைக்கிறோம். 
குழந்தைப் பருவத்திற்கும் 
வாலிபப் பருவத்திற்கும் இடையில் 
இருக்கும் இந்த ஏழு ஆண்டு பருவம் 
ஒரு இரண்டுங்கெட்டான் பருவம்.
பெற்றோர்கள் எந்த நாட்டில் 
இருந்தாலும் எந்தக் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கவலையோடு சந்திக்கும் பருவம். 
தங்கள் குழந்தைகள் எப்படி உருவாகப்போகிறார்கள் என்ற 
ஏக்கம் ஒரு பொதுவான நிலை. பெரும்பான்மையான பெற்றோர்கள் 
இந்த adolesent ageஐ ஒரு எதிர்மறையாகவே சிந்தித்து 
இந்தப் பருவத்தினரை 
angry, argumentative, annoying 
என்று நினைக்கிறார்கள். 
அந்த "A" வரிசையில் ஏன் அவர்களை 
angel ஆகவோ அந்தப் பருவத்தை awesome என்றோ நினைக்கக் கூடாது?
பதின்மவயதினர் பிரச்சினை 
எல்லா நாட்டின் பெற்றோர்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் 
இதன் முழுத் தாக்கம் இருப்பது மேலைநாடுகளில். குறிப்பாக
அமெரிக்கா போன்ற நாடுகளில்தான். 
மற்ற நாட்டுக் குழந்தைகளைவிட 
(இந்தியா,சீனக் குழந்தைகளைவிட) 
இந்த நாட்டுக் குழந்தைகள் அதிக சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். எத்தனையோ காரணங்கள்
கல்வி, கலாச்சாரம், பெற்றோரின் அணுகுமுறை என்று. 
என்ன படிப்புப் படிக்க வேண்டும்
யாரிடம் பழக வேண்டும் என்ற பல பிரச்சினைகளைத் தேர்ந்தெடுப்பதில் பரிபூரணசுதந்திரம் உண்டு. 
இவர்களுக்கு எங்கெல்லாம் பெற்றோர்களின் அடைக்கலம் கிடைக்கிறதோ அந்தக் குழந்தைகள் எல்லாம் நல்ல முறையில் 
வளர்கிறார்கள். எங்கெல்லாம் 
குடும்பப் பிரச்சினைகள் இருக்கிறதோ, அந்தச் சூழ்நிலையில் வாழும் 
குழந்தைகளின் எதிர்காலம் 
ஒரு கேள்விக்குறியாக இருக்கிறது. 
ஆக குடும்பம் என்பது 
ஒரு அளவுகோலாக இருக்கிறது.

Tuesday, February 26, 2013

உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டிய சட்டம் எது?



இந்தக் கேள்வியைக் கேட்டவர்கள்: ­ 
D'Ancona & Pflaum என்ற
சிக்காகோ நகரில் உள்ள நிறுவனம். 
கேட்கப்பட்ட வருஷம் 1995. 
கேள்வி கேட்கப்பட்டவர்கள் ­ 
6 இலிருந்து 12 வயதுவரை 
உள்ள சிறுவர் / சிறுமியர்கள். 
இதை ஒரு கட்டுரைப் போட்டியாக நடத்தினார்கள். குழந்தைகள் தங்கள் கற்பனைக்குத் தோன்றிய எந்த விஷயத்தைப் பற்றியும் விவாதிக்கலாம். 
ஒரு நிபந்தனையும் கிடையாது” 
என்று சொல்லப்பட்டது.
ஒரு தமாஷுக்காக ஆரம்பிக்கப்பட்ட 
இந்தக் கட்டுரைப் போட்டி தமாஷான 
பதில்களைத்தான் குழந்தைகளிடமிருந்து எதிர்பார்த்தது. உதாரணத்திற்கு
தெருவில் அசுத்தம் செய்தவர்களைத் தண்டிக்கச் சட்டம் வரவேண்டும்” 
என்பது போன்ற பதில்களை எதிர்பார்த்தார்கள்.
கட்டுரைகளைப் பரிசீலித்தபோது 
பெரிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருந்தது. ஒரு குழந்தையும் இந்தப் போட்டியைத் தமாஷாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் பெரிய அதிர்ச்சி. குழந்தைகளின் பதில்களிலிருந்து அவர்களுடைய உணர்வுகள் எப்படி சூழ்நிலையினால் பாதித்திருக்கிறது 
என்பது திட்டவட்டமாகத் தெரிந்தது. அவர்கள் சொன்ன கருத்துகள் ஆக்கபூர்வமாக இருந்தன.

உதாரணத்திற்கு சில:

Friday, February 15, 2013

தத்துவ சாஸ்திரமும் விஞ்ஞானமும் மதமும் ஒன்றாகச் செயல்பட முடியாதா?



தத்துவம் (Philosophy) 
என்றால் என்ன?
விஞ்ஞானம் (Science), 
மதம்(Theology) - 
இவற்றிலிருந்து எப்படி 
மாறுபட்டிருக்கிறது?

இதோ ஒரு குட்டிக் கதை.

ஒரு சிறு ஊர். ஒரு வீட்டின் 
தாழ்வாரத்தில் மூன்று நபர்கள். 
தனித்தனி நாற்காலிகளில் உட்கார்ந்துகொண்டிருக்கிறார்கள். 
ஒருவர் விஞ்ஞானி (Scientist). இன்னொருவர் ஒரு தத்துவ மேதை (Philosopher). மூன்றாவது நபர் 
ஒரு பாதிரியார் (Priest).

30 அடி தூரத்தில் 
ஒரு கோழி பாதையைக் 
கடந்து சென்றுகொண்டிருந்தது. 
மூன்று பேரும் அதையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
விஞ்ஞானி தனக்கு தெரிந்த 
விஞ்ஞானத் திறமைகளையெல்லாம் நினைவுகூர்ந்து அந்தக் கோழியின் அசைவுகளை மனதில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தார். 
அவர் மூளை சுறுசுறுப்பாக 
வேலைசெய்து
Newton's laws of motion, 
inertia என்ற physics சம்பந்தமான விதிகளின்படி 
கோழியின் அசைவுகளை 
அலசினார். முடிவாக, வியர்வை 
கொட்ட திடீரென்று, "Eureka" - கண்டுபிடித்துவிட்டேன் 
என்று கத்தினார். 
இதற்கிடையில் கோழி பாதையைக் 
கடந்து மறுபுறம் சென்றுவிட்டது.

Friday, February 08, 2013

மகிழ்ச்சியாக இருப்பவர்கள் பகிர்ந்துகொள்ளும் எளிய ரகசியங்கள்



நம்முடைய வாழ்க்கையில் சில பேர் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே 
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
பார்த்துக்கொண்டிருக்கிறோம். 
இவர்களைப் பார்த்தவுடன் 
நமக்கு வரும் முதல் ரியாக்ஷன் 
(Reaction) ஆச்சரியம், பொறாமை, எரிச்சல்... 
நம் மனதில் எழும் தலையாய கேள்வி: 
"நம்மைச் சுற்றி இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது இவர்களால் மட்டும் 
எப்படி மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது? ஏதாவது, கடவுளிடமிருந்து வரம் 
வாங்கி வந்திருக்கிறார்களா
இவர்கள் மகிழ்ச்சியின் ரகசியம் 
என்ன?"
இதோ, ஒரு ஆசிரியர் சொல்கிறார்: 
"இது ஒன்றும் பிரம்ம ரகசியம் 
இல்லை. ரொம்ப சிம்பிளான
எளிய ரகசியங்கள்தான்" என்று.
யார் அந்த ஆசிரியர்?
அவர் பெயர் - David Niven Ph.D. 
இவர் அமெரிக்காவில் உள்ள 
Florida Atlantic Universityஇல் 
பாடம் சொல்லிக்கொடுக்கும் 
Professor. 
இவர் ஒரு சமூக ஆராய்ச்சியாளர். இவருடைய ஆராய்ச்சிக் கட்டுரைகள் பிரசித்தம் பெற்ற அறிவியல் பத்திரிகைகளில் வெளிவந்திருக்கின்றன. 
நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறார்.
இவர் எழுதிய புத்தகம்தான்
The 100 Simple Secrets of 
Happy People 
(What Scientists have learned 
and How You Can Use It) 
(Harper Collins)
100 எளிய ரகசியங்களை 
நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.

Saturday, February 02, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 4 மாச்சு - பிச்சு














மாச்சு-பிச்சுவைப்பற்றித் 
தமிழர்களின் பொது அறிவு 
ஆழத்தைத் தீர்மானிப்பது   
எ.மு., எ.பி. என்ற இரண்டு 
காலகட்டங்கள். 
கி.மு. (கிறிஸ்துவுக்கு முன்)
கி.பி. (கிறிஸ்துவுக்குப் பின்) 
என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இதென்ன எ.மு., எ.பி?
எ.மு. என்றால், எந்திரன் படம் 
வருவதற்கு முன்
எ.பி. என்றால் எந்திரன் 
படத்திற்குப் பின். 
திரைக்கு வந்து சில மணி 
நேரங்களிலேயே பரபரப்பாகப் 
பேசப்பட்ட மெகா ஹிட் திரைப்படம்எந்திரன். 
இந்தப் படம் வெளிவருவதற்கு 
முன் மாச்சு-பிச்சுவைப் பற்றித் 
தெரிந்த தமிழர்கள்
ஒரு negligible minority 
ஆகத்தான் இருந்திருப்பார்கள்.

எந்திரன் படம் வந்தது. 
அதில் வரும் "கிளிமஞ்சாரோ" 
என்ற பாடல் ஒரு super hitஆக 
ஆயிற்று. 
அந்தப் பாடல் எடுக்கப்பட்ட 
locationஐப் பற்றிப் பேசாத
எழுதாத மீடியாக்களே இல்லை.
அந்த locationதான் 
மாச்சு-பிச்சு என்று தெரிந்தவுடன்
அடித்தது யோகம் 
மாச்சு-பிச்சுவுக்கு. 
எங்கேயோ,தென் அமெரிக்காவில் தூங்கிக்கொண்டிருந்த 
மாச்சு-பிச்சுவுக்குத் 
தமிழ் சினிமா ரசிகர்களிடம்
குறிப்பாக ரஜினி ரசிகர்களிடம்
பயங்கர வரவேற்புக் கிடைக்க 
ஆரம்பித்தது.
"நான் தமிழ்ப் படமெல்லாம் 
பார்ப்பதில்லை" என்று பெருமைப்பட்டுக்கொள்ளும் 
தன்மானத் தமிழர்களுக்காக 
இதோ, அந்தப் பாட்டு 
ஒளி, ஒலி வடிவில்.
இப்பொழுது
மாச்சு-பிச்சுவைப் பற்றிக் 
கொஞ்சம் தெரிந்துகொள்ளலாமா?

மாச்சு பிச்சு (இன்கா பாஷையான, Quechuaவில் Machu Pikchu என்று அழைக்கிறார்கள்) 
தென்அமெரிக்காவில் உள்ள 
பெரு நாட்டில் இருக்கும் 
ஒரு புராதானமான இன்கா 
கலாச்சார மையம். 
சுமார் 8000 அடி உயரத்தில் 
உருபாம்பா பள்ளத்தாக்கிற்கு 
மேலே இருக்கிறது. 
குஸ்கோ நகரிலிருந்து 
50 மைல் தூரத்திலிருக்கிறது. 
இதன் வழியாக உருபாம்பா நதி 
ஓடுகிறது.
தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி 
பச்சசூடி (Pachacuti) என்ற 
இன்கா சக்ரவர்த்தியால் 
1438, 1472 ஆண்டுகளில் கட்டப்பட்ட 
ஒரு Estate இது. 
இன்கா உலகத்திற்கே 
இது ஒரு அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது.

ஸ்பானியர்கள் ஆக்கிரமிப்புக்குப் 
பிறகு இதைப் பற்றி யாருக்கும் தெரியாமலேயே இருந்துவந்திருக்கிறது. 
1911ஆம் ஆண்டு Hiram Buighan 
என்ற ஒரு அமெரிக்க சரித்திர ஆசிரியர் இதைக் கண்டுபிடித்தார். 
இப்பொழுது இது ஒரு கலாச்சார 
இடமாக அறிவிக்கப்பட்டு நிறைய பயணிகளை வரவேற்கும் 
மையமாக ஆகியிருக்கிறது.

இந்த மாச்சு-பிச்சு 2007இல் 
ஒரு Internet Pollஇல் உலக 7 அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.

இப்பேர்ப்பட்டப் பிரசித்தமான, புராதனமான இடத்தில்தான் 
எங்கள் பயணத்தின் கடைசி 
நாட்களைக் கழித்தோம்.
பயணக் கட்டுரையைத் 
தொடருவோமா?

Friday, January 25, 2013

பெரு நாட்டில் நவராத்திரி - பகுதி 3 அமேசான் மழைக்காடுகள்





"காடு, மலைவனாந்திரம்
ஏழு கடல்களைத் தாண்டி 
கதாநாயகன் கதாநாயகியை 
அரக்கனிடமிருந்து மீட்கச் சென்றான்" 
என்று பெரிய எழுத்து மதனகாமராஜன் 
கதைகளில் படித்திருக்கிறோம். 
நாங்களும் அதே மாதிரி, விமானம்
கார்விசைப்படகு
காட்டில் நடை, தோணிச் சவாரி 
என்று கஷ்டப்பட்டு எங்கள் 
லாட்ஜை அடைந்ததைப் 
பற்றி எழுதியிருந்தேன். 
ஒரு வித்தியாசம் நாங்கள் 
கதாநாயகி யாரையும் 
தேடிப் போகவில்லை. 
அமேசான் மழைக் காடுகளில் 
2 இரவுகள் 3 நாட்கள் தங்கி
நம்முடைய ரிஷிகள் காட்டில் 
எப்படி வாழ்ந்தார்கள் என்பதைப் 
பார்க்க ஆவலுடன் சென்றோம்.
நாங்கள் தங்கியிருந்த லாட்ஜின் பெயர் 
Sandoval Lake Lodge - 
பெயரில் இருக்கிறபடி Sandoval 
என்ற ஒரு பெரிய ஏரிக் கரையில் 
இருக்கிறது.












அநேகமாக எல்லாப் பயண விடுதிகளும் 
இந்த ஏரிக் கரையில்தான் இருக்கின்றன.
நாகரிகத்திலிருந்து தூர விலகி 
நடுக் காட்டில் இருக்கும் சுவையான 
அனுபவத்தைக் கொடுப்பதற்காக 
இந்த ஏற்பாடு. பயணிகளுக்குத் 
தேவையான எல்லாப் பொருள்களும் 
homeland இலிருந்துதான் 
கொண்டுவர வேண்டும். 
குறிப்பிட்ட நேரத்தில் வரும் 
மின்சாரத்தைத் தவிர மற்ற எந்த 
வசதியிலும் குறைவில்லை. 
இரவுகள்,3 நாட்கள் 
போனதே தெரியவில்லை. 
மழை தொடர்ந்து பெய்தாலும் 
செலவழித்த நேரத்தில் 
பெரும் பகுதி, வெளிப்புறத்தில்தான். 

அதற்குத்தானே வந்திருக்கிறோம்.

Sunday, January 20, 2013

பெரு நாட்டில் நவ ராத்திரி - பகுதி 2 லீமா, அமேசான் மழைக் காடுகள்.



2ஆம் நாள்-6000 கிலோ மீட்டர் 
தள்ளிப் புது இடத்தில் கண்விழிப்பு. 
களைப்பு ஒன்றும் இல்லை. 
காரணம்,பெரு நாடும், நாங்கள் 
குடியிருக்கும் அமெரிக்க நாட்டு 
New Jerseyயும் 
ஒரே Time Zone - EasternTime 
ஜெட் லாக் ஒன்றும் இல்லாமல்
சுறுசுறுப்பாக எழுந்து 
breakfastஐ நாடி ஓடினோம். 
அநேகமாக,வெளிநாட்டு
ஹோட்டல்களில் எல்லாம் 
bed & breakfastதான் rule. 
Breakfast-free. 
அதுவும் விதவிதமான breakfast. 
ரொட்டிவகைகள்,சீரியல்வகைகள்
பழங்கள், முட்டை, பான்கேக்
ஆம்லெட், ஜாம், ஜூஸ் - 
நம்மைப் போல் இல்லாமல் 
வெளிநாட்டினர்கள் 
breakfastக்கு ரொம்பவே 
முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 
ஹோட்டலில் ஒரு பிடி பிடித்து
breakfast சாப்பிட்டால் 
லஞ்ச்என்று வயிறு கேட்காது.
நாங்களும் UA Airlines பட்டினி 
போட்ட அவலத்தை மறந்து 
ஒரு அருமையான breakfastஐ 
ஒரு பிடி பிடித்தோம்.
சரியாக 10 மணிக்கு டிராவல் கம்பெனி 
ஒரு vanஐயும் ஆங்கிலம் தெரிந்த 
ஒரு guideஐயும் அனுப்பிற்று. 
மறந்துவிடாதீர்கள் — 
இது ஒரு ஸ்பானிஷ் பேசும் நாடு. 
எங்கும் ஸ்பானிஷ்தான். 
city tour ஆரம்பித்தது.
லீமா நகரத்தைப்பற்றி கைடு 
சொன்ன கதையின் சுருக்கம் இதோ:
பசிபிக் மகா சமுத்திரத்தின் 
கரையோரத்தில் இருக்கும் லீமா நகரம்
பெரு குடியரசின் தலைநகர். 
1535ஆம் ஆண்டு Francisco Pizaro 
என்ற ஸ்பானியரால் ஸ்தாபிக்கப்பட்டது. 
இதற்கு The City of Kings 
என்று ஒரு செல்லப் பெயர் உண்டு.
13 X 9 Gridஇல் 117 சிடி பிளாக்குகளுடன் 
நகரம் முதலில் கட்டப்பட்டது.
இன்றைக்கு அரசியல் பொருளாதார
வர்த்தகத் தலைநகராக 
தென்அமெரிக்காவில் 
இது புகழ்பெற்றிருக்கிறது. 
இன்றைய ஜனத்தொகை கிட்டத்தட்ட 
9 மில்லியன் ஆக இருக்கிறது. 
அமெரிக்கக் கண்டத்தில்
San Paulo, Mexico City, 
New York Cityகளுக்குப் பிறகு 
லீமாதான் 4ஆவது பெரிய நகரம். 
Beta World City என்ற 
அங்கீகாரமும் இதற்கு உண்டு.
இப்போதைக்கு இந்த அறிமுகம் 
போதும் என்று நினைக்கிறேன்.

இப்பொழுது நகர ஊர்வலம் செல்வோமா?